கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை
போடுங்கள் விடலாம்
விடுங்கள் போடலாம்
காங்கிரசின் பேரால் அபேக்ஷகர்களை நிறுத்துவதற்கு நிறுத்தப்படும் அபேக்ஷகர்கள் பட்டதாரிகளாய் இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் ஒரு தீர்மானம் ஒரு வாரத்துக்கு முன் தான் செய்து கொண்டார்கள்.
இப்படி இவர்கள் செய்து கொண்டதானது மொத்தத்தில் இந்திய மாகாணங்கள் பூராவுக்கும் ஏற்பட்டதல்ல.
அன்றியும் இது அகில இந்திய காங்கிரஸ் செய்துகொண்ட தீர்மானமும் அல்ல. இன்றைய காங்கிரசின் பொது கொள்கையுமல்ல.
காங்கிரசினிடத்தில் இன்றைய தினம் எந்தவிதமான ஒத்துழையாமை முறையோ சட்ட மறுப்பு முறையோ பகிஷ்கார முறையோ எதுவும் இல்லை. அவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதாக பாட்னா காங்கிரசில் தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது.
மற்ற தேர்தல்கள் விஷயத்திலும் காங்கிரசானது இதுவரை பட்டம் பதவி முதலியவைகளை விட வேண்டும் என்கின்ற எந்த விதமான கொள்கையையும் அனுசரிக்க இல்லை.
கள்ளு சாராயக்கடை வியாபாரிகளையும் கண்டிறாக்டர்களையும் உற்பத்தி செய்வதற்கு உடந்தைக்காரர்களையும் உற்பத்தி செய்யும் சொந்தக்காரர்களையும் பல காங்கிரஸ் தேர்தலுக்கு தெரிந்தெடுத்து எலக்ஷனில் வெற்றிபெற உதவி செய்திருக்கிறார்கள்.
கதருக்கு விரோதமாய் சீமை ஜவுளி வியாபாரிகளையும் சுதேசியத்துக்கு விரோதமாய் அயல்நாட்டு சாமான் வியாபாரிகளையும் காங்கிரசில் நிறுத்தி வெற்றி வாங்கிக் கொடுத்தும் இருக்கிறார்கள்.
இதுபோல் இன்னமும் எவ்வளவோ காரியங்கள் காங்கிரசின் ஜீவாதாரமான கொள்கை என்பவைகளுக்கே விரோதமாக உள்ள காரியங்கள் செய்தவர்கள் செய்து கொண்டு இருக்கிறவர்கள் ஆகியவர்களை எல்லாம் காங்கிரசில் சேர்த்து அவர்களுக்கு காங்கிரசின் பேரால் பதவிகள் கிடைக்கும்படி செய்துவிட்டு இப்பொழுது திடீரென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு மாத்திரம் இந்த பட்ட பஹிஷ்கார கவலை எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று என்பது மிகவும் கூர்மையாய் யோசிக்க வேண்டிய காரியமாகும்.
அதுவும் கோயமுத்தூர் ஜில்லாவில் தமிழ்நாடு பார்லிமெண்டரி போர்டு கூடுகிற வரையில் அதாவது 4.11.36ந் தேதி வரையில் இந்த விஷயத்தைப் பற்றி யாதொரு உத்தேசமும் முடிவும் இல்லாமல் அன்றைய தினமும் திடீரென்று பட்டதாரிகளிடம் “அப்படி ஒன்றும் நேராது என்றும் தேசத்துக்காக எவ்வளவு பெரிய தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டால் பாமர ஜனங்களுக்கு காங்கிரசினிடம் ஒரு மயக்கம் ஏற்பட வசதி இருக்கும் என்றும் பட்டதாரி களுக்குச் சொல்லி “பட்டம் விட வேண்டுமென்றாலும் விடத் தயாராய் இருக்கின்றோம்” என்று எலக்ஷன் அபேக்ஷகர்கள் விண்ணப்ப அச்சு பாரத்தில் ஒரு வரி எழுதி கையெழுத்து போடும்படி செய்து பிறகு பட்டம் விட்ட பிறகுதான் உங்களை தெரிந்தெடுப்பதோ இல்லை என்று சொல்லுவதோ இரண்டில் ஒன்று முடிவு செய்யப்படும் என்று சொல்லி பட்டதாரிகளுக்கு உத்திரவு அனுப்புவது என்றால் காங்கிரசின் கட்டுப்பாடான கொள்கையும் நாணயப் பொறுப்பும் எவ்வளவு என்பதை பொதுஜனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். நிற்க,
இம்மாதிரியான நிலையில் கோயமுத்தூர் காங்கிரஸ் கமிட்டியின் யோக்கியதையைப் பற்றியும் சிறிது தெரிந்து கொண்டால் பின்னால் வரும் விஷயம் முழுவதும் விளக்க சௌகரியமாய் இருக்கும் என்று கருதி சிறிது கூறுவோம்.
கோயமுத்தூரில் காங்கிரசுக்கு தோழர்கள் கே. சுப்பிரி, சி.பி. சுப்பய்யா ஆகியவர்களே பிரமுகர்கள். சமீபத்தில் தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் காங்கிரசில் சேர்ந்து ஒரு தடவை ஜயிலுக்கும் போய்விட்டு வந்தவர். அதற்கு கூலியாக தனது ஆச்சிரமத்துக்கு பல ஆயிரம் பணமும் இந்திய சட்டசபை பதவியும் சம்பாதித்துக்கொண்டவர். ஆகவே அவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் வரவு செலவு நேர் என்றே சொல்லிவிடலாம்.
தோழர் சி.பி. சுப்பையா அவர்களோ சகல துறையிலும் காங்கிரசுக்கு வருவதற்கு முன் இருந்ததைவிட அவர் எந்த சந்தர்ப்பத்திலும் நினைத்திருக்க முடியாத மேல் அந்தஸ்து அடைந்துவிட்டார். ஆகவே அவர்தான் காங்கிரசுக்கு இன்னமும் பாக்கியாய் இருக்கலாமே தவிர அவருக்கு காங்கிரசால் ஒன்றும் பாக்கிவர வேண்டியதிருக்காது.
இனி தோழர் சுப்பரியோ காங்கிரசிலிருந்து அவர் ஒன்றும் லாபம் அடையவில்லை. காங்கிரசில் இருந்து அவருக்கு பாக்கி வரவேண்டியது உண்டு என்றே வைத்துக்கொண்டாலும் அவர் பார்ப்பனர் ஆதலால் அவர்கள் காங்கிரசுக்கு உழைக்க கடன் பட்டவர்கள். ஏனெனில் காங்கிரஸ் பார்ப்பனர் ஆட்சிக்கே உழைப்பது ஆனதால் கடமையை செய்தார், இன்னும் செய்யக் காத்திருக்கிறார்.
ஆகவே கோயமுத்தூர் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது ஒருபுறம் இருக்க, கோயமுத்தூர் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பார்லிமெண்டரி கமிட்டி போர்டு மெம்பரும் ஆன தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் குடும்பத்துக்கும் தோழர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியாருக்கும் உள்ள சம்மந்தம் இந்து முஸ்லீம் மதங்களுக்கு உள்ள சம்மந்தம் போன்றது.
அதாவது முஸ்லீம் மதம் இந்துக்கள் கடவுள்களை உடைத்தால் புண்ணியம் என்றும் இந்துக்கள் கடவுள்களாக வழங்கும் பசுக்களை சாப்பிடுவது ஆகாரம் என்றும் கருதுவதாகும்.
இந்து மதமோ முஸ்லீம்களை மிலேச்சர்களாகக் கருதுவதாகும்.
அதுபோல் எப்படியாவது கோயமுத்தூர் ஜில்லாவில் தோழர் ரத்தினசபாபதி முதலியாரை ஒழித்தால் ஒழிய தோழர் ராமலிங்கம் செட்டியார் தலையெடுக்க முடியாது. அதாவது மந்திரியாக முடியாது என்று கருதும் குடும்பமாகும். அதுபோலவே தோழர் ரத்தினசபாபதி முதலியாரும் அவர்கள் சினேகிதர்களும் எப்படியாவது ராமலிங்கம் செட்டியார் மந்திரியாகக்கூடாது என்று கருதுவதோடு தோழர் ராமலிங்கம் செட்டியார் கோயமுத்தூர் ஜில்லாவுக்கே ஒரு சாபக்கேடு என்று எதுபோல் என்றால் இந்துமதத்துக்கு தீண்டாமைக் கொள்கை எப்படி ஒரு சாபக்கேடோ அதுபோல் என்று கருதிக்கொண்டிருக்கிறவர்கள்.
இந்த இரு கூட்டத்தின் ஜன்மத் துவேஷத்தின் காரணமாக தோழர் முதலியார் காங்கிரசில் அடைக்கலம் புகுந்தார்.
தோழர் செட்டியார் அதை பின்பற்றினார்.
செட்டியார் தம்பி தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் ஏற்கனவே காங்கிரசில் தலைவர் குழாத்தில் இருக்கிறதால் அவர் சலுகை தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு இயற்கையாகவே கிடைத்தது. இந்த சலுகையின் ஆதரவு கொண்டு செட்டியார் முதலியாரை மூலை சேர்த்துவிடலாம் என்று நினைக்க சுலபத்தில் இடமேற்பட்டு விட்டது. இந்த நினைப்பு பெற்ற பிள்ளைதான் பட்டதாரிகள் பட்டம் விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோ அல்லது தமிழ்நாடு பார்லிமெண்டு போர்டோ தீர்மானித்த தீர்மானமாகும்.
எப்படி எனில் பட்டம் விட வேண்டுமென்றால் முதலியார் காங்கிரசை விட்டு ஓடிப்போவார் என்று கருதியது ஒன்று.
ஒருசமயம் அப்படி ஓடிப்போகாவிட்டாலும் பட்டம் விட்ட பிறகு காங்கிரசில் அவரை சட்டசபைக்கு நியமனம் செய்யாமல் விட்டு விடுவதன் மூலமோ அல்லது அவருக்கு கிடைக்க முடியாத ஒரு தொகுதியில் தள்ளி விடுவதன் மூலமோ அவரை ஒழித்துவிடலாம் என்று முடிவு செய்து கொண்ட “சகுனி” யாலோசனை இரண்டு.
இந்த இரண்டு யோசனையில் முதல் யோசனையில் முதலியார் உறைத்து நின்றார். அதாவது “காங்கிரஸ் பட்டம் விட வேண்டுமென்று தீர்மானித்தால் நான் விட்டு விடுகிறேன் எனக்கு ஒரு தொகுதி கொடுங்கள்” என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.
இதன்மேல் காங்கிரஸ்காரர்கள் யோக்கியர்களாய் இருந்தால் “உம்மை இன்ன தொகுதிக்கு நிறுத்த நியமனம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆதலால் நீர் அந்த தொகுதி ஏற்றுக் கொண்டு நிற்கப் பிரியப்படுவதாய் இருந்தால் உம்முடைய பட்டத்தை விட்டு விட்டு நிற்க வேண்டியது” என்றும் அல்லது அவருக்கு கொஞ்சமாவது தயவு காட்டுவதானால் “இதற்கு உம்முடைய இஷ்டத்தை தெரிவிக்க வேண்டியது” என்றும் தாக்கீது அனுப்பி இருக்கலாம்.
அப்படிக்கு ஒன்றும் இல்லாமல் “உம்மை காங்கிரசின் சார்பாக நிறுத்தலாமா வேண்டாமா என்று நாங்கள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளுவதற்கு முன்னமேயே நீர் இது கிடைத்த 2 நாளைக்குள் உம்முடைய பட்டத்தை விட்டு விட்டு உமக்கு சர்க்கார் அளித்த சன்னதை வைசிராய்க்கு வாபீஸ் செய்துவிட்டு தெரிவிக்க வேண்டும்” என்றும் அந்த வாபீஸ் கடிதம் இன்ன மாதிரி இருக்க வேண்டும் என்றும் வாசகம் டிக்டேட் செய்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.
இந்த நோட்டீசைப் பார்த்ததும் முதலியாருக்கு கொஞ்சம் சந்தேகம் தோன்றி பட்டணத்துக்கு ஓடி தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களை “என்னை எந்தத் தொகுதிக்கு போடுகிறீர்கள்? தயவு செய்து சொல்லுங்கள்” என்று கேட்டார். சத்தியமூர்த்தியார் “அதெல்லாம் சொல்ல முடியாது, நீர் முதலில் பட்டத்தை விட்டு விட்டு வந்த என்னை பாரும்” என்று உத்திரவு போட்டார். தோழர் முதலியார் உடனே ஒரு ஓய்வெடுத்துக்கொண்ட தலைவரிடம் போய் வாக்குப்பெறக் கருதினார். அவர் காங்கிரசுக்கும் பட்டங்களுக்கும் சம்மந்தமில்லை என்றாலும் தமிழ்நாடு தலைவர்கள் அபிப்பிராயத்தில் நான் பிரவேசிப்பதற்கில்லை. அவர்களை நம்பித்தான் நடக்க வேண்டும் என்ற சொல்லி விட்டார் போலும்.
இதற்குள் தகுந்த நம்பிக்கை உள்ள இடத்தில் இருந்து எப்படியோ ஒரு இரகசிய சேதி வெளியில் முட்டி விட்டது.
அதாவது முதலியாரிடம் பட்டம் வாப்பீஸ் ஆதாரம் பெற்றுக்கொண்டு அவரை நிறுத்த முடியவில்லை என்றோ அல்லது காங்கிரசில் சேராத பட்டக்காரர்கள் எல்லையில் எங்காவது போட்டு அவருக்கு ஸ்தானம் இல்லாமல் செய்து விடலாம் என்றோ தோழர்கள் ராமலிங்க செட்டியார் அவனாசிலிங்கம் செட்டியார் ஆகியவர்கள் கருதி இருப்பதாயும் இதை டாக்டர் சுப்பராயன் ஆட்சேபித்துக் கொண்டிருப்பதாயும் தெரிகிறது என்ற சேதி.
அதற்கேற்றாப்போல் தோழர் ராமலிங்கஞ் செட்டியாரைப் பொறுத்தவரை அவருக்கு அவருடைய தாலூக்காவையே கொடுத்து அதில் வேலை செய்ய அனுமதியும் வாயில் கொடுத்து விட்டு கோயமுத்தூர் டவுனையும் தோழர்கள் சுப்ரி அல்லது சுப்பய்யா ஆகிய இருவர்களில் ஒருவருக்கு என்றும் சொல்லி விட்டு அந்த டவுன் எலக்ஷனுக்கும் செலவுக்கு பணம் ஒரு பகுதி முதலியார் முன் பணம் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னதால் தோழர் செட்டியாருக்கு ஆனந்தம். பழம் நழுகிப் பாலில் விழுந்ததாய் கருதிக்கொண்டு முதலியாருக்கு ஸ்தானம் இல்லாவிட்டால் (செட்டியார்) தான் மந்திரியாக வந்து ஆய்விட்டது என்று கருதி, உடனே தனது பட்டத்தையும் துறந்து விட்டதாக வைசிராய் பிரபுக்கும் சத்தியமூர்த்தி “பிரபு”க்கும் எழுதிவிட்டார்.
இந்த நிலையில் முதலியாரின் தோழர்கள் பலர் முதலியாரைப் பிடித்து உங்களுக்கு காங்கிரசின் பேரால் ஸ்தானம் இல்லாமல் போனலும் போகட்டும், பட்டத்தை விட்டு பயித்தியக்காரராகி விடாதீர் என்று அவருடைய குமாரர் முதல் கொண்டு மடக்கிக்கொண்டார்கள். முதலியார் பாடு திண்டாட்டமாகி விட்டது. இருதலைக்கொள்ளியில் அகப்பட்ட எறும்பு போல் துடித்து விட்டார். கடசியாக காங்கிரசுக்கு “தயவு செய்து என்னை நியமிக்காதீர்கள், அபேட்ச விண்ணப்பத்தை வாபீஸ் பெற்றுக்கொள்ளு கிறேன்” என்று கடிதமும் எழுதி விட்டார். இதனால் முதலியாரை அடியோடு ஒழித்து மூலையில் தள்ளிவிட்டோம் என்று நிர்வாணமாய் குதித்தவர்கள் தலைக்கும் மூடி போட்டுக்கொள்ளவேண்டியதாய்விட்டது.
ஆகவே கோயமுத்தூர் காங்கிரஸ் நாடகத்தை சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால் முதலியாரை பட்டத்தையும் விடும்படி செய்து சட்டசபை மெம்பரும் இல்லாமல் செய்துவிட சிலர் எண்ணினார்கள். முதலியாரோ தனக்கு “தொகுதி இன்னது என்று தீர்மானித்து தன்னை அபேட்சகராக நியமித்த பின்தான் பட்டத்தை விடுவேன்” என்று சொன்னார். இதற்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. “அப்படியானால் நான் காங்கிரஸ் அபேட்சகராய் நிற்க ஆசைப்படவில்லை” என்று முதலியார் சொல்லி விட்டார். ஆகவே “கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை.”
குடி அரசு கட்டுரை 15.11.1936