கடவுளை மறுத்த ஆன்மீகவாதி கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை-12 விடுதலை இராசேந்திரன்

‘மனம்’ என்று ஒன்று இல்லை அது மூளை என்ற ஒரு பொருளின் செயல்பாடு. மனதை ஒருமுகப்படுத்துவது ஆன்மிகம் சார்ந்தது அல்ல! அது ஒரு பயிற்சியே என்ற கட்டுரையை கடந்த இதழில் ‘பெரியார் முழக்கம்’ வெளியிட்டது. கடவுள் வழி நடத்தவில்லை, மனித மூளை தான் உடலை இயக்குகிறது என்பதே அந்த கட்டுரையின் மய்யமான கருத்து.

இதற்கு நேர் மாறாக ‘மனமே’ மனிதரை இயக்குகிறது. தனி மனிதரின் ‘மன மாற்றமே’ அனைத்துக்கும் தீர்வு. மனிதருக்கு வெளியே புறத்தில் நிகழும் சமூகப் புரட்சிகள் உயிரற்றவை, நானே என்னை புரிந்து கொள்ளாத வரை வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மற்றவர்களை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனையை உலகம் முழுதும் ஒருவர் பரப்பினார். உலகப் புகழ்பெற்ற தத்துவஞானியாக அவர் பேசப்பட்டார், அவரது பெயர் ‘ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி’.

பொருளியல் நிகழ்வுகளை விலக்கிவிட்டு ‘மனப்புரட்சி’ பேசிய அவரது பின்னணியை சுருக்கமாக விளக்குவோம்.

1875-இல் மதனப்பள்ளியில் பார்ப்பன குடும்பத்தில் அவர் பிறந்தார். 1986 பிப்ரவரி 17-ல் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மரணம் அடைந்தார். பாரீசில் சேர்வான் பல்கலைக்கழகத்தில் அவர் படித்தார். உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளராக வலம் வந்து உலகம் முழுதும் பரப்புரை செய்தார். தனக்காக ஒரு தனியான தத்துவத்தை அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை. அவரது கருத்தை கேட்ட மக்கள் அவரை “மனித கடவுள்” என்றார்கள்; புத்தரின் அவதாரம் என்றார்கள் ஆனால் இந்த புனைவுகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். தான் ஒரு சாதாரன மனிதன் என்று அறிவித்துக் கொண்டார்.

அவரது தந்தை நாராயண அய்யா 1881 முதல் சென்னை அடையாறில் உள்ள தியாசபிக்கள் சொசைட்டியில் உறுப்பினரானார். தன்னுடன் தனது இரண்டு மகன்களையும் அவர் உடன் அழைத்து வந்து நிறுவனத்தின் வளாகத்தில் மூத்த மகன் கிருஷ்ண மூர்த்தியுடன் வாழத் தொடங்கினார். தியாசபிக்கள் சொசைட்டி என்ற வேதாந்த நிறுவனத்தின் தலைவர் அன்னிபெசன்ட். இவர் 1847-இல் லண்டனில் அயர்லாந்தில் பிறந்து பிராங்க் பெண்ட் என்ற கிறிஸ்தவ மதகுருவை திருமணம் செய்து கொண்டார்.

மதங்களை கடவுளை மறுத்து “சார்லஸ் பிராட்லாவின்” நாத்திகர் அமைப்பில் இணைந்தார். மதக் கொள்கைகளில் தனது கணவருடன் முரண்பட்டு அவரிடமிருந்து பிரிந்தார். தொழிலாளர் உரிமை, பெண்கள் உரிமைக்காகப் போராடினார். 1893-ல் இந்தியா வந்த அன்னிபெசன்ட் தனது பகுத்தறிவு சீர்திருத்த கருத்துகளை முற்றாக கைவிட்டு, கர்மா, மறுபிறவி போன்ற பிற்போக்கு கொள்கையில் பழமைவாதத்தை நோக்கி பயணமானார். இந்திய தேசிய காங்கிரஸின் முன்னணி தலைவரானார்.

அவரது பார்ப்பனிய கருத்துக்களை ஏற்று ஸ்மார்த்த பார்ப்பனர்கள் அவரை தீவிரமாக ஆதரித்தார்கள். “ஹோம் ரூல்” என்ற இயக்கத்தை தொடங்கினார். “நியூ இந்தியா” என்ற பத்திரிகையும் அவர் நடத்தினார். நீதிக்கடசி தோன்றுவதற்கு தூண்டுகோலாக இருந்தது அன்னிபெசன்ட் துவக்கிய “ஹோம் ரூல்” இயக்கம் தான் என்கிறார் ஆய்வாளர் (—–)

பிறரது மனதில் இருப்பதை தன்னால் அறிந்து கொள்ள முடியும் என்ற மாயாஜாலத்திலும் அவர் ஈடுபட்டார். இந்து மதத்தின் பெருமைகளையும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்பினார். அந்த அன்னிபெசன்ட் வேதாந்த சபையில் வாழ்ந்த ஜெ. கிருஷ்ணமூர்த்தியிடம் தெய்வீக சக்தி இருக்கிறது என்று நம்பி அவரை தனது மகனாக தத்து எடுத்தார். அவரது தம்பியையும் சேர்த்து தத்து எடுத்தார்.

கிருஷ்ணமூர்த்தி தனது இரண்டு மகன்களையும் அன்னிபெசன்ட் தத்து எடுத்ததை விரும்பவில்லை; மகன்களை திருப்பி தரக் கோரி நீதிமன்றத்தை நாடினார். செய்தி அறிந்து இருவரையும் இங்கிலாந்துக்கு ரகசியமாக அழைத்து சென்றார் அன்னிபெசண்ட். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்தில் வாதாடியவர் புகழ்பெற்ற பார்ப்பனர் தலைவரான சர்.சி.பி ராமசாமி ஐயர். வழக்கு லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்றது. வழக்கு முடியும் தருவாயில் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பெரியவர் ஆகிவிட்டார். அன்னிபெசண்ட் அவரை புத்தரின் மறு அவதாரம் என்று கூறியதை ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஏற்க மறுத்து விட்டார்.

அவர் பேசிய ஆன்மீகம் பொருளியல் சிந்தனையை மறுத்தாலும் கடவுள் மதத்தையும் மறுத்தது; மெட்டிரியலிசத்தை ஏற்க மறுத்து ஆன்மீகம் பேசியவர்கள் கூட கடவுள் இல்லை; மதம் இல்லை, என்ற கருத்தை முன் வைத்தார்கள் என்பது தான் இதில் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். கடவுள் மதம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள்:

கடவுள் என்ற கருத்து உண்மையில் மனிதன் உருவாக்கியதா? அல்லது இயல்பானதா? என்பதை ஆராய்கிறார். கடவுள் என்றால் முழுமையான அறிவும், சக்தியும், அன்பும் கொண்டவர் என்று நம்புகிறார்கள் ஆனால் மனித வாழ்க்கையின் துன்பங்கள், கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் கடவுள் இருப்பதை சந்தேகிக்க வைக்கின்றன. கடவுள் என்ற கருத்து மனிதன் உருவாக்கிய கற்பனைதான். இந்தியாவில் பல ஆயிரம் கடவுள்கள் உள்ளன என்பதும் இதற்கு உதாரணம். மனிதன் தன் பயத்தால், பாதுகாப்புக்காக இந்த கடவுள்களை உருவாக்கி, தன் உருவகத்தையே வழிபடுகின்றான். கடவுளுக்கு பணம், பூஜைகள் போன்றவை தேவையில்லை என்றார். உண்மையான கடவுள் அன்பே என்றும், அன்பே கடவுள் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

கடவுள் இருப்பதை நம்புவதை விட, உண்மையை ஆராய்ந்து, தனது மனதையும் மனச்சோர்வையும் முற்றிலும் விடுவிக்கவேண்டும் என்று கூறுகிறார். “ஆத்மா” அல்லது “ஆன்மா” என்ற கருத்தையும் விவாதிக்கிறார். அது ஒரு நம்பிக்கையே என்றார். நம்பிக்கையை விட உண்மையைத் தேட வேண்டும். முந்தைய ஆன்மிக ஆச்சார்யர்களின் வாழ்க்கை நமக்கு உதவுமா? என்று கேட்கும்போது, அவர்களது வாழ்க்கை நமக்கானது அல்ல, நம் வாழ்க்கையே நமக்கானது என்று கூறுகிறார். அவர்களது அனுபவங்களை நம்புவதற்கு பதிலாக, தனக்கே நேர்மையாக உண்மையை தேட வேண்டும்.

உண்மையான விடை வார்த்தைகளில் இல்லை; அது அனுபவத்தில் உள்ளது. ஆனால் மனிதன் வார்த்தைகளால் திருப்தி அடைகிறான். உண்மையை அனுபவிக்க மனதும், இதயமும், அடையாளங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். வாழ்க்கையில் தன்னைத் தானே நேர்த்தியாக நடத்திக்கொள்ள வேண்டும்; பிறரை நம்பி, வழிகாட்டிகளைப் பின்பற்றுவதால் பலவீனமாகிறோம். அந்த உண்மையை மனதுக்குள் உணர்ந்தால் தான் மனிதன் சுதந்திரமாகி இயங்க முடியும் என்பது அவரது கருத்து.

அவரது கருத்துக்களை இவ்வாறு தொகுக்கலாம்:

மனிதன் தன் பயத்திற்காக மற்றும் பாதுகாப்புக்காக கடவுளை உருவாக்கினான்; இது மனித மனத்தின் அச்சங்களை, நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறது.

மனிதர்கள் கடவுளுக்கு பணம், பூஜைகள் போன்ற பொருட்களை வழங்குவதை வழக்கமாக செய்கிறார்கள். ஆனால் உண்மையில், கடவுளுக்கு அது தேவையில்லை. இது மத வழிபாட்டின் சில பகுதிகள் மனிதன் உருவாக்கிய அடையாளங்கள். உண்மையான அன்பே ‘கடவுள்’ என்பதன் உணர்வு இதன் மூலம் வெளிப்படுகிறது.

வாழ்க்கையில் உண்மையை வார்த்தைகளால் விளக்க முடியாது. “கடவுள்”, “ஆத்மா” போன்ற வார்த்தைகள் உண்மையை பிரதிபலிக்க முடியாது. உண்மை என்பது நேரடியாக அனுபவிக்கப்படும் ஒன்று. ‘ஆன்மா’ ஒன்று இல்லை.

‘ஆத்மா’ அல்லது ‘ஆன்மா’ பற்றிய நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. ஆனால் அதில் உண்மையான அடையாளங்களை நாம் வாழ்க்கையில் காணவில்லை; நம்பிக்கை மட்டும் பயனில்லை; அதனை வாழ்வில் உணர்வது முக்கியம். இதன் மூலம்தான் நம் வாழ்க்கையின் சிக்கல்களையும், உளச்சோர்வையும் தாண்டிச் செல்ல முடியும்.

உண்மையை மனதில் உணர வேண்டும்: உண்மையை அறிவது, மனதில் அதன் தாக்கத்தை உணர்வது மட்டுமே மனிதனை சுதந்திரமாக்கும். இது மனதின் முழுமையான விடுதலை மற்றும் வலிமையை தரும். இதனால் வாழ்க்கை முழுமையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாறும்.

ஆன்மிக ஆசார்யர்களின் வாழ்க்கை நமக்கு உதவாது ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர் போன்ற ஆன்மிக ஆச்சார்யர்களின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டாது. நாமே நம் வாழ்க்கையை வாழ வேண்டும். மற்றவர்களின் அடையாளங்களை நம்புவது நமக்கு வலிமை தராது என்று அவர் கூறுகிறார்.
கோயில்களும்- கடவுள்களும் அர்த்தமற்றவை
ஆன்மீக யாத்திரை என்றும், அகவுலகப் பயணம் என்றும், தியானம் என்றும்,யோகம் என்றும், எமக்குள் ஒளிந்திருக்கும் ஆன்மத்தின் சூட்சுமத்தை அறிந்து கொள்வதென்றும், நாம் உலகத்தைத் துறந்து வாழ்க்கையைத் துறந்து, உறவுகளை அறுத்து, காலம் காலமாக நடத்திய தேடுதலால் உண்மையைக் கண்டு கொள்ள முடியாது. கடவுள் என்றும், உண்மைப் பொருள் என்றும் நாம் தேடி அலைந்ததெல்லாம் எமது ஆசையின் நிகழ்வுகளன்றி வேறொன்றுமல்ல.

ஆயிரமாயிரம் கோவில்களைக் கட்டி, அந்தக் கடவுகளைக் குடியமர்த்தினோம். அர்த்தமிழந்த, அபத்தமான எமது வாழ்க்கைக்கு ஒரு பிரமாதமான அர்த்தமாக, ஒரு அலாதி யான நம்பிக்கையாக கடவுள் என்ற கருத்துருவத்தை நாம் தழுவிக் கொண்டோம். எமது மனமோ கனவுலகில், கற்பனையுலகில், நிதர்சனத்திற்குப் புறம்பான உலகில் தூங்குகிறது. இந்தப் புராதன மனதால், காலம் காலமாகப் பொய்களால் புனையப்பட்ட மனதால், மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போன மனதால், கருத்துலக் கோட்பாடுகளில் கண்டுண்ட மனதால் உண்மையைக் கண்டுகொள்ள முடியாது. நாம் ஒரு குருவை வரித்துக் கொண்டோ,ஒரு ஆன்மீக வழிகாட்டியை பின் தொடர்ந்தோ, ஆச்சிரமத்தில் தவமிருந்தோ, மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனைகள் செய்து, அழுது புரண்டு ஆண்டவனை வேண்டியோ உண்மைப் பொருளை கண்டு கொள்ளவே முடியாது.

-ஜெ.கிருஷ்ணமூர்த்தி உரையிலிருந்து.
குறிப்பு: அவரது உரை வலையொலிகளில் இடம்பெற்றுள்ளது.

You may also like...