அமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல!
1989 – அமெரிக்க தேசியக் கொடியை, எரிப்பது முதலான அவமரியாதை செய்யும் நடவடிக்கைகளைக் குற்றமாகக் கருதமுடியாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1984இல்டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஒருபோராட்டத்தில் அமெரிக்க தேசியக்கொடிஎரிக்கப்பட்டது. போராட்டத்தில் யாருக்கும்காயம்கூட ஏற்படாவிட்டாலும், தேசியக்கொடியை அவமரியாதை செய்ததற்காக, எரித்தவருக்கு இரண்டாயிரம் டாலர் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டன. இதை எதிர்த்தஅவரது மேல்முறையீடுகளின் தொடர்ச்சியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள, (ஒருங்கிணைதல், அரசுக்கு எதிராகப் போராடுதல் முதலானவற்றுக்கான) பேச்சுரிமைக்கு எதிரானது இத் தண்டனை என்று கூறிய இத்தீர்ப்பு, கொடி தொடர்பாக 50இல் 48 மாநிலங்களில் அப்போது இருந்த சட்டங்களைச் செல்லாததாக்கியது. இதைத் தொடர்ந்து, அவ்வாண்டிலேயே கொடி பாதுகாப்புச் சட்டம் என்பது இயற்றப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே அதையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் இதுதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் தோற்றுப்போயின. கொடிஎரிப்பு என்ற சொற்றொடரே, அரசுக்கெதிரான போராட்டத்தைக்குறிப்பதாக உலகம் முழுவதும் இருந்தாலும், அமெரிக்காவின் தேசியக் கொடி பழையதாகிவிட்டால், அதை மரியாதையுடன் அழிப்பதற்கான முறையாக, எரிப்பதையே அந்நாட்டு கொடிச் சட்டம் குறிப்பிடுகிறது. அதைப் போலவே, கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடுவதையும் அந்நாடு குற்றமாகப் பார்க்கவில்லை. மிகப்பெரும் வருத்தம், ஆபத்து ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாக, அமெரிக்கக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடலாம்! இதே அமெரிக்காவில், உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது, தேசியக் கொடியை அகற்றிய குற்றத்திற்காக, 1862இல் ஒருவர் தூக்கிலிடப்பட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.
பெரியார் முழக்கம் 12072018 இதழ்