அமோக வரவேற்பை பெற்ற நிமிர்வோம் பதிப்பகம்!

சனவரி 8 முதல் 21 வரை, 14 நாட்கள், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த 49-வது சென்னை புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 4 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ம.கி. எட்வின் பிரபாகரன், புத்தகக் காட்சி சார்ந்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார். நிமிர்வோம் பதிப்பகத்துக்கு அரங்கை ஒதுக்கிக் தரக்கோரி, தோழர்கள் தபசி குமரன், கு. அன்பு தனசேகர். பிரகாசு ஆகியோர் விண்ணப்பித்து, அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு, நிமிர்வோம் அரங்கை அமைக்கும் களப்பணியில் தோழர்கள் தபசி குமரன், ம. கி. ‌எட்வின் பிரபாகரன், ஆ.வ. வேலு, ர. பிரகாசு, பேரன்பு, தாமரை, ஸ்ரீலேகா, மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, சிபி ஆகியோர் ஈடுபட்டனர். விளம்பர பதாகை காவை. இளவரசன் செய்து கொடுத்தார்.

அரங்கில் வைக்க வேண்டிய 300 புத்தகத் தலைப்புகளின் பட்டியலை, தோழர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் – அருண் கோமதி இணைந்து தயாரித்தனர். 40க்கும் மேற்பட்ட பதிப்பகங்களை எட்வின் முன்கூட்டியே தொடர்பு கொண்டு, தேவைப்படும் நூல்களின் பட்டியலையும் அனுப்பி, அனைத்து நூல்களையும் முதல்நாளே அரங்கில் இடம்பெறச் செய்தார். கழக நூல்களை அச்சிடும் பணியையும், அவற்றை அரங்குக்கு அனுப்பிவைக்கும் பணியையும் தோழர் பிரசாந்த் கவனித்துக் கொண்டார். நூல் வடிவமைப்பு தயாரிப்புப் பணிகளில் தோழர்கள் விஜய் குமார், ர. பிரகாசு, மு.க. தினேஷ் குமார், கு. அன்பு தனசேகர், இரா. உமாபதி, இராம. இளங்கோவன் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். புத்தகக்காட்சி முடிந்தபின், இறுதிநாளில் ஆயிரக்கணக்கான கழக நூல்பிரதிகளை பொதிந்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் பணியை தோழர்கள் இரா. உமாபதி, ம.கி. எட்வின் பிரபாகரன், சுகுமார், ப. அருண், இரண்யா, பேரன்பு, குமார், சூர்யா, ஷர்மிளா, முத்துராஜ், சுகந்தன், மஞ்சுநாதன், வீரா ஆகியோர் செய்தனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், கே. பாலகிருஷ்ணன் (சிபிஎம்), வழக்கறிஞர் திருமூர்த்தி, வன்னி அரசு (விசிக), சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), தபுக தலைவர் நாகை திருவள்ளுவன், தோழர் பேரறிவாளன், ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி, U2BRUTUS மைனர், மகிழவன், ஞான சத்யா, எழிலரசன், ரவுத்திரா, ஜெயபிரகாஷ், தியாகச் செம்மல், எழுத்தாளர்கள் சுகுணா திவாகர் , வாசிமபதம சரவணகுமார், இனியன் ராமமூர்த்தி, ஸ்ரீ பாட்டர், சைதை மா. அன்பரசன் (திமுக), தமிழீழ முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், கவிஞர் விடுதலை சிகப்பி, கழகத் தோழர்கள் மயிலாடுதுறை இளையராஜா, முருகேசன், மா. வேழவேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், ந. தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல ஆளுமைகள் அரங்குக்கு வருகைதந்து ஊக்கப்படுத்தினர்.

தோழர்கள் சுகுமார், இரண்யா, காவை அஜித், பேரன்பு, இளவரசன், பிரசாந்த், தேன்மொழி, பாரி சிவா, மேட்டூர் முத்துராஜ், சைதை சிவா, ஷர்மிளா, அஸ்வின், இம்மேனுவல் துரை, பிரனேஷ், தாமரை, லீலா, தீபக், ஸ்ரீலேகா, சுரேந்தர், இலக்கியா, புகழேந்தி, அபிநந்தன், நந்தகுமார், சதீஷ் கண்ணன், அறிவுமதி, பூர்ணிமா, இளைய சிம்மன், சுபாஷ் ஆனந்த், ஹானஸ்ட் ராஜ், குருபிரசாத், செல்வம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இளைஞரணி தோழர்கள் புத்தக விற்பனையில் ஈடுபட்டனர். அரங்கை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வீடியோவை SVK குழுவினர் தயாரித்து பரப்பினர்.

புத்தகங்களின் எண்ணிக்கை குறையும்போதெல்லாம், மற்ற பதிப்பக நூல்கள் அரங்குக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டன. அதேபோல, கழக நூல்களும் மற்ற அரங்குகளுக்கு விநியோகிக்கப்பட்டன. ஊடகவியலாளர் குணசேகரன் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?” நூலை 2000 பிரதிகள் இலவசமாக அச்சசடித்து தந்தார். மேலும் இந்நூல் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது. நூல் 300 பிரதிகள் விற்றது குறிப்பிடத்தக்கது. கழக வெளியீடுகள் மற்றும் “தீ பரவட்டும்”, “பெண் ஏன் அடிமையானாள்?” ஆகிய நூல்களும் அதிக எண்ணிக்கையில் விற்றிருந்தன. அரங்கில் வைக்கப்பட்டிருந்த, தோழர் சிகரன் வரைந்த பெரியார் சட்டகப்பலகை (frameboard) , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்தது. 2000க்கும் மேற்பட்டோர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

அடுத்த முறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்து தருமாறும், புது உறுப்பினர்களுக்கான சேர்க்கையை தொடங்குமாறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு, பதிப்பகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. எதிர்வரும் 2027 புத்தகக்காட்சிக்கான நூல் தயாரிப்புப் பணிகளை, விரைவில் தொடங்கி, புத்தகக்காட்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அச்சுப்பணியையும் செய்துமுடிக்க, தோழர்கள் உறுதியேற்றனர்.
செய்தி- எட்வின் பிரபாகரன்
பெரியார் முழக்கம் இதழ்05022026

You may also like...