காங்கிரசும் முஸ்லீம்களும்

 

காங்கிரசில் சில முஸ்லீம்கள் தீவிர உணர்ச்சி காட்டுவதாக காங்கிரஸ் பத்திரிக்கைகள் என்பனவற்றில் அடிக்கடி பிரஸ்தாபப்படுத்தப்படுகிறது.

உண்மையாகவே முஸ்லீம்கள் எப்படி இப்படிப்பட்ட காங்கிரசில் இருக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. பதவி மோகம் உள்ளவர்களும் காங்கிரசை தன் சொந்த சுயநல வாழ்க்கைக்கு ஆதார ஸ்தாபனமாய் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதுபவர்களும் காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவதில் ஆச்சரியமில்லை. காங்கிரஸ் பக்தராய் நடிப்பதில் ஆட்சே பணை இல்லை.

ஆனால், தன் காலில் நிற்கக்கூடிய சுதந்திர வாதிகளும் நடுநிலை வகிப்பவர்களும் தங்களது மதத்தையும் சமூகத்தையும் முதன்மையாய்க் கருதுபவர்களும் எப்படி காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

இணையில்லாத தேசீய வீரர்கள் என்று போற்றப்பட்ட தோழர்கள் மௌலானாக்கள், மகமதலி, ஷவ்கத்தலி ஆகிய இரு பெரியார்கள் “நாங்கள் முதலில் முஸ்லீம் இரண்டாவதும் முஸ்லீம் மூன்றாவது தேசீய வாதிகள்” என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியிருக்க இன்று காங்கிரசின் முக்கிய சூழ்ச்சியானது முஸ்லீம்களின் ஆதிக்கத்தை எப்படியாவது தாழ்த்துவது என்றே குறிக்கொண்டிருக்கும்போது அதை எந்த முஸ்லீம்தான் மறக்க முடியும்.

இன்றைய அரசியல் பிரச்சினையின் உள் அந்தரங்கத்தை துருவிப் பார்த்தோமானால் இந்திய சுதந்தரத்தில் முஸ்லீம் ஆதிக்கமிருப்பதா இந்து ஆதிக்கமிருப்பதா என்பதே தலை சிறந்து விளங்குகின்றதைக் காணலாம்.

ஜனாப் ஜின்னா முதலிய முஸ்லீம் சமூகப் பிரமுகர்களும் முஸ்லீம் சமூக ஸ்தாபனமாகிய முஸ்லீம் லீக்கு பிரமுகர்களும் காங்கிரசினிடம் சம்மந்தம் வைத்துக்கொள்ள சில நிபந்தனை வைத்திருக்கிறார்கள். அந்த நிபந்தனைகளை காங்கிரசுக்காரர்கள் அலட்சியம் செய்துவிட்டார்கள். அதுமாத்திரமல்லாமல் வட்டமேஜை மகாநாட்டில் தோழர் ஜின்னா அவர்களின் நிபந்தனைகளை அலக்ஷ்யம் செய்த காந்தியார் பிரிட்டிஷாரிடம் “எங்களுக்கு முதலில் சுயராஜ்யம் கொடுங்கள். அப்புறம் முஸ்லீம்களின் நிலையை நான் பார்த்துக்கொள்ளுகிறேன்” என்று துணிவுடன் கூறினார். அதன் பிறகே காங்கிரஸ் சம்மந்தமில்லாமல் முஸ்லீம் சமூக நன்மைக்குச் சில ஏற்பாடுகள் அரசாங்கத்தினிடம் செய்து கொண்டார்கள்.

காங்கிரஸ்காரர்களின் இன்றைய முக்கிய லட்சிய மெல்லாம் அந்த ஏற்பாடுகளை குலைப்பது என்றே வெளிப்படையாய்ச் சொல்லுகிறார்கள்.

உதாரணமாக காங்கிரஸ் வகுப்புத் தீர்ப்பை ஒப்புக்கொள்ளுவ தில்லை என்று தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. எந்த வகுப்புத் தீர்ப்பை என்றால் முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பு என்பதைத்தான் என்று பிரத்தியக்ஷமாய் சொல்லி இருக்கிறது.

சட்டசபையில் தங்களுக்கு பலமில்லாததால் வகுப்புத் தீர்ப்பை உடைக்க முடியாது என்கின்ற கருத்தின்மீது அந்தப் பேச்சை தற்காலீகமாக ஒத்திவைத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு சர்க்காரை வகுப்புத் தீர்ப்பை மாற்றும்படி செய்ய நிர்பந்திப்பதற்காக முஸ்லீம்களின் சகாயத்தையே வேறு வழியாய் கோருகிறது. ஆனபோதிலும் காங்கிரஸ்காரர்களில் ஒரு பாகத்தாரே தோழர்கள் மாளவியா, ஆனே, மூஞ்சே, பாய் பரமானந்தம் போன்றவர்கள் இன்னமும் காங்கிரஸ்காரர்களாய் இருந்துகொண்டே முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பை குலைக்க வெளிப்படையாய் வேலை செய்கிறார்கள்.

அவ்வளவோடு இல்லாமல் இன்று வங்காளத்தில் முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பை ஒழிப்பதையே குறிப்பாகக் கொண்டு பெரியதொரு கிளர்ச்சி ஆரம்பித்திருக்கிறார்கள். அதை எல்லா இந்திய கிளர்ச்சி ஆக்கப் போகிறார்கள். காந்தியாரும் அதற்கு ஆசிகூறிவிட்டார். சில நாளைக்கு முன்பு கூட கல்கத்தா கார்ப்பரேஷனில் வகுப்பு உணச்சி காரணமாகவே எல்லா முஸ்லீம்களும் ராஜிநாமா செய்து வெளியேறியது யாரும் அறியாததல்ல.

இந்தப்படியாக மற்ற மாகாணங்களிலும் இந்து முஸ்லீம் வகுப்புச் சச்சரவுகள் இன்று மூண்டு எரிகின்றபோது தென் இந்திய முஸ்லீம்கள் மாத்திரம் தங்களுக்கே குழிதோண்டிக் கொள்ளும் மாதிரியில் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களோடு சேர்ந்து கொண்டு குதிப்பது என்றால் அது அறிவுடைமை யாகுமா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

16736 ந் தேதியில் கல்கத்தாவில் ஆல்பர்ட் ஹாலில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தோழர்கள் ராமானந்த சட்டர்ஜி, கோஸ்வாமி, சரத்சந்திர சட்டர்ஜி, டாக்டர் மூஞ்சே முதலியவர்கள் இருந்து, வகுப்பு தீர்ப்பு அக்கிரமம் என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் மெஜாரிட்டி சமூகமாகிய முஸ்லீம் சமூகத்துக்கு மெஜாரட்டி ஸ்தானம் கிடைக்கும்படி சட்டம் செய்தது அக்கிரமம் என்றும் பேசியிருக்கிறார்கள்.

சரத்சந்திர சட்டர்ஜீ அவர்கள் வகுப்பு தீர்ப்பில் தங்கள் இலக்கியமும் கலைகளும் கெட்டுப்போகும், அதாவது மதத்துக்கு ஆபத்து ஆதலால் அதை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

மற்றும் 14736 ல் கவி ரவீந்திரநாத் டாக்கூர் அவர்களே தலைமை வகித்து பிரமாண்டமான கூட்டம் கூட்டி அதில் அரசாங்கத்தையும் முஸ்லீம் சமூகத்தையும் மிரட்டி இருக்கிறார்கள்.

ஆனால், அதே கூட்டத்தில் வங்காளத்தில் முஸ்லீம் சமூகமே எண்ணிக்கையில் அதிகமென்பதை ஒப்புக்கொண்டு அவர்களுக்கு மெஜாரிட்டி ஸ்தானம் இருக்கும்படி வகுப்பு தீர்ப்பளித்தது மாத்திரம்தான் தப்பு என்று கருதுவதாகக் காட்டிக்கொண்டதுதான் ஆச்சரியமாகும்.

கவி ரவீந்தரர் மிரட்டுவதாவது,

“நமது சகோதர வகுப்பினருக்கு (முஸ்லீம்களுக்கு) திடீரென்று வந்துவிட்ட அதிர்ஷ்டத்தைப் பற்றி எனக்குப் பொறாமை இல்லை. ஆனால் சர்க்கார் சலுகை நின்றுவிட்ட பின்னால் என்ன விளையும் என்பதைப் பற்றித்தான் எனக்கு கவலையாக இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

அதோடு மாத்திரமல்லாமல் இந்தப் போராட்டமே அதாவது முஸ்லீம்களின் வகுப்பு உரிமைப் போராட்டமே இப்போது சுயராஜ்ய போராட்டத்தைவிட முக்கியமானது என்று பலர் பேசியிருக்கிறார்கள். பழய வங்காளப் பிரிவினைப் போராட்டமாக ஆக்க வேண்டுமென்று ஆசைப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஆகவே போராடப்போவதாகவும் உறுதிகாட்டி இருக்கிறார்கள். தேசீயப் பத்திரிகைக்காரர்களும் இதை ஆதரிக்கிறார்கள்.

இந்த சமயத்தில் ஒரு காரியத்தை யோசிக்க வேண்டுமாய் பொது ஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். அதாவது இந்த வகுப்புத் தீர்ப்புத் தத்துவத்தைப் பற்றி இப்போது காங்கிரஸ்காரர்களுக்கு கவலை இல்லை என்பதை அவர்கள் பலவகைகளில் காட்டிக்கொண்டிருந்தும் பின்னை ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்றால் இந்துக்களைவிட முஸ்லீம்களுக்கு அதிக ஸ்தானம் வழங்கப்பட்டிருப்பதைப் பற்றியே என்பது ஒவ்வொருவரும் பேசியிருக்கும் பேச்சிலிருந்தே அறிகிறோம். அதிக எண்ணிக்கை உள்ளவர்கள் அதிக ஸ்தானம் அடைய வேண்டுமென்று கேட்பது தேசீயத்துக்கு விரோதமானால் 35 கோடி இந்துக்களை 4லீ கோடி இங்கிலீஷ்காரர் ஆளுவதை எப்படி தப்பு என்று சொல்ல முடியும் என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம்.

அதிகமாய் உள்ள முஸ்லீம்களுக்கு குறைந்த ஸ்தானங்களை கொடுத்து கொஞ்சமாய் உள்ள இந்துக்களுக்கு அதிக ஸ்தானங்கள் கொடுத்தால் முஸ்லீம்களை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவது என்பதுதானே அதன் அருத்தம் என்று கூறுகிறோம்.

அவரவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்த ஸ்தானங்கள் பங்கு இல்லா விட்டால் இந்தியாவை வேறு யார் ஆண்டால்தான் என்ன என்று கேட்கின்றோம்.

வகுப்பு தீர்ப்பு இல்லாவிட்டால் என்ன கதி ஆவது என்பதை இந்துக்களில் பார்ப்பனரல்லாதாரும் முஸ்லீம்களும் வெகுகாலமாக அனுபவத்தில் பார்த்துத்தானே வந்திருக்கிறோம்.

குறைந்த சமூகமாகிய பார்ப்பனர்கள் அதாவது 100க்கு மூன்று பேர்களாக உள்ளவர்கள் 100க்கு 97க்கு மேல் உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் கைப்பற்றி இருக்காவிட்டால் மதத்திலும், சமூகத்திலும் இவ்வளவு உயர்வுகள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க முடியுமா என்பதை யோசித்தால் ஸ்தாபனங்கள் சுதந்திரத்துக்கும் உண்மையான சமத்துவ தேசீயத்துக்கும் அவசியமா இல்லையா என்பது விளங்கும்.

எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஸ்தானங்கள் வழங்கி வரப்பட்டு இருக்குமானால் இன்றைய 6 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்கள் நிலை இவ்வளவு கேடாக இருந்திருக்குமா என்பதை யோசித்துப் பார்த்தாலும் விளங்காமல் போகாது. இவ்வளவு தூரம் போவானேன். இந்த நாட்டில் இந்த 20 வருஷ காலமாக பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதாகவோ அல்லது பார்ப்பனர்கள் சொல்லுவது போல் “தேசத்துரோக”க் கட்சி என்பதாகவோ ஒரு கட்சி ஏற்படாதிருந்திருக்குமானால் இன்று தென் இந்தியாவில் முஸ்லீம்களுடைய நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை உணர்ந்தாலும் உண்மை விளங்காமல் போகாது.

ஆகவே இந்திய முஸ்லீம்கள் தாங்கள் சமூகநலத்துக்கு அனுகூலமா யிருப்பதும் தங்கள் சமூகத்தை மேல் நிலைக்கு கொண்டுவந்து அவர்களுடைய உண்மையான சக்தியையும் மேன்மையையும் காட்டக்கூடிய நிலைக்கு கொண்டு வந்ததுமான வகுப்பு உரிமையை ஒழித்து பழயபடி தாழ்த்தக்கூடிய நிலைமைக்கு கொண்டுபோகக்கூடிய போலித் தேசீயத்துக்காக விட்டுக்கொடுக்க சம்மதிக்கிறார்களா என்று கேட்கின்றோம். வகுப்புரிமை கேட்பதாலேயே ஒரு சமூகம் தேசத்துரோக சமூகமானால் அந்த தேசத் துரோகமே வகுப்புரிமையை மறுக்கும் தேசியத்தை விட மேல் என்பதுதான் நமது அபிப்பிராயமாகும். ஏனெனில் வகுப்புரிமை இல்லாதபோது இன்றைய நிலைக்குமேல் நாம் எவ்விதத்திலும் மேலான புத்தியிலோ, பதவியிலோ, சுயமரியாதை உணர்ச்சியிலோ நாம் இருந்துவிடவில்லை.

இன்று காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும் இரண்டு முஸ்லீமாவது இருந்தால்தான் முஸ்லீம் சமூகத்தை ஏமாற்ற முடியும் என்று தோழர் உபயதுல்லா முதலியவர்களையெல்லாம் கூட தேசபக்த கூட்டத்தில் விளம்பரம் செய்யக் காரணம் இந்தியாவில் ஏற்பட்ட வகுப்புணர்ச்சி அல்லவா என்று கேட்கின்றோம்.

ஆகையால் முஸ்லீம் தோழர்கள் அதுவும் ஜீவனோபாயத்துக்கும் பதவி வேட்டைக்கும் அல்லாமல் உண்மையான பொதுநல நோக்கோடு இருக்கும் முஸ்லீம் தோழர்கள் வகுப்புரிமை இயக்கத்தில் சேரவேண்டுமா வகுப்புரிமையை மறுக்கும் இயக்கத்தில் சேரவேண்டுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

குடி அரசு தலையங்கம் 26.07.1936

 

You may also like...