கவனம் ஈர்க்கும் கழகம்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓராண்டுக்கும் மேல் திராவிடர் விடுதலைக் கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிர பரப்புரை மேற்கொண்டு, பாஜக ஆட்சியின் பேராபத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தது. அரசியல் கட்சிகளுக்கு முன்பாகவே பரப்புரைக் களத்தில் முதலில் இறங்கிய இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். எது “சனாதனம்? எது திராவிடம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுக்க சுமார் ஆயிரம் தெருமுனைக் கூட்டங்களும், தேர்தல் நெருங்கிய சமயத்தில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ஜனநாயகம் காப்போம்” என்ற தலைப்பில் சுமார் 300 தெருமுனைக் கூட்டங்களும் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட மாடல் என்றால் என்ன என்பதை விளக்கி தெருமுனைக் கூட்டங்களும், அதனையொட்டிய மண்டல மாநாடுகளும் நடத்தப்பட்டன.
இதில் தலைநகர் சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கழகம் முன்னெடுக்கும் இந்தப் பணிகளுக்கு களத்தில் இருந்து கிடைத்த பேராதரவுக்கு அடையாளமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிது புதிதாகப் பலம் இளம் தோழர்கள் கடந்த சில மாதங்களில் இணைந்திருக்கின்றனர். சென்னையில் கழக நிகழ்ச்சி நடந்தாலே புதிய தோழர்கள் இணைப்பும் கட்டாயம் இருக்கும் என்கிற அளவுக்கு புதிய புதியத் தோழர்கள் கழகத்தில் இணையப் பேரார்வம் காட்டுகின்றனர்.
இன்ஸ்டகிராமில் முற்போக்குக் கருத்தியலைப் பேசி, ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களைக் (பின்தொடர்பவர்கள்) கொண்டிருக்கும் தோழர்கள் தவுபிக், லியோ, ஊடகவியலாளர் ஸ்ரீஜன், பொன்மலர், மருத்துவர் சுருதி, ஐடி ஊழியர்கள் அபிநந்தன், விஷால், கல்லூரி மாணவர்கள் ராகுல், நிறை, அழகிரி, மதன் ராகேஷ், ஜானகி ராமன், சட்டக்கல்லூரி மாணவர் ராஜா எனப் பல்வேறு தளங்களில், பல்வேறு துறைகளில் பெரியாரிய- திராவிட இயக்கக் கருத்தியலை பரப்பிக் கொண்டிருக்கும் தோழர்கள் சென்னை மாவட்டக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று புதிய தோழர்கள் இணையும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கிறது. புதிய தோழர்களை வரவேற்போம், இணைந்து செயல்படுவோம்.
பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்