திருச்சி நீதி

டாக்டர் ராஜன் திருச்சி காங்கிரஸ் காரியக்கமிட்டியில் இருந்து விலகி காங்கிரசுக்கு எதிராய் முனிசிபல் தேர்தலுக்கு நின்றவர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆக தனக்கு இஷ்டமில்லாத நிலையில் தன் மனச்சாட்சிக்கு விரோதமாய் காங்கிரசில் போலிக் கையெழுத்துப்போட்டு முனிசிபல் கவுன்சிலரானவர். இப்படிப்பட்ட இவருக்கு காங்கிரஸ் காரியக்கமிட்டியைப் பற்றி பேச என்ன நியாயம் உண்டு என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, டாக்டர் ராஜனுக்கும் தோழர் தேவருக்கும் ஏற்கனவே சொந்த மனஸ்தாபம் இருப்பதாய் சேர்மென் தோழர் பொன்னய்யா அவர்களே தனது பேச்சில் சொல்லியிருக்கிறார்.

எனவே டாக்டர் ராஜன் தேவரிடம் உள்ள தனது சொந்த விரோதத்துக்கு ஆக பழி தீர்த்துக்கொள்ள காங்கிரசுக்குள் தேர்தலின்போது கையெழுத்துப் போட்டு வந்து புகுந்ததுமல்லாமல் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள வகுப்பு மாச்சரியத்தை (அதுவும் கொஞ்ச காலமாக மறைந்து போயிருந்ததை) கிளப்பிவிட்டு கிறிஸ்தவர்களையும் கிளப்பிவிட்டு பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முனிசிபல் தேர்தலில் தேவரை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆகவே பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆகவோ ஒருவரை கெடுப்பதற்காகவோ எப்படிப்பட்ட கூடாத காரியத்தையும் செய்வார்கள் என்பதற்கு “தேசபக்தர்” என்னும் டாக்டர் ராஜன் காரியமே போதுமான அத்தாட்சியாகும்.

டாக்டர் ராஜனை விட காலம் சென்ற வ.வே.சு. அய்யர் மிகவும் தேசியவாதி என்று விளம்பரப் படுத்தப்பட்டவர். அவர் யோக்கியதை குருகுலத் தகராறின் போது டாக்டர் வரதராஜுலு நாயுடுவால் வெளியாக்கப் பட்டுவிட்டது.

டாக்டர் ராஜனின் தேசபக்த தன்மை திருச்சி தேர்தலில் வெளியாயிற்று.

இனி டாக்டர் சாஸ்திரி என்பவரின் யோக்கியதையோ “தனக்கு இல்லையானால் யாருக்கும் வேண்டாம்” என்பதை பின்பற்றிவிட்டார்.

அதாவது இரண்டு பேருக்கு ஓட்டுச் செய்வதும் காங்கிரசுக்கு விரோதமாம் (தனக்கு ஓட்டு செய்வது தான் காங்கிரசுக்கு நன்மை என்பதுதான் பார்ப்பனர் அபிப்பிராயம்) என்பதை டாக்டர் சாஸ்திரியார் காட்டிக்கொண்டார். இப்படிப்பட்ட யோக்கியர்கள் இந்தியாவின் 35 கோடி மக்களுக்கு சிறப்பாக சென்னை மாகாணத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 2லீ கோடி மக்களுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுப்பவர்களாம்.

இதைவிட ஒரு அதிசயமும் அவமானமுமான காரியம் என்னவென்றால் இவர்களை தலைவர்கள் என்றும், தியாகிகள் என்றும், தேசபக்தர்கள் என்றும், தேசியவாதிகள் என்றும் கூறி வாழவேண்டிய அவசியம் சில பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்டிருக்கிறதே அதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த லட்சணத்தில் தோழர் சீனிவாசய்யங்காரை தலைவராகக் கொண்டு வரவேண்டுமாம். இதுவும் சில தமிழ்மக்கள் தமிழ் ரத்த ஓட்டமுள்ள மக்கள் என்பவர்களுடைய தவமாய் இருக்கிறது என்றால் நமது மக்கள் சுயராஜ்யம் என்பதில் எவ்வளவு ஈனத்தனத்தைப் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி தேவை இல்லை.

ஆகவே ஒரு சிறு தேர்தலுக்கு ஆக திருச்சியில் மறுபடியும் இந்து முஸ்லீம் கலகத்தையும் இந்து கிறிஸ்தவர் என்கின்ற பிரிவையும் உண்டாக்கி வெற்றி பெற்றவர்களும் இந்த நெருக்கடியில் ஸ்ரீனிவாசய்யங்காரை கொண்டுவந்து புகுத்த பாடுபடுபவர்களும் இனி எந்தக் காரியந்தான் செய்யப் பாடுபடமாட்டார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் யோசிக்க வேண்டுமாய் விரும்புகிறோம்.

எனவே பார்ப்பன அகராதிப்படியும் காங்கிரஸ் கூலிகள் அகராதிப்படியும் காங்கிரஸ் கட்டுப்பாடு, தேசியம், தியாகம் என்பவைகளுக்கு தங்கள் சுயநலமும், பழிவாங்குதலும், வயிற்றுப்பிழைப்பு மார்க்கமும் அல்லாமல் வேறில்லை என்பதை திருச்சி நீதி நமக்கு விளக்கிவிட்டது.

குடி அரசு கட்டுரை 16.08.1936

You may also like...