சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? II

சென்ற வாரம் “குடி அர”சில் இன்றைய சரணாகதி மந்திரி சபையானது சுய ஆட்சிக்கு ஆக ஏற்பட்டதல்ல வென்றும் இந்நாட்டு பழந்தமிழ் மக்களை பாதாளத்தில் ஆழ்த்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்திப் பழிவாங்கு வதற்கு ஆக ஏற்பட்டிருக்கிறதென்றும் உதாரணமாக தமிழ் மக்களுக்கு ஆரிய ஆதிக்க பாஷையாகிய வட மொழியை ஹிந்தி என்னும் பேரால் இள வயதிலேயே கட்டாயத்தின் மீது புகுத்தவும் அரசியல் பிரதிநிதித்துவ தேர்தல்களில் யோக்கியமான பிரதிநிதித்துவம் ஏற்படுவதற்கில்லாமல் பித்தலாட்டத்தில் தேர்ந்தவர்களே வெற்றி பெற்று வரவும், சரீரத்தினால் பாடுபட்டு உழைக்க வேண்டியவர்களல்லாதவர்கள் என்று தங்களை விலக்கிக்கொண்டு மற்ற எல்லா மக்களும் பொருளாதாரத் துறையில் தலை எடுப்பதற்கு மார்க்கமில்லாதிருப்பதற்கு சுலபத்தில் பொருள் தேட செளகரியமுள்ள தொழில் முறைகளை தலை எடுக்கவொட்டாமல் தடுத்து இந்நாட்டு பெருங்குடி மக்கள் என்றென்றும் ஆரியர்களுக்கு அடிமையாக இருக்கும்படியாக எவ்விதத்தும் பயனற்ற கதர்த் திட்டத்தைப் புகுத்தி பழி வாங்குகின்றது என்றும் குறிப்பிட்டுக் காட்டி அவற்றுள் ஹிந்தி சூழ்ச்சியைப்பற்றி விளக்கி இருந்தோம். இந்த இரண்டாவது விளக்கத்தில் சூழ்ச்சித் தேர்தல் முறையைப்பற்றி விளக்குவோம்.

ஸ்தல ஸ்தாபன தேர்தலுக்கும் சட்டசபை தேர்தலுக்கும் நடந்தது போலவே வர்ணப்பெட்டியையே தேர்தல் நபராகக் கருதி ஓட்டுப்போடும் முறையை கையாள சரணாகதி மந்திரிகள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இந்த முறை பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு மூட நம்பிக்கையை கிளப்பிவிட்டு மக்களுடைய மத உணர்ச்சியினால் ஓட்டுப் பெறச் செய்யும் சூழ்ச்சி முறையேயாகும்.

ஏனெனில் சட்டசபை தேர்தல் நடந்த காலத்தில் தேர்தல் பிரசாரமாக வர்ணப் பெட்டியின் வர்ணத்தையும் அதற்கு இந்து மத உணர்ச்சிப் படி இருந்துவரும் போலி உயர்வையும் பல வழிகளிலும் பிரசாரம் செய்து ஓட்டர்கள் ஓட்டுப் போடும் மனிதனின் யோக்கியதை, நாணயம் என்ன என்பதை சிறிதும் அறியவோ கவனிக்கவோ இடமில்லாமலும் தாங்கள் (ஓட்டர்கள்) ஓட்டுப்போடும் கட்சிக்கு என்ன கொள்கை? அதன் முன் பின் நாணயம், தகுதி என்ன? என்பதைக்கூட கவனிக்கவோ தெரியவோ முடியாதபடியும் ஏமாற்றி கண்களில் மிளகாய்ப் பொடி தூவி வழிப்பறிக் கொள்ளைக்காரன் படு இருட்டில் பிரயாணிகளிடம் பறித்துக் கொண்டு ஓடுவது போல் ஓட்டர்கள் கண்களில் மிளகாய் பொடி தூவி பறித்து விட்டார்கள்.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சட்டசபைத் தேர்தல் பிரசாரம் எப்படிச் செய்யப்பட்டது என்று பார்த்தால் விளங்கிவிடும். அதாவது “மங்கள கரமான மஞ்சள் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள். யார் தேர்தலில் அபேக்ஷகராக நிற்கிறார்கள் என்று கவனிக்காதீர்கள். மொண்டியோ, முடமோ, கூனோ, குருடோ, ஊமையோ, செவிடோ யார் நின்றாலும் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்” என்று சொல்லி ஓட்டர்களின் ஆராய்ச்சி அறிவைக் கட்டி விட்டார்கள். மற்றும் பாமர மக்களுக்கு மஞ்சள் பெட்டி தெய்வீகத்தன்மை பொருந்தியதென்றும் அதில் தெய்வீக சக்தி இருக்கிற தென்றும் கற்பித்து மஞ்சள் துணி, பூஜை, விரதம் முதலிய பலவிதத் திட்டங்களை நியாயங்களைச் சொல்லி மயக்கவைத்து ஓட்டு வாங்கினார்கள்.

இந்திய மக்கள் அநாகரிக மத உணர்ச்சியுள்ளவர்களாகவும், மூட நம்பிக்கைக்காரர்களாகவும் இருப்பதால் இவர்களை ஏய்க்க மதப் பூச்சாண்டி காட்டினால் தான் முடியுமென்று கருதி அக்கருமத்தில் இறங்கி வெற்றி பெற்று விட்டார்கள்.

அதையே நினைத்துக் கொண்டு அம்முறையின் மூலமே ஸ்தல ஸ்தாபன தேர்தல்களிலும் வெற்றி பெற வர்ணப் பெட்டியை புகுத்தி இருக்கிறார்கள். கவர்னர் பிரபுவும் இக்காரியத்துக்கு தலையாட்டி விட்டார் என்று தான் நினைக்கவேண்டி இருக்கிறது. இதில் உள்ள ஒரு முக்கிய விஷயம் என்ன என்று பார்த்தால் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களுக்கு வர்ணப் பெட்டி முறை கூடாதென்பதற்கு சம்மதம் கொடுத்தவரும் இதே கவர்னர் பிரபு தான் என்பதாகும். இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால் இந்த சர்க்காருக்கு இந்திய நாட்டு ஆட்சியைப் பொறுத்த வரை சொந்தப் புத்தியை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் தங்கள் காரியத்தில் கை வைப்பதில்லை என்று வாக்குறுதி கொடுத்து சரணாகதி அடைந்தவர்கள் யாராயிருந்தாலும் எப்படிப்பட்டவர் களானாலும் அவர்களுக்கு மக்களைச் சூறையாட விட்டுக் கொடுத்துவிட வேண்டியது தான் என்றும் கருத வேண்டியிருக்கிறது என்பதேயாகும்.

மஞ்சள் பெட்டி முறைக்கு ஓட்டர்கள் அதிகம் பேர் மூட மக்களாகவும் பார்ப்பனர்களாகவும் இருந்தால் தான் பயன்படும் என்கின்ற கருத்தில் இப்போது உள்ள ஓட்டர்கள் லிஸ்டையும் மாற்ற மந்திரிகள் முயற்சி செய்வதாய்த் தெரியவருகிறது.

அதாவது இன்றைய ஓட்டர்கள் லிஸ்டில் ஏதாவது ஒரு சொத்து உரிமை அல்லது வரி உரிமை உள்ளவர்களுக்குத் தான் ஓட்டுரிமை இருந்து வருகிறது. இதன் பயனாய் பார்ப்பனர்களுக்கு ஓட்டு அதிகமில்லாமல் இருந்து வருகிறது. அதை மாற்றி எல்லாப் பார்ப்பனர்களுக்கும் ஓட்டு இருக்கும் படி சூழ்ச்சி செய்து பழைய ஓட்டர் லிஸ்டை கிழித்தெறிந்து விட்டு அதாவது “படித்தவர்களுக்கெல்லாம் ஓட்டு இருக்கும்படியாகச் செய்வது” என்கின்ற சூழ்ச்சியின் மூலம் பெண்கள் உள்பட சகல பார்ப்பனர்களுக்கும் ஓட்டுரிமை வரும்படி ஓட்டர் லிஸ்டை இனிமேல் திருத்தப் போகிறார்களாம். அதற்கு ஆக தேர்தலை ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கிறார்களாம். இதனால் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் தான் வெற்றிபெற செளகரிய மேற்படும்.

இந்த மாதிரியான அக்கிரம முறையைக் கையாடுவதற்கு சரணாகதி மந்திரிகள் சொல்லும் காரணங்கள் மிக மிக வெட்கக் கேடானதாகும். அது மாத்திரமல்லாமல் குறும்புப் புத்தி கொண்டதுமாகும் என்றும் சொல்லலாம்.

என்ன வென்றால் ஈரோடு ஓட்டர் லிஸ்டில் அநேக தவறுதல்கள் நடந்துவிட்டதாம். அதற்கு ஆக மாகாணம் பூராவுக்கும் உள்ள ஓட்டர் லிஸ்டுகள் மாற்றப்பட வேண்டுமாம். அப்படி மாற்றுவதிலும் பார்ப்பனர்களில் மாத்திரம் எல்லோரும் ஓட்டராகும் படியான முறையைக் கையாள வேண்டுமாம். பார்ப்பனர்களுக்கு ஒரு சிறு அசெளகரியமாவது ஏற்படும்படியான எக்காரியமும் செய்யக்கூடாது என்பதும் பார்ப்பனரல்லாதார் தலையெடுக்கும் படியான எக்காரியமும் செய்யக்கூடாது என்பதும் தான் சரணாகதி மந்திரிசபையின் நல்லாட்சியாய் போய்விட்டது.

இது “பார்ப்பானுக்கு பைத்தியம் பிடித்தால் வீதியில் உள்ள சாமான் களைத்தான் வீட்டுக்குள் எடுத்தெறிவானே ஒழிய வீட்டுச்சாமான் ஒன்றுகூட வீதிக்கு எறியப்படமாட்டாது” என்ற தாத்தா காலத்துப் பழமொழி போல் நமது அக்கிரகார சரணாகதி மந்திரிகள் செய்யும் சீர்திருத்தமும் நடத்தும் ஆட்சியும் பல விதத்தும் பார்ப்பனர்களுக்கு பயன் ஏற்படும்படியாக நடந்து வருகிறது. “பார்ப்பனரல்லாதார்களிலும் சில மந்திரிகள் இருக்கிறார்களே” என்று விஷயமறியாதவர்கள் சொல்ல வரலாம். ஹிந்தி கூடாது என்றும், கதர் கூடாது என்றும் கூப்பாடு போட்ட பார்ப்பன ரல்லாத தமிழ் மக்கள் இன்று மந்திரி ஆசனத்தில் உட்கார்ந்த உடன் ஹிந்தி நல்ல பாஷை என்றும் கதர் தேசீயம் என்றும் சொல்லுவதோடல்லாமல் தாங்களும் அணிந்து கொண்டு ஊர் ஊராய் பிரசாரமும் செய்கிறார்கள் என்றால் அந்த 3, 4 தமிழ் மந்திரிகள் என்போர்களும் தங்களை தமிழ் மக்கள் என்றோ, தமிழர் பிரதிநிதி மந்திரிகள் என்றோ சொல்லிக் கொள்ளவாவது சம்மதிப் பார்களா என்பதே நமக்கு சந்தேகமாய் இருக்கிறது. “மங்களகரமான மஞ்சள் பெட்டி” முறை இருந்ததினாலேயே இத்தமிழ் மந்திரிகள் மந்திரிகளாக முடிந்து இருக்கும் போது அவர்கள் எப்படி மஞ்சள் பெட்டியை ஆக்ஷேபிப்பார்கள்?

“விபீஷணனுக்கு பட்டம் வேண்டியதில்லை என்ற உணர்ச்சி இருந்தால் தானே அண்ணனைக் காட்டிக் கொடுக்காமலும், சகோதரத் துரோகம் செய்யாமலும் இருந்திருக்க முடியும்?” (ராமாயணக் கதைப்படி) பட்டம், பதவி, பணம் ஆசைவந்தால் ஹிந்தியும் கதரும், மஞ்சள் பெட்டியும் மாத்திரம் தானா ஆதரிக்கப்படும்? இன்னும் என்ன என்னமோ ஆதரிக்கப்பட்டு எது எதற்கோ இடம் கொடுக்கப்படப் போகிறது என்பது நமக்குத் தெரியும்.

ஈரோடு ஓட்டர் லிஸ்டில் உள்ள தவறுதல்கள் இன்னது என்று இதுவரை யாரும் எடுத்துச் சொல்லவில்லை. முன்பு ஈரோட்டில் சேர்மெனாய் இருந்த தோழர் சீனிவாச முதலியார் என்பவரின் பெயர் ஒரு வார்டில் ஓட்டர் லிஸ்டில் சேர்க்கப்பட வில்லையாம். இதனால் 19 வார்டுக்கு தயார் செய்த ஓட்டர் லிஸ்டில் ஓட்டை ஏற்பட்டு விட்டதாம்.

தோழர் சீனிவாச முதலியாரைப் பற்றி தெரியாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்க மாட்டார்கள். அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் சட்டப்படி நடுநிலமையாய் இருந்து ஒரு நீதிபதி கவனித்திருப்பாரானால் கவனிக்க சர்க்கார் அனுமதி கொடுத்திருந்திருப்பார்களானால் தோழர் முதலியார் 5, 6 தடவை செத்துப் பிறந்து ஒவ்வொரு பிறவியிலும் நூற்றாண்டு வாழ்ந்து செத்தாலும் தண்டனை காலம் முடிவடைந்திருக்க முடியாது.

இப்படிப்பட்டவர் ஓட்டராய் வரத்தகுந்த எந்தவித தகுதியும் இல்லாத காரணத்தால் ஓட்டர் லிஸ்டில் பெயர் வரமுடியாமல் போனதற்காக ஓட்டர் லிஸ்டில் ஓட்டை என்கிறார்கள் நம் அக்கிரகாரப் பார்ப்பனர்கள். இதே பார்ப்பனர்கள் மகாநாடு கூட்டி தோழர் முதலியாரின் சகல குணங்களையும் நடத்தைகளையும் வெளியாக்கி சர்க்காருக்கு அறிவித்த படலங்கள் இன்னும் வண்டி வண்டியாய் இருக்கின்றன.

இவை எப்படியோ இருக்கட்டும். ஓட்டர் லிஸ்டை பரிசீலனை செய்ய சர்க்காரால் நியமித்த அதிகாரிகள் (ரிவைசிங் போர்ட் மெம்பர்கள்) மூவர். அவர்களில் ஒருவர் லண்டன் மிஷின் பாதிரியார் (ஐரோப்பியர்) மற்றொருவர் இன்கம்டாக்ஸ் ஆபிசர் (கஜட்டட் ஆபிசர்) மற்றொருவர் ஒரு பிரபல வக்கீல் (முனிசிபல் நிர்வாகத்தோடு வெகு காலமாக அபிப்பிராய பேதமுள்ள குடும்பம்). இப்படிப்பட்ட மூவர் மாத்திரம் சேர்ந்து ஓட்டர் லிஸ்டு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.

தோழர் சீனிவாச முதலியாருக்கு வீடு கிடையாது. கடன்காரர் தொல்லைக்கு பயந்து ஈரோட்டில் இருக்க வேண்டிய நாள் இருக்கவே யில்லை. கோர்ட்டு இல்லாத காலங்களில் இரவில் ஈரோடு வந்து தலைகாட்டி விட்டுப்போவது வழக்கம். ஓட்டர் லிஸ்டு தயாரிக்கும்போது முனிசிபல் கமிஷனர் தோழர் சீனிவாச முதலியார் எந்த கோர்ட்டிலாவது தொழில் நடத்த எப்போதாவது ஆஜராயிருக்கிறாரா என்று கேட்டதில் எந்த கோர்ட்டு வக்கீல் லிஸ்டிலும் இவர் பெயர் இல்லை என்று அதிகாரிகள் லிஸ்ட் அனுப்பி இருக்கிறார்களாம். விசாரணையில் தோழர் முதலியாருக்கு ஈரோடு விலாசம் போட்டு வந்த கடிதக் கட்டுகளை முதலியார் ஆஜர்செய்த போது அதில் இரண்டொரு ரிஜிஸ்டர் கடிதமும் இருந்ததால் அந்த ரிஜிஸ்டர் கடிதங்களின் கூடுகள் எங்கே என்று ரிவைசிங் அத்தாரட்டி ஆபிசர் (பாதிரியார்) கேட்ட போது அது மாத்திரம் காணாமல் போய்விட்டது என்று தோழர் முதலியார் அவர்கள் சொன்னதால் எல்லோரும் சிரித்து முதலியாரின் விண்ணப்பத்தைத் தள்ளி விட்டார்களாம். இதனால் ஓட்டர் லிஸ்டு தயாரித்த முறை தவறு என்று எப்படி ஏற்படும்?

ஓட்டர் லிஸ்டை மாற்ற வேண்டுமானால் ஈரோடு ஓட்டர் லிஸ்ட் மீது ஏன் குறைகூற வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துக்காட்டினோம். ஆகவே அக்கிரகாரத் தொல்லை நம்மை எப்படிப் பழி வாங்குகிறது என்பதைக் காட்டவே இதை எழுதினோம். கதரைப்பற்றி அடுத்த வாரம் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் – 29.08.1937

You may also like...