தொகுதி அதிகரிப்பு தீர்வாகுமா?
தொகுதி மறுவரை சட்டத்தில் 50 விழுக்காடு இடங்களை உயர்த்த ஒன்றிய ஆட்சி முன்வரும்போது அதை ஏற்பதால் உருவாகும் நெருக்கடிகளை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் 17.04.2024 அன்று எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்…
ஒவ்வொரு மாநிலமும் தற்போது பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்ற அடிப்படையில் மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 550 இலிருந்து 850 ஆக உயர்த்தும் முன்மொழிவும் பிரச்சினைக்குரியது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது உறுப்பினர்களின் முழுமையான எண்ணிக்கையில் மட்டும் இல்லை; மொத்த அவை உறுப்பினர்களில் ஒரு மாநிலம் பெற்றிருக்கும் ஒப்பீட்டு பங்கிலும் உள்ளது. உதாரணமாக:
கேரளா தனது 20 இடங்களையும் தக்கவைத்துக்கொண்டாலும், 543 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய மக்களவையில் அதன் பங்கு 3.68%. 850 உறுப்பினர்களாக விரிவுபடுத்தப்பட்டால் அதே 20 இடங்களின் பங்கு 2.35% ஆகக் குறையும். தமிழ்நாட்டின் இடங்கள் 39 இலிருந்து 49 ஆக அதிகரித்தாலும், அதன் ஒப்பீட்டு பங்கு 7.18% இலிருந்து 5.78% ஆகக் குறையும். மாறாக, பீகாரின் இடங்கள் 40 இலிருந்து 79 ஆக அதிகரிக்கும்; அதன் ஒப்பீட்டு பங்கு 7.37% இலிருந்து 9.32% ஆக உயரும். உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 80 இலிருந்து 143 ஆக அதிகரிக்கும்; அதன் ஒப்பீட்டு பங்கு 14.73% இலிருந்து 16.86% ஆக உயரும்.
எனவே, மிகவும் சமமான அணுகுமுறை என்ன? என்பது ஒவ்வொரு மாநிலமும் தற்போது கொண்டுள்ள மொத்த மக்களவைப் பிரதிநிதித்துவத்தின் சதவீதப் பங்கைப் பாதுகாத்து, விரிவுபடுத்தப்பட்ட மக்களவையில் அதே விகிதத்தை நீடிக்கச் செய்வதாகவும் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் இதுபோன்ற உறுதியை வாய்மொழியாக வழங்கியிருந்தாலும், அரசியலமைப்புத் திருத்த மசோதாவின் உரையில் அது இடம்பெறவில்லை. இந்த முன்மொழிவை அரசியலமைப்புச் சட்ட ரீதியாக பலவீனமானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் ஆக்குகிறது.
850 உறுப்பினர்களைக் கொண்ட அவை நடைமுறையில் நிர்வகிக்க முடியாத அளவுக்கு பெரிதாகிவிடும். ஐந்து ஆண்டு காலத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்கே போதுமான வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
இதனால்: அர்த்தமுள்ள விவாதம் குறையும்;
நாடாளுமன்றக் குழுக்களின் செயல்திறன் பலவீனமடையும்;
கட்சிகளின் கொறடா உத்தரவுகள் மீது சார்ந்திருப்பது அதிகரிக்கும்;
நிர்வாகத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கும்.
உலக அனுபவமும் உறுப்பினர்கள் எண்ணிக்கையின் கட்டுப்பாட்டையே ஆதரிக்கிறது. அமெரிக்க பிரதிநிதிகள் அவை 1929 முதல் 435 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது; இதற்கிடையில் அந்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்காகியுள்ளது.
இத்தாலி தனது பிரதிநிதிகள் அவையின் உறுப்பினர் எண்ணிக்கையை 630 இலிருந்து 400 ஆகக் குறைத்துள்ளது. ஜப்பானும் தனது உறுப்பினர் எண்ணிக்கையை 465 இலிருந்து 420 ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு
131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, 106வது அரசியலமைப்புத் திருத்தம் (2023) மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 334A பிரிவையும் திருத்த முன்மொழிகிறது. இந்தப் பிரிவு பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை வழங்குகிறது. ஆனால் அதன் அமலாக்கத்தை மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிந்தைய தொகுதிமறுவரையறையுடன் இணைக்கிறது. இந்த இணைப்பு தேவையற்றதும் தவறாக வழிநடத்தக்கூடியதுமாகும்.
தற்போதைய 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலேயே சுழற்சி முறையைப் பயன்படுத்தி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் எந்தத் தடையும் இல்லை. இந்தச் சூழலில் பெண்களின் அதிகாரமளிப்பை முன்னிறுத்துவது, உண்மையில் 1971ஆம் ஆண்டு தொகுதி முடக்கத்தை நீக்குவதையும், கூட்டாட்சிச் சமநிலையை சீர்குலைக்கக்கூடிய சமத்துவமற்ற தொகுதிமறுவரையறையை நியாயப்படுத்துவதையும் மறைக்கும் ஒரு திரை போலத் தோன்றுகிறது.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஆட்சியின் பொறுப்புணர்வை மீட்டெடுத்தல்
நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட மசோதாக்கள் ஜனநாயக நியாயத்தன்மைக்கும் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கும் ஏற்படுத்தும் தீவிரமான ஆபத்துகளைத் தாண்டியும், தொகுதிமறுவரையறையின் அரசியலமைப்புச் சட்ட வடிவமைப்பில் ஆழமான குறைபாடுகள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. முன்மொழியப்பட்ட தொகுதிமறுவரையறை மசோதா, 2026 உள்ளிட்ட தொகுதிமறுவரையறைச் சட்டங்களின் கீழ், தொகுதிமறுவரையறை ஆணையத்தின் கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிடுகிறது. தொகுதி மறுவரையறை ஆணையம் எடுக்கும் தொகுதிப் பங்கீடுகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை;
மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவையில்லை;
ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலும் தேவையில்லை.
இதனுடன், நீதித்துறையும் தலையிட முடியாது.
“அரசியல் தலையீட்டிலிருந்து தொகுதிமறுவரையறையைப் பாதுகாப்பது” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய அமைப்பு, உண்மையில் ஒன்றிய அரசுக்கே அதிக அதிகாரத்தை வழங்குகிறது. ஏனெனில் தொகுதிமறுவரையறை ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஒன்றிய அரசிடமே உள்ளது. இதன் விளைவாக, அதன் முடிவுகள் இறுதியானவை; பெருமளவு நீதிமன்றத்தில் வழக்காட முடியாதவை; திருத்துவதற்கான வாய்ப்பும் மிகக் குறைவானவை என்ற நிலையில் ஒரு பொறுப்பற்ற அமைப்பு உருவாகிறது.
சர்வதேச அனுபவம்
தொகுதிமறுவரையறை ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரங்களை உலகநாடுகள் ஏற்கவில்லை.
அமெரிக்கா: அமெரிக்காவில் தேர்தல் தொகுதி எல்லைகள் மாநில சட்டமன்றங்களின் மூலம் சட்டமாக்கப்படுகின்றன. அவை நீதிமன்றத்தின் முழுமையான ஆய்வுக்கு உட்பட்டவை. தொகுதி எல்லைகளை அரசியல் நோக்கத்திற்காகத் திரிப்பதையும் இனப் பாகுபாட்டையும் கட்டுப்படுத்த நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிடுகின்றன.
கனடா: கனடாவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு சுயாதீன கூட்டாட்சி ஆணையம் செயல்படுகிறது. அந்த ஆணையங்களின் அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. நாடாளுமன்றக் குழுக்கள் உறுப்பினர்கள் எழுப்பும் எதிர்ப்புகளை ஆய்வு செய்து அவற்றை ஆணையங்களிடம் தெரிவிக்கின்றன. இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் ஆணையங்களிடமே இருந்தாலும், அவற்றின் முடிவுகள் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டவை. மாநில சட்டமன்றங்களுக்கான தொகுதிமறுவரையறையிலும் இதேபோன்ற நடைமுறைகள் உள்ளன.
ஜெர்மனி மற்றும் ஜப்பான்: ஜெர்மனி மற்றும் ஜப்பானில் தொகுதிமறுவரையறை அடிப்படையே சட்டமன்றத்தின் செயல்பாடாகும். நிபுணர் ஆலோசனைக் குழுக்கள் அதற்கு வழிகாட்டுகின்றன. தொகுதி எல்லைகள் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலமே சட்டப்பூர்வ வலிமையைப் பெறுகின்றன. அதேவேளை, சமமற்ற பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரைகள்
தொகுதிமறுவரையறை சுயாதீனமாக இருக்க வேண்டும்; அதே சமயம் அதனை எதிர்த்து முறையிடவும், தவறுகள் இருந்தால் திருத்தவும் முடிய வேண்டும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான ஒன்றிய-மாநில உறவுகள் குழு, தனது பிப்ரவரி 2026 அறிக்கையின் முதல் பகுதியில் முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதில் 82, 170 மற்றும் 329(a) ஆகிய அரசியலமைப்புப் பிரிவுகளைத் திருத்தி, வரையறுக்கப்பட்ட ஆனால் அர்த்தமுள்ள நிறுவன ரீதியான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரைவு தொகுதிமறுவரையறை உத்தரவுகள் மீது நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றங்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
கனடாவின் “Dialogue Model” அடிப்படையில்:
சட்டமன்றக் குழுக்கள் எதிர்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்;
அவற்றை தொகுதிமறுவரையறை ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்; ஆணையம் இறுதி உத்தரவை வெளியிடுவதற்கு முன்பு காரணங்களுடன் கூடிய பதில்களை வெளியிட வேண்டும்.
இறுதி முடிவு ஆணையத்திடமே இருக்கும். இதன் மூலம் சட்டமன்றங்களுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்கும்; ஆனால் தடுக்கும் அதிகாரம் இருக்காது.மேலும், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அரசியலமைப்பு மற்றும் அதிகார வரம்பு தொடர்பான காரணங்களுக்காக, கட்டுப்படுத்தப்பட்ட நீதித்துறை மறுஆய்வை அனுமதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறை தொடங்கிய பிறகு நீதிமன்றத் தலையீட்டுக்கான தடையைத் தொடர்ந்து பாதுகாக்கலாம். அரசியலமைப்புத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் வரை, குறைந்தபட்சம் புதிய தொகுதிமறுவரையறைச் சட்டத்திலாவது:
சட்டமன்ற ஆய்வு;
காரணங்களுடன் கூடிய பதில்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் சேர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் H. V. காமத், எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் இறுதியாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் மூலம் மக்கள் போதுமான தகவல்களுடன் விவாதிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்றார். இந்தியாவின் அரசியலமைப்பு வரலாற்றில் தேவையற்ற அவசரத்தில் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் 2026ஆம் ஆண்டின் 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைப் போல கவலைக்குரிய ஒன்று அரிது. எனவே, ஒன்றிய அரசு இந்த மசோதாவையும் அதனுடன் தொடர்புடைய பிற சட்ட மசோதாக்களையும் திரும்பப் பெற வேண்டும்.
மேற்கூறிய கவலைகளைக் கருத்தில் கொண்டு புதிய மசோதா கொண்டுவரப்பட வேண்டும். அந்த மசோதா குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பரந்த அளவிலான, தகவலறிந்த மற்றும் அர்த்தமுள்ள ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். இறுதிப் பார்வையில், தொகுதிமறுவரையறை என்பது வெறும் கணிதக் கணக்கீட்டு நடவடிக்கை அல்ல; அது அரசியல் சட்ட நுண்ணறிவின் வெளிப்பாடாகும்.
அது குடிமக்களின் சமத்துவத்தையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் ஒருங்கிணைத்து, பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தின் நுட்பமான கூட்டாட்சிச் சமநிலையைப் பாதுகாக்க வேண்டும். இன்றைய சூழல் அரசியல் அவசரத்தை அல்ல, ஆழ்ந்த சிந்தனையை; வேகத்தை அல்ல, விரிவான ஆலோசனையைக் கோருகிறது. அரசியலமைப்பு மக்களின் நம்பிக்கைக்குரிய சாசனமாகத் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால், அதில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் கொள்கையின் அடிப்படையில் — நியாயம், கட்டுப்பாடு மற்றும் குடியரசின் நீடித்த ஒருமைப்பாட்டின் மீதான உறுதியான பற்றுடன் — வழிநடத்தப்பட வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 27082026
