மீண்டும் ஒன்றரைக் கோடி கடன் ஒரு சம்பாஷணை – சித்திரபுத்திரன்
காங்கரஸ்காரன்: இப்படி கோடி கோடியாய் கடன் வாங்குகிறீர்களே! இது அடுக்குமா? நாமோ எந்த சமயத்தில் விட்டுவிட்டு ஓடப்போகிறோமோ யார் கண்டார்கள். அப்புறம் இந்தக் கடனை யார் கட்டுவது? மந்திரி: கடன்பட்டவன் கட்டிவிட்டு சாகிறானா, சம்பாதித்தவன் சாப்பிட்டு விட்டு சாகிறானா? என்னமோ நம்ம காலம் வரை சக்கரம் ஓடினால் சரி. எவனோ கட்டுகிறான் நமக்கு அந்தக் கவலை எதற்கு? கா: முன்னமே மூன்றேகால் கோடி. இப்பொழுது வேறே ஒன்றரை கோடியா? இது என்ன ஊரா, பாழா? பொது ஜனங்கள் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவர்கள் கேட்க மாட்டார்களா? ம: கேட்டு அவர்கள் தாலி அறுந்தது. எங்கேயோ அடித்துப் பிடித்து பணக்காரனிடம் பணம் பிடிங்கி தங்களுக்கு நல்லது செய்வதாகத்தான் கருதுவார்கள். மற்றபடி இது தங்கள் மீது சுமத்தப்படப்போகும் கடனே என்று ஒருவருக்கும் தெரியாது. கா: காங்கரசல்லாத பத்திரிகைகள் இவற்றை வெளியாக்கி விடுமே அப்புறம் கூடவா தெரியாது? ம: நாம்தான் காங்கரசல்லாத பத்திரிகைகள் எல்லாம்...
