கேத்ரின்-இலக்கியன் மதம் கடந்த மணவிழா!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் சிவானந்தம் – சங்கீதா இணையரின் மகன் இலக்கியன் அவர்களுக்கும், கேரளா மாநிலம், திருச்சூர் ஜோ. மனோஜ்- ம. மினி இணையரின் மகள் கேத்ரின் ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.00 மணி அளவில் , தாராபுரம் லயன்ஸ் மஹாலில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் செய்து வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் வாழ்த்துரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தவைவர் வீ. சிவகாமி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

கழகத் தோழர் மடத்துக்குளம் சிவானந்தம் தீவிர கழகப் களப்பணியாளர். மறைந்த கழகச் செயல்வீரர் மடத்துக்குளம் மோகன் அவருடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பெரும் பங்காற்றியதையும் அவரது துணைவியார் சங்கீதா கழக கொள்கையில் ஆர்வத்துடன் செயல்பட்டதையும் கழகத் தோழர்கள் வாழ்த்துரையில் சுட்டிக்காட்டினர். பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் “மதங்களை கடந்து சடங்குகள், தாலி இன்றி நடக்கிறது இந்த மணவிழா. இந்து திருமணச் சட்டத்திலேயே ஒரு திருத்தமாக சுயமரியாதை திருமண சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது சுயமரியாதை திருமணங்கள் மதங்களை கடந்திருக்கிறது. சுயமரியாதை திருமணத்தின் அடுத்த நீட்சி இது!

அரசியலில் மாற்றங்கள் தேவை என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்; ஆனால் வாழ்வில் திணிக்கப்பட்ட பார்ப்பனியப் பண்பாடுகள் மாறுதல் இன்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த அடிமைப் பண்பாட்டிலிருந்து மாற்றம் வரவேண்டும். ஏ.அய் தொழில்நுட்பம் வேகமாகி வருகிறது. விண்வெளிப் பயணங்கள், வான மண்டலத்தில் ஆய்வுகளை நடத்துகின்றன. ஆனால் வைதீக திருமணங்களில் என்ன நடக்கிறது? பார்ப்பனர்கள் வேத மந்திரம் ஓதுவதை பார்ப்பனக் கடவுள்கள் காதால் கேட்கிறார்கள். அவர்கள் அனுமதி கிடைத்த பிறகுதான் இந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் மக்களை நம்ப வைக்கிறார்கள். செயற்கைக் கோள்களை விட செயற்கை நுண்ணறிவை விட சக்தி வாய்ந்தது சமஸ்கிருத மந்திரம் என்று பார்ப்பனியம் மக்களை ஏமாற்றி வருகிறது. குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சுயமரியாதை உண்டு. அவர்களிடையே உயர்வு- தாழ்வு கிடையாது என்ற வாழ்வியலை அறிமுகப்படுத்தினார் பெரியார். அந்த வாழ்க்கை முறைதான் இப்போது வெற்றி பெற்று வருகிறது. மாறாக வைதீக திருமணங்களில் தான் அதிக விவாகரத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே பெரியாரியல் வாழ்வு முறைதான் உண்மையான வெற்றிகரமான வாழ்க்கை முறை என்றார் விடுதலை இராசேந்திரன்.

மணமக்கள் கழக வார இதழான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினர். அனைவருக்கும் மிகச்சிறப்பான அசைவ உணவு பரிமாறப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் தி.க, த.பெ.தி.க தோழர்களும் மணவிழாவுக்கு வந்திருந்தனர். விழா அரங்கம் கருஞ்சட்டைக் கடலாக காட்சியளித்தது.

கழகப் பொருளாளர் சு. துரைசாமி, கழக பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், கழக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராஜன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர்கள் திருவேங்கடம், மனோகரன், பன்னீர் செல்வம், நிர்மல் குமார், கோவிந்தராஜ், உமாபதி மற்றும் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். – நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் இதழ் 02072026

You may also like...