மாயவரம் நடராஜன் மறைந்தார்
நம் அருமைத் தோழன், ஆருயிர் நண்பன், உண்மை உழைப்பாளி மாயவரம் சி. நடராஜன் முடிவெய்திவிட்டார். காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை உலகில் நடராஜனை அறியாதார் வெகுசிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அருந்தொண்டாற்றி வந்தவர். தனக்கென வாழாதவர். தனக்கென ஒரு அபிப்பிராயம் காட்டிக்கொள்ளாத போர்வீரராய் இருந்தவர். பணங் காசைப்பற்றியோ தண்டனை கண்டனைகளைப்பற்றியோ துன்பம் தொல்லை ஆகியவைகளைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் என்ன உத்திரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவெய்திவிட்டார் என்று தந்தி வந்தது – நம்ப முடியவில்லை. மேலால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. எழுத பேனா ஓடவில்லை. இனி மேலால் தொண்டர் படைநிலை என்ன ஆவது!
அப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சமும் அழியாக் காதலும் கொண்ட அருமை நடராஜனை எப்போது காண்பது! அல்லது நடராஜனைப் போன்ற மற்றொரு காதலனை எங்கே காண்பது! இயற்கையே! உன் கொடுமையே கொடுமை! எங்கும் சிறிதும் இணையில்லாத கொடுமை!
குடி அரசு – இரங்கற் கட்டுரை – 11.07.1937