தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டு மாவீரர் நாள் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நவம்பர் 27 மாலை நடைபெற்றது இத்தாலி செயின்ட் ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார் அவர் தனது உரையில்”போர் தான் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராட்ட களம் அரசியல் நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது என்றும் விடுதலைப் புலிகளின் மகத்தான தியாகங்கள் குறித்தும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஐநாவின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார்
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வலியுறுத்தி ஸ்ரீதர் ராஜ் உரையாற்றினார். சதீஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பாடல்களை பாடியதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கொளத்தூரில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 27.11.2025 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சேலம், கொளத்தூர், புலியூர் பிரிவில் உள்ள தளபதி பொன்னம்மான் நினைவு கூடத்தில் தமிழீழ விடுதலைக்கு, தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.கழகத் தோழர். கொளத்தூர் டைகர் பாலு தலைமையேற்று வரவேற்புறையாற்றினார். புலியூர் த.சரவணன், செ.வாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னனியைச் சார்ந்த சிவப்பிரியன், கோவை வழக்கறிஞர். சரவணன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாவீர்கள் தங்களுக்கென பல படைப் பிரிவுகளை உருவாக்கியதையும், கொளத்தூரில் புலிகள் பயிற்சி எடுத்த நிகழ்வுகள், மேற்கத்திய நாடுகள் பல சேர்ந்து ஈழத்தமிழர்களையும், விடுதலைப் போராளிகளையும் ஒடுக்கியதால் ஏற்பட்ட வரலாற்றுப் பேரிழப்புகள் பற்றியும் விளக்கினார். “நாம் நமக்கு சரி என்று பட்ட கொள்கைக்கு உறுதியாக நிற்போம்; அனைவரும் தேவையான போது குரல் கொடுப்போம்; நமக்கு அறவழிப் போராட்டங்கள் தேவைப்படுகிறது. தமிழர்கள் சிறிது காலத்திற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் போகப்போக நம் நாட்டை என்ன செய்ய போகிறார்களோ? மத்தியில் பாஜக ஹிட்லர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதற்கு எதிர்நிலை எடுக்கிறபோது, எதிராகப் போராடுகிறபோது நீங்களும் கலந்து கொள்ளுங்கள்; முடியாதோர் உங்களில் சிலரை அனுப்புங்கள், அனுப்ப முடியாதவர்கள் இந்த போராட்டங்கள் நமக்கு தேவையானவை என மற்றவர்களிடம் சொல்லுங்கள்” என்று கூறி, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, ‘மலரட்டும் தமிழீழம்’ என தனது பேச்சை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில், பாலமலைப் பகுதியைச் சேர்ந்த அருள்மொழி – பிரகாஷ் இணையரின் ஆண் குழந்தைக்கு அறிவரண் என்ற பெயரைச் சூட்டினார். இலக்கம்பட்டி குமார் நன்றியுரையாற்றினார்.
கழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்புத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வேலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக 27.11.2025 மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர் சிவா அவர்களின் யாழ் இல்லத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் பங்கேற்றனர்.
சென்னை: தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம், நவம்பர் 27, 2025 மாலை 6 மணிக்கு, சென்னை திருவல்லிக்கேணி இருசப்பா தெருவில், பகுதிச் செயலாளர் சே.ராஜேஷ் தலைமையில், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா முன்னிலையில் நடைபெற்றது.
தியாகச் சுடரை தோழர் தியாகு ஏற்றி வைத்தார். மாவீரர் நாள் பாடல் ஒலிக்க, தோழர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, நினைவஞ்சலி செலுத்தினர். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர், விசிக திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் வெங்கடேஷ், விசிக மயிலை பகுதிச் செயலாளர் பிரபாகரன், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மயிலை பகுதி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் உரையாற்றினர்.

வழக்கறிஞர் வடிவம்மாள், ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தவர். தனது உறவினருக்கு சிங்கள வெறியர்களால் நேர்ந்த கொடுமையை அவர் விவரித்துப் பேசினார். ததேவிஇ பொதுச் செயலாளர் தியாகு, எவ்வித ஆர்பரிப்பு உணர்ச்சிகள் இல்லாமல் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் உலாவிய செய்திகளையும், புலிகள் இயக்கத்தின் தியாகங்களையும் எடுத்துரைத்து, சுமார் 1.30 மணி நேரம் நிறைவுரையாற்றினார்.
திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத் நன்றியுரையாற்றினார். நிகழ்வில், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்கள் மா.வேழவேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி.எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், மயிலை மனோகர், வடசென்னை ராஜன், தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, மயிலை சிவா, முழக்கம் உமாபதி, ஷர்மிளா (தமிழ்நாடு மாணவர் கழகம்), முழக்கம் செய்தியாளர் பிரசாந்த் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 04122025

You may also like...