காங்கிரஸ் சூழ்ச்சி விளக்கம்

தோழர்களே! சமீபத்தில் வரும் அரசியல் சீர்திருத்தமானது எவ்வளவு தான் பயனற்றது என்றும் அதை உடைத்து எரியவேண்டும் என்றும் காங்கிரஸ்காரர்களாலும் மற்றும் பல தேசீயவாதிகள் என்பவர்களாலும் வாயினால் சொல்லப்பட்டாலும் காரியாம்சத்தில் எப்படியாவது சீர்திருத்தத்தின் கீழ்வரும் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று ராஜவிஸ்வாசம், ராஜபக்தி, ராஜிய சட்டத்துக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கு கட்டுப்படுதல் என்கின்ற காரியங்களுக்கு சர்க்காருக்கு சத்தியம் செய்து கொடுத்து மந்திரி பதவிகளை ஏற்று அதை அமுல் நடத்துவதென்றே சொல்லிக்கொண்டு இப்பொழுதிருந்தே எல்லா அரசியல் கட்சியாருள்ளும் போட்டிப் பிரசாரங்கள் நடந்துவருகின்றன.

இந்த லட்சணத்தில் இந்த கொள்கை உடைய காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி ராஜவிஸ்வாச கட்சியென்றும், அதை 500 கெஜ ஆழத்தில் வெட்டிப் புதைக்க வேண்டும் என்றும் சட்டசபைத் தேர்தல்களில் தங்களுக்கே ஓட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அதிதீவிரமாய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இது “அவன் கெடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு சொப்பு கள்ளு ஊத்து” என்று வெறிகாரன் சொல்லுவதுபோல் இருக்கிறது. காங்கிரஸ்காரர் என்பவர்களுக்கு இன்று மானம், வெட்கம், நாணயம், ஒழுக்கம், யோக்கியதை ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. “வெட்கம் கெட்டவன் சொந்தக்காரன்” என்பது போல எதை விற்றாவது சட்டசபைக்குப் போகவேண்டும், என்ன செய்தாவது மந்திரி ஆகவேண்டும் என்கின்ற ஒரு ஆசையே அவர்களுடைய மானம், வெட்கம், நாணயம் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு திரியும்படி செய்கிறது. சட்டசபைகள் மட்ட சபைகள் என்றும், கழுதைகளும் நாய்களும் தான் சட்டசபைக்கு போகும் என்று சொன்ன காங்கிரசுக்காரர்கள் இன்று சட்டசபைக்கு போகவேண்டும் என்று சொல்வதனால் ஒன்றா சட்ட சபை மட்டசபை அல்லாமல் இன்று உயர்ந்த யோக்கியதை உள்ள சபையாக ஆகி இருக்கவேண்டும், இல்லாவிட்டால் இவர்கள் மற்றவர்களைச் சொன்ன கழுதைகள், நாய்கள் என்கின்ற நிலையை அடைந்திருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் இவர்கள் எதற்கு ஆக சட்டசபைப் பித்துப்பிடித்து ஆடுகிறார்கள்? மந்திரி பதவிக்கு முள்ளின் மீது நின்று தவம் செய்கிறார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். அன்னியர்களை காங்கிரஸ்காரர்கள் நாய் கழுதைகள் என்று சொன்னதை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட்டு அந்தப்பதவிகளுக்கு தாங்கள் போகவேண்டும் என்று ஆசைப்படுவதின் அருத்தம் என்ன? என்று பாருங்கள்.

அந்தக்காலத்தில் இவர்கள் சட்டசபைக்கு போவதற்கு யோக்கியதை இல்லாததினால், சீ அந்தப் பழம் புளிக்கும் என்றும், அதைச் சாப்பிடுகிறவன் நாய், கழுதை என்றும் சொல்லவேண்டி வந்தது. இப்போது பாமர மக்களுக்கு தாராளமாய் ஓட்டுகள் ஏற்பட்டிருப்பதால் அவர்களின் அறியாமையை ஆதாரமாய்க்கொண்டு அவர்களை ஏமாற்றி ஸ்தானங்களைக் கைப்பற்றி விடலாம் என்கின்ற தைரியத்தில் ஆசைவெட்கமறியாது என்பதுபோல் மற்றவர்களை தாங்கள் முன் சொன்ன “கழுதை, நாய்கள்” நிலைமைக்கு தாங்களே போக தைரியம் கொண்டுவிட்டார்கள்.

இந்த லட்சணத்தில் “மந்திரி பதவிகளையும் அடைந்து ஆகவேண்டும் இல்லாவிட்டால் வங்காளக் குடாக் கடலில் விழுந்து சாகவேண்டும்” என்கின்ற சபதம் எடுத்துக்கொள்ளக்கூடிய ஆத்திரத்தை காட்டுகிறார்கள். மந்திரி பதவி எதற்காக ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். மந்திரி பதவிகளை ஏற்பதன் மூலம் மந்திரி பதவிகளை இல்லாமல் செய்துவிடுவதற்கு ஆகவாம். அதாவது மந்திரி பதவி ஏற்று சீர்திருத்தத்தை உடைத்தெரிவதாம். இதை எந்த மடையராவது நம்பமுடியுமா? “கேழ்வரகைப் பிழிந்தால் நெய் ஒழுகும்” என்றால் சொல்லுபவன் எவ்வளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் அதை நம்புகிறவன் எவ்வளவு மடையனாக இருக்க வேண்டும் என்பதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

தாசித் தொழில்களை அடியோடு ஒழிக்கவேண்டும் என்றால் ஊரில் உள்ள தாசிகளை எல்லாம் நாமே வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு விவசாரக்காரன் சொல்லுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கின்றேன். தாசிகளை ஒழிப்பவன் உள்ள தாசிகளையெல்லாம் தானே உபயோகப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு இல்லாமல் செய்துவிடுவதன் மூலம் தாசிகள் எப்படி ஒழிந்து விடமுடியும்? அவர்களுக்கு சாப்பாட்டுக்கு கொடுத்துத்தானே ஆகவேண்டும்? இதனால் தாசிகளால் ஏற்படும் கெடுதி எப்படி ஒழிக்கப்பட முடியும்? அதை அனுசரித்துத்தான் காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லால் நேரு அவர்கள் மந்திரி பதவி ஏற்று சீர்திருத்தத்தை உடைப்பது என்பது முட்டாள்தனமான காரியம் என்றும் மந்திரி பதவி ஏற்றால் சீர்திருத்தத்தையும் அரசாங்கத்தையும் நடத்திக் கொடுத்ததுபோல் ஆகும் என்றும் பந்தயம் கட்டி கூறிவருகிறார். அதற்கு சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவி ஏற்றால் அது தேசத்துரோகம் என்றும், தாங்கள் மந்திரி பதவி ஏற்றால் அது தேசாபிமானம் என்றும் உளறித் திரிகிறார்கள். இதன் கருத்து என்ன என்று யோசித்துப் பாருங்கள். பொது ஜனங்கள் முட்டாள்கள், மடையர்கள், பகுத்தறிவில்லாத களிமண் தலையர்கள் என்று கருதிக்கொண்டிருக்கிற அகம்பாவமல்லாமல் வேறு எந்த வகையில் அந்த வார்த்தைகள் யோக்கியமான வார்த்தைகளாகும் என்று நான் கேட்கின்றேன்.

காங்கிரஸ்காரர்களுக்கு இன்று அரசியல் திட்டம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். அதன் மூலம் அவர்களுக்கு அரசியல் ஞானம் இருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள். இந்தியர்களுடைய சிறப்பாக இந்துக்களுடைய மதசம்பந்தமான குருட்டு நம்பிக்கைகளையும் மூடபக்தி களையும் தங்களுக்கு ஆதரவாய்க் கொண்டு மதபோதக்காரர்களுடைய பித்தலாட்ட முறைகளைப் பின்பற்றி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

உதாரணமாக அவர்கள் தேர்தலுக்கு நின்றால் காந்தியாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதும் காந்தியாரே கைகூப்பி கும்பிட்டு ஓட்டு கேட்பது மாதிரிப் பொம்மைப் படம் போட்டு ஊர்கோலம் விடுவதுமான பித்தலாட்டமே செய்கிறார்கள். நல்ல பொறுப்புள்ள அரசாங்கம் இருந்தால் எலக்ஷன் சட்டத்தின் கீழாகவே இந்த மாதிரியான காங்கிரஸ்காரர்களை ஜெயிலுக்கு அனுப்பி இனி தேர்தலுக்கு நிற்க இவர்கள் யோக்கியதையுடை யவர்கள் அல்ல என்று உத்திரவு போடுவார்கள்.

ஏனெனில் காந்தியாருக்கும் தேர்தலுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா என்றும், காந்தியாருக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தம் இருக்கிறதா என்றும் யோசித்துப்பாருங்கள். காந்தி பெயர் சொல்லியோ காந்தியாருக்கு ஓட்டு என்று சொல்லியோ ஓட்டுப்பெற்று வெற்றியடைந்தவர்களை காந்தியார் நடத்தி அவர்களிடம் வேலை வாங்குவாரா என்று யோசித்துப்பாருங்கள்.

ஆகவே தேர்தல் காலங்களில் தேர்தல் கூட்டங்களில் காந்திக்கு ஜே என்ற கூப்பாடு போடுவதே அயோக்கியத்தனமல்லவா? இழிமக்கள் செய்கை அல்லவா என்று யோசித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட ஒழுக்கமற்ற, நாணயமற்ற கூட்டத்தை இனியும் எத்தனை நாளைக்கு பொதுமக்களை ஏமாற்றவிட்டுக்கொண்டிருப்பது என்று யோசித்துப்பாருங்கள். பொது ஜனங்கள் கவலையற்று இருப்பதாலேயே நாட்டில் அயோக்கியத்தனங்களுக்கு செல்வாக்கு ஏற்பட்டுவிடுகின்றது.

இந்த நாட்டில் காங்கிரஸ் ஆதிக்கத்துக்கு செல்வாக்கு உண்டாக பொது மக்கள் இடம் கொடுத்ததாலேயே அரசியல் வாழ்க்கை என்பது பச்சை கொள்ளைக்கூட்ட வாழ்க்கையாக ஆனதோடு மனித சமூகத்தில் நாணயக் குறைவும் மானமற்ற தன்மையும் வளர்ந்துவிட்டன. அனேக இளம் வாலிபர்கள் அயோக்கியத்தனத்தாலும் இழிதன்மையாலுமே வாழ்க்கை நடத்தும்படி ஆகிவிட்டனர்.

காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகள் என்றாலும் இந்த நிலைமைகளுக்கு அவர்கள் தான் ஜவாப்தாரிகள் என்பதிலிருந்து சிறிதுகூட தப்பித்துக்கொள்ள முடியாது. மனித சமூக வாழ்க்கை கடுகளவாவது பரிசுத்தப்பட வேண்டுமானால் அல்லது இன்றைய இழிதன்மையில் இருந்து சிறிதாவது மாற்றமடைய வேண்டுமானால் இந்த காங்கிரஸ் கிளர்ச்சி என்பதை 1000 கஜ ஆழத்தில் புதைத்து அதன் தலைவர்கள் என்பவர்களை பச்சையாக வெளிப்படுத்தி ஆகவேண்டும்.

~subhead

பண வசூல்

~shend

இவர்களால் பொதுமக்கள் பணம் கோடிக்கணக்காய் பாழாக்கப்பட்டு இருக்கிறது. நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இல்லாமல் வசூல் செய்யப்பட்டும் நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இல்லாமல் கையாடப்பட்டும் வந்திருக்கிறது. பண விஷயத்தில் உள்ள ஒழுக்கக்குறைவே காங்கிரஸ் விஷம் இவ்வளவு தூரம் மக்களுக்குள் ஒழுக்கக்குறைவு பரவ சௌகரியம் ஏற்படச் செய்துவிட்டது.

இதற்குக் காங்கிரஸ்காரர்கள் கோர்ட்டுக்கு போய் மான நஷ்ட வழக்கு தொடர்வதாகவும், காங்கிரசுக்கு பணம் கொடுக்காதவர்கள், காங்கிரசுக்காரர்கள் காங்கிரஸ் பணத்தைக் கையாடியதைப்பற்றியே பேசக்கூடாது என்றும் சமாதானம் சொல்லுகிறார்கள்.

ஆகவே இன்றையத்தினம் காங்கிரஸ்காரர்களின் நிலைமை பிரிட்டிஷ் சட்டக் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் யோக்கியர்களாகப் பார்ப்பதும் தங்களுக்கு கட்டுப்பட்ட தங்கள் அயோக்கியத்தனத்தால் ஏமாற்றப்பட்ட மூடர்கள் தவிர மற்றவர்கள் தங்கள் நாணயங்களைப் பற்றி பேசக்கூடாது என்கின்ற பேடித்தனமான வாதத்தினாலே தப்பித்துக்கொள்ள பார்ப்பது மல்லாமல் நாணயத்தாலோ நேர்மையாலோ ஒழுக்கத்தாலோ தப்பித்துக் கொள்ள முடியாத நிலைமையை அடைந்துவிட்டார்கள். காங்கிரஸ் பணத்தை அனுபவித்த அனுபவிக்கிற ஒருவரே “காங்கிரசுக்கு ஒரு காசு கூட கொடுக்காத போக்கிரிகளுக்கு காங்கிரஸ் பண நிர்வாகத்தைப்பற்றி கேட்க என்ன யோக்கியதை” என்று கேட்பதோடு அப்படி கேட்பவர்கள் போக்கிரி என்றும் அயோக்கியர் என்றும் அவர்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்றும் பத்திரிகையில் வைது எழுதுகிறார்.

அப்படியானால் இவர்களை நாம் ஒன்று கேட்கலாமா? அதாவது ஜஸ்டிஸ் கட்சியில் மெம்பராக ஒரு கையெழுத்தாவது போடாத ஒரு அயோக்கியன் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பேச என்ன யோக்கியதை உண்டு? இவனை செய்யக்கூடாத சிக்ஷை செய்து இவன் போன்ற இழி பிறப்பு மக்களுக்கு தக்க புத்தி கற்பிக்க வேண்டும் என்று சொல்வது நியாயமாகாதா? என்று ஏன் கேட்கக்கூடாது? சர்க்காருக்கு ஒரு காசு கூட கந்தாயம் கொடுக்காத ஒருவன் சர்க்கார் வரிப்பணத்தைப் பற்றி கேட்பது யோக்கியமா என்று ஏன் கேட்கக்கூடாது? அது மாத்திரமல்லாமல் புதிய சீர்திருத்தம் வருவதற்கு ஒரு சிறிதுகூட அனுகூலஸ்தனாய் இல்லாத ஒருவன் புதிய சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை போட்ட ஒருவன் புதிய சீர்திருத்தத்தின் கீழ் சட்டசபை மெம்பராகவும், மந்திரியாகவும் வருவதற்கு ஆசைப்பட வெட்கமில்லையா, மானமில்லையா, உடம்பில் சுத்தமான ரத்த ஓட்டமில்லையா என்று கேட்பது நியாயமாகாதா? என்று கேட்கின்றேன். காங்கிரசில் நான் காரியதரிசியாய் இருக்கும்போது தோழர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராய் இருந்தபோது எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் அதை இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வந்த அளவுக்கு நான் வெளியிடுகிறேன். அதாவது,

“அன்புள்ள நாயுடுகாரு அவர்களுக்கு வரதராஜுலு நமஸ்காரம். இவ்விடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் இருக்கிற சிப்பந்திகள் பணம் கையாடிய விஷயத்தில் கைப்பிடியாய் சிக்கிக் கொண்டார்கள். காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். அவர்கள் மேலால் வால் காட்டாமல் இருக்கட்டும் என்பதற்கு ஆக இப்பொழுது ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்திருக்கிறேன். இதை தாங்கள் அங்கீகரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

அதுமாத்திரமல்ல, என்னைப் பொறுத்தவரை என் வீட்டார்கள் காங்கிரசுக்கு ஒன்றும் கொடுக்காதவன் என்று சொல்லிவிடமுடியாது. எங்கள் சக்தி அனுசாரம் பணம் கொடுத்தவர்களேயாகும். அதுவும் 100, 100 ரூபாய் நோட்டுகளாகத் வெள்ளித் தட்டில் வைத்து வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் வைத்து தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், தேவதாஸ் காந்தி ஆகியவர்கள் எங்களது வீட்டுக்கு வந்து பணம் கேட்டபோது அவர் காலடியில் தட்டத்தை வைத்து கும்பிட்டு கொடுத்தவர்களாவோம். மற்றும் காங்கிரசுக்கு பணம் பெரும் தொகையாய் வசூலித்துக் கொடுத்தவனுமாவேன். மற்றும் காங்கிரஸ் பத்திரிகைக்கு ஆக என்று ஆயிரக்கணக்கான ரூபாயில் பங்கு எடுத்துக்கொண்டவனுமாவேன். இவைகளுக்கு இன்னமும் ஆதாரங்கள் என்னிடமிருக்கின்றன.

ஆகவே என் போன்றவர்கள் காங்கிரஸ்காரர்கள் காங்கிரஸ் பணத்தைக் கையாடியதைப் பற்றி கேட்பது போக்கிரித்தனமும், அயோக்கியத்தனமும் ஆனால் அதைக் கையாடியவர்களின் நடத்தை அதை நியாயத் தவறுதலாய் பயன்படுத்தியவர்கள் நடத்தை என்ன ஆகும் என்று கேட்கின்றேன்.

எதற்கு ஆக காங்கிரஸ் பணத்தை ஆயிரம் பத்தாயிரமாய் பத்திரிக்கை காரர்களுக்கு அள்ளிக்கொடுப்பது என்று இப்போதும் கேட்கின்றேன்.

செலவுக்கு கணக்கு இருப்பதாலாயே விஷயம் முடிந்து விடுமா? அந்த செலவு சரியா தப்பா என்று யாரும் கேட்கக்கூடாதா? என்று கேட்கின்றேன்.

காணாமல் போனது 10 ஆயிரம், ஆபீசில் திருடிக்கொண்டது 10 ஆயிரம், அதை மறைக்க பத்திரிக்கைகாரருக்கு லஞ்சம் 15000 என்று கணக்கு இருந்தால் கூட அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானா என்று கேட்கிறேன்.

இவைகள் எல்லாம் குட்டிகள் குலைப்பதாலேயே தாய்கள் தலையில் விழும்படி வெளியாக்க வேண்டி இருக்கிறது.

பொது ஜனங்கள் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ள ஏமாந்தவர் களுக்கும் முட்டாள்களுக்கும் மாத்திரம் தானா உரிமை உண்டு என்று கேட்கின்றேன்.

~subhead

எது வகுப்புக் கட்சி

~shend

நிற்க, பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புக் கட்சி என்று பேசுகிறார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் தோழர் சத்தியமூர்த்தியாரும் 11ந் தேதி பேசிய காங்கிரஸ் மண்டபப் பேச்சில் ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு உணர்ச்சிக்கட்சியென்று பேசி இருக்கிறார்கள். இது வேதாளம் மறுபடியும் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது என்கின்ற கதையாகத்தான் இருக்கிறது.

தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தஞ்சையில் பேசியபோது வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை கேட்கும் ராமசாமியை நான் வரவேற் கிறேன் என்றும், வகுப்பு வாத விஷயமாய் சீக்கிரத்தில் காங்கிரசிலிருந்து ஒரு அறிக்கை விடுவதன் மூலமாக அதை சரிப்படுத்துகிறேன் என்றும் சொல்லி விட்டு மறுபடியும் நாலு நாளையில் வகுப்புவாதம் பேசுவது விஷம் என்று சொன்னால் அது எப்படி யோக்கியமான பேச்சாகும்.

வகுப்புவாதம் யார் ஆரம்பித்தது? வகுப்புரிமை அளவுக்கும் தகுதிக்கும் மேல் யார் அனுபவிப்பது? வகுப்பு வாதம் பேச வேண்டிய அவசியம் யாரால் ஏற்பட்டது?

இந்தியாவில் வகுப்பு வாதம் பேசாத வகுப்பார் யார்? ஜாதியார் யார்? என்று சுட்டிக்காட்ட முடியுமா? சீக்கியர் பேசுகிறார்கள், பார்சிகள் பேசுகிறார்கள், நாட்டுக் கோட்டையார் பேசுகிறார்கள், பார்ப்பனர்கள் பேசுகிறார்கள், முஸ்லீம்கள் பேசுகிறார்கள், கிறிஸ்தவர்கள் பேசுகிறார்கள், மற்ற இந்தியர்களும் பேசுகிறார்கள். இன்னும் பேசப்போனால் காங்கிரசுக்காரர்களும் பேசுகிறார்கள் என்று கூட சொல்லுவேன். ராணுவம் இந்திய மயமாக வேண்டு மென்றால் அது வகுப்பு வாதமல்லவா? உத்தியோகங்கள் இந்திய மயமாக வேண்டு மென்றால் அது வகுப்பு வாதமல்லவா என்று கேட்கின்றேன்.

அவை இந்திய மயமாகும் போது எல்லாம் பார்ப்பன மயமாவதை பார்ப்பனரல்லாதார்கள் சம்மதிப்பார்களா?

இந்திய மயமாகும் போதும் எல்லாம் இந்துக்கள் மயமாவதை முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா?

எல்லாம் இந்திய மயமாகும் போது எல்லாம் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் மயமே ஆவதை கீழ் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் சம்மதிப்பார்களா?

அப்படி ஒன்றும் ஆகாமல் இருப்பதற்கு காங்கிரஸ் ஒரு மார்க்கம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டால் அது தேசத் துரோகமாகிவிடுமா?

~subhead

வங்காள வகுப்புவாதம்

~shend

காங்கிரசில் வகுப்பு வாதம் இல்லை என்பது உண்மையானால் மற்றெல்லா மாகாணத்திலும் வகுப்புத் தீர்ப்பை விட்டுவிட்டு ஆதிதிராவிடர்கள் வகுப்புத் தீர்ப்பை ஒரு ராஜியின் மீது ஒப்புக்கொண்டு வங்காள இந்து முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பு விஷயத்தில் மாத்திரம் தோழர்கள் ஜவார்லால், ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்கள் எல்லாம் இப்போது இவ்வளவு ஆத்திரம் காட்டுவது எதற்கு ஆக?

முஸ்லீம்கள் கை வலுத்துவிடுமே என்கின்ற பொறாமைதானே ஒழிய வேறு காரணம் என்ன?

வங்காள காங்கிரசுக்காரருக்கு சுயராஜ்யத்தை விட இந்து முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பை ஒழிப்பதுதான் முக்கியம் என்று இப்போது ஏன் அவர்கள் சொல்ல வேண்டும்? தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் உள்பட ஆதிதிராவிடர்கள் சம்மந்தமான வகுப்புத் தீர்ப்புக்கு கையொப்பமிட்டுவிட்டு பார்ப்பனரல்லாதார் வகுப்பு உரிமையைக் கேட்பதைப் பொறுத்து மாத்திரம் “வகுப்பு உணர்ச்சி விஷம்” என்று சொல்லுவானேன்?

பார்ப்பன வகுப்பு ஆதிக்கம் குறைந்துவிடுமே என்கின்ற ஆத்திரம்தானே அல்லாமல் அதில் தேசியம் என்ன இருக்கிறது என்று கேட்கின்றேன். “ஜாதிமத வகுப்புகளை ஒழித்து இந்தியர் எல்லோரையும் ஒரே சமூகமாக்குவது” என்கின்ற கொள்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறதா என்று கேட்கிறேன். அப்படியானால் மாத்திரம் காங்கிரஸ் வகுப்புத் தீர்ப்பை தனது கொள்கைக்கு முட்டுக்கட்டையானது என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் ஜாதிமத வகுப்பு விஷயத்தில் நடுநிலைமை வகித்து அவனவன் வகுப்பு, மதம், கொள்கையை பின்பற்றி நடக்க சுதந்திரம் கொடுப்பதாக உத்திரவாதமளித்திருக்கிறபோது அவனவன் வகுப்புக்கு உள்ள அரசியல் உரிமை அளிப்பதில் ஏன் சூழ்ச்சி செய்ய வேண்டும்?

ஆதலால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வகுப்பு உணர்ச்சி இயக்க மென்றும் தேசியத்துக்கு விரோதமான இயக்கம் என்றும் சொல்லுவது யோக்கியப் பொறுப்பற்ற காரியம் என்றே சொல்லுவேன்.

~subhead

சம்பளப் பொறாமை

~shend

தனிப்பட்டவர்களின் சம்பளங்களைப் பற்றி பொறாமைப்படுவதில் பயன் இல்லை. சம்பள விஷயம் அடியோடு மாற்றப்படவேண்டும். அது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு உரிமையில்லாத மாதிரியில் அரசியல் தத்துவம் இருக்கிறது. அது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பலவற்றிற்கு காங்கிரசே காரணமாய் இருந்திருக்கிறது. அதை மாற்ற வேண்டுமானால் நமக்குள் ஒற்றுமை வேண்டும்.

நமது நாட்டில் உள்ள அரசியல் உத்தியோக சம்பளத்தில் பெரும்பாகம் கொள்ளை கொள்வது பார்ப்பனர்களேயாகும். உத்தியோகத்தில் உள்ள பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களே யானால் மற்றவர்கள் விஷயம் மிக அற்பமானதென்றும் சுலபத்தில் குறைத்துக்கொள்ளக்கூடியது என்றும் சொல்லுவேன்.

~subhead

ஜஸ்டிஸ் நிர்வாகம்

~shend

மற்றபடி ஜஸ்டிஸ் நிர்வாகத்தைக் குறைகூறுவதிலும் நாணயம் இல்லை என்றே சொல்லுவேன். சீர்திருத்தங்களின் கீழ் மற்ற மாகாணங்களில் இரட்டையாட்சியில் மந்திரிகள் செய்த வேலைகளுக்கு மேலாகவே ஜஸ்டிஸ் மந்திரிகள் செய்திருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரம் இருக்கின்றன.

ஆகையால் கை பலம், வாய் பலம், பிரசார பலம் ஆகியவைகளாலேயே ஒரு பெரிய சமூக இயக்கத்தை ஒழிக்கப் பார்ப்பது மற்றவனைக் கொல்வதற்கு ஆக வைத்திருக்கும் விஷத்தை தானே சாப்பிட்டுவிட்டது போல்தான் முடியப் போகிறது.

ஆதலால் பொறுப்புள்ள காங்கிரஸ்காரர்களோ பொதுநல சேவைக்காரர்களோ இம்மாதிரி கோணல் வழியில் வெற்றிபெறலாம் என்கின்ற குறுகிய புத்தியை விட்டுவிட்டு யோக்கியமான முறையில் ஒற்றுமைப்பட்டு விடுதலையும் சுதந்தரமும் அடைய பாடுபடவேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். வெற்றி தோல்வியின் மூலம் வகுப்புணர்ச்சியை அடக்கி விடலாம் என்று நினைப்பது ஆகாயக் கோட்டையாகவே முடியும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

குறிப்பு: மதுரை ஜில்லாவில் 17.07.1936 உத்தமபாளையம் பொதுக் கூட்டத்திலும் 18.07.1936 பழனி தேவஸ்தானத்தின் முன்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய சொற்பொழிவு .

குடி அரசு சொற்பொழிவு 26.07.1936

You may also like...