தாய்மை புனிதம் உடைகிறது!

பாஜக ஆளும் வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை ஒருபக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வந்தாலும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறும் மாநிலங்களில் பழமைவாத சிந்தனைகள், பிற்போக்குத்தனங்கள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் காண முடிகிறது. கல்வியில், பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் முன்னேறாத மாநிலங்களில் பெண்கள் எத்தனை முறை கருவுற்றாலும் குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற சமூக அநீதியை சுமக்க நேரிடுகிறது. அதுதான் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் காரணமாகிறது. ஆனால் கல்வியில் முன்னேறி வரும் மாநிலங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா அல்லது பின்னர் அதுகுறித்து முடிவெடுத்துக்கொள்ளலாமா என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் மருத்துவ ரீதியாக பதிவு செய்யப்படும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் (2021-2025) வழக்கத்தை விட, கருக்கலைப்புகள் 67% உயர்ந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிப்பதே இதை உறுதிப்படுத்துகிறது. ஒப்பீட்டளவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களில்தான் அதிகளவு கருக்கலைப்புகள் பதிவு செய்யப்படுகிறது. தேசிய சுகாதார புள்ளி விவரங்களின் படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 65ஆயிரம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு (2025) ஜூன் மாதம் வரை 19 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 3 லட்சத்து 28 ஆயிரத்து 970 பேருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ஒப்பிடும் போது கருக்கலைப்பில் முதல் இடத்தில் சென்னையும், இரண்டாம் இடத்தில் சேலமும், 3-ஆம் இடத்தில் ஈரோடு மாவட்டமும் உள்ளது.

இத்தகைய கருக்கலைப்புக்கான காரணங்கள் பற்றி குறிப்பிடும் மருத்துவர்கள், “பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர், குழந்தை பெற்றெடுக்கும் அளவுக்கு பெண்ணுக்கு உடல் தகுதி இல்லாத சூழல், வளரும் கருவில் உள்ள சிசு ஆரோக்கியமின்மை, கர்ப்பமடைந்த பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இதுதவிர்த்து சமூக பொருளாதார காரணங்களால் குழந்தை பிறப்பை சிலர் தள்ளி வைக்கும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறப்பை தள்ளிப்போட விரும்புகின்றனர். இரண்டு குழந்தைகள் வைத்துள்ளவர்கள் குடும்ப சூழல், பொருளாதார காரணங்களாலும் கருக்கலைப்பு செய்கின்றனர்” என்கின்றனர். ஆக, கருத்தரித்துவிட்டாலே குழந்தை பெற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் வேகமாக வெளியேறி வருகிறார்கள். தாய்மை என்ற போர்வையில் பெண்களின் மீது புனிதத்தை திணித்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய அழுத்தங்கள் உடைபடத் தொடங்கியிருக்கின்றன என்பதை இத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன.
பெரியார் முழக்கம் இதழ் 29012026

You may also like...