தஞ்சையில் சத்தியமூர்த்தியார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் என்னுடைய தஞ்சை உபன்யாசத்துக்கு பதில் என்னும் தலைப்பில் அடியில் கண்டபடி பேசி இருப்பதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் பார்த்தேன். ஆனால் அதே விஷயம் மற்றும் வேறு சில சென்னை பத்திரிகைகளில் சிறிது விஷமத்தனமாகவும் அதாவது ராவணன், விபீஷணன் கதைகளை ஒப்பிட்டு பேசி இருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் எதை உண்மையாய் வைத்துக் கொள்வதானாலும் சரி. இப்போதைக்கு எனது அபிப்பிராயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். சுதேசமித்திரனில் காணப்படுவதாவது:

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

~shend

“ஸ்ரீமான் நாயக்கர் தன் பிரசங்கத்தில் காங்கிரஸ் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை ஒப்புக்கொண்டால் அவர் காங்கிரசில் சேரத் தயாராக இருப்பதாக கூறினாராம்… ஸ்ரீமான் நாயக்கர் அபிப்பிராயத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக காங்கிரஸ் எப்போதும் தேசமக்கள் யாராய் இருந்தாலும் யாவரும் சமஉரிமை அடைய வேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டுள்ளது. ஒரு சிறுபான்மை ஜாதியினரே உத்தியோகங்களை வகிப்பதை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்காது. இவ்விஷயம் காங்கிரசால் யோசிக்கப்பட்டு இது சம்மந்தமாய் சீக்கிரத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்படும்” என்று சொல்லி இருப்பதாயும்,

~subhead

சமூக சீர்திருத்த விஷயத்தில்

~shend

“சமூக சீர்திருத்த விஷயமாய் முதல் முதலில் திட்டத்தை காங்கிரஸ்தான் ஆரம்பித்தது” என்று சொல்லிவிட்டு “இந்திய சட்டசபைத் தேர்தலில் சமூக சீர்திருத்தவாதியாகிய திருச்சி டாக்டர் ராஜன் அவர்களுக்கு விரோதமாக பரம வைதீக ராஜாபகதூர் கிருஷ்ணமாச்சாரியாரை ஆதரித்த ஜஸ்டிஸ் கட்சியின் சமூக சீர்திருத்தமென்ன” என்று கேட்டதாகவும் காணப்படுகிறது.

நான் காங்கிரசை கேட்டுக் கொண்டதற்கு உண்டு இல்லை என்று இரண்டிலொரு அபிப்பிராயம் சொல்லாமல் “ஜஸ்டிஸ் கட்சி ஏன் அப்படிச் செய்தது” என்று கேட்பது எப்படி ஒழுங்கான சமாதானமாகும் என்று எனக்கு விளங்கவில்லை. இருந்தாலும் இதற்கும் முடிவில் பதில் சொல்லுகிறேன்.

~subhead

கெடுக்கக்கூடாது

~shend

பிறகு “ஜஸ்டிஸ் கட்சி இதுவரை இவைகள் விஷயமாய் செய்த காரியங்களை அழிக்காமல் இருக்கவேண்டும்” என்று நான் கேட்டுக் கொண்டதற்கு பதிலாக,

“15 வருஷமாக ஜஸ்டிஸ்கட்சி அதிகாரத்தில் இருந்தபோது என்ன முக்கியமான காரியத்தைச் செய்தது. பொது ஜனங்களுக்கு விரோதமாக சர்க்காருக்கு அனுகூலமாக தாளம் போட்டது, நிலவரி விஷயமாக சர்க்காருக்கு சாதகமாய் இருந்தது, சத்தியாக்கிரக காலத்தில் தொண்டர்கள், அடிக்கப்பட்ட கொள்கையை ஜஸ்டிஸ் கட்சி ஆதரித்தது. இதையா அழிக்கக்கூடாது என்று நாயக்கர் பிரியப்படுகிறாரா என்பது சந்தேகமாய் இருக்கிறது. காங்கிரஸ் அதிகாரம் வைத்தவுடன் ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஊழல்களை ஒழிப்பதே அதன் காரியம்” என்று பேசி இருக்கிறார்.

~subhead

இவைகளுக்கு நம் சமாதானம்

~shend

தோழர் சத்தியமூர்த்தியார் நமது முதல் பிரச்சினையையாவது ஒப்புக் கொள்வதைப்பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியே யடைகிறோம். ஆனால் இந்த 20 வருஷ காலமாக காங்கிரஸ் இவ்விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயமாக ஏன் கவலை செலுத்தவில்லை?

நாட்டில் இந்தியாவெங்கும் லாகூர் முதல் கன்னியாகுமரி வரை சீக்கியர், இந்துக்கள், முகமதியர், கிறிஸ்துவர் ஆகியவர்களும் இந்துக்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத ஜாதியார்கள், தீண்டப்படாதவர் என்கின்ற பிரிவார்களும் சதா சர்வ காலமும் வகுப்புப் பிரச்சினைவகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றே கூப்பாடு போட்டு வந்ததுடன் அதனால் அனேக பொது லட்சியங்களும் எவ்வளவோ பாதிக்கப்பட்டு காங்கிரசின்மீது பல வகுப்பு மக்களுக்கும் இதுகாரணமாகவே அவநம்பிக்கையும் வெறுப்பும் ஏற்பட நேர்ந்ததுடன் என்னைப் பொறுத்தவரையிலும் கூட பெரிதும் இதுகாரணமாகவே காங்கிரசிலிருந்து நான் விலகவும் நேர்ந்தது என்பதை யார் மறுக்கக்கூடும்? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இந்தியாவுக்கு முதல் தேவை என்பதை இனி யாராலாவது அல்லது வேறு எவ்வித தந்திரத்தாலாவது அழித்துவிடமுடியும் என்று கருதுவதற்கும் இடமில்லை. அன்றியும்,

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று கூப்பாடு போடப்பட்ட பின்புதான் முஸ்லீம்கள், பார்ப்பனரல்லாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களில் ஒரு அளவுக்காவது அரசியலிலும் நிர்வாக பதவிகளிலும் மேல்தர கீழ்த்தர உத்தியோகங்களிலும் இடம்பெற ஏற்பட்டது என்பதையும் அச்சமூகத்தார்களும் சிறிதாவது மனிதத்தன்மையுடன் வாழ்கிறார்கள் என்பதையும் எவராலாவது மறுக்க முடியுமா?

மனித இயற்கையை எடுத்துக்கொண்டபோதிலும் எந்தக்காரணத்தை முன்னிட்டானாலும் சரி, ஒரு வகுப்பார் மேல்நிலையிலும் ஒரு வகுப்பார் கீழ்நிலையிலும் இருப்பதை ஒப்புக்கொள்ளவோ பொறுத்துக்கொண்டிருக்கவோ முடியாது என்றுதான் சொல்லுவேன்.

ஆகையால் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அபிப்பிராயத்தை தோழர் சத்தியமூர்த்தியார் வரவேற்பதாகவும் ஒப்புக்கொண்டதாகவும் கூறியதானது ஒரு அளவுக்காவது நமக்கு மகிழ்ச்சியையும் பழய தோழர்களுடன் கலந்து ஒத்துழைக்க காலம் வரலாம் என்ற நம்பிக்கையும் தருகிறது. ஆனாலும் அதை காரியத்தில் செய்ய சம்மதிக்கிறார்களா என்பதை வெகு ஆசையோடும் கவலையோடும் எதிர்பார்க்க வேண்டியவனாய் இருக்கிறேன். இதை எவ்வளவு சீக்கிரத்தில் காங்கிரஸ்காரர்கள் இந்துக்களுக்கும் முஸ்லீம் களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் போலவோ அல்லது மூர்த்தியார் சொல்வதுபோல பொது அறிக்கையினால் சரிப்படுத்துவது போலவோ காரியத்தை முடித்து வைக்கிறார்களோ அவ்வளவுக்கு நான் நன்றியறிதலுள்ளவனாக இருப்பேன்.

இதுவிஷயமாகவே இதற்கு முன்னும் ஒரு தடவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராய் இருந்த பெரியார் ஒருவர் என்னிடம் எழுத்து மூலமாக எழுதி வாங்கிக் கொண்டுபோய் காந்தியாருடையவும் காங்கிரசினுடையவும் சம்மதம் பெற்று அறிக்கை வெளியிடுவதாக மனமுவந்து கருணை அளித்தார். இதுவரையில் ஒன்றும் முடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

~subhead

காங்கிரசின் மனப்பான்மை

~shend

நான் மற்றொரு விஷயத்தையும் தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பதில் காங்கிரசின் மனப்பான்மைக்கு ஒரு உதாரணம் கூறாமல் இருக்க முடியவில்லை. அதாவது 1927ல் சென்னையில் நடந்த எல்லா இந்திய காங்கிரஸ் மகாசபையின் போது தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் மூலமாக அவர் பேராலேயே ஒரு தீர்மானம் அனுப்பி இருந்தோம். அத்தீர்மானத்தின் வாசகம் என்னவென்றால் “இந்தியா சுயராஜ்யம் அடைவதற்கு ஜாதி பேதம் ஒழிய வேண்டியது அவசியம் என்பதை காங்கிரஸ் கொள்கைகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவேண்டும்” என்பது ஆக ஒரு தீர்மானம் அனுப்பப்பட்டது. அது வரவேற்புக் கமிட்டிக்கு காலத்திலேயே அனுப்பப்பட்டது. மற்றும் காங்கிரசின்போது தோழர்கள் டாக்டர் அன்சாரி, சரோஜினி அம்மாள் முதலியவர்கள் காஸ்மாபாலிட்டன் கிளப்புக்கு வந்து தோழர்கள் பனகால் ராஜாவையும், ஆர்.கே. ஷண்முகத்தையும், எ. ராமசாமி முதலியாரையும், என்னையும் சந்தித்துபேசி காங்கிரஸ் கூட்டத்துக்கு வரவேண்டும் என்றும் காங்கிரசில் சேரவேண்டும் என்றும் அழைத்தபோது இதே நிபந்தனைகளைச் சொன்னோம். அப்போது அவர்கள், இதை மிக சாதாரண விஷயமாகக் கருதி “இது விஷயத்தில் காங்கிரசுக்கு எவ்வித ஆட்சேபணையுமிருக்க நியாயமில்லை. ஆகையால் நீங்கள் காங்கிரசுக்கு வர தயாராய் இருக்க வேண்டியது. நான் மற்றவர்களுடன் ராத்திரிக்கு பேசி காலை பதில் சொல்லுகிறேன்” என்று சொன்னார்கள். அப்போது நான் அவர்களிடம் “உங்கள் முயற்சி பலிக்காது. கண்டிப்பாய் பலிக்காது” என்று சொன்னதோடு முதல் தவணையாக தோழர் ஆர்.கே. ஷண்முகம் அனுப்பியிருக்கிற தீர்மானத்தையாவது ஒப்புக் கொள்ளச் சொல்லுங்கள். நாங்கள் காலையில் காங்கிரஸ் கூட்டத்துக்கு வருகிறோம் என்று சொன்னேன். தோழர் சரோஜினியம்மாள் குதியாட்டம் போட்டுக்கொண்டு “இத்தீர்மானம் காங்கிரசில் நிறைவேறவில்லையானால் பார்ப்பனர்களைப் பற்றி நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மையாகிவிடும். நானும் ஒரு கை பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். கடைசியாக என்ன நடந்தது என்றால் தோழர் ஷண்முகம் தீர்மானம் காஞ்சீபுரம் தீர்மானம் போலவே விஷயாலோசனைக் கமிட்டியிலேயே கொலை செய்யப்பட்டுவிட்டது என்பதைத்தான் உணர நேர்ந்தது. ஆகவே காங்கிரசுக்கு இந்த பார்ப்பனர்களிடம் எவ்வளவு சுதந்தரம் இருக்கிறது என்பது இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனபோதிலும் என்னைப் பொறுத்தவரை என்னுடைய கூட்டு வேலைத் தோழர்கள் பலரைப் பொறுத்தவரை இவ் விஷயத்தில் நாங்கள் வாக்குத் தவறுவதில்லை என்று உறுதி கூறுகிறேன்.

~subhead

இரண்டாவதாக

~shend

சமூக சீர்திருத்த விஷயத்தில் மூர்த்தியார் தஞ்சை பேச்சில் வழவழ என்று பேசி இருப்பதாகத்தான் கருதுகிறேன். சமுக சீர்திருத்த விஷயத்தில் காங்கிரஸ் சட்டபூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதற்கு பதில் சொல்லாமல் கிருஷ்ணமாச்சாரியாரை ஜஸ்டிஸ் கட்சி ஏன் ஆதரித்தது என்று கேட்கிறார். இதற்கு சமாதானம் சொல்லுவதில் ஒரு கஷ்டமான நிலையில் என்னை தோழர் சத்தியமூர்த்தியார் கொண்டுவந்து விடுகிறார் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனாலும் எனது கடமையை நான் செய்கிறேன்.

~subhead

ஹம்பக் சீர்திருத்தவாதி

~shend

அதாவது தோழர் திருச்சி ராஜனைவிட ராஜாபகதூர் கிருஷ்ணமாச்சாரியார் இந்திய சட்ட சபைக்கு போவது மேலான காரியம் என்பது உண்மை சமூக சீர்திருத்தவாதிகளுடைய கருத்தாய் இருந்ததினால்தான் அதுசமயம் ஏதோ ஒரு சிலர் கிருஷ்ணமாச்சாரியாரை ஆதரித்தார்கள். எப்படி எனில் திருச்சி தோழர் ராஜன் சமூக சீர்திருத்தப் போர்வையைப் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறவர். சமூக சீர்திருத்த சட்டம் செய்வதை ஆக்ஷேபிப்பவர். தன்னை பொறுத்தவரை வாய்க்கு ருசியான உணவு எங்கு கிடைத்தாலும் எதாயிருந்தாலும் புசிப்பதைத்தவிர அவரிடம் எவ்வித சீர்திருத்தமும் நான் காணவில்லை. பல கூட்டங்களில் சமூக சீர்திருத்தத்திற்கு சட்டம் செய்வது கூடாதென்றும், மக்களை கட்டாயப்படுத்தி எவ்வித சீர்திருத்தமும் செய்யக் கூடாது என்றும் பேசி வருணாச்சிரம தர்மிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து உறுதி கொடுத்து ஓட்டுக்கேட்டவர். இவரால் மக்கள் சுலபத்தில் ஏமாற்றப்பட்டு விடுவார்கள். மக்களின் முயற்சியும் கெட்டுவிடும். தோழர் டாக்டர் ராஜனை சீர்திருத்தவாதி என்று ஒப்புக்கொண்டால் நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டவர்களாகி விடுவோம்.

தோழர் ராஜாபகதூர் ஆச்சாரியார் உண்மை பேசுகிறவர், பரம வைதீகி, பழய அழுக்கு மூட்டை. அவர் சட்டசபைக்கு போனால் அவரின் நிலை இன்னதென அறிந்து அவரை எதிரியாகவே கருதி அதற்கு வேண்டிய எதிர்ப்பு முறை கையாளலாம். பொது ஜனங்களை அவர் ஏமாற்ற முடியாது. அவரால் பொது ஜனங்களும் ஏமாந்து போகமாட்டார்கள். மற்றும் விழிப் பெய்துவார்கள். ஆதலால் அவர் சட்டசபைக்கு போவது ராஜன் போவதைவிட குறைவான கெடுதியைதான் உண்டாக்கும் என்று கருதி அப்படிச் செய்தார்கள். எனக்கும் கூட ஹம்பக்கான சினேகிதனை விட நேர்மையான எதிரிமேல் என்பதுதான் கொள்கையாக இருக்கிறது. ஆகையால் டாக்டர் ராஜனை ஆதரிக்காததிலிருந்தே ஒரு கூட்டத்தாரின் கொள்கையை பரீக்ஷித்தால் தோழர் சத்தியமூர்த்தி நியாயம் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றப் பட்டுவிடுவார்.

சமூக சம்மந்தமாக பார்ப்பனரல்லாதாரால் கொண்டு வரப்படும் தீர்மானங்களை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகிறதா? என்பதுதான் எனது விண்ணப்பம். மற்றபடி காங்கிரசின் சமூக சீர்திருத்த தீர்மானம் என்ன என்பது நான் அறியாததல்ல. காங்கிரஸ் சமூக சீர்திருத்த விஷயமாக இந்த 50 வருஷமாக என்று தீர்மானம் எந்த சட்டசபைக்கு கொண்டு வந்து நிறைவேறிற்று? எந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தது? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை நான் வணக்கமாய் கேட்கின்றேன். இன்னமும் பேசப் போனால் 1920ம் வருஷம் முதல் ஆச்சார சீர்திருத்த மகாநாடு என்று வெகு காலமாக காங்கிரசின் போது கூட்டப்பட்டு வந்த மகாநாடும் நின்றுவிட்டது. தீண்டாமை ஒழிந்தபின்பே சுயராஜ்யம் என்னும் கொள்கையும் எடுபட்டு விட்டது. ஆலயப்பிரவேச முயற்சியும் பின்வாங்கிக் கொள்ளப்பட்டது. இறுதியாக சமூக சீர்திருத்த விஷயமாய் பொதுமக்கள் சம்மதமில்லாமல்படி தீர்மானங்கள் கொண்டு வருவதும் சட்டம் செய்வதும் கூடாது என்றும் தலைவர்களாலேயே சொல்லப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சமூக சீர்திருத்த விஷயமாய் என்ன ஆதாரத்தைக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காங்கிரசை ஆதரித்துப் பேசினார் என்பது எனக்கு விளங்கவில்லை.

மூன்றாவதாக ஜஸ்டிஸ் கட்சி செய்த காரியத்தை அழிக்கக் கூடாது என்பது

ஜஸ்டிஸ் கட்சியார் இந்த 15ஆண்டுகாலமாக செய்த காரியத்தை காங்கிரஸ் ஆதிக்கத்துக்கு வந்தால் அழிக்கக்கூடாது என்று நான் கேட்டுக் கொண்டதை தோழர் மூர்த்தியார் ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது என்று பரிகாசம் செய்திருக்கிறார். ஆனாலும் பாதகம் இல்லை. ஜஸ்டிஸ் கட்சி செய்த ஒரு சிலவற்றை சொல்லுகிறேன். அவற்றை கெடுக்காமல் இருக்கிறார்களா என்று தோழர் மூர்த்தியார் சொன்னால் போதும்.

முதலாவது உத்தியோகங்களில் எல்லா ஜாதி மத வகுப்பாருக்கும் பிரதிநிதித்துவமும் அரசியல் பிரதிநிதித்துவங்களிலும் விகிதாச்சார பிரதிநிதித்துவமும் ஏற்படுத்தி இருக்கிறது.

பொது ஸ்தலங்களில் ஜாதிமத பேதம் காட்டக்கூடாது என்ற சட்டம் செய்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் இன்று ஸ்தல ஸ்தாபனம் முதல் அரசியல் நிர்வாகம் உத்தியோகம் ஆகியவைகள் வரை எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தியது.

உள்நாட்டு வைத்தியத்துக்கு ஆதரவு அளித்து கல்லூரி ஏற்படுத்தியது.

பிள்ளைகளுக்கு கட்டாய இலவசக் கல்விமுறை ஏற்படுத்தியது.

பள்ளிக்கூடத்தில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது என்கின்ற உத்திரவு செய்தது.

ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களில் எல்லா வகுப்புக்கும் பிரதிநிதித்துவம் அளித்தது.

தேவதாசி முறையை ஒழித்தது.

விபசாரக்குச்சுகளை ஒழித்தது.

விவசாயிகளின் கடன் பளுவை குறைத்தது.

தேவஸ்தான நிர்வாகமும் சொத்துக்கள் பரிபாலனமும் சரிவர நடக்கும்படியாக மேற்பார்வை பார்க்க அரசாங்கத்துக்கு உரிமை ஏற்படுத்தியது.

மேல்தர படிப்பு, குறிப்பிட்ட விஷயங்களுக்கு ஆக படிக்கும் படிப்பு ஆகியவைகளில் படிக்க ஆசையுள்ள சகல வகுப்பு மக்களுக்கும் இடம் கிடைக்கும்படி செய்தது.

பெண்மக்கள் படிக்க அதிகமான சவுகரியம் செய்தது.

பெண்மக்களுக்கு ஓட்டுரிமை, அரசியலில் பங்கு பெற வசதி ஆகியவை செய்தது.

குடிவார சட்டம், இனாம் பூமி சட்டம் முதலிய காரியங்கள் செய்தது.

இவைகள் எல்லாம் எல்லா பார்ப்பனர்களுடையவும் அதுவும் சிலவற்றுள் இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகிய தங்களுடையவும் எதிர்ப்பின் மீது செய்யப்பட்ட காரியங்களாகும். இவைகளில் பல இந்துமத சம்பிரதாயத்துக்கு எதிரானவை என்றும் மகாராணி வாக்குத்தத்தத்துக்கு விரோதமானது என்றும் கூட சொல்லப் பட்டவையாகும். ஆகவே இந்தக் காரியங்களை காங்கிரசுக்காரர் அதிகாரத்துக்கு வந்தால் கெடுக்காமல் இருப்பார்களா என்று கேட்டால் அதற்கு சமாதானம் சொல்ல மூர்த்தியார் கடமைப்பட்டவரல்லவா என்று கேட்கின்றேன். அதைவிட்டு நம்மை பரிகாசம் செய்வதால் பயன் என்ன? இந்த நிபந்தனைகளை நாம் பயத்தின் மீது கேட்கின்றோமே ஒழிய இவை அனாவசியமாய் கேட்கும்படியான கேள்விகள் அல்ல என்று மனப்பூர்வமாய் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஆகவே தஞ்சை பதிலில் தோழர் மூர்த்தியார் இவைகளுக்கு உண்டு இல்லை என்று ஒரு முடிவான விளக்கமான பதில் சொல்லாமல் ஜஸ்டிஸ்காரர் வரி குறைக்கவில்லையே அதையா என்றும், போலீசார் தொண்டர்களை அடித்ததை பார்த்துக் கொண்டிருந்தார்களே அதையா அழிக்கக் கூடாது என்றும் கேட்பது சரியான நாணயமான பதிலாகுமா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

வரி குறைக்கும் வேலை, மந்திரிகளுடைய அதிகாரத்தில் இல்லை என்றும் அது சர்க்கார் பொதுஜனப் பிரதிநிதிகளுக்கு கொடுக்காமல் தங்கள் கைவசம் வைத்துக் கொண்ட அதிகாரம் என்றும் அதாவது ரிசர்வ்ட் ட்ரான்ஸ்பர்ட் அல்லது ஒதுக்கப்பட்டது, மாற்றப்பட்டது என்று இருக்கும் இரு பாகத்தில் ரிசர்வ்ட் ஒதுக்கப்பட்ட இலாகாவுக்கு சம்பந்தப்பட்ட தென்று பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். சட்டம் தெரியாத முட்டாள்களும் பொறுப்பில்லாத கூலிகளும், காலிகளும் இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சி மீது குறை கூறினால் அதை யெவரும் லட்சியம் செய்யமாட்டார்கள். ஆனால் அரசியல் ஞானம் பெற்றவரும் காங்கிரசில் பொறுப்புள்ள பதவி வகிப்பவரும் இனி மந்திரி ஆக வேண்டும் என்பவரும் ஒரு மாகாண காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தலைமை வகிப்பவருமான பெரியார் ஒருவர் இம்மாதிரி பேசினால் அதற்கு என்ன சொல்வது. சர்க்காருக்கு முட்டுக்கட்டை போடவோ சட்டங்களையும் ஒழுங்குகளையும் மதிக்காமல் நடந்து கொள்ளவோ ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவி ஏற்கவில்லை, அந்தப்படி சொல்லி பொது ஜனங்களிடம் அவர்கள் ஓட்டுப் பெறவும் இல்லை. ஆகையால் அவர்கள் மீது நிலவரி விஷயமாய் குறை கூறுவது நீதியும் வீரமுமான காரியமாகாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

போலீசார் சட்டம் மீறியவர்களை தங்கள் உத்திரவை உதாசீனம் செய்தவர்களை அடித்தால் அதற்கு ஜஸ்டிஸ் மந்திரிகள் என்ன செய்வார்கள்? எல்லா மாகாணங்களிலும் அடித்தார்கள் அடிபட்ட பின்புதான் மக்களும் சட்டம் மீறுவது பயன்படாது என்பதை உணர முற்பட்டு அடியோடு நிறுத்தி சட்டத்திற்கு அடங்கி நடக்க ஆரம்பித்தார்கள் என்றாலும் அடிப்பதும் தண்டிப்பதும் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் கையிலா இருந்தது? அதுவும் சர்க்கார் தங்களுக்கு என்று ஒதுக்கி வைத்துக் கொண்ட இலக்காவைச் சேர்ந்ததாகும். ஜஸ்டிஸ் மந்திரிகள் தங்களால் கூடியதை சர்க்காருக்கு சொல்லிப் பார்ப்பார்கள், பிறகு அந்த இலாக்காத் தலைவர் செய்த முடிவுப்படிதான் காரியங்கள் நடந்து தீரும். சர்க்காரும் இன்ன காரியம் செய்தால் இன்ன தண்டனை என்று விளம்பரப்படுத்தி அல்லது உதாரணம் காட்டி விட்டுத்தான் அவர்கள் காரியங்களில் பிரவேசித்தார்களே ஒழிய நோட்டீசில்லாமல் வந்து புகுந்து அடித்து ஜெயிலுக்குள் போடவில்லை. அடிபட்டவர்களும் தாம் செய்யப்போகும் காரியத்துக்கு இன்னவிதமான அடியும் இப்படிப்பட்ட தண்டனையும் பலனும் கிடைக்கும் என்றும் அது எவ்வளவு வலிக்கும் எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்றும் தெரிந்துதான் அதில் இறங்கினார்களே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட நிலையில் துணிந்து வேண்டுமென்றே செய்த காரியத்துக்கு அதில் அதிகாரமும் சம்மந்தமும் இல்லாத ஜஸ்டிஸ் மந்திரிகள் உதவி செய்யவில்லை என்று பழி கூறுவது ஆண்மையா? நாணயமா? சுயமரியாதைக்கு ஏற்றதா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை பணிவோடு கேட்கின்றேன்.

ஆகவே தோழர் சத்தியமூர்த்தியார் வெள்ளையாய் விளக்கமாய் மேலே நான் குறிப்பிட்ட காரியங்களைப் பொறுத்தவரை தங்கள் அபிப்பிராயம் சொல்லி அதை காங்கிரசு மூலம் ஒப்புக் கொள்ளச் செய்தால் அவர் தமிழ் மக்களுக்கு பெருத்த மகத்தான உதவி செய்தவராவார்; தன்னுடைய உண்மையான தேச பக்திக்கும் ஒரு ஞாபகஸ்தம்பம் நாட்டியவராவார்.

சில காலிகளும் எச்சிலைப் பத்திரிக்கைகளும் “காங்கிரசை நிபந்தனை கேட்க இவன் யார்?” என்று என்னை ஏளனம் செய்வதைப் பார்த்து வருகிறேன். மக்கள் எல்லோரும் காங்கிரசில் சேர வேண்டும் என்று கோரினவர்கள் கோருபவர்கள் எல்லாம் மனிதர்களாய் இருந்திருப்பார் களானால் அவர்களில் எவருக்கும் இம்மாதிரி ஒரு குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட மனிதனைப் பார்த்து காங்கிரசின் கொள்கையைப்பற்றி பேசவோ நிபந்தனையைப் பற்றி பேசவோ நீ யார் என்று கேட்க புத்தியே தோன்றி இருக்காது.

அதைவிட்டு ஞானமில்லாமல் பொறுப்பு இல்லாமல் மானமில்லாமல் எப்படியாவது எதை விற்றாவது வயிறு கழுவலாம் என்ற ஈன மக்களுக்கு இதைவிட வேறு கேள்வி கேட்க புத்தியோ விஷயமோ கிடைக்கமாட்டாது என்பதைத் தான் அவர்களுக்கு நான் பதில் சொல்லக்கூடும்.

இப்படிப்பட்ட மூடர்களுக்கும் இழிமக்களுக்கும் என்னை காங்கிரசுக்கு வரும்படி அழைத்து எனது நிபந்தனை என்ன என்று கேட்டவர்கள் பெயரைச் சொல்லுவதன் மூலம் மற்றொரு பதிலும் சொல்லுகிறேன்.

தோழர் காந்தியார் ஒரு விஷயத்தில் என்னைக் கூப்பிட்டு உனக்கு காங்கிரசினிடம் என்ன குறை?நீ தலைமை வகித்து நடத்துவதில் என்ன அசௌகரியம் என்று கேட்டார். அது சமயம் இப்படிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று இப்போது கேட்பவர்களில் ஒருவரே பக்கத்தில் இருந்தார் என்று கூடச் சொல்லுகிறேன்.

மற்றும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒருதரமல்ல பல தரம் நமது அபிப்பிராய பேதங்களை கூடுமானவரை ஒருவருக்கொருவர் சரிப்படுத்திக் கொண்டு ஒத்துழைக்க மார்க்கமில்லையா என்று மனம் கசிந்து கண்ணீர் விட்டுக் கேட்டார் என்று சொல்லுகிறேன். இப்போது இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பல பிரசங்கங்களில் நாயக்கருக்கும் எனக்கும் அனேக விஷயங்களில் அபிப்பிராயப் பேதமில்லை. ஒன்று இரண்டு இருந்தால் அதை காங்கிரசில் வந்து வலியுறுத்தட்டும் என்று சொல்லியிருக்கிறார். இனி யார் என்னைக் கூப்பிட வேண்டும் என்று இந்தக் கூலிகள் நினைக்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட குட்டிகள் குலைப்பதெல்லாம் முடிவில் தாய் தலையில் விடிகின்றன.

மற்றும் ஒரு காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸிற்கே சர்வாதிகாரியாயிருந்த தோழர் சி.பி.சுப்பையா அவர்கள் “உங்கள் கொள்கை பூராவையும் ஒப்புக்கொள்ளுகிறோம். நீங்கள் காங்கிரசை வந்து நடத்திக் கொடுங்கள்” என்று வருந்திப் பல தடவை கூப்பிட்டார் என்று சொல்லுகிறேன்.

மற்றும் சென்ற வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு காரியதரிசியாய் இருந்த தோழர் வெங்கிடாசல ரெட்டியார் வீட்டுக்கு வந்து வருந்தி அழைத்தார் என்றும் சொல்லுகிறேன்.

மற்றும் தோழர் திரு.வி.க. அவர்களும் பொறுப்புள்ள அதிகாரமில்லாத வேறு பல முக்கியஸ்தர்களும் வந்து அழைத்ததை நான் எழுத வரவில்லை. என்னை மாத்திரமல்லாமல் என்னைப்போல் இன்னமும் ஆயிரக் கணக்கான பேர்களையும் அவர்கள் கூப்பிட்டிருக்கலாம். அவைகள் அவர்களது காங்கிரஸ் பக்தியைக் காட்டுகிறதே ஒழிய அவற்றால் எனக்கு ஒரு புதிய பெருமை அளிக்கவில்லை என்பதோடு நான் பெருமை பாராட்டிக் கொள்ளவுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆகவே தேசத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு காங்கிரசின் பேரைச் சொல்லிக் கொண்டு வயிறு கழுவும் காலிகள் பொறுப்பும் மானமும் இல்லாமல் இம்மாதிரி அதிகப் பிரசங்கித்தனமாய் பேசுவதும் எழுதுவதும் கூடாது என்பதற்கு ஆகவே இவற்றை எழுதினேன். சற்று அதிகமாய் எழுதினதாகக் காணப்படலாம். வியாதிக்குத் தகுந்த சூடுபோட வேண்டிய அவசியத்துக்கு ஆகவே எழுதினேன்.

முடிவாக தோழர் மூர்த்தியாருக்கு ஒன்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்.

தமிழ்நாட்டுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்து விடுவது பாதகமில்லை என்று உண்மையாய் உணருவீர்களானால் சமூக சீர்திருத்தம் அவசியம்தான் என்று கருதுவார்களானால் எவ்வளவு சீக்கிரத்தில் அந்த காரியம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அதைச் செய்யுங்கள்.

இல்லாவிட்டால் இந்த 16 வருஷமாக காங்கிரஸ் பட்ட கஷ்டங் களையும் அடைந்த தோல்விகளையும் விட அதிகமாகத்தான் அடைய வேண்டியிருக்குமே தவிர சிறிது கூட குறைவுபடாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

ஈ.வெ.ராமசாமி

குடி அரசு தலையங்கம் 12.07.1936

You may also like...