நாத்திகம் குறித்து தாய்-மகன் உரையாடல் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(18)
1928 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் நாத்திகம் என்னும் தலைப்பில் சித்திரபுத்திரன் எழுதிய நையாண்டி உரையாடலே இந்த கட்டுரை. சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியவர் பெரியார். தாயும் மகனும் இதில் உரையாடுகிறார்கள் தந்தை தீவிரமான பெரியார் கொள்கைக்காரர். ‘குடிஅரசு’ அலுவலகத்திலேயே பணியில் சேர்ந்து விடுகிறார். நாத்திகப் பத்திரிகையான குடிஅரசு பத்திரிக்கைக்கு அப்பா ஏன் வேலைக்குப் போக வேண்டும்? என்று மகன் தாயிடம் கேட்கிறார். மகன் கருத்தை வைத்தே தாய் நாத்திகத்தை மகனுக்கு புரிய வைக்கிறார். இந்த உரையாடலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இவை.
இது ஒரு உண்மை சம்பவமாகவே இருக்கும் என்று கருதத் தோன்றுகிறது. உரையாடலை தூயவெழிலழகனார் என்பவர் எழுதி அதை சித்திரபுத்திரன் திருத்தம் செய்துள்ளார் என்று ‘குடிஅரசு’ குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்: – அப்பா மகனே, சாமி என்றால் என்ன? அதை முதலில் சொல்லு பார்ப்போம், அதாவது அதற்குப் பெயர் என்ன? ரூபம் (உருவம்) என்ன? நிறம் என்ன? குணம் என்ன? அது என்ன சொல்? சற்று புரியும்படி சொல்லு பார்ப்போம். பிறகு, அது உண்டா இல்லையா? என்பதைப் பற்றி பேசலாம்.
மகன்: என்ன அம்மா உனக்கு இது கூடவா நான் சொல்லிக் கொடுக்க வேண்டும்? பெயரும் உருவமும் குணமும் தோற்றமும் அற்றவனும், புத்திக்கும் மனத்திற்கும் எட்டாதவனும், எங்கும் வியாபித்து சகல உலகங்களையும் படைத்துக் காக்கும் சர்வ வல்லமையும், சர்வமும் அறியும் சக்தியும் உள்ளவனும், அவனன்றி ஓரணுவும் அசைய முடியாத ஆதிக்கம் கொண்டவனும் ஆகிய ஏக பரம்பொருள் கடவுள். அது ஒரு பெயர்ச்சொல்; இதை நீ அறிந்ததில்லையா? என் தாயே. உன் கேள்வியிலேயே நாஸ்திக வாடை வீசுகின்றதே.
தாய்: – குழந்தாய்! பொறு பொறு, அவசரப்படாதே. கிளிப் பிள்ளையைப் போல யாரோ சொல்லிக் கொடுத்ததை மனதில் வைத்துக் கொண்டு அர்த்தமில்லாமல் கஷ்டப்படுகின்றாய். ‘சாமி’ என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு ஒரு வண்டி சங்கதி சொல்லி விட்டாய், அவைகளில் ஒவ்வொன்றாக கவனிப்போம் நீ நல்ல பிள்ளை ஆனதினால் கேள்விப் பட்டவைகளையும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததையும் எதிலாவது படித்ததையும் மறந்துவிட்டதாக நினைத்துக்கொள். குருட்டு நம்பிக்கை முரட்டுப் பிடிவாதம் முதலிய அறிவுக்கு விரோதமான குணங்களை விட்டு விட்டு மாசு மறுவற்ற பரிசுத்தமான மனதோடு நான் சொல்வதை சற்றுக் கூர்ந்து கவனமாய்க் கேள்.
மகனே! நீ உண்டா இல்லையா என்று என்னைக் கேட்ட சாமி பெயரில்லாதது, உருவமில்லாதது, குணமில்லாதது, ஆனால் எங்கும் வியாபித்து, புத்திக்கும் மனதிற்கும் எட்டாதது என்று முதலில் சொல்லி முடிவில் அது ஒரு பெயர்ச் சொல் என்றும் சொல்லி இருக்கின்றாய். பெயர்ச் சொல் என்றால் நாமமோ, ரூபமோ(உருவமோ), குணமோ இருந்தாக வேண்டும். ரூபம் (உருவம்) வேண்டும், குணமும் வேண்டும். அதுதான் போகட்டுமென்றால், எப்பேர்ப்பட்ட ஒரு தன்மையைப் பற்றியதானாலும் அது மனதிற்காவது புத்திக்காவது எட்டினதாக இருக்க வேண்டும். எனவே “பேர் இல்லை, குணமில்லை. மனதிற்கும், புத்திக்கும் எட்டவும் முடியாது, அப்படி ஒரு வஸ்து இருக்கின்றது, அதை உண்டு என்கிறாயா இல்லை என்கிறாயா?”
அதாவது என்னருமைக் குழந்தாய்! நம்ம வீட்டுப் பெரிய பெட்டிக்குள் ஒரு வஸ்து இருக்கின்றது என்று நான் கூறுகிறேன். அதற்குப் பெயர் இல்லை, ரூபமும் இல்லை, குணமும் இல்லை, அது உன் புத்திக்கும் மனதிற்கும் எட்டாதது. அது இப்போது இருக்கின்றதா? இல்லையா? என்று சொல்லு பார்ப்போம்.
மகன்: என்னம்மா இப்படி கேட்கின்றாய்? நீ சொல்லுகின்ற மாதிரி ஒரு சாமான் இருந்திருக்க முடியுமா அம்மா? அப்படியானால் பெட்டிக்குள் ஒன்றுமில்லை என்று தானே அர்த்தமாகின்றது?
தாய்: ஏனப்பா அப்படிச் சொல்லுகின்றாய்? பெயரும் உருவமும் இல்லாத தாலேயே ஒன்றும் இல்லை என்று சொல்லி விடலாமா? குழந்தாய்! நன்றாய் யோசித்து பதில் சொல்லு.
மகன்: பெயரும் உருவமும் இல்லாமல் ஒரு வஸ்து இருக்கக் கூடும் என்று என் புத்திக்கும் படவில்லை. மனதிற்கும் எட்டவில்லையே, எப்படி யம்மா அப்படி ஒரு வஸ்து இருக்க முடியும்?
தாய் :- உன் புத்திக்கும் உன் மனதிற்கும் எட்டாததினாலேயே ஒரு வஸ்துவை நீ இல்லை என்று சொல்லிவிடலாமா? குழந்தாய்!
மகன்: நீ கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் நீ சொல்லுகின்ற குணங்கள் கொண்டே ஒரு வஸ்து இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும், அந்தக் கேள்வியை அர்த்தமற்றதும் (கோபித்துக் கொள்ள வேண்டாம்.) முட்டாள்தனமுமான கேள்வி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்வதற்காக தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். அம்மா!
தாய்:- மகனே நீ அப்படி கடுமையாக சொல்வதைப் பற்றி எனக்கு மிகவும் சந்தோஷமே; தயவு செய்து இன்னும் ஒரு நூறு தடவை சொல்லு பார்ப்போம். என் காது குளிரட்டும்.
மகன்: என்னம்மா ஒருவர் என்னை முட்டாள் என்று சொன்னால் அது உனக்கு மகிழ்ச்சியாய் இருக்கின்றது என்றால் அது எனக்கு அதிசயமாயிருக்கின்றதே?
தாய்: இதில் அதிசயம் ஒன்றுமில்லை. நீ என்னயா சொன்னாய்? அந்த மாதிரி கேள்வி கேட்டவர்களைத் தானே சொன்னாய்? அந்த மாதிரி கேள்வி நானா கேட்டேன்? கேட்டவர்களைத்தானே அந்த முட்டாள் பட்டங்கள் போய்ச்சேரும். நான் எதற்காக வருத்தப்படவேண்டும்?
மகன்: (சற்று யோசித்துப் பார்த்து) நீ சொல்லுவது ஒன்றும் எனக்குப் புரியவில்லையே, நீ தானே அந்த மாதிரி கேள்வி இப்பொழுது என்னைக் கேட்டாய்?
தாய் :- மகனே! நன்றாக யோசித்துப் பார். முதலில் நீ அந்த மாதிரி என்னை ஒரு கேள்வி கேட்கவில்லையா?
மகன்: என்னம்மா நான் சாமியைப் பற்றிக் கேட்ட கேள்விக்கும் நீ பெட்டியில் இருக்கும் வஸ்து என்பதைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கும் வித்தியாசமில்லையா?
தாய்:- என்ன வித்தியாசம் வேண்டுமென்கிறாய்? நீ கேட்ட வஸ்துக்கு என்ன குணங்கள் கற்பித்து ‘உண்டா இல்லையா’ என்று கேட்டாயோ, அதே குணங்களைத் தானே கற்பித்து நானும் ஒரு வஸ்துவைப் பற்றிக் கேட்டேன். நான் கேட்டது முட்டாள்தனமானால் நீ கேட்டது என்ன சொல் பார்ப்போம்? தவிர நீ பெயர் இல்லை என்று சொல்லிவிட்டு பிறகு சாமி என்று முன்னுக்குப் பின் முரண் பேசினாய்: நான் அப்படிச் சொல்லவில்லை. பெயர் இல்லாத வஸ்து என்றேன்.
மகன்: -என்ன அம்மா இப்படி நீ பேசுகின்றாய்? கேட்ட வஸ்துக்கு, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் படைத்துக் காத்து அழித்தல் ஆகியவைகள் உண்டா அம்மா?
தாய்: மகனே சர்வ சக்தி முதலிய விஷயங்களைப் பற்றியும், படைப்பு காப்பு, அழிப்பு ஆகிய விஷயங்களைப் பற்றியும் பிறகு பார்த்துக் கொள்ளுவோம்.
முதலில் அப்படி ஒரு ‘வஸ்து’(கடவுள்)இருக்கிறதா என்பதை உறுதி செய்து, பிறகு குணங்கள் பற்றி பேசுவோம்.
மகன்: – சற்று பொறு அம்மா, நான் போய் வாத்தியாரைக் கேட்டு விட்ட வருகின்றேன்.
தாய்: மகனே, நான் முன்னமே சொன்னேன், கிளிப்பிள்ளையைப் போல் வாத்தியார் சொன்னதையே நம்பிக் கொண்டு அவஸ்தைப் படாதே!.போய் கேட்டுவிட்டு வா; எனக்கு ஆட்க்ஷேபணை இல்லை. அவர் உனக்கு இன்னும் என்ன என்ன மூட பக்திகளைப் பற்றி சொல்ல வைப்பாரோ பார்ப்போம். நான் அப்பொழுதே இந்த மாதிரி மூட நம்பிக்கைகளைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு நமது பிள்ளைகளை அனுப்பக்கூடாது என்று சொன்னால், உன் தந்தை அதைக் கவனிக்கவில்லை. இருந்தாலும், குற்றமில்லை. போய் உன் வாத்தியாரை நன்றாய்க் கேட்டு தெரிந்து கொண்டு வா. வாத்தியார் புத்திசாலித்தனத்தையும் பார்க்கலாம்.
(16.12.1928 குடி அரசு இதழில் வெளிவந்துள்ள உரையாடலின் ஒரு பகுதி)
பெரியார் முழக்கம் இதழ் 09102025
