சென்னையில் தீபாவளி மறுப்பாளர்கள் ஒன்று கூடினர் “நரகாசுரன்” வீரவணக்க நாள்
தீபாவளி நாளில் தீபாவளி மறுப்பாளர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு, கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இந்த நிகழ்வு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துப் பேசினார்.
தீபாவளியை மறுக்கும் ‘திராவிடர்கள் கூடுகை’ என்ற தலைப்பில் நரகாசுரன் வீரவணக்கநாள் சென்னை மாவட்டக் கழகம் சார்பில் கழகத் தலைமை அலுவலகத்தில் அக்.10, மாலை 5 மணியளவில் தொடங்கியது. “தீபாவளியன்று மண்டபம், அரங்குகள் வாடகைக்கு விடக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய காரணத்தால்’’ நிகழ்வு திட்டமிட்டபடி அரங்கிலிருந்து கழகத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலைக்குழுவான லதா, சத்யா, திராவிட மகிழன், உமாபதி குழுவினரின் எழுச்சி இசையுடன் தொடங்கியது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய “இரண்யன் அல்லது இணையற்ற வீரன்” நாடகத்திலிருந்து இரண்யன் மகன் பிரகலாதன் இறுதிக் காட்சியில் பார்ப்பனச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தந்தையின் சடலத்தின் முன் தனது துரோகத்தை உணர்ந்து பேசிய காட்சியைப் கிராமிய இசைக்கலைஞர் வீரமணி சிறப்பாக நடித்துக் காட்டினார். பார்வையாளர்களிடையே இனமான உணர்வையும், பார்ப்பன எதிர்ப்பையும் உணர்ச்சிக் கடலில் மூழ்க வைத்தது இந்த நிகழ்வு. கடவுள், புராணங்களைப் பற்றிய தந்தை பெரியார் எழுதிய கட்டுரைகளை தோழர்கள் சூர்யாவும், தீபாவளி பற்றிய கட்டுரையை இரண்யாவும் வாசித்தனர். ஏராளமான புதிய தோழர்கள் வருகையோடு தலைமை அலுவலகம் நிரம்பி வழிந்தது. அனைவருக்கும் இரவு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
‘கற்பிதங்களைக் கட்டுடைப்போம்’ என்ற தலைப்பில் கழகத் தோழரும் ஊடகவியலாளருமான ரவுத்ரா நடிகர்கள் மீதான பிம்பக் கட்டமைப்புகளை உடைத்துப் பேசினார். தொடர்ந்து பேசிய மருத்துவர் தாயப்பன் ஆளும் வர்க்கம் யார் (Ruling Class) என்பதை சரியாகத் தீர்மானித்தவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் தான். மக்களின் பொதுப் புத்தியில் திணிக்கப்பட்டுள்ள பார்ப்பனியச் சிந்தனைகளைக் கட்டுடைக்க வேண்டும் என்றார். இந்தக் கட்டுடைப்புக்கு நாம் நவீனகால பார்ப்பனரல்லாத சாதனையாளர்களைப் பாராட்டவேண்டுமே தவிர புராண காலத்துக்குத் திரும்புவதில் தனக்கு உடன்பாடில்லை என்று தனது கருத்து மாறுபாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இத்தகைய நிகழ்வுகள் ஏன் நிகழ்த்தப்படுகின்றன என்பதை விளக்கிப் பேசினார். அவரது உரை….
“2014-ம் ஆண்டு இதேபோன்று தீபாவளி நாளில் சென்னையில் கழகம் எதிர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்திய போது இதே போன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பார்ப்பனர்களையும் யாகங்களையும் எதிர்த்த அசுரர்களை அவதாரங்களாக வந்து சூழ்ச்சியால் விஷ்ணு கொலை செய்தான். பிராமணர்களை எதிர்த்தால் கொல்லப்படுவீர்கள் என்று இதன் வழியாக மக்களை அச்சுறுத்தினார்கள். அதனால்தான் பெரியார் புராண, இதிகாசக் காலத்திலிருந்து இங்கு நடப்பது `ஆரிய திராவிட போராட்டம்தான்’ என்று கூறினார். புராணங்கள் அனைத்தும் `சூத்திரர்கள்’ என்று அழைக்கப்பட்ட பார்ப்பனரல்லாதாருக்கு மட்டுமே எழுதப்பட்டவை; ‘பிராமணர்’களுக்காக அல்ல என்கிறார் அம்பேத்கர். வேதங்களை ‘சூத்திரர்கள்’ படிக்கக்கூடாது, காதில் கேட்கக் கூடாது மீறுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்று பார்ப்பனர்கள் மநு சாஸ்திரம் வழியாக சமூகக் கட்டளைகளைத் திணித்தார்கள். அப்போது தான் வேதங்களின், பார்ப்பன மேலாண்மையை மக்களிடம் திணிக்க புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்றவைகளும் எழுதப்பட்டன. புராணங்கள் வரலாறுகள் அல்ல: ஆனால் அன்றைய சமூக எதார்த்தத்தில் இருந்து தானே இந்த கற்பிதங்கள் உருவாகியிருக்க முடியும்? பெரியாருக்கு இது குறித்து தெளிவான புரிதல் இருந்தது. பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடிய ‘அசுரர்களை’ பெரியார் பாராட்டி எழுதியிருக்கிறார். அசுரனான இரண்யன் ஒரு சுயமரியாதை வீரன் என்று பெரியார் எழுதினார்.
பாகவதம் என்ற புராணத்தில் இரணியன் குறித்து இவ்வாறு கூறப்பட்டு இருப்பதை பெரியார் எடுத்துக்காட்டுகிறார்…
‘‘நமது எதிரிகளும் அற்பருமான தேவர்கள் விஷ்ணுவின் ஆதரவோடு எனது சகோதரன் இரணிய கசிபுவைக் கொன்றார்கள். அந்த மகாவிஷ்ணு ஒரு பாதகன், தந்திரக்காரன், அந்த விஷ்ணுவை வெட்டி வீழ்த்தப் போகிறேன். விஷ்ணுவைக் கொன்றால் தேவர்களும், தேவர் கூட்டங்களும் வேரற்ற மரம் போல் வீழ்ந்துவிடுவார்கள் ஆதலால் தானவர்களே! (மக்களே) நீங்கள் முதலில் ‘பிராமணர்கள்’ இருக்கும் இடம் சென்று தவசு வேத அத்யாயனம் செய்பவர்களைக் கொல்லுங்கள்; எந்தெந்த தேசத்தில் ‘பிராமணர்கள்’ இருக்கிறார்களோ, எந்தெந்த தேசத்தில் வேதம் ஓதப்படுகிறதோ, எந்தெந்த தேசத்தில் வர்ணாஸ்ரமத்துக்கு உரிய கர்மங்கள் நடக்கிறதோ, அந்த தேசத்தில் அவர்களை அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள்; நாசம் செய்யுங்கள் என்றான். உடனே அவர்கள் அவ்வாறு செய்து முடித்தார்கள். இதனால் தேவர்கள் மறைந்து சஞ்சரித்தார்கள்”.
-(பாகவதம் ஏழாவது ஸ்கந்தம் இரண்டாவது அத்தியாயம் 715, 716 பக்கங்கள்).
ஆகவே இரணியன் என்பதாக ஒருவன் அந்தக் காலத்தில் இருந்தானோ இல்லையோ என்பது வாதத்துக்கு இடமான பிரச்சனையாக இருந்தாலும், அந்தக் காலத்திலேயே சுயமரியாதை இயக்கம் வீறுகொண்டு இருந்தது என்பதும் அதுவும், பலாத்காரத்தில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்தது என்பதும் அது பெரிதும் பார்ப்பனர்களை ஒழிப்பதும், வேத சாஸ்திரங்களையும் பார்ப்பனர்கள் வீடுகளையும் கொளுத்துவதும், கோயில்மடம், ஆசிரமம், கோபுரம் முதலியவவைகளைக் கோடரி, மண்வெட்டி கொண்டு இடித்து தரைமட்டமாக்கி இருப்பதும் நன்றாய் தெளிவாய் விளங்குகிறது.
இனியாவது பொதுமக்கள் சுயமரியாதை இயக்கத்தைக் குறைக் கூறாமல், அது நம்முன்னோர்களான சில வீரர்கள் செய்ததையும் அவர்கள் விட்டுப் போனதையும் தான் செய்கிறது என்பதாகக் கருதி இக்காலத்திற்கு ஏற்றபடியும் வேண்டிய படியுமான அளவிற்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும். இரணியன் ஒரு சுயமரியாதை வீரனே ஆவான்! இரணியன் கதை ஒரு சுயமரியாதைக் கதையேயாகும்” என்று பெரியார் எழுதினார். -குடிஅரசு, 26.2.1944
புராணக் காலத்தில் அரக்கர்களாக சித்தரிக்கப்பட்ட திராவிடர்களை ஆரிய எதிர்ப்புக்கு சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்புவதற்கு பெரியார் பயன்படுத்தினார். இந்தக் கண்ணோட்டத்தில் தான் இப்போது திராவிடர் விடுதலைக் கழகம் இந்த நிகழ்வுகளை நடத்துகிறது. திராவிடர்களுக்குப் பார்ப்பனர்களைப் போல வேதம் கிடையாது; அப்படி ஏதாவது இருக்குமானால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு எந்த வகையில் எல்லாம் அடிபணிந்து நடப்பது என்பது குறித்தும், அந்த அதிகாரம் திராவிடரல்லாத மற்றவர்களுக்கு திராவிடர்களை அச்சுறுத்துவதற்கு இருக்கின்றனவே தவிர திராவிடர்கள் தங்களுக்காக அவர்களே உருவாக்கிய வேதங்கள், புராணங்கள் என்று இல்லை, என்றார் பெரியார்.
‘‘திராவிடர்கள் நாம் சமயம், வேதம், மதம், சாஸ்திரம் ஆகிய ஏதும் இல்லாத ஒரு நிபந்தனையற்ற திக்கற்ற அடிமைச் சமூகமாக இருந்து வருகிற ஒரு இழிவான தாக்கப்பட்ட சமுதாயமாகவே இருந்து வருகிறோம்’’ என்று கூறினார் பெரியார். – குடிஅரசு (12.10.1940)
பன்றியும் பூமியும் புணர்ந்து பெற்ற பிள்ளையே நரகாசுரன். மலம் தின்னும் பன்றியும், மலம் சுமக்கும் பூமியும் பெற்ற பிள்ளை என்பதால் `நரகன்’ என்பதை குறிப்பிடும் வகையில் நரகாசுரன் என்று பெயரிட்டான் என்ற ஆய்வையும் பெரியார் முன்வைக்கிறார்.
நரகாசுரன் ஆட்சி நடத்தியது புராணத்தில் கூறப்படும் பிராக் ஜோதிட புரி (வங்காளத்துக்கு அருகே) திராவிட நாட்டு எல்லையில் இருந்த பகுதி. இந்தப் பகுதியில் பிறந்த அத்தனை பேரும் இழிமக்கள் என்பதற்காகவே பன்றிக்குப் பிறந்தவர்கள் என்ற புராணத்தை எழுதினார்கள். இந்த இழிவை ஏற்க முடியுமா? என்று கேட்டார் பெரியார்.
தீபாவளி எதிர்ப்பை அதே தீபாவளி நாளில் திராவிடர்களாகிய நாம் இப்படி கூடுகையாக நடத்தலாமா? அது மற்றொரு தீபாவளி கொண்டாட்டம் ஆகாதா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்விக்கும் பெரியார் விடை தந்திருக்கிறார். தீபாவளி நாளில் அதற்கு எதிர்ப்பு நாள் நடத்துங்கள் என்று பெரியார் அறிவுறுத்தியதோடு, அதை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறார்.
“தீபாவளியைத் திராவிடர்களாகிய நாம் ‘வெறுக்கும் தினமாக’க் கருதி, திராவிடத் தோழர்கள் அன்றைய தினம் பழைய கருப்பு உடைகளை, சட்டைகளை அணிந்து துக்கம் கொண்டாடும் பாவனையில் இந்த இழிவு பித்தலாட்டம் புராண ஆபாசங்கள் ஒழிய வேண்டும் என்கிற முழக்கத்துடன் ஊர்வலம் வந்து இந்தக் கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி உண்மையை உணரும்படி செய்ய வேண்டியது கடமையாகும். மற்றபடி அன்று எண்ணெய் முழுக்கு, புது வேட்டி அணிதல், வீட்டில் பலகாரம் செய்து சாப்பிடுதல் முதலியவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். தீபாவளி கொண்டாட வேண்டாம் ஆரிய சூழ்ச்சி என்பதை எழுதுதல்; எழுத்துக்கள் முலம் காட்டமாக மக்களுக்கு விளக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் அரசியல் பேச்சு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முதலிய கட்சி பேச்சு பேசக் கூடாது’’ என்று பெரியார் எழுதியிருக்கிறார். – குடிஅரசு 12.10.1946
விமர்சனங்களுக்கு விடுதலை இராசேந்திரன் பதில்
தீபாவளிக்கான எதிர்ப்பை தீபாவளி நாளிலேயே நடத்த வேண்டும்; அதுவும் புதுச்சட்டை இல்லாது பழைய கருப்புச் சட்டை உடைகளை அணிய வேண்டும் என்று எழுதினார். எனவே அரக்கர்களைக் கொண்டாடி ஆரியப் புரட்டுகளை விளக்கும் நாளாக பின்பற்ற வேண்டும் என்ற பெரியார் காட்டிய கொள்கை வெளிச்சத்தோடு தான் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெரியாரும் திராவிடர் இயக்கமும் நடத்திய பண்பாட்டுப் புரட்சியின் அடிநாதமாக புராண, இதிகாச கட்டுடைப்புகள் இருந்திருக்கின்றன. அண்ணா ‘கம்ப ரசம்’ எழுதினார்; ராமாயணம் எரிக்கப்பட வேண்டும் என்று தமிழறிஞர்களுடன் நேருக்கு நேர் வாதிட்டார். பெரியார் ராமன் படத்தை எரித்தார். நடிகவேள் எம்.ஆர்.ராதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே ‘இராமாயணம்’ நாடகம் நடத்தினார். நாடகம் தடை செய்யப்பட்டபோது தடையை மீறி கைதானார். புலவர் குழந்தை இராவண காவியம் எழுதினார். அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் அது தடை செய்யப்பட்டது. மீண்டும் கலைஞர் ஆட்சியில் தடை நீக்கப்பட்டது. ராஜாஜி கல்கியில் எழுதிய இராமாயண தொடருக்கு கலைஞர் முரசொலியில் `மூக்காஜி’ என்று பதிலடி தொடர் எழுதினார். இந்த எதிர்ப்பு இயக்கங்கள் காரணமாகவே தமிழ்நாட்டில் வாரக் கணக்கில் நடந்து வந்த ராமாயண ‘கதா காலட்சேபங்கள்’ முடிவுக்கு வந்தன. கோயில்களில் விழாக்களில் கூட`கதா காலட்சேபங்கள்’ மறைந்து விட்டன.
‘ராம ராஜ்ஜிய’ கருத்துக்கள் வட மாநிலங்களைப் போல இங்கே வேரூன்ற முடியவில்லை. பாபர் மசூதியை இடித்தபோது வடக்கே எழுந்த கலவரங்கள் இங்கே இல்லாமல் போயின. இன்றைய சூழலுக்கு நவீனத்துவத்தை நோக்கி நகர வேண்டிய நாம் சமகால சாதனையாளர்களைப் பாராட்டாமல் புராண நாயகர்களைப் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன. சமத்துவப் பண்பாட்டு விழாக்களான காதலர் நாள், குடும்ப விழா, ஜாதி மறுப்பு இணையர் கூடுகையை நாம் நடத்தியிருக்கிறோம்.
நவீனத்துவமும் பகுத்தறிவு பெண் விடுதலை கருத்துக்களும் வாழ்வியலாக பரிணமிக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்திக் கொண்டுதான் புராண இதிகாச கட்டுடைப்புகளையும் இயக்கமாக்கி வருகிறோம். அதற்கான தேவை இருக்கிறது. ஈழ விடுதலைக்குப் போராடிய மாவீரன் பிரபாகரன், சிங்கள பேரினவாத எதிர்ப்புக்கு மாவீரன் இராவணனை அடையாளமாக்கினார். இராவணைப் போற்றும் இராமாயணத் தொடரை விடுதலைப் புலிகளின் வானொலி தொடர்ந்து இரண்டுமுறை 52 வாரங்கள் ஒலிபரப்பி பிறகு பிராபகரன் முன்னுரையுடன் நூலாக வெளியிட்டது.
நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அரசுத் தொலைக்காட்சியில் வெளிவந்த இராமயணத் தொடர் தான் ‘ராம ஜென்ம பூமி’ இயக்கத்துக்கு வித்திட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். செயற்கை தொழில்நுட்ப காலத்தில் அதே தொழில்நுட்பங்களோடு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் ‘ராமாயணம்’ திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இந்தியா முழுவதும் திரையிடப்பட்டு ராமனை கதாநாயகனாகச் சித்தரித்து பார்ப்பனியத்துக்கு உயிரூட்டும் முயற்சிகள் நடக்கின்றன. இந்துத்துவாவுக்கு இங்கே களம் தயாரிக்கப்படுகிறது. மோடி பிரதமராக இருந்தாலும் ராமன் சிலையைத் தொட்டு ‘பிரதிஷ்டை’ செய்யும் உரிமை அவருக்கு இல்லை என்று பார்ப்பன சங்கராச்சாரிகள் அறிவித்து விழாவில் பங்கேற்க மறுக்கிறார்கள். ஆனாலும் பார்ப்பனியத்தின் அடிமையான மோடி இதைக் கண்டிக்காமல் கடந்து செல்கிறார்.
அயோத்தி ராமன் கோயிலை இந்தியாவின் தேசியச் சின்னம் என்று அறிவிக்கிறார்கள். இந்தச் சூழலில் இராமாயணத்தையும் புராணங்களையும் கட்டுடைக்கும் இயக்கங்களை நாம் எப்படி தவிர்க்க முடியும்?. பெரியார் இயக்கங்களைத் தவிர வேறு மதவாத எதிர்ப்பு இயக்கங்கள் இதைச் செய்வது இல்லையே என்பதே நமது வருத்தமாகவும் ஏக்கமாகவும் இருக்கிறது.
ராமன், கிருஷ்ணன், பகவத் கீதையை கடுமையாக விமர்சித்தார் அம்பேத்கர். பவுத்தம் தழுவிய போது எடுத்த உறுதிமொழிகளில் ஒன்று இந்துப் பண்டிகைகளைக் கொண்டாட மாட்டோம் என்பதாகும். ஆனால் இந்துத்துவ எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீபாவளி கொண்டாடச் சொல்லுகிறது. கழகத்தின் இந்நிகழ்வுக்கு முகநூலில் கண்டனங்களைப் பதிவு செய்கிறார்கள். தீபாவளி கொண்டாடும் இந்துக்கள் அமாவாசை நாள் என்று கூறி அசைவ உணவு தீட்டானது என்று பார்ப்பனியக் கருத்தியலை கண்மூடி ஏற்றுக் கொண்டு அன்றைய நாளில் சைவத்துக்கு மாறி பார்ப்பனியத்துக்கு அடிபணிகிறார்கள். இந்துக்கள் வெடித்துப் போட்ட பட்டாசுக் குப்பைகளை ஒடுக்கப்பட்ட சமூத்தினரான தூய்மைப் பணியாளர்கள் இரவும்பகலும் நச்சுக் காற்றை சுவாசித்துக் கொண்டு சுத்தம் செய்கிறார்கள். ‘இந்துவாக பிறந்தேன்; இந்துவாக சாகமாட்டேன்’ என்று பிரகடனம் செய்த அம்பேத்கரின் கொள்கைகளை உறுதியாகப் பற்றி நிற்கும் தோழர் திருமாவளவன் அவர்களே தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று கூறி தனது அலுவலகத்தில் பட்டாசு வெடிப்பதைப் பார்க்கும்போது நமக்கு வியப்பாகவே இருக்கிறது. இந்து பார்ப்பனியப் பண்பாடுகளை எதிர்க்காமல் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பேசுவது மரங்களை விட்டுவிட்டு கிளைகளை வெட்டுவது ஆகாதா?
இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றியமைப்பதற்கு இந்து பண்டிகைகளும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் பார்ப்பனியத்துக்கு தேவைப்படுகிறது. பார்ப்பனியம் கட்டமைத்த பண்டிகைகளையும், இதிகாசங்களையும் எதிர்த்து களமாட வேண்டியது வரலாற்றுத் தேவை. வாக்கு அரசியலில் பங்கேற்காத பெரியார், அம்பேத்கர் கொள்கைக்காகவே இயங்கி வரும் பெரியார் இயக்கங்கள் இந்தக் களத்தில் ஒருபோதும் பின்வாங்காது; தொடர்ந்து உறுதியுடன் போராடும்! போராடிக் கொண்டே இருக்கும் என்று நரகாசுரனின் வீரவணக்க நாளில் சூளுரைப்போம்” இவ்வாறு விடுதலை இராசேந்திரன் பேசினார்.
பெரியார் முழக்கம் இதழ் 12112026
