செட்டி நாட்டில் சமதர்மம்
செட்டிநாட்டு வாலிபர்களுக்கு இன்று ஒரு புதிய ஞானம் உதயமாகி இருக்கிறது. அதாவது “பணக்காரர்கள் ஆணவம் அடக்கப்பட வேண்டும்” என்பது. இவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம். என்னவென்றால்,
இன்று செட்டிநாட்டில் 96 கிராமத்தில் உள்ள செட்டியார் பிள்ளைகளுக்கும் தங்கள் தங்களைப் பொறுத்தவரை பணக்காரர்கள் என்பதல்லாமல் வேறு வகையில் யோக்கியதை உள்ள வாலிபர்கள் எத்தனை பேர்? ஏழை மக்களுக்கு அனுகூலமாய் இருந்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் எத்தனை பேர்? இவர்கள் இத்தனை பேரும் இன்று வாழ்வதும், உடமை வைத்திருப்பதும் எதனால்? எந்த மாதிரியான திருப்பணியில் என்பதேயாகும். பணக்காரர்களை வையும் பத்திரிகைக்காரர்களும் பணக்காரர்கள் வாயல் கடந்து பல்லைக் காட்டிப் பெற்றுவந்த பணங்களாலும் பிடித்துவந்த சந்தாதாரர்களாலும் நடைபெறும் பத்திராதிபர்களேயல்லாமல் தங்களது கொள்கை பலத்தால்தாங்கள் எழுதுந் திறந்தால் செல்வாக்குப் பெற்று தன் காலில் நிற்கும் தகுதியில் இருப்பவர்களா? என்று கேட்கின்றோம்.
ராஜா சர். அண்ணாமலைக்கு பத்து கார் இருந்தால் தனக்கு ஒரு கார் இருப்பவர்களும் மற்றவருக்கு 10 லக்ஷமிருந்தால் தங்களுக்கு இரண்டு லக்ஷம் ஒரு லக்ஷம் 50 ஆயிரம் இருப்பவர்களும் மேலவனைப் பார்த்து பொறாமைப்படும் கீழவனும் என்று சொல்லத் தக்கவர்கள் அல்லாமல் ஏழை எளியவர்கள் என்கின்ற கூட்டத்தில் சேர்ந்தவர்கள் யார்? எளிய வாழ்க்கையில் வாழ்பவர்கள் யார் என்று கேட்கின்றோம்.
பணக்காரர்கள் ஒழிக்கப்பட வேண்டியது என்பதிலும் அவர்கள் ஒரு காலத்தில் ஒழியத்தான் போகிறார்கள் என்பதிலும் நமக்கு மலைப்பு இல்லை. ஆனாலும் செட்டியார் பிள்ளைகள் “பணக் கொழுப்பு”, “பணத்திமிர்” என்று பேசுவது தன்னை அறியாத்தனம் என்றுதான் சொல்ல ஆசைப்படுகிறோம். எப்படியோ ஒரு வழியில் தங்கள் தங்களையே கேவலப்படுத்திக்கொள்ள தக்க ஒரு புது உணர்ச்சி அச்சமூகத்தில் தோன்றியதற்கு நாம் மகிழ்ச்சியடைய வேண்டியதேயாகும்.
ஆனால் இந்த உணர்ச்சி இனியும் எத்தனை நாள் பொறுத்து செட்டியார் பிள்ளைகளை மண்வெட்டி எடுக்கவும் கோடாலி எடுக்கவுமான சரீரப் பிரயாசை வேலை அதாவது உண்மை உழைப்பாளி நிலைக்கு கொண்டு வந்து விடுமோ, அல்லது எவரும் பொறாமை அதாவது பெரிய பணக்காரனைப் பார்த்து சின்னப் பணக்காரன் காய்ந்து தீய்ந்து விழுகும் உணர்ச்சியாகி மங்கிவிடுமோ என்று பார்ப்போம்.
குடி அரசு கட்டுரை 29.11.1936