திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்
“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
நீண்ட நெடிய காலம் தன்னுடைய அரசியலால், எழுத்துகளால், இலக்கியப் பணிகளால், கலை செயல்பாடுகளால் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞரை நாம் இழந்து நிற்கிறோம். இதில் தலைப்பே கூட கருஞ்சட்டைக் கலைஞர் என்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பெரியார் இயக்கத்தில், சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றிய கலைஞர், அதற்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகமாக உருப்பெற்ற பிறகு தன்னுடைய வீரியமிக்க சொற் பொழிவுகளால் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் எழுச்சியை, இன எழுச்சியை ஏற்படுத்தியதில் ஒரு பங்கு உடையவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு பெரியாரின் தொண்டர் என்ற அடிப்படையில், பெரியாரிய பார்வையில் அவர் ஆற்றிய பணிகள், அவருடைய செயல்பாடுகளைப் பற்றி நாம் பேசுவதைத்தான் நோக்கமாகக் கொண்டு தோழர்கள் ’கருஞ்சட்டைக் கலைஞர்’ என்ற தலைப்பைக் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
“உலகத்தின் எத்தனை அகராதிகளை எடுத்துப் போட்டாலும் சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடான ஒரு சொல்லைக் காணவே முடியாது” என்று பெரியார் சொல்லுவார். அது எல்லா உரிமைகளைப் பெறுகின்றவரை குறிக்கிற ஒற்றைச்சொல் என்பதாக பெரியார் சொல்லுவார். கலைஞரை செய்தி யாளர்கள் ஒருமுறை நேர்காணல் செய்தபோது, உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டனர். கலைஞர் அதற்குப் பதில் சொல்லுகை யில் தான் முதல்வராக இருந்தேன் என்பதையோ, தன்னுடைய போராட்ட வாழ்வையோ அல்லது தன் இலக்கியத்தையோ சொல்லாமல் ‘நான் மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று சொன்னார். அதைவிட சிறந்த அறிமுகம் தனக்கு தேவையில்லை என்று அவர் கருதியதால்தான் சுருக்கமான சொற்களால் சுயமரியாதைக்காரன் என்று தன்னைப்பற்றி சொன்னார் கலைஞர். மற்றவர்கள் அவரைப்பற்றி எழுதுவது வேறு, அவரைப் பற்றி அவரே மதிப்பிட்டுக் கொள்வது வேறு. சுயமரியாதைக்காரன் என்று தன்னை சொல்லிக்கொள்வதில்தான் கலைஞர் பெருமை கண்டார்.
ஒரு எளிய குடும்பத்திலிருந்து, காலங்காலமாக வரலாற்றில் உரிமை பறிக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வெளியே வந்து தன்னுடைய பள்ளிப் பருவத்தில், இளமைக்காலத்தில் அரசியலில் ஈடுபாடு கொண்டவர் கலைஞர். அப்போது தமிழ் மொழியை அழிக்க வந்த இந்திக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கையெழுத்து ஏடு நடத்தி, அப்போது ஒரு இயக்கமாக மாணவர் அமைப்பு கண்டு அதிலிருந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். வளர்ந்த பின்னால் ஏதேனும் ஒரு பலனை எதிர்பார்த்து இணைந்தவர் என்று கலைஞரை சொல்லிவிட முடியாது. பள்ளிப்பருவம் என்பது தனக்குப் பட்டதை வெளிப்படுத்துகிற ஒரு பருவம். அவர் மனதில் ஏற்பட்ட அந்த மொழி உணர்ச்சியும், அதனால் நம் இனம் மீண்டும் இரண்டாவது குடிமக்களாக ஆக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமும்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவரை ஈடுபட வைத்தது.
அதன் தொடர்ச்சியாக அவர் சுயமரியாதை இயக்கத்தில், பெரியார் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பைக் கண்டபோது கலைஞருக்கு 25 வயதுதான். அந்த அமைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க தலைவராகவும் அவர் அப்போது இருந்து வந்திருக்கிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அந்த அமைப்புக்கு தலைமை ஏற்றவருக்கே அப்போது 40 வயதுதான். அதற்குப் பின்னால் இருந்த அண்ணா தனது தம்பிகள் என்று அழைத்துக் கொண்டவர் களிலும் 30 வயதுக்கு மேல் யாருமில்லை. அப்படித்தான் அந்த இயக்கம் இருந்தது. துடிப்புள்ள இளைஞர்களைக் கொண்ட இயக்க மாகத் தொடங்கி
8 ஆண்டு காலம் தேர்தல் அரசி யலில் ஈடுபடாத இயக்க மாகத்தான் திமுக செயல்பட்டு வந்தது.
இதில் நாம் மூன்று செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி நம் தலைவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்ல வேண்டும். 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு விடுதலை என்று சொல்லப்பட்டது. அந்த விடுதலையை பெரியார் துக்கநாள் என்றார். இரண்டு எசமான்களில் ஒரு எசமான் போய்விட்டான். எனவே இது மகிழ்ச்சியான நாள் என்று அண்ணா குறிப்பிட்டார். துக்கநாள் என்று சொன்னவர் கட்சியின் தலைவர். மகிழ்ச்சியான நாள் என்று சொன்னவர் கட்சியின் பொதுச் செயலாளர். ஒரு பெரிய சிக்கலில் மாறுபட்ட நிலையை எடுத்த பின்னரும் இரண்டு ஆண்டுகள் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகவே அண்ணா நீடித்தார். அவர் அப்படி நீடிப்பதற்கு பெரியார் தடையாக இருக்க வில்லை, அனுமதித்தார்.
உலகமே உற்றுநோக்குகிற ஒரு சிக்கலில் முரண்பட்ட இரு நிலைகளை எடுத்தாலும்கூட அதையும்விட தமிழ்நாட்டுக்கு நாம் இணைந்து செயலாற்ற வேண்டியத் தேவை இருக்கிறது. தமிழ் சமுதாயத்தை இழிவிலிருந்து மீட்க வேண்டியதும், தமிழ்நாட்டை உயர்த்த வேண்டிய கடமையும் நம்மிடம் இருக்கிறது என்ற உணர்ச்சிதான் இருவரையும் இணைத்து வைத்திருந்தது. இப்போதெல்லாம் சிறுசிறு காரணங்களுக்காக கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். ஆனால் அப்போது எவ்வளவு பெரிய சிக்கலில் மாறுபட்ட நிலை எடுத்திருந்தாலும் ஒன்றாக இருந்தார்கள்.
அதற்குப்பிறகு அண்ணா பிரிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் சென்னை மாகாணத்தில் நீண்ட நெடிய காலமாக செயல்பட்டு வந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லுகிறது. அதற்குப் பெரியார் போராட்டம் முன்னெடுக்கிறார். 1951ஆம் ஆண்டில் இரண்டு கழகங்களும் முரண்பட்டு, ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துகொண்டிருந்த காலம் அது. ஆனால் அப்போது பெரியார் நடத்தியப் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றது. அது ஒட்டுமொத்த தமிழினத்துக்கான போராட்டம். நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம், முரண்பாடு இருக்கலாம், ஆனால் நாம் தமிழ்நாட்டின் நன்மைக்காக இணைந்திருக்க வேண்டியத் தேவை இருக்கிறது என்பதைக் காட்டியது அந்தப் போராட்டம்.
அடுத்து இன்னொரு நிலைப்பாட்டைப் பார்த்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நேரடி எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியிலிருந்த ஒரு முதலமைச்சரை நீக்கிவிட்டு காமராஜர் முதலமைச்சராக வருகிறார். அவர் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக ஆக வேண்டியிருக்கிறது. அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர்தான். எனவே சட்டமன்றத்துக்கு போட்டியிடுகிறபோது பெரியார் காமராஜருக்கு ஆதரவு தருகிறார். 1925ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னால் 30 ஆண்டுகள் காங்கிரசுக்கு எதிராகப் பேசி வந்த பெரியார் காமராஜர் என்ற தமிழர் முதலமைச்சராக வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது என்று கருதி ஆதரிக்கிறார். ஆனால் அந்தக் காங்கிரசு ஆட்சியை வீழ்த்திவிட்டு தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணாவும் அந்தத் தேர்தலில் காமராஜரை ஆதரிக்கிறார்.
சாதாரண அரசியல்வாதிகள் இந்த வாய்ப்பிலாவது அவர்களைத் தோற்கடித்து விடலாம் என்றுதான் கருதியிருப்பார்கள். ஆனால் இவர்கள் சாதாரண அரசியல்வாதிகளாக இருக்கவில்லை. தங்களுடைய அரசியல் பிணக்குகளைவிட, முரண்பாடுகளைவிட தமிழகத்தின் நன்மைதான் முதன்மையானது என்ற அடிப்படையில்தான் இருவரும் இணைந்து நிற்கிறார்கள். இப்படிப் பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
ம.பொ.சி.யின் திராவிட எதிர்ப்பு
ம.பொ.சி. என்று ஒருவர் இருந்தார். அவரைத்தான் தலைவர் என்று இப்போது பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படியொருவர் இருந்தார் என்று மட்டும்தான் நாம் சொல்ல முடியும். வாழ்நாள் முழுவதும் திராவிட இயக்கத்துக்கு எதிராக இருந்தவர் அவர். பாரதிய ஜனதா கட்சி இப்போதைய ஆட்சியாளர்களைப் பிடித்து வைத்திருப்பதைப் போல அந்தக் காலத்தில் ராஜாஜி என்கிற பார்ப்பன அரசியல்வாதி தன்னுடைய எடுபிடியாக, தன்னுடைய கருத்தைப் பேசுவதற்கான ஒரு ஆளாக ம.பொ.சி.யை வைத்திருந்தார். அவர்தான் 1951ஆம் ஆண்டில் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு என்று ஆண்டு முழுவதும் நடத்தினார்.
குலக்கல்வித் திட்டம் என்று ராஜாஜி கொண்டு வந்ததை வரவேற்றவர் ம.பொ.சி., இந்தியாவில் அத்தனை பேரும் எதிர்த்தார்கள். தமிழ்நாட்டில் இவர் மட்டும்தான் ஆதரித்தார். அப்படிப்பட்டவரை ’நான்சென்ஸ்’ என்று நேரு சொல்லிவிட்டார். தனக்கு, தங்கள் இயக்கத்துக்கு எதிராகவே நாடு முழுவதும் மாநாடு நடத்தி வந்தவருக்காக பெரியார், “நீ யார் நான்சென்ஸ் என்று எங்கள் தமிழ்நாட்டுத் தலைவரை சொல்வதற்கு” என்று நேருவைக் கேட்டார். திராவிட முன்னேற்றக் கழகமும் ம.பொ.சி.க்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதித்தது. ம.பொ.சி எங்கள் எதிரிதான், நேரு திட்டினால் பரவாயில்லை என்று இருவரும் மகிழ்ச்சியடைய வில்லை. எங்கள் தமிழ்நாட்டுத் தலைவரைக் கேட்பதற்கு வடக்கத்தியான் நீ யார் என்ற கேள்விதான் இருவரிடம் முன்வந்தது.
நமக்குள் ஆயிரம் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் நலன், தமிழர் நலன் என்று வருகிறபோது நம்முடைய வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் இந்தத் தலைவர்கள் நமக்குக் காட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போதுதான் அவர்கள் நமக்கு வழி காட்டியாக இருக்கிறார்கள். நாமும் தமிழ்நாட்டின் நலன் கருதி, தமிழர்களின் நலன் கருதி தமிழ்நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கிற காவி பயங்கரவாதிகளை விரட்டுவதில், தடுப்பதில் இணைந்து நிற்க வேண்டும். இந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தலைவரில் ஒருவரைத்தான் நாம் இப்போது நினைவூட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நேரத்தில் ம.பொ.சி.யைப் பற்றி நாம் நிறைய பேச வேண்டிருக்கிறது. திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் என்று பேசுகிற போது, இந்த திராவிட அரசியலின் பெருமைகளை சீர்குலைத்தவர்களைப் பற்றியும் பேச வேண்டியத் தேவை நமக்கு இருக்கிறது. தமிழ்நாடு விளைவித்த தாக்கம் என்பது இங்கு இருப்பவர்களுக்குத் தெரியாது. நிழலின் அருமை வெயிலில் இருப்பவர் களுக்குத்தான் தெரியும் என்பார்கள். வெயில் என்பது வட நாட்டுக்குப் போனால்தான் தெரியும். அங்கு போனால்தான் தமிழ்நாட்டின் பெருமைகள் தெரியும்.
இருமொழிக் கொள்கையை 1967ஆம் ஆண் டிலேயே சட்டமாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் இப்போது 2017ஆம் ஆண்டில் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதலமைச்சர், “கர்நாடகத்தில் ஓடிக் கொண்டிருக்கிற மெட்ரோ ரயில்களில் இருக்கிற இந்தி எழுத்துக்கள் அழிக்கப் பட வேண்டும்” என்று சொல்லுகிறார். அவர் இதை கட்சியின் கொள்கையாக அறிவிக்க வில்லை. அரசின் ஆணையாக உத்தரவு பிறப்பிக்கிறார்.
இதில் நடுவணரசும் சரிபங்கு முதலீடு செய்துள்ளது, இது எப்படி சரியாக இருக்குமென்று அதிகாரிகள் கேட்டார்களாம்.
“இருவருக்கும் சமபங்கு முதலீடுதான். ஆனால் ரயில் ஓடுகிற நிலம் நம்முடையது. நாம்தான் கூடுதலாக முதலீடு செய்திருக்கிறோம். எனவே ஆணை பிறப்பிக்கிறேன். இனி இந்தி எழுத்துக்கள் இருக்கக்கூடாது. இருமொழிக் கொள்கையை தமிழகம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு வந்து விட்டது. காலதாமதமாக இருந்தாலும் இருமொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு நாம் வந்து நிற்கிறோம்” என்று சொன்னாராம் அம்மாநில முதல்வர்.
அனைத்திந்திய அளவில், அகில இந்தியம் பேசுகிற ஒரு கட்சியின் முதலமைச்சர் இவ்வாறு சொல்கிறார். அப்படியானால் தமிழ்நாடு 50 ஆண்டுக்கு முன்னால் இருக்கிறது என்றுதான் பொருள். தொழில் காரணமாக வட நாட்டில் நான் கொஞ்ச காலம் வாழ வேண்டியத் தேவை வந்தது. அப்போது புனேவில் இருந்தேன். என்னோடு தொடர் வண்டியில் பயணம் செய்த பேராசிரியர் ஒருவர் மெல்ல மெல்ல பேச்சு கொடுப்பார். தமிழர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு என அவர் என்னிடம் சொன்னார்.
ஏன் என்று கேட்டபோது, “இந்தியை உங்கள் நாட்டுக்குள் விடாமல் வைத்திருக்கின்றீர்கள் அல்லவா? இந்தப் பெருமை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை” என்று சொன்னார். அவர் ஒரு மராட்டியர்.
“எங்களுடைய மாநிலத்தையே இந்த காந்தி கூட்டமெல்லாம் சேர்ந்து இந்தி மாநிலமாக மாற்றி விட்டது, இப்போது கிராமத்தில் மட்டும்தான் மராட்டி மொழி இருக்கிறது. வேறு எங்கும் மராட்டி மொழியே இல்லாமல் போய்விட்டது. அலுவலகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்திதான். திரைப்படங்கள் கூட இந்தி மொழியில் மட்டும்தான் வருகிறது. மராட்டி மொழியையே அழித்து விடுவார்கள் போலிருக்கிறது. ஆனால் நீங்கள் இந்தியை உள்ளே விடாமல் தடுத்து விட்டார்கள்” என்றுகூறி வருத்தப்பட்டார்.
இது நடந்தது 1973-74ஆம் ஆண்டுகளில். இப்படிப் பலவற்றை சொல்லிக் கொண்டு போகலாம்.
தொகுப்பு : ந. பிரகாசு
பெரியார் முழக்கம் 11102018 இதழ்