பண்டித ஜவஹர்லாலின் மதிப்பு

காங்கிரஸ் தலைவரான பண்டிதர் ஜவஹர்லால் அவர்களுக்கு நாட்டில் உண்மை மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பொது ஜனங்கள் உணரவேண்டும் என்பதற்கு ஆகவே இக்கட்டுரை எழுதுகிறோம். பண்டித ஜவஹர்லால் பல சமயங்களில் முன்பின் யோசனையில்லாமலும் முறட்டு வீரமாகவும் பேசும் பேச்சுக்களையும், எழுதும் எழுத்துக்களையும் பல பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி பயன்பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கிரசின் பேரால் ஓட்டு கேட்கும் போது காங்கிரசின் வருணாச்சிரம தருமத் தன்மையையும் முதலாளித்துவ தன்மையையும் மறைப்பதற்கு ஆக பண்டிதரை காந்தியாரும் பார்ப்பனர்களும் பயன் படுத்திக் கொள்ளும் தன்மை மற்றொரு பக்கம் இருக்கட்டும். வகையான வாழ்வுக்கு வகையற்ற வாலிபக்கூட்டமும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக அவ்வப்போது எந்தெந்த பேச்சுக்கும் ஸ்தாபனத்துக்கும் செல்வாக் கிருக்கின்றதோ அந்தந்த பேச்சுப் பேசி அந்தந்த ஸ்தாபனத்தைத் தொங்கிக் கொண்டு பிழைப்பதற்கு ஆக ஜவஹர்லாலுக்கு ஜே என்றும் சமதர்மத்துக்கும் பொது உடமைக்கும் ஜே என்றும் கூறிக் குதிப்பது இனியொரு பக்கத்தில் இருக்கட்டும்.

இன்றைய சாதாரண நடைமுறை வழக்கில் பொதுப்படையாக பண்டிதருக்கு பொதுவாழ்வில் – அரசியல் உலகில் – காங்கிரசில் – அரசாங்கத்தில் என்ன மதிப்பு இருக்கிறது என்பதை அறிய வாசகர்களை நடு நிலைமையில் இருந்து சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

ஜவஹர்லால் அவர்கள் தன்னை பொதுவுடமைவாதி, சமதர்மவாதி என்று காட்டிக் கொள்ளுகிறவர் என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் தோழர் காந்தியாரும் மற்றும் அவரது “12 அந்தரங்க சிஷ்யர்களும்” அதாவது தோழர்கள் பட்டேல், ராஜேந்திர பிரசாத், ஜமன்லால் பஜாஜ், ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களும் பொது உடமைக் கொள்கைக்கு விரோதிகள் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. அதோடு மாத்திரமல்லாமல் பண்டிதர் தனக்கு ஜாதியில்லை என்றும் மதம் இல்லையென்றும் கடவுளைப் பற்றி கவலை இல்லை யென்றும் சொல்லிக் கொள்ளுபவர். சில இடத்தில் நாஸ்திகர் என்றும் காட்டிக்கொள்ளுபவர். (காரியத்தில் பார்ப்பன ஜாதிவேஷம், இந்துமத கொள்கை, கோவில் குளங்களுக்குப் போய் வணங்கி பிரசாதம், மதக்குறி முதலியவைகள் பெறுகிறவர், அணிகிறவர் ஆக இருந்தபோதிலும் வாயில் தைரியமாய் சொல்லுகிறவர்)

இந்த நிலைமையில் காங்கிரஸ் தலைமைப்பதவி பெறுவதற்கு ஆக இவற்றையெல்லாம் கைவிடத் துணிந்தவராக வெளியில் எடுத்துச் சொல்லி “என்னுடைய கொள்கை எப்படி இருந்தாலும் நான் காங்கிரசுக்கு தலைவனானால் காங்கிரசில் இக்கொள்கையை வலியுறுத்துவேன் என்று யாரும் கருதிவிடக் கூடாது” என்று சொல்லியே தலைமைப் பதவி சம்பாதித்துக் கொண்டவர். காங்கிரஸ் சர்வாதிகாரியும், சர்வாதிகாரியை நடத்துகிறவர்களும் இந்த சங்கதி தெரிந்தே பண்டிதரை தங்கள் தங்கள் சொந்தக் கருத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி சூழ்ச்சியாகவே பண்டிதருக்கு தலைமைப் பதவி கொடுத்து விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். இந்த காரணங்களாலேயே தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அவரை தமிழ் நாட்டுக்குத் தருவித்து பயன்படுத்திக் கொண்டதல்லாமல் அவரை ஊருக்கு வழியனுப்பும்போது “சுதேசமித்திரன்” பத்திராதிபர் “இந்து” பத்திரிகையில் ஒரு வழியனுப்பு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுத்து அதில்,

ஓய் பண்டிதரே! உமக்கு சொந்ந புத்தியும் இல்லை சொல்பவர்கள் புத்தியும் கேட்பதில்லை.

உமக்கு பண்டித மோதிலால் நேரு தகப்பனாய் ஏற்பட்டும், காந்தியார் குருவாய் ஏற்பட்டும் இருவர் தன்மையும் உம்மிடமில்லையே. உமது ஆணவமே உம் முன் எப்போதும் நின்று உம்மை நடத்துகிறதே தவிர பெருந்தன்மையோ அடக்கமோ அறிவோ உம்மிடம் இல்லையே என்றெல்லாம் இன்னமும் இதைவிட மோசமான கருத்துக்களை திரட்டி “ரங்கனாதர் மாலை” மாதிரி பெரிய மாலையாகக் கட்டி தலையிலிருந்து கால்வரை படும்படியாக சாத்தி அனுப்பினார்கள்.

பண்டிதர் தலைவரானவுடன் வேலைக்கமிட்டி நியமிப்பதிலும் பண்டிதர் இஷ்டப்படி செய்து கொள்ள சட்டம் இருந்தும் அந்தப்படி செய்யவிடவில்லை. அப்படி இருந்தும் பண்டிதர் நடத்தையை அது விஷயத்தில் தோழர் ராஜேந்திரபிரசாத் கண்டித்தார்.

இவையும் இவை போன்றனவும் ஒரு புறமிருக்க, பதவி ஏற்பு விஷயத்தில் பண்டிதர் “காங்கிரஸ் எந்தக் காரணம் கொண்டும் பதவி ஏற்கக் கூடாது” என்று ஒருபுறம் பிரசாரம் செய்து வரவும் தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் மற்றொரு புறம் பதவியேற்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வரவுமான காரியம் நடந்து கொண்டே வந்தது. அதை ஏன் என்று கேட்க பண்டிதருக்கு யோக்கியதை இல்லாமல் போய் விட்டது. உலகப் பொது வழக்கில் ஒரு ஸ்தாபனத்தின் தலைவர் அபிப்பிராயம் எதுவோ தலைவரால் பிரசாரம் செய்யப்பட்டுவரும் கொள்கை எதுவோ அதுதான் அந்த ஸ்தாபனத்தின் கொள்கையாகவும் அபிப்பிராயமாகவும் இருக்கும் – இருக்க வேண்டும் என்பதாகும். அப்படிக்கில்லாத பட்சம் நேர்மாறுபாடாய் இருக்குமானால் தலைமைப் பதவியில் இருப்பவர் ராஜிநாமா கொடுத்து அந்த ஸ்தாபனத்தின் அல்லது அந்த பதவியின் சுயமரியாதையை காப்பாற்றுவார்கள் என்பது உலக வழக்கு. நமது பண்டிதர் எப்படியாவது தலைவர் பதவிச் சட்டை தன்மீது சாத்தப்பட்டிருந்தால் போதும் என்று கருதிக்கொண்டு தன் மானத்தை சிறிது சிறிதாக பறிகொடுத்துக்கொண்டே வந்து விட்டார். அதன் பயன் தான் இன்று அரசியலில் பண்டிதருக்கு சிறிதும் மதிப்போ கவுரவமோ இல்லாமல் செய்து விட்டது.

காங்கிரஸ் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மேலால் என்ன செய்வது என்பதில் பண்டிதரைக் கலக்கவோ பண்டிதர் அபிப்பிராயம் தெரியவோ பண்டிதர் நடத்துதலின் கீழ் இருக்கவோ யாருமே கருதவில்லை.

உடனே காந்தியார் பட்டத்துக்கு வந்து விட்டார். அதுவும் எப்படிப்பட்ட காந்தியார் என்றால் காங்கிரசில் 4 அணா மெம்பராகக் கூட இல்லாத காந்தியாரை – சட்டசபை தேர்தலைப் பற்றியோ அதன் மேல் நடத்தையைப் பற்றியோ தனக்கு அபிப்பிராயம் கூற எவ்வித யோக்கியதையும் உரிமையும் இல்லை என்றும் இதை சத்தியமாக சொல்லுகிறேன் என்றும் சொன்ன காந்தியாரை திடீரென்று கொண்டுவந்து தலைவராக்கினார்கள். அப்பொழுது பண்டிதர் இஞ்சி சாப்பிட்ட ஆஞ்சநேயர் போல் விழித்துக்கொண்டு இருந்தார். பிறகு பண்டிதருக்கு இஷ்டமில்லாத காரியமாகிய மந்திரி பதவி ஏற்பதை காந்தியார் பேரால் அனுமதித்ததையும் சிறிதும் ஆக்ஷேபிக்க சக்தியில்லாதவராய் மூலையில் ஒடுங்கிக் கிடந்தார். அந்த மந்திரி பதவி ஏற்பதிலும் பண்டிதர் தகமைக்கு மிகமிக மானங்கெட்ட நிபந்தனையான சீர்திருத்த சட்டத்துக்கு கட்டுப் பட்டு அடங்கி அரசியலை நடத்திக் கொடுப்பதாகவும் கவர்னர்களும் அரசாங்கத்தாரும் தங்கள் மீது சந்தேகப்படாமல் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்னும் நிபந்தனையை கொடுத்து சர்க்கார் அனுமதியை எதிர்ப்பார்த்தார்கள். இதையும் பண்டிதர் வாயாலேயே ஆமோதிக்கும்படி செய்தார்கள். அதற்கும் சர்க்கஸ்காரர் சிங்கம்போல் வாலாட்டினார். கடசியாக சர்க்கார் அனுமதி கொடுக்காவிட்டாலும், அனுமதி கொடுக்க முடியாது என்று சர்கார் மறுத்ததும் மந்திரி பதவி ஒப்புக்கொள்வீர்களா மாட்டீர்களா என்று வைசிராய் பிரபு மிரட்டினதும் அனுமதி கொடுத்ததாகத்தான் அருத்தம். அதுமாத்திரமல்ல, காங்கிரஸ் கேட்டதெல்லாம் கொடுத்துவிட்டதாக அருத்தம் என்று சொல்லி மந்திரி பதவி ஏற்றுக் கொள்ள வேண்டிய தீர்மானம் செய்ய 5-ந்தேதி வார்தாவில் மீட்டிங் கூட்ட வேண்டியிருக்கிறபடியால் உடனே புறப்பட்டு வரவேண்டியது என்று பண்டிதருக்கு ஆச்சாரியார் சம்மன் அனுப்பின உடன் இப்போது ஓட்ட ஓட்டமாக ஒருநாள் முன்பாகவே வார்தாவுக்கு ஓடுகிறார். இனி ஆதார பூர்வமாக பண்டிதருக்கு உள்ள மதிப்பு என்ன என்று பார்ப்போம்.

இந்தியா மந்திரி ஜெட்லண்ட் பிரபு காங்கிரஸ் ராஜகோபாலாச்சாரி என்று சொன்னாரே ஒழிய பண்டிதரைப் பற்றிய பேச்சே – காங்கிரஸ் தலைவரைப் பற்றிய பேச்சே காணப்படவில்லை. வைஸ்ராய் பிரபு பேச்சிலும் காந்தியாரைப்பற்றி இருந்ததே தவிர பண்டிதரைப் பற்றிய பேச்சே இல்லை. தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் காந்தியாருக்கும் ஆச்சாரியாருக்கும் மற்றும் வேறு யாருக்குமோ தன் அறிக்கை அனுப்பி யிருப்பதாக அறிக்கை வெளியிட்டாரே தவிர பண்டிதரை லôயம் செய்ததாகக்கூட காணப்படவில்லை. எல்லா இந்திய காங்கிரஸ் பத்திரிகைகளும் அல்லாத பத்திரிக்கைகளும் காந்தியார், ஆச்சாரியார் ஆகியவர்களைத்தான் முன்னிலைப்படுத்தி எழுதுகின்றனவே ஒழிய பண்டிதர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்று கூட அவை லôயம் செய்வதில்லை. மற்றும் காந்தியாரும், ராஜகோபாலாச்சாரியாருமேதான் அடிக்கடி அறிக்கை மேல் அறிக்கைகள் விடுகின்றார்களே ஒழிய பண்டிதர் அறிக்கை காணப்படுவதே இல்லை. பண்டிதர் கருத்துக்கு காங்கிரஸ் கொள்கை, திட்டம் ஆகியவைகளுக்கு விரோதமாய் வெளிவரும் அறிக்கைகளுக்கு கூட வாய் திறப்பதில்லை.

ஒரு காங்கிரஸ் தலைவர் ஒரு விஷயத்தின் மீது தன் அபிப்பிராயத்தைச் சொல்லக்கூட தைரியமில்லாமல் யாராவது கேட்டால் “நான் இன்னமும் அறிக்கையை படிக்கவில்லை எனக்கு நேரமில்லை” என்று பதில் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் என்றால் இவரது வீரமும் தன்மானமும் எவ்வளவு என்பதை பொது ஜனங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்திய வாலிபர்கள் லக்ஷக்கணக்கான பேர்கள் ஜவஹர்லாலை நோக்குகிறார்களாம். காந்தியாரையும் ஆச்சாரி யாரையும் யாரும் நோக்குவதில்லையாம். இது “சமதர்ம வாலிபர்” என்னும் வெட்கங்கெட்ட வாலிபர்கள் பேச்சாய் இருக்கிறது.

இந்த லக்ஷணத்தில் உள்ள பண்டித ஜவஹர்லால் வீரர் “சுயமரியாதைக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவளித்ததால் தனக்கு சுயமரியாதைக் கட்சி என்றால் பிடிப்பதே இல்லை” என்று மலேயாவிலும் மற்றும் பிற இடங்களிலும் பேசி வருகிறார். எந்த சந்தர்ப்பத்தில் என்றால், தான் பதில் சொல்ல முடியாதபடியான கேள்விகளைக் கேட்டால் அதிலிருந்து தப்பித்து ஓட இந்த பல்லவியை பாடுகிறார். இவரைப்பின்பற்றி சில “சமதர்ம வீரர்கள்” பேசிப்பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் “பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் சிறிது மனக்கசப்பு வந்தாலும் என் உயிரை விட்டாவது அதைத் தடுப்பேன்” என்று சொல்லும் காந்தியாருக்கு சிஷ்யராய் இருப்பதிலும் ஜே போடுவதிலும் இந்த வீரர்களுக்கு அவமானமோ அசிங்கமோ தோன்றுவதில்லை.

சட்டத்துக்கு அடங்கி நடந்ததாக வாக்குறுதி கொடுத்து மந்திரி பதவி ஏற்று அரசியல் சட்டத்தை நடத்திக்கொடுத்து “பிரிட்டிஷ் சர்க்காருக்கு தூண்களாய்” இருக்கப்போகும் காரியத்தைக் கண்டு இந்த வீரர்கள் வெட்கப்படவோ அசிங்கப்படவோ முடிகிறதில்லை. ஆகவே நம்மை குறைகூறும் இவர்களுக்கு வெட்கமோ வாசனை பார்க்கும் மூக்கோ இருக்கிறதோ இல்லையோ என்பதை பொதுமக்களே உணர்ந்து கொள்ளட்டும்.

குடி அரசு – தலையங்கம் – 04.07.1937

You may also like...