ராஜிநாமா நாடகம்

வேறு என்ன செய்தால் வண்டவாளம் மறையும்?

தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரவர்கள் காங்கிரஸ் கமிட்டிகளிலிருந்து ராஜிநாமா கொடுத்துவிட்டதாக 11836ˆ ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அவ்வறிக்கையில்

“இன்றிலிருந்து சென்னையிலோ அல்லது வெளியிடங்களிலோ உள்ள எந்தக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என என் நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதிலிருந்து ஆச்சாரியார் அவர்கள் காங்கிரஸ் சம்மந்தத்திலிருந்தே விலகிக் கொண்டதாக அர்த்தமாவதில்லை. நிர்வாக பதவிகளிலிருந்து மாத்திரம் விலகிக் கொண்டதாக அர்த்தமாகிறது.

ஆனால் தோழர் காந்தியாரோ இரண்டு வருஷத்துக்கு முன்னதாகவே காங்கிரஸ் நிர்வாக சம்மந்தத்திலிருந்து விலகிக் கொண்டது மாத்திரமல்லாமல் காங்கிரசில் ஒரு நாலணா மெம்பராகக்கூட இருக்க இஷ்டமில்லை என்று விலகிக்கொண்டதாக விளம்பரப்படுத்தினார். அது சமயமும் அவரால் ராஜிநாமாவுக்கு காரணங்கள் காட்டப்பட்டதில் “காங்கிரசிலுள்ள சிலர் நடந்து கொள்ளும் காரியம் தனக்குப் பிடிக்கவில்லை” என்பதையும் ஒரு காரணமாய் காட்டினார் என்றாலும் காங்கிரஸ் பக்தர்கள் என்பவர்களுக்கும் காந்தியாருக்கும் நடந்த “பிரிவு” கட்டமானது நாடகங்களில் காட்டப்படும் பிரிவுக் காட்சிகள் போலவே நடந்ததுடன் அவற்றிற்கு ஏற்பட்ட விளம்பரங்கள் ராஜிநாமா விளம்பரத்தை விட அதிகமாகவே இருந்தது

என்றாலும் அதன் முடிவும் நாடகத்தில் பிரிவினையைக் காட்டும் போது ஒருவருக்கொருவர் சோகரசம் காட்டுவதில் போட்டிபோட்டு விட்டு நாடகம் கலைந்து வெளியில் வந்த பிறகு நாடக பாத்திரங்கள் ஒரே வீட்டில் கூட்டுத் தோழர்கள் போலவும் ஆண் பெண்ணாயிருந்தால் காதலி காதலன் போலவும், எப்படி வாழ்கிறார்களோ அப்படியே காந்தியாரை காங்கிரசில் சம்மந்தப்படுத்துவதும் காந்தியார் காங்கிரசில் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதுமாயிருப்பதோடு அவற்றுள் நன்மை ஏற்பட்டால் காந்தியார் முக்கிய பங்கெடுத்துக் கொள்ளுவதும் தீமை ஏற்பட்டால் பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளுவதும் ஆகிய தந்திரங்களுக்கே அந்த காந்தியார் பிரிவு நாடகத்தின் பலன் பயன்பட்டு வருகிறது.

ஆனால் தோழர் காந்தியார் தனது பிரிவுக்கும் ராஜிநாமாவுக்கும் என்னதான் காரணம் சொல்லியிருந்தாலும் அவருக்கும் காங்கிரசுக்கும் இருந்து வந்த கொள்கையானது காந்தியார் விலகிக்கொண்டதாய்க் காட்டிக் கொள்வதன் மூலம் கொஞ்சமாவது காந்தியாரின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடியதாய் இருந்தது. ஏனெனில் அவர் மதக் கொள்கைபோல் மதித்திருப்பதாகக் கூறிவந்த ஒத்துழையாமை, சட்டமறுப்பு, சத்தியாக்கிரகம் ஆகியவை அரசியலில் தோல்வி அடைந்த பிறகும் அக்கொள்கைகளை காங்கிரஸ் கொள்கையில் இருந்து எடுத்துவிட்ட பிறகும் தோழர் காந்தியார் எந்த முகத்தைக் கொண்டு காங்கிரசிலிருப்பார்? அல்லது தன்னை ஒரு காங்கிரஸ்காரன் என்று எப்படிச் சொல்லிக் கொள்வார்? என்பதை சுயமரியாதை உணர்ச்சியுடன் யோசித்துப் பார்த்தால் எப்படிப் பட்டவர்களுக்கும் அவர் ராஜிநாமா கொடுத்துவிட்டு விலகிக் கொண்டதாய் விளம்பரம் செய்ததும் அதற்கு ஆக காங்கிரஸ் பக்தர்கள் பிரிவு சோகம் காட்டி நடித்ததும் மிகமிக சரியான காரியம் என்றும் மிகவும் சாமர்த்தியமான காரியம் என்றும் தோன்றும்.

அதே நிலைதான் இன்று தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கும் நேர்ந்து விட்டது. ஆச்சாரியார் அடியோடு காங்கிரஸ் சம்மந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதாய்க் குறிப்பிடவில்லை என்றாலும் அசம்பிளி தேர்தலில் வெற்றிபெற்ற தோழர் சாமி வெங்கிடாசல செட்டியாரின் கார்ப்பரேஷன் கண்டிராக்ட் சம்மந்தமும் அவர் அசம்பளியில் மோடி திருத்தத்துக்கு ஓட்டு செய்ததன் மூலம் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்த தன்மையும் மற்ற மெம்பர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாத் தன்மையும் ஆகியவைகள் சேர்ந்து ஆச்சாரியாரை அப்போதே தலைகுனியும்படி செய்துவிட்டன.

ஏனென்றால் ஆச்சாரியாருக்கு அதுசமயம் ஏற்பட்ட கிப்பாத்தெல்லாம் சர்.ஷண்முகத்தைத் தோற்கடித்து சாமி வெங்கிடாசலத்துக்கு வெற்றி உண்டாக்கிய தந்திரத்தாலேயாகும்.

அதன் பிறகும் ஜில்லா போர்டு தேர்தல்களிலும், முனிசிபாலிட்டி தேர்தல்களிலும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து அலட்சியம் செய்யப்பட்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களுமாகப் பார்த்தே காங்கிரசில் சேர்த்து ஜஸ்டிஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு அவர்களை ஒரு ஆயுதமாகக் கொண்டு தேர்தல் போர் நடத்தி போலி வெற்றிக் கட்டிடம் கட்டிக்கொண்டே இருந்ததால் அப்போலிக் கட்டிடம் மணல் வீடு சரிவதுபோல் சரிய வேண்டிய தாய்விட்டது.

இவை மாத்திரமல்லாமல் அப்படிப்பட்ட தகுதியும் நாணயமும் அற்ற ஆட்களை காங்கிரசில் சேர்த்தபோது நம் போன்றவர்கள் அவர்களின் யோக்கியதையை எடுத்துக் காட்டியதற்கு சமாதானமாக “எப்படிபட்ட அயோக்கியனும் காங்கிரசுக்கு நாலணா கொடுத்தால் யோக்கியனாய் விடுவான்” என்றும், காங்கிரசிலும் வகுப்புவாதமில்லையா என்று கேட்டதற்கு “இருந்தாலும் காங்கிரசுக்குள் ஒருவன் வந்து விட்டால் அவனது வகுப்பு வாதம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அதற்கு பலமிருக்கா” தென்றும் ஒரு புதிய தீர்க்கதரிசனம் வெளியிட்டு எல்லோருடைய வாயையும் அடக்கினார்.

ஆகவே அசம்பளி தேர்தல் “வெற்றி”யும் ஜில்லா போர்டு முனிசிபாலிட்டி “வெற்றி”யும் அதன் எதிரொலியைக் காட்ட வேண்டியதாயிற்று.

அது மாத்திரமல்லாமல் அர்ச்சகர், புரோகிதர் ஆகியவர்கள் ஸ்தல புராணம் சொல்லுவது போல் ஆச்சாரியர் காங்கிரசைப் பற்றிக் கூறி வந்த காங்கிரஸ் பெருமைப் புராணம் அவ்வளவும் பொய்த்துப் போகும்படியாகத் தோழர்கள் டாக்டர் ராஜன், டாக்டர் சாஸ்திரியார் போன்ற பல “அருமைத் தேச பக்தர்கள்”, “மகா தியாகிகள்” என்று விளம்பரப்படுத்தப்பட்ட பார்ப்பனர்கள் அனேகர் ஆரம்ப முதல் ஒவ்வொரு தேர்தல்களிலும் நடந்து கொண்ட நடவடிக்கைகளின் பயனாய் ஆச்சாரியார் மேலும் மேலும் தலையைக் கவிழ்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதோடு நாளைக்கு பொது மக்களுக்கும் வெளி மாகாணங்களில் உள்ள தோழர்களுக்கும் என்ன பதில் சொல்லுவது? எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது? என்கின்ற கஷ்டமான நிலைமை ஏற்பட்டு விட்டது.

ஆகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் இப்போது ராஜிநாமா கொடுத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் அவர் இத்தனை நாளாக ராஜிநாமா கொடுக்காமல் காலம் தாட்டி சகித்துக் கொண்டு வந்தது தான் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதாகும் என்பதோடு உண்மையில் ஆச்சாரியாரோ காந்தியாரோ காங்கிரசை விட்டு விலகி விடவும் இல்லை; இவர்கள் விலகினார்கள் என்பதற்கு ஆக காங்கிரசின் எந்தச் சூழ்ச்சியும் தடைப் பட்டுவிடப் போவதுமில்லை. ஆனால் இவர்கள் காங்கிரசில் இருந்தால் பொது மக்கள் இவர்களை சுயமரியாதை அற்றவர்கள் என்று கூறி பரிகாசம் செய்வார்கள். அப்போது இப்படிப்பட்ட சுயமரியாதை அற்றவர்களால் நடத்தப்படும் காங்கிரசுக்கு ஒரு சொண்டு ஏற்படும்.

அன்றியும் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் இதுவரை காங்கிரஸ் கூட்டத்தில் நடந்து வந்த ஊழல்களோடு திருச்சி முனிசிபல் தலைவர் தேர்தல் ஊழல் மிகவும் நாறிப்போய் சகிக்க முடியாத நாற்றமெடுத்து விட்டதால் அதை மறைக்கவும் மக்கள் கவனத்தை அதிலிருந்து வேறு பக்கம் திருப்பவும் ஏதாவது தந்திரம் செய்ய வேண்டியதும் ஆச்சாரியாருக்கு மிகவும் அவசியமாகிவிட்டதானது ராஜிநாமாவுக்கு மற்றொரு காரணமாகும்.

ஆகவே தோழர் ஆச்சாரியார் தனது தந்திரங்களில் தோற்றுப்போனதை மறைக்கவும் திருச்சி தேர்தல் நாற்றத்தை மாற்றவும் ஏதாவது ஒரு காரியம் செய்யவேண்டிய அவசியத்துக்காக இந்த ராஜிநாமா நாடகம் அவசியம் நடித்துக் காட்ட வேண்டியதாகவே ஏற்பட்டுவிட்டது. எனவே ஆச்சாரியார் இதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். அதற்கு ஆக நாம் அவரைப் பாராட்ட வேண்டியதே.

எப்படியெனில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் காங்கிரஸ்காரர்களின் புரட்டுகளையும், அயோக்கியத்தனங்களையும்விட, ஐயோ ராஜாஜி ராஜிநாமா செய்துவிட்டாரே என்கின்ற ராஜிநாமா நாடகப் பேச்சு வலுத்து பித்தலாட்ட நாற்றத்தை அடக்கிவிட்டது. அதோடு பத்திரிகைக்காரர்களுக்கும் ஊழல்களுக்கும் அயோக்கியத்தனத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல் “ஆச்சாரியார் ராஜிநாமாச் செய்துவிட்டாரே அவர் ராஜிநாமாச் செய்யவேண்டியதில்லையே தயவு செய்து புனராலோசனை செய்யும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்” என்று எழுதிவருவதின் மூலம் பாமர மக்கள் கண்களில் மண்ணைப் போடவும் சௌகரியமாகி விட்டது.

ஆதலால் காங்கிரசுக்கு குறைவு ஏற்படாமல் இருப்பதற்கு ஆக காங்கிரஸ் நன்மையைக் கோரி இவர்கள் ராஜிநாமா செய்யவேண்டியது அவசியமும் கிரமமுமாய் விட்டது என்று சொல்லுவதில் அருத்தமில்லாமல் இல்லை.

தோழர் காந்தியார் விஷயத்தில் அவருடைய உண்மை என்பவை களிலும் பொறுப்பிலும் நமக்கு சந்தேகம் உண்டு. ஆனால் தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் உண்மையிலும் அவருடைய பொறுப்பிலும் கவலை கொண்ட ஊக்கத்திலும் நமக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அவை நமக்கு அனுகூலமானதா பிரதிகூலமானதா என்பது வேறு விஷயம். அது ஒரு கூட்டத்தாருக்கு அனுகூலமாகவும் மற்றொரு கூட்டத்தாருக்கு பிரதி கூலமாகவும் இருக்கலாம். அதாவது அவரது பொறுப்பு, உண்மை, கவலை கொண்ட ஊக்கம் ஆகியவை நமக்கு அனுகூலமாகக் காட்டி இருந்தால் நாம் அவரை எவ்வளவு தூரம் மெச்சி இருப்போமோ அவ்வளவு தூரம் மெச்சியே நம் எதிரிகளுக்கு காட்டப்பட்டதையும் கருதி நாம் அவரை நிர்ணயிக்க வேண்டும். மக்களை நிர்ணயிப்பவர்களுக்கு ஒரு குணம் வேண்டும். அதாவது தாங்கள் யாரை நிர்ணயிக்கிறார்களோ அவர்களது எண்ணம் நடவடிக்கை ஆகியவைகள் சுயநலத்துக்கு பயன்படத்தக்கதா அல்லது பிற நலத்துக்கு பயன்படத்தக்கதாயிருக்கிறா என்பதை நடுநிலைமையில் இருந்து பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்போமானால் நமது ஆச்சாரியார் பொதுநலத்துக்கு ஆகவே தனது வாழ்வை ஒப்படைத்தவர். உண்மையான தியாகம் செய்து உண்மையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர். தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் அல்லது காங்கிரஸ் ஊழியர்கள் என்று சொல்லப்படுபவர்களில் தோழர் ஆச்சாரியாரே தனது மேன்மையையும் பணம் வரும்படியையும் விட்டுக் கொடுத்து நஷ்டமும் கஷ்டமும் அனுபவித்தவர்களில் முதன்மையானவராவார். மற்றும் பெரும்பாலான விஷயங்களில் ஒரு கூட்டத்தாருடைய நன்மைக்கு என்று தனது மனச்சாட்சியையும் நேர்மையையும் சிறிதும் லட்சியம் இல்லாமல் தியாகம் செய்தவர். எல்லா தியாகத்தை விட இது மிகவும் பெரிய தியாகமாகும் என்பது நமது அபிப்பிராயம். இது இருக்க

மற்றபடி நமதுநாட்டில் காங்கிரசிலுள்ளவர்கள் என்பவர்களில் 100க்கு 99 பேர்கள் காங்கிரசின் பேரால் யோக்கியதையும் பெருமையும் வாழ்க்கையில் நலன் பெற்றவர்களும் அனுபவித்தவர்களுமேயாவார்கள். இன்று காங்கிரசிலுள்ள தோழர்கள் சத்தியமூர்த்தியார் முதல் உபயதுல்லா குப்புசாமி கம்பெனியுள்பட மத்தியில் உள்ள எந்த மனிதரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் வாழ்க்கை காங்கிரசில் சேர்வதற்கு முன் எப்படி யிருந்தது? இப்போது எப்படியிருக்கிறது? என்பதை சிறிது யோசித்தாலும் விளங்காமல் போகாது.

டாக்டர் ராஜன் அவர்கள் வாழ்க்கையும் காங்கிரசின் சம்மந்தத்தின் பயனாகவே ஒன்றுக்கு மூன்று நான்காய் பெருகி இருக்கிறது என்று புள்ளி விவரங்களோடு காட்டுவோம் என்றால் மற்றவர்களைப் பற்றி யோசிப்பானேன்?

அதுபோல் தோழர் ஆச்சாரியார் நிலையை யோசித்தால் அவரது தியாகம் சுலபத்தில் விளங்கிவிடும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பெரிய நற்பயனை விளைவிக்க பயன்படுத்தவேண்டிய தியாகத்தை மிகக் குறுகின காரியத்துக்கு அதாவது ஒருசோம்பேறி வாழ்க்கைக் கூட்டத்தாருக்கு (பார்ப்பனர்களுக்கு) அனுகூலமாகப் பயன்படுத்தியதை புத்திசாலித்தனம் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

அது மாத்திரமல்லாமல் அவ்வளவு பெரிய தியாகத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் முற்போக்குக்குப் பயன்படுத்தி இருந்தால் ஆச்சாரியார் புத்தரின் ஸ்தானத்தை அடைந்திருக்கக் கூடும். அப்படிக்கில்லாமல் ஏற்கனவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முற்போக்குக்கு தடை ஏற்படும்படியாக உபயோகப்படுத்தப் பட்டதானது புத்திசாலித்தனம் என்று யாரும் கூறிவிடமாட்டார்கள்.

ஆகவே ஆச்சாரியாரின் உண்மை உழைப்பையும் தியாகத்தையும் பிரயோகம் செய்த முறை தவறிவிட்டதே ஒழிய அவைகளின் உண்மையில் யாதொரும் குறையும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம்.

வகுப்புவாதம் பிடிக்கவில்லை என்று ஆச்சாரியார் அடிக்கடி கூறிவருவார். அது பார்ப்பனர்கள் மீதுள்ள அன்பினாலேயே ஒழிய உண்மையில் அல்ல என்பது நமது அபிப்பிராயம். அன்றியும் இந்த நாட்டில் மாத்திரம் அல்ல இந்தியாவிலேயே இயற்கையின் வளர்ச்சியால் ஏற்பட்ட வகுப்புவாதமானது தோழர் ஆச்சாரியார் போன்றவர்களின் அறிவும் ஆற்றலும் காந்தியார் போன்றவர்களின் சூழ்ச்சித் திறனும் தப்பான வழியில் செலுத்தப்பட்டதாலேயே அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே தவிர உண்மையில் வகுப்புவாதத்துக்கு இவ்வளவு பிரக்யாதியும் முக்கியஸ்தமும் ஏற்பட்டு இருக்க நியாயம் இல்லை. மேலும் வகுப்பு வாதத்தை ஒழிப்பதற்கு என்று இவர்களால் கையாளப்பட்ட எல்லா மார்க்கங்களும் கோணல் வழியாகவே இருந்ததினாலும், நாணயத்தை முக்கியமாய் கருதாத முறையிலும் பொது ஜனங்களை முட்டாள்கள் என்று கருதிய முறையிலும் முயற்சிகள் செய்ததாலும் வகுப்புவாதம் மேலும் மேலும் தாண்டவமாட இடமேற்பட்டு வரவேண்டியதாயிற்று, சரியாகவோ தப்பாகவோ அரசியல் பெருக்கத்திற்கு தக்கபடி வகுப்புவாதம் பெருகி வருகிறது. எப்படியோ அது (வகுப்புவாதம்) காங்கிரசிலேயே இன்று தாண்டவமாடுகின்றது. இனி அரசியலில் இடம் பெறாமல் இருக்கப்போவதில்லை. அது மாத்திரமில்லாமல் அது தடுக்கப்படுவதால் பொது வாழ்வில் நன்மையை விட தீமையே அதிகம் ஏற்படவும் போகிறது என்பது நமது உறுதி.

ஆகையால் தோழர் ஆச்சாரியார் வகுப்புவாதத்தை தடுக்காமல் அது மறைவதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் கண்டுபிடித்தாரானால் இம்மாதிரி ராஜிநாமா கொடுப்பதும் ஓய்வும் எடுக்க வேண்டியதுமான நாடக வாழ்க்கையின் அவசியம் ஒரு நாளும் ஏற்படாது என்பதோடு தேவர், டாக்டர் ராஜன், சாஸ்திரி போன்றவர்களும் இவ்வளவு மதிப்பிடக்கூடியவர்களாக ஆகவும் முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். இல்லையானால் அவர் திரும்பவும் அரசியலுக்கு வந்தே தீர்வார், மறுபடியும் இம்மாதிரி ராஜிநாமா நாடகம் நடத்த வேண்டிய அவசியம் வந்தே தீரும் என்பதை தீர்க்கதரிசனம் போலவே சொல்லுவோம்.

இந்த சமயத்தில் தோழர் ஸ்ரீனீவாசய்யங்காரை தலைவராக்க அவரது சிஷ்யர்கள் முயற்சிப்பதாய் தெரிகிறது. ஸ்ரீனிவாசய்யங்கார் வருவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. அழைக்கும் சிஷ்யர்கள் சுயநலத்தில் பயன் ஒன்றும் பெறலாம்; சிலருக்கு நல்ல வேட்டைதான். ஆனால் பொதுவுக்கு பயன் ஏற்படப்போவதில்லை, இல்லை, இல்லை. காங்கிரசின் யோக்கியதை இன்றைய நிலைமையைவிட அதிக நாற்றத்துக்குத்தான் இடம்தரும், தரும், தரும். ஆள்வலுவில் நடக்கும் எந்த ஸ்தாபனத்துக்கும் இதுதான் கதி. ஆதலால் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்பு உணர்ச்சியை மறைக்க ஏதாவது மார்க்கம் செய்ய தைரியமும் சக்தியும் உடைய தலைவர் ஒருவர் வந்தாலொழிய அல்லது ஆச்சாரியார் அதற்கு மனப்பூர்வமாக நாணயமான வழியில் பாடுபட்டால் ஒழிய தமிழ்நாட்டில் எந்தக் காரியமும் நடைபெறப்போவதில்லை என்பதோடு இருதரப்பிலும் அயோக்கியர்களும், காலிகளும் தேசத்தின் பேரால் வகுப்பு மக்களின் பேரால் பயன் அனுபவித்துக் கொண்டு பொதுநலனைப் பாழாக்கி வரும் நிலைமை ஒரு நாளும் மாறப்போவதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 16.08.1936

You may also like...