தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்
உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம். தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து...