பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !*

– *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.

ஏற்கனவே தமிழ்நாடு அரசும் கடந்த ஆண்டு தனது தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு நாளைக் கொண்டாட முடிவு செய்து அரசாணை வெளியிட்டு இருந்தது.

கர்நாடகம், காஷ்மீரம், ஆந்திரம் போன்ற பல மாநிலங்கள் இப்படிப்பட்ட விழாவை தங்கள் மாநிலத்திற்கு என்று தனிக்கொடி அமைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் போல தமிழ்நாடும் கொண்டாடவேண்டும் என்று விரும்பி அதற்கென தமிழ்நாட்டின் ‘வரைபடத்தைக் கொண்ட ஒரு தற்காலிக கொடியினையும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிமுகம் செய்திருந்தது.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவும், தங்கள் மாநிலத்தின் சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கல்வி போன்றவற்றைத் தாங்களே முடிவு செய்து கொள்ளுகிற தன்னாட்சி அதிகாரத்திற்கு தடையாக எதிரான நடப்புகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து மாநில அரசின் கோரிக்கைகளுக்கு வலு சேர்ப்பது இதன் பலனாக இருக்கும்.

ஆனால் தமிழ்நாடு அரசோ அல்லது காவல்துறையோ ஏதோ இவற்றை பிரிவினைக் கோரிக்கையை போல கருதிக்கொண்டு அதற்கு தடை விதிப்பதும், இனிப்பு வழங்கிய தோழர்களைக் கூட ஒரு நாள் முழுவதும் தடுத்து வைத்திருந்தது போன்ற செயல்களில் இறங்கி இருந்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் மேடவாக்கத்தில் பாவலரேறு தமிழ்களத்தில் கூடி விழாவினை முன்னெடுக்க இருந்த தோழர் பொழிலன், தோழர் தம்பி மண்டேலா ஆகியோரை காவல்துறை கைது செய்தது. வடசென்னையிலும் பட்டாபிராமிலும் சில தோழர்கள் கைது செய்யப்பட்டு அனைவர் மீதும் தேசத்துரோகம் உள்ளிட்ட கடும் பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இந்த நடவடிக்கையைத் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்ட எழுச்சிகளை பயன்படுத்திக்கொண்டு பெருந்தொற்று காலத்திலும்,
சரக்கு சேவை வரி(GST)யில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகளைக் கூட கொடுக்காமல் மறுப்பது போன்ற உரிமைப் பறிப்புக்கு எதிராக  பயன்படுத்திக் கொள்வதற்கு பதிலாக சிறையில் அடைப்பதை தமிழ்ச் சமூகம் அதிர்ச்சியுடன் பார்க்கிறது.

தமிழ்நாடு அரசு இந்தப் போக்கினை கைவிட வேண்டும் என்றும் தோழர் பொழிலன் உள்ளிட்டோர் மீது புனையப்பட்டு இருக்கிற வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

*கொளத்தூர் மணி,*
*தலைவர்,*
*திராவிடர் விடுதலைக் கழகம்*
02.11.2020

You may also like...