சூழ்ச்சிக்குப் பிறகு வந்த புத்தி
“ஹிந்துமத பரிபாலன போர்டு அவசியமே”
கவர்னர் மறுத்த பிறகே மந்திரிக்குப் புத்தி வந்ததா?
– ஊர் வம்பு
ஜஸ்டிஸ் கட்சியாரின் அரும் பெரும் முயற்சியால் பனகல் ராஜா அவர்கள் காலத்தில் ஹிந்து மத பரிபாலன போர்டுகள் ஏற்பட்டு அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் செய்யப்பட்டது. அக்காலத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் பட்டர்களும் குருக்கள் கூட்டத்தார்களும் சோம்பேறி வேதாந்தக் கூட்டப் பார்ப்பனர்களும் பலமாக எதிர்த்தார்கள். “சர்க்கார் மதத்தில் தலையிடக்கூடாது” என்றும், “ஹிந்து மத கோவில், மடம் ஆகிய நிர்வாகங்களில் சர்க்கார் தலையிடுவது அக்ரமம்” என்றும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கோவில் சொத்துக்களைத் தங்கள் சொத்துக்களாகக் கருதி பங்கு போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருந்த தர்மகர்த்தாக்களும் குருக்கள்களும் பெரும் கூச்சல் போட்டார்கள். “மத விஷயங்களில் சர்க்கார் தலையிடு வதில்லை” என்று மகாராணியார் வாக்குக் கொடுத்திருப்பதாக வக்கீல் கும்பல்கள் வம்பளந்தார்கள். இப்படி பல எதிர்ப்புகளுக்கிடையில் “அறநிலையப் பாதுகாப்பு மசோதா” சட்டம் செய்யப்பட்டு விட்டது. இப்பொழுது எங்கும் “ஹிந்துமத பரிபாலன போர்டுகள்” ஏற்பட்டு எல்லா தேவஸ்தானத்திற்கும் கமிட்டிகள் நியமித்து கணக்கு வரவு செலவுகள் ஒழுக்காக வைக்கும்படியும் எல்லாச் சொத்துகளையும் கமிட்டியாரால் நன்கு பாதுகாக்கும்படிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு முன்னிருந்த அக்ரம நிர்வாகங்கள் ஒருவாறு குறைந்து வந்திருக்கின்றன. கமிட்டியார் முயற்சியால் பல தேவஸ்தான சொத்துக்கள் அதிகமாக அபிவிர்த்தியடைந்துமிருக்கின்றன. பொது மக்கள் அறியத்தக்க குறைபாடுகளிருந்தால் கமிட்டியாருக்குத் தெரிவித்து சீர்திருத்தம் செய்யப்பட்டும் வந்திருக்கின்றன. இக்காரியத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களின் கிளர்ச்சியும் கூச்சலும் எவ்வித பயனு மளிக்காது போய்விட்டது. தென்னாட்டுப் பார்ப்பனர்கள் எல்லோருக்கும் வயிற்றெறிச்சல்தான். “ஹிந்துமத பரிபாலன போர்டையும்” “அறநிலையப் பாதுகாப்பு மசோதாவையும்” ஒழித்துவிட சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
~subhead
வந்தது ராமராஜ்யம்
~shend
காங்கரஸ்காரர்கள் சரணாகதியடைந்து மந்திரி பதவியேற்று அதிலும் பாதிப்பேர் பார்ப்பனர்களாக வந்தார்கள். உடனே ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள் வேலைகளை. கட்டுப்பாடாக சரணாகதி முதல் மந்திரியார் ஆச்சாரியாரின் முழு முயற்சியால் நாமிநேஷன் மூலமாக வந்த காங்கரஸ் துரோகியான திருச்சி டாக்டர் செளந்திரராஜன் அய்யங்கார் அவர்கள் சரணாகதியடைந்து மந்திரி பதவி பெற்றுவிட்டார். பின் என்ன குறை? இந்த சரணாகதி மந்திரி ராஜன் அவர்களிடம்தான் சுகாதார இலாக்காவும் தேவஸ்தான போர்டும் ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றன. பின் அவர் சும்மா இருப்பாரா? உடனே நேரே ÿரங்கம் போய் ரெங்கநாதரைச் சேவித்துக் கொண்டு அங்குள்ள அய்யங்கார் பட்டர்களுக்கு அபயம் கொடுத்து வந்திருக்கிறார். பிறகு திருவானைக் கோவில், மலைக்கோட்டை தேவஸ் தானங்களையும் பார்வையிட்டு கோவில் மரியாதைகளும், மாலைகளும், பரிவட்டங்களும் பெற்று வீடு திரும்பினார். இதில் பார்ப்பனர்கட்கு பரமானந்தம். எங்கும் பார்ப்பனக் கொண்டாட்டங்கள். ராமராஜ்யத்தில் பார்ப்பனர்கட்கு இனி என்ன கவலை? எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாக “ஹிந்துமத பரிபாலன போர்டை” எடுத்துவிட வேண்டுமென்று தூதுபோக ஆரம்பித்தார்கள். இம் முயற்சியை சரணாகதி மந்திரி ராஜன் அலட்சியம் செய்வாரா? “ஆகட்டும் பார்ப்போம்! எடுத்துவிடலாம். ஆயினும் பொதுஜன அபிப்பிராயம் கேட்பதாகச் சொல்லிவிடுகிறேன். நீங்கள் எல்லாம் ஒரே கட்டுப்பாடாக எங்கட்கு “ஹிந்து மத பரிபாலன போர்டு வேண்டாம்” என்று பெருங் கிளர்ச்சி செய்யுங்கள். கூட்டம் போட்டுத் தீர்மானஞ் செய்து அனுப்புங்கள். எல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன்” என்று தைரியம் சொல்லி அனுப்பினாராம்.
~subhead
ஹிந்து மத பரிபாலன போர்டை ஒழிக்க சூழ்ச்சி
~shend
திருச்சி மலைக்கோட்டை மண்டபத்தில் சரணாகதி மந்திரி டாக்டர் ராஜன் அவர்கள் முயற்சியால் ஒரு பொதுஜனக்கூட்டம் கூட நடந்ததாம். இக் கூட்டத்திற்கு திருச்சி ஆண்டார் தெரு வக்கீல் பார்ப்பனர்களும் வேறு உத்தியோகப் பார்ப்பனர்களும் ஒரே கூட்டமாக வந்தார்களாம். இக் கூட்டத்திற்கு ஒத்துக்கு மத்தளம் போட அரியலூர் ஷண்முக சுந்தர முதலியார் அவர்களும் வந்திருந்தாராம். “ஹிந்து மத பரிபாலன போர்டை” எடுத்துவிடவேண்டுமென்று எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாகப் பேசினார்களாம்? இப் பார்ப்பனர்களைத் தாங்கி அரியலூர் முதலியார் அவர்களும் “ஹிந்துமத பரிபாலன போர்டை” ஒழித்துவிட வேண்டுமென்றாராம். இந்த ராமராஜ்யத்திலே, திருச்சி மலைக்கோட்டைக் கூட்டந்தான் பார்ப்பன பொதுஜன அபிப்பிராயம் போலும்! இதை சர்க்காருக்கும் கவர்னருக்கும் திருச்சி டாக்டர் சரணாகதி மந்திரி தெரிவித்திருப்பார் போலும்! சர்க்காருக்கும் கவர்னருக்கும் கொஞ்சமாவது சுயமரியாதையும் சொந்தப் புத்தியு மிருக்காமலா போகும்? சென்னை கவர்னர் “ஹிந்து மத பரிபாலன போர்டை” எடுக்க முடியாது, அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை யொழிக்க முடியாது என்று சரணாகதி மந்திரி ராஜனுக்குக் கூறி விட்டார் போலிருக்கிறது.
~subhead
திருநெல்வேலியில் மந்திரிக்குப் புத்தி வந்தது
~shend
சரணாகதி மந்திரி ராஜன் அவர்கள் சமீபத்தில் திருநெல்வேலிக்குச் சென்று தேவஸ்தானக் கமிட்டி ஆபீசை பார்வையிட்டு விட்டுப் பேசி யிருக்கிறார். அவர் பேச்சில் சில பாகம் பின்வருமாறு:-
“போர்டு ஏற்பட்டதால் கோவில் நிர்வாகத்தில் அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறதா?” வென்று கேட்கப்பட்டது.
“தேவஸ்தான போர்டு ஏற்பட்ட பிறகு கோவில்களில் பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருகிறதென்பதை ஒருவராலும் மறுக்க முடியாது. சில கோவில்களுக்குப் பண லாபமும் ஏற்பட்டிருக்கின்றது.
மேலேயிருந்து கேள்வி வருமென்ற பயமிருப்பதால் நிர்வாகம் கொஞ்சம் கவனமாயும் பயபக்தியுடனும் நடக்கின்றது. ஜனங்களே அதைச் சொல்லுகிறார்கள்; உணர்கிறார்கள்” என்பதாகப் பேசியிருக்கிறார். போகட்டும். திருநெல்வேலியில் சரணாகதி மந்திரி ராஜன் அவர்கட்கு புத்தி வந்து விட்டதற்காக நாம் மகிழ்ச்சியடையப் போவதில்லை. அவர் வேறு கதியற்ற வகையில்தான் தனது முயற்சியைச் சிறிது மாற்றி கொண்டு பேசியிருக்கிறார் என்றாலும் இனியும் பார்ப்பன ஆதிக்க சூழ்ச்சிகள் நடக்கத்தான் போகின்றன.
~subhead
நமக்கு கவலையில்லை
~shend
இப்போர்டுகள் மூலம் தேவஸ்தான சொத்துகளில் பெரும்பாகம் மக்களின் கல்விக்காகவும், சுகாதார வசதிக்காகவும், இடவசதிக்காகவும், உபயோகப்படுத்தலாம் என்பதாக சட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நமது முக்கிய ஆசையே தவிர அதில்லாமல் இந்த போர்டுகள் இருப்பதின் மூலமாக பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் வகிக்கவும் தர்மகர்த்தாக்களாக இருக்கவுமில்லாமல் போகுமே என்ற கவலை நமக்கு கிடையாது.
~subhead
நன்றிகெட்ட துரோகிகள்!
~shend
ஜஸ்டிஸ் கட்சியின் தயவில் தேவஸ்தான போர்டு கமிஷனர்களாயிருந்து பணம் சம்பாதித்துக் கொண்டுபோன பார்ப்பனரல்லாதவர்களில் பெரும் பாலோர் இன்று நன்றி கெட்ட துரோகிகளாய் – பார்ப்பன அடிமைகளாய் – அநுமார்களாய் – விபீஷணர்களாய் – அடிக்கடி கட்சி மாறும் பச்சோந்திகளாய் இருப்பதை நாம் நன்கு அறிவோம். பார்ப்பனரல்லாத தர்மகர்த்தாக்களின் பெரும்பாலோர் யோக்கியதைகளையும் பிற செயல்களையும் நாம் நன்றாக அறிவோம். இந்த நன்றி கெட்ட துரோகிகளுக்காக நாம் ஒன்றும் கவலைப்பட போவதில்லை. மதத்தின் பேராலும் கோவில் பேராலும் பொதுச் சொத்துகள் கொள்ளை போவதைத் தடுக்கவும் அச் சொத்துகளைப் பரிபாலிக்கவும் மற்றும் பல சீர்திருத்தங்கள் செய்யவும் ஏற்பட்ட அறநிலையப் பாதுகாப்பு மசோதாவையும் ஹிந்து மத பரிபாலன போர்டையும் ஒழித்து விட்டு பார்ப்பன ஆதிக்கத்தை வலுப்படுத்தச் செய்யும் சூழ்ச்சியை விளக்கவேதான் இதை எழுதுகின்றோமே தவிர வேறில்லை.
~subhead
இனி வேறுவித சூழ்ச்சி
~shend
“ஹிந்துமத பரிபாலன போர்டை” எடுக்க முடியாதென்ற அவர்கள் அபிப்பிராயம் தெரிந்த பிறகு சரணாகதி மந்திரியார் மேற்படி சட்டத்தைத் திருத்த வேண்டுமென்கிறாராம். சட்டத்திலுள்ள முக்கிய ஜீவன்கள் கொலை செய்யப்படலாம். தேவஸ்தான போர்டு முழுதும் தர்மகர்த்தாக்கள் முழுதும் பார்ப்பன ஆதிக்கமாய் விடலாம். இது மட்டும் உறுதி. பார்ப்பனரல்லாத சோணகிரிகள், பார்ப்பன அடிமைகள், பார்ப்பன விபீஷணர்கள் எல்லாரும் வாயில் கையை வைத்துக்கொண்டு ஆமாம் சாமி போடப்போகின்றீர்களா? அல்லது வேறு என்ன செய்யப்போகின்றீர்கள்? பார்ப்பன ராமராஜ்யம் பலப்படுக! அய்யங்கார் ஆதிக்கம் வலுப்படுக!!
குடி அரசு – கட்டுரை – 22.08.1937