மண்டல் பரிந்துரை அமுலாக்க 10 ஆண்டுகள் மூன்றே நாட்களில் வந்துவிட்டது ‘பொருளாதார’ இடஒதுக்கீடு
பொதுப் போட்டியில் கல்வி மற்றும் வேலை வாயப்புகளில் மட்டும் 10 சதவீத இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அதற்கான சட்டத்திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
- இடஒதுக்கீடு சமூக கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்குக் கொண்டு வரப்பட்டது; பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல. நாடாளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு இது குறித்து விவாதங்கள் நடந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர், ‘பொருளாதாரம்’ என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளினர்.
- வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமு லாக்கும் ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. பிரதமராக இருந்த நரசிம்மராவ், திறந்த போட்டிக்கான இடங்களில்முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத ஒதுக்கீடு ஆணையை பிறப்பித்தார். உச்சநீதிமன்றம் நரசிம்மராவ் ஆணையை சட்டத்துக்கு எதிரானது என்று கூறி விட்டது.
- குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி 2016இல் முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்து பிறப்பித்த ஆணையை சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறி குஜராத் உயர்நீதிமன்றம் இரத்து செய்துவிட்டது.
- பீகாரில் கர்பூரிதாகூர் முதல்வராக இருந்த போதும் உ.பி.யில் மாயாவதி முதல்வராக இருந்த போதும் முன்னேறிய சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
- இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்துவது மிகவும் ஆபத் தானது. ‘பொருளாதாரம்’ என்பது மாற்றத்துக்கு உட்பட்டது. ‘ஜாதி-சமூக’ பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது வரலாற்று ரீதியாக இழைக்கப் பட்ட ஜாதி ஒடுக்கு முறைகளால் உருவானது.
- பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பை 9 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ‘இந்திரா சகானி’ வழக்கில் புகுத்தியது என்பதே தவறான வாதம் என்கிறார். மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியும் சமூக ரீதியில் ஆழமான புரிதல் உள்ளவருமான பி.எஸ்.கிருஷ்ணன், ‘சமூக கல்வி ரீதியாக’ முன்னேறியவர்களை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறியது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். இதன் பொருள் இடஒதுக்கீட்டின் பலனை பல தலைமுறையாகப் பெற்று சமூகத்தில் பிற்படுத்தப்பட்டத் தன்மையைக் கடந்தவர்கள் என்பதுதான். பொருளாதாரத்தில் வசதியாகி விட்டார்கள்; அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு அல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்.
- ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதி மொழி கூறி ஆட்சிக்கு வந்த மோடி, அதில் மிக மோசமாகத் தோல்வி அடைந்து விட்டார். 2014இல் 49 இலட்சம் வேலை வாய்ப்புகளும், 2015இல் 1.3 இலட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப் பட்டன. 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் வரை உற்பத்தித் துறை, கட்டுமானம், போக்குவரத்து, வர்த்தகத் துறைகளில் 70 ஆயிரம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கக்கூடிய உற்பத்தித் துறையில் பொருள்களின் விற்பனை 2015-16இல் 3.7 வீதம் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வேலையில் இருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படும் நிலை உருவாகி விடும்.
‘ஈ காமர்ஸ் துறை’ இலாபத்தில் இயங்காததால் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. ‘ஸ்நாப் டீல்’ நிறுவனம் மட்டும் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
- மோடி ஆட்சி வேலை வாய்ப்பை அதிகரிக்க பிரதான் மந்திரி வேலை உருவாக்கும் திட்டம், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா போஜனா என்ற திட்டங்கள் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் 11 இலட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே இத்திட்டங்களால் உருவாக்க முடிந்தது. வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய துறைகளில் தோல்வி அடைந்த மோடி ஆட்சி திறந்த போட்டியில் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடங்களை ஒதுக்கி வேலை வாய்ப்புகளை வழங்கப் போவதாகக் கூறுவது மிகப் பெரும் மோசடியாகும்.
- முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் அரசியல் சட்ட த்தின் 124ஆவது திருத்த மசோதா நாடாளு மன்றம், மாநிலங்களவையில் நிறைவேறி விட்டது. சமூக நீதிக்கு இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு. எனவேதான் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் இதை எதிர்க்கின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தனது தேர்தல் அறிக்கையிலேயே இந்த ‘பொருளாதார’ அடிப் படையிலான இடஒதுக்கீட்டை நிறைவேற்று வோம் என்று உறுதி கூறியிருந்தது. இப்போது பா.ஜ.க.வுடன் சேர்ந்து கொண்டு வட மாநிலங் களில் பார்ப்பன உயர்ஜாதியினரின் வாக்குகளைக் குறி வைத்து, மசோதாவுக்கு ஓட்டெடுப்பில் ஆதரவு வழங்கி விட்டது.
- உச்சநீதிமன்றம் பொருளாதார அடிப்படை யிலான இடஒதுக்கீடுகளை ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்ட நிலையில் இப்போது என்ன முடிவை எடுக்கும் என்று தெரியவில்லை. இது குறித்து ‘இந்து’ நாளேடு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் இரண்டு கருத்துகளை முன் வைத்துள்ளது.
- இடஒதுக்கீடு இப்போது 60 சதவீதமாகிவிட்டது 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று வரம்பு கட்டியுள்ள உச்சநீதிமன்றம் வரம்பை நீக்க முன் வருமேயானால் பல மாநில ஆட்சிகள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த முன்வரக் கூடும். இதனால் ‘முன்னேறிய ஜாதியினருக்கு’ ஏற்கனவே இருந்த வாய்ப்புகள் மாநில அரசு பதவிகளில் குறையக் கூடும். 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று தீர்ப்பு வருமானால் ஏற்கனவே அமுலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையைக் குறைத்து 50 சதவீதத் துக்குள் ளேயே முன்னேறிய ஜாதியினருக்கு இட ஒதுக் கீட்டைக் கொண்டுவர வாய்ப்புகள் உண்டு. இது சமூக – அரசியல் தளங்களில் கடும் நெருக்கடி களை உண்டாக்கும்” என்று ‘இந்து’ ஏடு கூறுகிறது.
- இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த மசோதா, கல்வி மற்றும் தனியார் துறையிலும் முன்னேறிய ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை இணைத்திருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே தனியார் துறையில் பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கமே மிகுந்திருக்கிறது. தனியார் துறையில் தாழ்த்தப்பட்டோருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வற்புறுத்தப்பட்டு வருகிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ‘தலித்’ மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கான முயற்சிகளை அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி முயற்சி செய்து பிறகு அதை கைவிட்டுவிட்டது. இப்போது முன்னேறிய ஜாதி யினருக்கு மட்டும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருப்பது மிகப் பெரும் சமூக அநீதி.
- ‘இந்து’ ஆங்கில நாளேடு ஜன.9ஆம் தேதி இது குறித்து எழுதியுள்ள தலையங்கத்தில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு திட்டம் சமூகநீதியைவிட அரசியல் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது என்று எழுதி யிருக்கிறது. 50 சதவீதத்தைவிட கூடுதலாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமானால், அதைத் தவிர்க்கவியலாத சூழலில் தான் கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டத்துக்கு ‘தவிர்க்கவியலாத சூழல்’ என்ற காரணம் பொருந்தி வராது. பொருளாதாரத்தில் ஒருவர் நலிந்திருக்கிறார் என்பதற்காக, அவருக்கு சிறப்பான வாய்ப்புகளை சட்டப்படி உருவாக்கித் தர வேண்டும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்குமா? சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆண்டு குடும்ப வருமானம் 8 இலட்சத்துக்குள்ளாக இருக்க வேண்டும் என்று ‘கிரிமிலேயர்’ நிர்ணயிக்கப்பட் டுள்ளது. சமூகக் கல்வி ரீதியாக முன்னேறிய பிரிவினருக்கும் அதே ரூ.8 இலட்சம் கிரிமிலேயராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய பிரிவினரையும் முன்னேறிய பிரிவினரையும் ஒரே பொருளாதார வரம்பை வைத்து நிர்ணயிக்க முடியுமா? போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டப் பிரிவு ஏற்கனவே போதுமான அளவையும் மீறி பதவிகளில் இருக்கும் பிரிவினருக்கு எப்படிப் பொருந்தும்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேடு, பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதற்கு அரசிடம் ஏதாவது புள்ளி விவரங்கள் இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
- பொருளாதார அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு என்ற பா.ஜ.க. ஆட்சியின் முடிவு – எதிர் காலத்தில் படிப்படியாக – ஜாதிய ஒடுக்கு முறையால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்க வந்த இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்து விடும் பொருளாதார அளவுகோல் ஆபத்துக்கு வழி வகுத்துவிடும். அதற்கான ஓட்டை இப்போது போடப்பட்டுள்ளது.
- அரசியல் சட்டப்படி உறுதி செய்யப்பட்ட பட்டியல் இனப் பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பைப் புகுத்த முடியாது என்று 1992ஆம் ஆண்டில் 9 நீதிபதிகளடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியது. கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பட்டியல் இனப் பிரிவுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பளித்ததோடு அப்படி பதவி உயர்வு வழங்குவதற்கு ‘பொருளாதார’ வரம்பை நிர்ணயித்து விட்டது. எனவே பொருளாதார வரம்பு என்ற அளவுகோல் படிப்படியாக நுழையத் தொடங்கிவிட்டது.
- மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவுக்கு (ளுநடநஉவ ) அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். கனிமொழி கொண்டு வந்த இத் தீர்மானத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இந்தத் தீர்மானம் ‘155-18’ என்ற அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை மசோதாவைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். ‘நான் ஒரு சூத்திரன்’ என்ற முறையில் இந்தப் பொருளாதார அளவுகோலை எதிர்க்கிறேன் என்றார்.
- மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் ஆதரித்தே வாக்களித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறப்பினர் டி.கே. ரெங்கராஜன், மசோதாவை ஆதரித்துப் பேசியபோது கனிமொழி அவர் அருகே வந்து இது என்ன அநியாயம் என்று ஆவேசமாகக் கேட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- மாநிலங்களவையில் மசோதாவை எதிர்த்து விழுந்த வாக்குகள் 7; ஆதரவு 149. நாடாளுமன்றத்தில் 7 வாக்குகள் எதிர்ப்பாகவும் 165 வாக்குகள் ஆதரவாகவும் கிடைத்துள்ளன. வெளி நடப்பு செய்தால் எதிர்த்து வாக்களிப்பதாகக் கருத முடியாது. அது எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ வாக்களிக்காமல் இருக்கும் ஒரு தந்திரமான இரட்டை நிலை. அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்கனவே ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டு இருப்பதால் அவைக்கு வரவில்லை.
- மண்டல் பரிந்துரையின்அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் மட்டும் இடஒதுக்கீடு செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது (1989இல் வி.பி.சிங் உத்தரவு). மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு 17 ஆண்டுகள் தேவைப்பட்டது. (2006இல் அர்ஜூன் சிங் காங்கிரஸ் அமைச்சரவையில் மனித வளத் துறை அமைச்சராக இருந்தபோது இதை சாதித்தார்)
ஆனால் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை முடிவு செய்த அடுத்த இரண்டு நாட்களிலே மசோதா நிறைவேறிவிட்டது.
பெரியார் முழக்கம் 17012019 இதழ்