எனது திட்டம்

தலைவரவர்களே! தோழர்களே!

ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத்திட்டம் என்று இப்போது என்னால் ஆமோதிக்கப்படும் வேலை தீர்மானமானது சுமார் 2 வருஷத்துக்கு முன்னமேயே என்னால் அக்கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்திற்கு பல சரித்திரங்கள் உண்டு. இத்திட்டம் முதல் முதலில் எப்படி ஏற்பட்டது என்றால் தோழர்கள் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் ஒத்துழைக்க ஏதாவது சந்தர்ப்பம் ஏற்படக்கூடாதா என்ற பிரச்னை எழுந்த காலத்தில் என்னால் யோசித்து எழுதப்பட்டு þயார்களில் ஒருவர் ஆமோதிப்பும் பெற்று காந்தியாருக்கு அனுப்பிக் கொடுக்கப்பட்ட திட்டங்களின் தத்துவமாகும். அவை ஏற்றுக் கொண்டதாக தோழர் காந்தியாரிடமிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் வராததாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்கு சமர்ப்பித்தேன். அவர்கள் அவற்றை சில வார்த்தைத் திருத்தங்களுடன் ஒப்புக்கொண்டார்கள். அதன்பின் தான் இதே திட்டங்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் இவை பொது உடமைத் தீர்மானங்கள் என்றும் ராமசாமியை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சியார் கொடுத்த விலை என்றும் சொல்லப்பட்டதாகும்.

மற்றும் பார்ப்பன தேசீயப் பத்திரிக்கைகளாலும் பார்ப்பனக் கூலிகளாலும் கராச்சி தீர்மானத்தில் இருந்து திருடிய தீர்மானங்கள் என்றும் சொல்லப்பட்டதுமாகும்.

இவை பொதுஉடைமைத் தீர்மானமானாலும் சரி, கராச்சித் திட்டத்தில் இருந்து திருடியது என்றாலும் சரி, அவற்றால் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை லாபமேதான். ஏனெனில் காங்கிரஸ்காரர்கள் நமக்கு திட்டமில்லை என்றோ அல்லது நமது திட்டங்கள் பிற்போக்கானவை என்றோ சொல்ல முடியாதல்லவா? கராச்சி திட்டத்தை நாம் திருடிக்கொண்டோம் என்றால் அதன் அருத்தம் என்ன? அதாவது கராச்சி திட்டத்தை நாம் நமது திட்டமாகக் கொண்டுவிட்டோம் என்பதுதானே அருத்தம். அப்படி இருக்கும்போது காங்கிரஸ்காரர்கள் திட்டமும் நம்முடைய திட்டமும் ஒன்று என்றாவதோடு அரசியலில் காங்கிரஸ் திட்டம் என்பதற்கும் ஜஸ்டிஸ் கட்சி திட்டம் என்பதற்கும் வித்தியாசமில்லை என்பதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொள்ளுகிறார்கள் என்று ஆகிவிடவில்லையா.

ஆனால் உண்மையிலேயே நமது திட்டங்களுக்கும் காங்கிரசு திட்டம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் 2 முக்கியமான வித்தியாசமாகும். காங்கிரஸ் திட்டத்தில் பழய புராணங்களையும் ஜாதி, மத வித்தியாசங்களையும் காப்பாற்றவும், அவரவர் ஜாதி ஆச்சாரங்களை அமுலில் நடத்திக் கொள்ள உரிமையும் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதமளித்திருக்கிறது. இவற்றை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. ஒப்புக்கொள்வதானால் நாம் சூத்திரர் களாகவும் தீண்டாத ஜாதியாராகவும் இருக்க நாமே சம்மதித்துக் கொண்டவர் களாவோம். அன்றியும் வருணாச்சிரமத்தையும் பறையன் பிராமணன் என்கின்ற உயர்வு தாழ்வையும் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாவோம்.

இன்றைய காங்கிரசின் கிளர்ச்சியெல்லாம் þ பிராமணத்தன்மையையும் பறத்தன்மையையும் காப்பாற்ற இருந்துவருகிறதே ஒழிய பொதுவாக மனித சமூகத்திற்கு எவ்வித நன்மைக்கு ஆகவும் இல்லை என்று நான் 15ஆண்டுகாலமாக சொல்லி வருவதற்கு கராச்சி தீர்மானத்திலுள்ள இந்த தத்துவமே தான் காரணம். ஆகவே இவ்வளவு பெரிய வித்தியாசம் நமது திட்டத்துக்கும் கராச்சி திட்டத்திற்கும் இருக்கும்போது கராச்சி திட்டமும் நமது திட்டமும் ஒன்று என்று எந்தப் பைத்தியக்காரனாவது சொல்ல முடியமா?

அன்றியும் நமது திட்டத்தில் உள்ள விஷயங்கள் கராச்சி திட்டத்தில் இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? நமது திட்டத்தில் “அரசியல் உத்தியோகங்கள் பிரதிநிதித்துவங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார்களுக்கும் (அதாவது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய வகுப்பார்களுக்கு) அவர்கள் ஜனத்தொகை பெருக்கத்துக்குத் தக்கபடி கிடைக்கும்படியாகச் செய்யவேண்டும்” என்பது ஆக உள்ள திட்டம் காங்கிரஸ்காரர்களின் கராச்சி திட்டத்தில் இருக்கிறதா? என்று கேட்கின்றேன்.

ஆகவே காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாச மெல்லாம் ஜாதி பேதங்கள் ஒழிக்கப்பட வேண்டியதும் அதுவரையில் வகுப்புகளின் அளவுக்குத் தகுந்தபடிதான் உத்தியோகமும் பிரதிநிதித்துவமும் இருந்து வரவேண்டும் என்பதுமேயாகும்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு விஷயம் விளக்கவேண்டியவனாக இருக்கிறேன்.

அதாவது “ஜாதிபேதம் ஜாதிப்பிரிவு ஆகியவை ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது ஜாதியை காப்பாற்றுவது ஆகாதா” என்று பார்ப்பன தேசீயப் பத்திரிக்கைகள் என்பனவும் அவர்களது கூலிப்பத்திரிக்கைகளும் கூலிகளும் எழுதவும் கேட்கவும் செய்கின்றார்கள். இவர்களுக்குள் சிலர் தெரிந்தே விஷமத்துக்கு ஆக கேட்பவர்களும் சிலர் விஷயம் புரியாமல் பார்ப்பனர்கள் சொல்வதை நம்பி கேட்பவர்களும் உண்டு.

ஆனால் அதை விளக்கிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். என்ன வென்றால் இன்று கராச்சித் திட்டமோ, காந்தியாரோ அல்லது காங்கிரசின் கொள்கையோ ஆகியவைகளில் அமுலில் இருக்கும் எந்தக் கொள்கையிலும் திட்டத்திலும் ஜாதி பிரிவுகளையும் பேதங்களையும் அடியோடு ஒழித்து விடுவது என்கின்ற விஷயம் இல்லவே இல்லை.

பூரண சுயேச்சை பெற்ற இந்தியாவில் பறையனும் பிராமணனும் இருக்கமாட்டார்கள் என்றோ உண்பனை தின்பனைக்கும் கொடுப்பனை கொள்வினைக்கும் அருகதையற்ற ஜாதிமத பேதங்கள் இருக்காது என்றோ ஒரு வாசகம் இருந்திருக்குமானால் மாத்திரம் எதற்கு ஆக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் வகுப்புவாதமும் பேசவேண்டும் என்று கேட்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை உண்டு. ஜாதிமதத்தில் நடுநிலைமை வகித்து பழைய சாஸ்திர புராண தர்மங்களை காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதமளிக்கும் காங்கிரசினிடம் எங்கள் பங்கு என்ன? எங்கள் உரிமை என்ன? என்று ஒருவர் கேட்டால் அவர் எப்படி வகுப்புவாதியாகவோ தேசத்துரோகி ஆகவோ ஆகிவிடக்கூடும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

பார்ப்பனர்கள் வெகு ஜாக்கிரதையாக தங்கள் உயர்வைக் காப்பாற்றிக் கொள்வதற்கு காங்கிரசினிடம் உத்திரவாதம் பெற்றுக்கொண்டு நம்மிடம் வந்து நமது தாழ்வையும் இழிவையும் நாம் காப்பாற்றிக் கொள்வதாய் உத்திரவாதம் கொடு என்று நம்மை கேட்டால் நாம் அத்தனை பேரும் முட்டாள்களா? அல்லது வகுப்பு நலத்தை விற்று வயிறு வளர்க்கும் குச்சிக்காரி பிள்ளைகளா? அல்லது பார்ப்பனக் கூலிகளா? என்று யோசித்துப் பாருங்கள்.

நான் இந்த காங்கிரசினுடையவும் பார்ப்பனர்களுடையவும் யோக்கியதைகளை தெரியாமல்படிக்கு பேசுவதாக நீங்கள் யாரும் கருதிவிடாதீர்கள்.

காங்கிரசின் யோக்கியதைக்கு சென்னை காங்கிரசுக்கு தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் அனுப்பிய ஜாதி வித்தியாசம் ஒழிப்பு தீர்மானம் என்ன கதி ஆயிற்று என்பதையும் பார்ப்பனர்கள் யோக்கியதைக்கு தோழர் டாக்டர் வரதராஜுலுவால் கிளர்ச்சி செய்யப்பட்ட குருகுல சமபந்தி போஜன தீர்மானம் என்ன ஆயிற்று என்றும் யோசித்துப் பாருங்கள்.

இந்த இரண்டு காரியங்களும் போதுமான ஆதாரமல்லவா என்று கேட்கின்றேன்.

இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்கு இன்று முதலில் ஜாதி ஒழிப்பதும் சமமாய் நடத்தப்படுவது மல்லாத வேறு சுயராஜ்யம் என்ன வேண்டி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அவற்றை ஒப்புக்கொள்ளாத காங்கிரசை ஒரு பார்ப்பனரல்லாதார் ஆதரிக்கிறார்கள் என்றால் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை சூத்திரன் என்றும் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்றும் பார்ப்பனர் களின் அடிமை என்றும் சொல்லுவதை மெய்யென்று ஒப்புக்கொண்டதாகத்தானே அருத்தமாகிறதா அல்லவா என்றும் யோசித்துப்பாருங்கள்.

ஆகையால் நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவ்விதத்திலும் முரணான காரியம் ஆகாது என்பதுடன் அதிலும் காங்கிரசை கேட்பது எப்படியும் எந்த விதத்திலும் தவறாகாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாதிபேதங்கள் ஒழிவது சட்டத்தினால்தான் முடிய வேண்டுமே ஒழிய பொதுஜன சம்மதத்தில் என்றால் ஒரு நாளும் முடியவே முடியாது.

ஏனெனில் ஜாதி காரணமாக பாடுபடாமல் கடவுளையும் மோக்ஷத்தையும் காட்டி ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும்படியான சௌகரியம் இருக்கும்போது பலாத்காரத்துக்கோ அல்லது தண்டனைக்கோ அல்லாமல் எவனாவது ஜாதி ஒழிய சம்மதிப்பானா என்று கேட்கிறேன்.

ஆகவே சட்டத்தின் மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது சட்டத்தின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எடுத்துவிடுவது சிறிதும் சிரமமான காரியம் அல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்றியும், காங்கிரஸ்காரர்கள் முயற்சிப்பதாலோ அல்லது சட்டத்தினாலோ வகுப்புகள் இல்லாமல் போகுமானால் பிறகு யாருக்கு நாம் பிரதிநிதித்துவம் கொடுக்கப்போகிறோம்? ஆகவே அது தானாகவே மறைந்துவிடும். ஆதலால் ஜாதி வகுப்புகள் உள்ளவரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதும் அதுவும் ஜாதியை காப்பாற்றுகின்ற காங்கிரசினிடம் கேட்பதும் குற்றமாகவோ, ஜாதியை காப்பாற்றியதாகவோ ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நிற்க, நமது தீர்மானங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் காங்கிரசுக் காரர்களால் எவ்வளவு குறை சொல்லக்கூடியதாய் இருந்தாலும் நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் இன்று நமது பாமர மக்களுக்கு அவை தேவையானதும் போதுமானதும் தானா அல்லவா என்பதை யோசித்துப்பாருங்கள்.

நமது திட்டங்களால் விவசாயிகளின் நிலைமை காப்பாற்றப்படுகிறது.

லேவாதேவிக்காரர்களால் ஏற்படும் கொடுமை ஒழிக்கப்படுகிறது.

வக்கீல்களின் தொல்லையும், விவகாரங்களின் தொல்லையும் ஒழிக்கப்படுகின்றது.

வியாபாரிகள், தரகர்கள் கொள்ளையும் ஒழிக்கப்படுகின்றது.

யந்திர முதலாளிகளின் கொடுமைகளும், தொழிலாளர்களின் கஷ்டங்களும் ஒழியப்படுகின்றன.

மற்றபடி கல்வி குறைவு, மதுபானக் கெடுதி, தீண்டாமை இழிவு ஆகியவைகள் நீங்குவதுடன் சகல ஜாதிமத வகுப்பு மக்களுக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் விகிதாச்சார உரிமை கிடைப்பதன் மூலம் சமநிலை ஏற்பட வசதி அளிக்கிறது.

வரிவிதிப்பு, நிர்வாகம், ஜன சமூகத்துக்கு அனுகூலமான கூட்டுறவு ஸ்தல ஸ்தாபன நிர்வாகம், சம்பளக் கொள்ளை ஆகியவைகளும் ஒழுங்காக மக்களுக்கு அனுகூலமான வழியில் நடைபெறத்தக்க வண்ணம் அமைந்திருக்கிறது.

இவைகள் அனுபவ சாத்தியமான முறையிலேயே கைகூடும் மாதிரியாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே நமது திட்டங்கள் எவ்வளவு தீவிர சமதர்ம வாதியும் ஒப்புக் கொள்ளக்கூடியதும் இதற்கு மேல் எந்த சமதர்மவாதியாலும் வகுக்கக் கூடாததுமான அவ்வளவு மேன்மையானதாகும்.

இவைகள் செவ்வனே வெற்றிபெறவேண்டுமானால் நமக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் இருக்கவேண்டும். பார்ப்பனரல்லாத மக்களுக்குள் காங்கிரசின் விஷமும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் பரவாதிருக்குமானால் இந்த பதினைந்து வருஷ காலத்துக்குள்ளாக இன்னும் எவ்வளவோ பயனுள்ள காரியங்களைச் செய்திருக்கலாம். ஆனாலும் குற்றமில்லை. இனியாவது ஒற்றுமையாய் இருப்போமானால் வரப்போகும் சீர்திருத்தத்தைப் பயன்படுத்தி நல்ல வேலை செய்யலாம் என்றே கருதுகிறேன்.

நாம் பணக்காரர்களுக்கு அடிமை என்று காங்கிரஸ்காரர் சொல்லுகிறார்கள். எப்படிப்பட்ட காங்கிரசுக்காரர்கள் என்றால் தங்கள் வயிறு வளர்ப்புக்கு காங்கிரசுக்காரர்களிடமும் பார்ப்பனர்களிடமும் கூலிபெற்று நம்மைக் குரைக்கும் கூட்டத்தார்கள் தான் சொல்லுகிறார்களே ஒழிய தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு நாணயமான ஒரு மார்க்கத்தை வைத்துக்கொண்டு நம்மை அடிமை என்று சொல்லுகிறவர்கள் யாருமே இல்லை. ஆதலால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

பணக்காரர்களாய் இல்லாவிட்டால் எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது. தேர்தல்களுக்கு ஆயிரம் பதினாயிரம் கணக்கில் செலவு செய்ய வேண்டும்; மோட்டார் வேண்டும்; ஏஜண்டுகள் வேண்டும்; பிரசாரம் வேண்டும். இவை பணக்காரர்களால்தான் முடியும். ஆதலால் பணக்காரர்களைப் பற்றி காங்கிரசார் பேசுவது முட்டாள்தனமும் அயோக்கியத்தனமுமான காரியமாகும்.

நாம் சர்க்காருக்கு உடந்தையாய் இருக்கிறோம் என்பதை நம்மீது காங்கிரஸ்காரர்கள் மற்றொரு குறை கூறுகிறார்கள். இதுவேண்டுமென்றே கூறப்படும் குறும்பான பழியாகும்.

சர்க்காருடன் சண்டைபோடும்படியான திட்டம் காங்கிரஸ்காரர் களிடமாவது ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். காங்கிரஸ்காரர்கள் காந்திஇர்வின் ஒப்பந்தத்திலேயே சர்க்காருக்கு எவ்வித தொந்தரவும் கொடுப்பதில்லை என்றும், வட்டமேஜை மகாநாட்டுக்குப் போவதாகவும் ஒப்புக் கொண்டதோடு இப்போதும் முனிசிபாலிட்டி ஜில்லாபோர்டு ஆகியவைகளுக்குச் சென்று ராஜவிஸ்வாசப் பிரமாணமும், ராஜபக்திப் பிரமாணமும், சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்கும் பிரமாணமும் செய்த பிறகு இனி எந்த விதத்தில் இவர்களைவிட மற்றவர்கள் சர்க்காருக்கு உதவியாயிருக்கிறார்கள் என்று கேட்கின்றேன். காங்கிரஸ்காரர்கள் மந்திரி வேலை பெற்று நிர்வாகம் நடத்துவது என்றால் அது சர்க்காருக்கு உதவி அல்லவா என்று கேட்கிறேன். நாம் வேறு எந்த வழியில் உதவி செய்துவிட்டோம்?

ஆகையால் நம்மைப்பற்றி வேண்டுமென்றே காங்கிரஸ்காரர்கள் கூறும் விஷமக் கூற்றுகளுக்குச் செவிசாய்க்காது நமது இயக்க நன்மைக்கு ஆன வேலைகளைக் கவனிக்க வேண்டியது நமது கடமையாகும்.

குறிப்பு: வாடிப்பட்டியில் நடந்த மதுரை ஜில்லா ஜஸ்டிஸ் மாநாட்டில் 12.07.1936 இல் ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு சொற்பொழிவு 19.07.1936

You may also like...