தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் வைஸ் பிரசிடெண்டுக்கும் சுயமரியாதைத் தலைவருக்கும் வரவேற்பு
அன்புள்ள தோழர்களே!
நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரங்களுக்கு உங்கள் ஜில்லா போர்டு தலைவரும் உப தலைவரும் தக்க பதில் கூறினார்கள். அவர்கள் மற்றவர்களைப் போன்று ஏமாற்றும் முறையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுப்போமென்று ஆசை வார்த்தையோ அல்லது சமயத்திற்கு பதில் என்ற முறையிலோ சொல்லாமல் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட காரியங்களை தங்களால் முடிந்தவரை செய்வதாகத்தான் கூறினார்கள். அதுதான் உண்மை. ஜில்லா போர்டுகள் மக்களின் தண்ணீர் வசதி, ரோடு வசதி, சுகாதார வசதி, பள்ளிக்கூட வசதி ஆகியவைகளைக் கவனிப்பதற்காகவே இருக்கின்றன. அங்கு பூரண சுயராஜ்யப் பேச்சுக்கு இடமில்லை. அங்கு கட்சி பேதம் வேண்டியதில்லை. வீணாகக் கலகமும் வேண்டியதில்லை. பல ஜில்லா போர்டுகள் கூட்டங்களைப் பார்த்தால் மீன் கடைச் சண்டைகளைப் போல் கலகம் செய்து கொள்ளுவதையும் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதையும் காணலாம்.
இதனால் ஜில்லா மக்களுக்கு வேண்டிய வசதிகள் கவனிக்கப்படு வதில்லை. ஜில்லா போர்டு மெம்பர்களும் தலைவர்களும் லோகல் போர்டு சட்டப்படி தான் நடக்க முடியுமே தவிர சுயேச்சையாக ஒன்றும் செய்துவிட முடியாது. பல ஜில்லா போர்டுகளிலும் முனிசிபாலிட்டிகளிலும் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து ஜில்லா போர்டுகளையும் முனிசிபாலிட்டிகளையும் எடுத்து விட்டு ஒரு பொறுப்புள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர் வசமே ஒப்புவித்து விடுவது நல்லதென்று முன்னொரு சமயம் நானும் தோழர் ராஜகோபாலாச்சாரியாருங்கூட கலந்து பேசினோம். அந்தப்படி காரியங்கள் விரைவில் நடந்தாலும் நடக்கலாமென்று எண்ணுகிறேன். ஜில்லா போர்டு தலைவருக்கும் ஒற்றுமையில்லாத கட்சிப் பிளவாயிருக்கும் காரணத்தால் அடிக்கடி எல்லாக் காரியங்களும் கவனிக்க முடியாமல் தங்கள் மெஜாரட்டி பலத்தை காப்பாற்றிக் கொள்வதிலேயே காலம் வீணாகின்றது. ஜில்லா போர்டுகள் எவ்வித கட்சி வேற்றுமையுமின்றி ஒற்றுமையாயிருந்தால் கிராம ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளை மெய்யாகவே செய்து கொடுக்க முடியும். நாம் விரும்பும் செளகரியங்களுக்குச் சர்க்காரும் உதவி செய்து அப்போர்டுகளை மதிக்கிறார்கள். கலகம் செய்து கொண்டிருக்கிற போர்டுகளையும் “சர்க்காரை ஒழிக்கும்” சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் நிறைந்த போர்டுகளையும் எப்படி சர்க்கார் மதித்து உதவி செய்வார்கள்? பல காங்கரஸ்காரர்கள் கைப்பற்றிய ஜில்லா போர்டுகளிலும் ஊழல்களும் நடப்பதைப் பார்க்கிறோம். ஆகையால் ஓட்டுரிமையுள்ள நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு கட்சிகளை மதித்தோ கலர் பெட்டிகளை மதித்தோ ஓட்டுப் போட்டு உங்கள் பிரதிநிதிகள் ஒன்றாகக் கூடிக் கொண்டு கலகம் செய்யாமல் இருக்கும்படி பார்த்து உண்மையான பிரதிநிதிகளுக்கு உங்கள் நன்மைக்காக கவலையோடு பாடுபடும் பொறுப்புள்ள பிரதிநிதி களுக்கு ஓட்டுக்கொடுத்து பொது ஸ்தாபனங்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இந்த வைபவத்திற்கு என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்டுக் கொண்ட தோழர்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்களுடைய வரவேற்புப் பத்திரம் மிகவும் வைதீக முறையில் எழுதப்பட்டிருக்கிறதென்று உங்கள் உபதலைவர் கூறிப்பிட்டார். அது உண்மைதான். நமக்கு வேண்டிய தேவைகளைக் குறிப்பிடும் ஒரு வரவேற்புப் பத்திரத்தில் நமக்கும் புரியாத பல அபிப்பிராயங்களைப் புகுத்தி வைதீக முறையில் வரவேற்புப் பத்திரங்கள் எழுத வேண்டிய அவசியமில்லை. அது உங்களுடைய பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட உணர்ச்சியே தவிர வேறில்லை. நாங்கள் மாலைக் கூட்டத்தில் வைதீகத்தின் வரலாற்றைப் பற்றியும் வேறு பல புது அபிப்பிராயங்களைப் பற்றியும் பேசுவதாக இருக்கிறோம். நீங்கள் யாவரும் வந்திருந்து விருப்பு வெறுப்பின்றி அமைதியாய்க் கேளுங்கள். உங்கள் அறிவிற்கும் அநுபவத்திற்கும் நாங்கள் கூறுவது உண்மையென்று பட்டால் அதைப் பின்பற்றி அந்தப்படி நடவுங்கள். மீண்டும் உங்களுக்கு என் வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
குறிப்பு: 01.08.1937 ஆம் நாள் தாரமங்கலத்தில் நடைபெற்ற தர்மபுரி ஜில்லா போர்டு தலைவர் – துணைத் தலைவர் வரவேற்புக் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 08.08.1937