எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!
எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன.
குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது.
ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது.
கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன் (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய ஜவ்கீத் ஜமா அத்), தினேசுகுமார் (தமிழ்நாடு மாணவர் கழகம்) கண்டன உரையாற்றினர். இறுதியாக, வெள்ளிங்கிரி யாழ் (திவிக பொறுப்பாளர்), காசு. நாகராசன் (தமிழ்நாடு திராவிடர் கழகம்) ஆகியோர் உரையாற்றினார்கள். நூற்றுக் கணக்கான தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை : திருப்பத்தூரிலும், திருவெற்றி யூரிலும் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைளை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்யுமாறு சென்னை காவல்துறை தலைமை ஆணையரிடம் 8.3.2018 அன்று மனு தரப்பட்டது. வடசென்னை கழக மாவட்ட செய லாளர் இரா.செந்தில்குமார் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யனார், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் சுகுமார், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசு, ராஜி, மயிலை சிவா, குமரன், தாமு, சாரதி, சரவணன், தீபக் ஆகியோர் கழக சார்பில் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை : எச். ராஜா பதிவு வெளியான சில மணி நேரங்களில் மயிலாடு துறையில் கழகத்தின் முன்னெடுப்பில் பெரியார் இயக்கங்கள், தமிழர் அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், தி.மு.க.வினர் இணைந்து பேருந்து நிலையம் அருகே எச்.ராஜா உருவப் படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
நாமக்கல்: எச். ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் சார்பில்
7.3.2018 அன்று திருச்செங்கோடு பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய பொருப்பாளர் சதீசு தலைமையில் நடைபெற்றது. திருச்செங்கோடு, பள்ளிப் பாளையம் மற்றும் குமாரபாளைய பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை தோழர்களை கைது செய்து இரவு 7 மணிக்கு விடுவித்தது.
பேராவூரணி: பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எச்.ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனி வேல், “புரட்சிக்கும் வன்முறைக்கும் வேறுபாடு தெரியாதவர்கள், புரட்சிக்கு எதிராக வன் முறையைத் தூண்டி விடுகிறார்கள்” என்றார். முன்னதாக பேராவூரணியில் ஆவணம் சாலை முக்கத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு முழுதும் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தமிழ் தேசிய அமைப்புகள் எழுச்சியுடன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழ்நாட்டையே அதிரச் செய்தனர்.
சேலம் : சேலத்தில் 07-03-2018 கழகத் தோழர்கள் எச்.ராசாவைக் கண்டித்து பரமேஷ் குமார் (சேலம் மாநகர தலைவர்) தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கிருஷ்ணன் (மாவட்ட அமைப்பாளர்), சந்தோஸ் (ஒன்றிய அமைப்பாளர்-தமிழ்நாடு மாணவர் கழகம்), அண்ணாதுரை(மாவட்ட அமைப்பாளர்) உட்பட 25 பேர் கலந்து கொண்டனர். தோழர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
சங்கராபுரம்: கண்டன ஆர்ப்பாட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில், தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பில் 9.3.18 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. கழக மாவட்ட பொறுப்பாளர்கள் க.இராமர், இளைய ராசன், சி.சாமி துரை, குப்புசாமி, நாகராஜ், வெற்றிவேல், ஆசைத்தம்பி மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
விழுப்புரம் : பெரியார் சிலைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்று இணையத்தில் பதிவிட்ட எச்.இராசாவை கண்டித்து 8-3-2018 வியாழன் அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைபட்டு கிராமத்தில் எச்.இராசாவின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
பெரியார் முழக்கம் 15032018 இதழ்