பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்!

மறைந்த பி. என் சண்முகம் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு ஜூலை-17, வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் திருப்பூர், பலவஞ்சிப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த பி. என் சண்முகம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சர்வேஸ்வரன் (அ.தி. மு.க) அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், பி.என் சண்முகம் அவர்களின் உறவினர் கா.சு. நாகராசன் பேசுகையில் என்னுடைய தந்தையார், தாயார் இறந்த பிறகு குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டும், என் தாயார் மறைந்த பிறகு அவரின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கியதைக் கண்டும், உயிரற்ற உடல் மருத்துவ மாணவர்களுக்கு இவ்வளவு பயன்படுகிறதா? என்பதை உணர்ந்து மறைந்த பி.என். சண்முகம் அவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பொது நல பார்வையிலும், தொலைநோக்குப் பார்வையிலும் சிந்தித்து உயிருடன் இருக்கும் போது உடற்கொடை வழங்கும் சான்றிதழை பூர்த்தி செய்து வழங்கினார். எங்கள் வீட்டில் நடக்கிற நல்லது, கெட்டது காரியங்களில் சடங்குகளைச் செய்யக்கூடிய உரிமை படைத்த பங்காளி குடும்பம்தான் அண்ணன் சண்முகம் அவர்களின் குடும்பம். அதனால் சடங்குகள் இல்லாத முறைக்காக அன்றைக்கு அவர் மிகவும் கோபித்துக் கொண்டார்.

கொளத்தூர் மணி உரையின் தாக்கம்

தந்தையின் இறப்புக்குப் பிறகு அவரது நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் நடந்த போது அண்ணன் சண்முகம் தலைவர் அவர்களின் உரையைக் கேட்டு கொஞ்சம் மனம் மாறினார். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று ஓரளவு சமாதானமாக சொல்லிவிட்டு வந்தார். நிகழ்ச்சி முடிந்து விடைபெறும்போது அண்ணன் சண்முகம் அவர்கள் என்னிடம் வந்து, அப்பா,அம்மா ரெண்டு பேரையும் மிகுந்த மரியாதையோடு வழி அனுப்பி வைத்திருக்கிறோம். சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை என்கிற சங்கடம் எனக்கு முதலில் இருந்தது. அது இப்போது இல்லை. மணி அண்ணன் பேசியது எனக்கு ரொம்ப புடிச்சுது. நாளைக்கு, எதிர்காலத்தில் நான் இறந்து போனாலும் என்னையும் இதே போல மருத்துவக் கல்லூரிக்கு கொடுத்து விட்டு, தலைவர் கொளத்தூர் மணி அவர்களை அழைத்து வந்து இது போல படத்திறப்பு நிகழ்ச்சியை நீதான் நடத்த வேண்டும் என்று என்னிடம் அவர் சொன்னார். ஆனால், கடந்த ஆண்டு ஜூலை முதல் வாரம் அண்ணன் சண்முகம் அவர்களுடைய உடல் நிலை சீர்கெட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக நாங்கள் வருகிறோம். அப்போது அண்ணி அவர்களும் தம்பி கோபிநாத்தும் சங்கீதாவும் எல்லோரும் என்னிடம் வந்து, அப்பா இறந்து போனால் அப்பாவுடைய உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடுக்க வேண்டும் என்பது அப்பாவின் விருப்பம். அப்படியே செய்துவிடலாம். அது மட்டுமல்ல தலைவர் கொளத்தூர் மணி அவர்களை அழைத்து வந்து அப்பாவுடைய படத்தை திறந்து வைத்து நினைவு நிகழ்ச்சியையும் நடத்த வேண்டும் என்பதும் அப்பாவுடைய விருப்பம்; அப்படியே செய்துவிடலாம் சித்தப்பா என்று சொன்னார்கள். அப்போது உள்ளபடியே நான் நெகிழ்ந்து போனேன். ஏதோ உணர்ச்சி மேலிட்டு அன்றைக்கு அவர் பேசியதாக நான் கருதியது பெரிய தவறாகப் போய்விட்டது. அண்ணன் சண்முகம் அவர்கள் உளப்பூர்வமாக உணர்ந்து இந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டுதான் இவ்வளவு நாளும் இருந்திருக்கிறார்.

அதுவும் அண்ணி அவர்களிடத்தில் கூட இந்தக் கருத்தை வலியுறுத்தி சொல்லி இருக்கிறார். இருவரில் யார் முதலில் இறந்தாலும் இன்னொருவர் மருத்துவக் கல்லூரிக்கு கொடுத்து இதுபோல் படத்திறப்பு நடத்த வேண்டும் என்கிற முடிவை இருவருமே எடுத்திருக்கிறார்கள் அதை தங்கள் மகன் மகளிடத்திலும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிந்த போது எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மறைந்த பி. என் சண்முகம் அவர்களின் படத்தை திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார். அவர் பேசுகையில் அரசியலால் அவர் அண்ணா தி.மு.க; அதுவும் அக்கட்சியில் 40 ஆண்டுகளாய் பொறுப்புகள் வகித்தவர். நம்பிக்கையில் அவர் நெற்றியில் திருநீற்றுக் கீற்றுடன் இருந்த ஆத்திகர். என்றாலும் சரியென்று பட்டதை நடைமுறை படுத்தத் துணிந்த அவரது நேர்மை போற்றத்தக்கது; அனைவருக்கும் வழிக்காட்டக் கூடிய ஒன்று.

சடங்குகள் என்ற பெயரால் புரியாததை செய்யாதீர்கள், அப்படி செய்தால் நம்மவர்களைக் கொண்டு தமிழ் மொழியில் செய்யுங்கள் எனவும், உடற்கொடை அல்லது விழிக்கொடை செய்யுங்கள் அவற்றை ஊக்கப்படுத்துங்கள் என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து பி. என் சண்முகம் அவர்களின் உடலை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொடையாக வழங்கிய அவரது குடும்பத்தைப் பாராட்டி நினைவேந்தல் உரையாற்றினார்.

துரைசாமி (கழகப் பொருளாளர்), சாந்தகுமார் (பெரியாரியல் தோழர் அறக்கட்டளையின் தலைவர்), (தி.மு.க வார்டு செயலாளர்) நேதாஜி கண்ணன், ஜனார்தனன் (அ.தி. மு.க), சர்வேஷ்வரன் (எம். ஜி.ஆர் மன்ற திருப்பூர் மாவட்ட இணைச் செயலாளர்), மணி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். மறைந்த பி. என் சண்முகம் அவர்களின் பேரன் கர்த்தீஸ் நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்வில் முகில் ராசு (மாவட்டத் தலைவர்), தனபால் (மாநகரத் தலைவர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), ராமசாமி (தெற்கு பகுதி செயலாளர்), அய்யப்பன் (வடக்கு ஒன்றிய அமைப்பாளர்) மற்றும் தோழர்கள் குணா, ஆறுமுகம், ராஜ்குமார், சரத்குமார், மோகன், அர்சிதா மற்றும் சண்முகம் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 23072026

You may also like...