30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரளுகிறார்கள் டிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி
திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி யும், மாநாடும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய அமைப்புகள் – முற்போக்கு அமைப்புகள் – பெரியாரிய அமைப்புகள் இணைந்து பெரியாரே தமிழர்களின் ஒற்றை அடையாளம் என்று பார்ப்பனிய இந்துத்துவ வாதிகளுக்கு பிரகடனப்படுத்துவதே இந்தப் பேரணியின் நோக்கம்.
கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுதுமிருந்தும் திருச்சி நோக்கி தனிப் பேருந்து வாகனங்களில் திரண்டு வர தயாராகி வருகிறார்கள். அண்மையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள் வழியாக தோழர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது திருச்சி கருஞ் சட்டைப் பேரணியில் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். கழகத் தோழர்கள் தனிப் பேருந்து வாகனங்களில் திருச்சி நோக்கி திரண்டு வருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இது தவிர கூட்டமைப்பு சார்பில் திருச்சி, கோவை, பொள்ளாச்சி, சென்னை மாவட்டங் களில் பேரணி மாநாடுக்கான திட்டமிடல் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சியில் நடந்த திட்டமிடல் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டார்.
சென்னை
சென்னை மாவட்டத்துக்கான திட்டமிடல் கூட்டம் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மாலை 4 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையத்தில் நடந்தது. 30க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சார்ந்த 50 தோழர்கள் பங்கேற்றனர்.
கழக சார்பில் விடுதலை இராசேந்திரன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி பங்கேற்றனர். ‘மே 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன், பேரணி தேதி டிசம்பர் 23ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாற்றப்பட் டுள்ளதையும் பேரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசினார். தமிழர் விடியல் கட்சித் தலைவர் டைசன், திருச்சி, கோவை, பொள்ளாச்சியில் நடந்த திட்டமிடல் கூட்டங்களின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். த.பெ.தி.க. சார்பில் பங்கேற்ற குமரன், மாநாடு பேரணி செலவுக்கான தொகையை மாவட்ட ரீதியாக ஒதுக்கி அறிவித்தால் நன்கொடை திரட்டும் பணி இலகுவாகும் என்று முன் வைத்த கருத்தை ஏற்றுக் கொண்டனர். சென்னை மாவட்டம் சார்பில் ரூ.2 இலட்சம் நிதி திரட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. தமிழகம் முழுதும் சுவரெழுத்துக்கள் எழுது வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. சுவரெழுத்து வாசகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் வசூல் – சுவரெழுத்து – பரப்புரைப் பணிகளை மேற்கொள்ள 13 தோழர்களைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு திராவிடர் விடுதலைக் கழக தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். குழுவினர் அடுத்தடுத்து கூடி களப்பணிகளைத் திட்டமிடுவார்கள். பங்கேற்ற அமைப்பின் பிரதிநிதிகள் அமைப்பு சார்பாக நன்கொடைகளை அறிவித்தனர்.
பேரணியில் அனைவரும் கருஞ்சட்டை அணிந்து வரவேண்டும் என்றும் அமைப்பின் கொடிகளை எடுத்து வரலாம் என்றும் கூட்டமைப்பு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
பார்ப்பனிய இந்துத்துவாவிற்கும் பார்ப்பனிய இந்தியத்துக்கும் எதிரான தமிழர்களின் அடையாளம் பெரியார் தான் என்றும் எனவே பெரியார் நினைவு நாளில் கருஞ்சட்டையோடு திரண்டு எதிரிகளுக்கு தமிழினத்தின் ஒன்றுத் திரட்சியை வெளிப்படுத்தவே இந்தப் பேரணி, மாநாடு என்றும் பொழிலன் நோக்கத்தை விளக்கிப் பேசினார். இந்த முயற்சிக்கு கலைஞர்கள், புலமையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது என்றும் அவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாகவும் பொழிலன் குறிப்பிட்டார். பல்வேறு அமைப்பின் தலைவர்களும் மாணவர் அமைப்பினரும் வரவேற்று உரையாற்றினர்.
பேரணி மாநாட்டை விளக்கிடும் துண்டறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்பினரும் துண்டறிக்கை களை ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர். திருச்சிப் பேரணி மாபெரும் வெற்றிப் பேரணியாக பார்ப்பனிய மதவெறி சக்திகளுக்கு ‘காவி எங்கள் நிறமல்ல; கருப்பே எங்கள் நிறம்’ என்று உணர்த்தும் பேரணியாய் அமையும். அதற்கான சுறுசுறுப்பான களப்பணிகள் தொடங்கிவிட்டன.
பெரியார் முழக்கம் 06122018 இதழ்