சாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு பிரபலஸ்தர்கள் அறிக்கை

 

லண்டன், ஆகஸ்டு 4.

இந்திய சட்ட சபையில் கொண்டு வரப்பட்டிருக்கும் சாரதா சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து, பிரிட்டிஷ் காமண்வெல்த்து லீக் சார்பாக லார்டு லோதியன், வைகொண்டஸ் ஆஸ்டர் உள்ளிட்ட 9 பிரபலஸ்தர்கள் “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த திருத்த மசோதா மிகவும் அவசியமான தென்றும் தற்கால சாரதா சட்டத்தினால் அது விரும்பிய பலன் ஏற்படவில்லையென்றும் இந்தியச் சட்டசபை அந்த மசோதாவை கட்டாயம் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குறிப்பு :

லண்டனில் இருக்கும் பிரபலஸ்தர்கள் சாரதா சட்ட திருத்த மசோதா விஷயத்தில் மிக்க சிரத்தை காட்டுகிறார்கள். ஆனால் இந்தியாவின் ஏக பிரதிநிதி ஸ்தாபனம் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸோ, பிரஸ்தாப மசோதா விஷயமாக மௌனஞ் சாதித்தே வருகிறது. இப்பொழுது இந்திய சட்ட சபையில் ராவ் பகதூர் எம்.ஸி. ராஜாவின் ஒடுக்கப்பட்டோர் சிவில் உரிமைப் பாதுகாப்பு மசோதாவும், டாக்டர் தசமுகரின் மாதர் வார்சுரிமை மசோதாவும், பிரஸ்தாப சாரதா சட்டத் திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றும் சமூகச் சீர்திருத்த மசோதாக்கள். தென்னாட்டிலே மாதந் தவறாமல் காங்கிரஸ் மகாநாடுகளும் நாள் தவறாமல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் þ மசோதாக்களை ஆதரித்து ஒரு தீர்மானமாவது நிறைவேற்றப்படவில்லை. பத்திரிகைகளில் அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தோழர் சத்தியமூர்த்தி கூட þ மசோதாக்களை ஆதரித்து ஒரு வரி கூட பத்திரிகைகளுக்கு எழுதவில்லை. ராவ்பகதூர் எம்.சி. ராஜாவின் மசோதாவை ஆதரிக்கிறீரா அல்லது எதிர்க்கிறீரா என ஒரு ஒடுக்கப்பட்ட சகோதரர் தோழர் சத்தியமூர்த்திக்கு எழுதிய ஒரு பகிரங்கக் கடிதத்துக்கும் தோழர் சத்தியமூர்த்தி இந்நிமிஷம் வரைப் பதிலளிக்கவில்லை. இத்தியாதி காரணங்களினால் காங்கிரஸ் வைதீகர் ஸ்தாபனம் பார்ப்பனக் கோட்டை என்பது விளங்கவில்லையா?

– ஆசிரியர்

குடி அரசு பத்திராதிபர் குறிப்பு 16.08.1936

You may also like...