சர்க்காரின் ஞானோதயம்

பிரசாரக் கூட்டங்களில் காங்கிரஸ்காரர்கள் மற்ற கட்சியார்களை அற்பத்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் பேசுவதைப்பற்றியும், காங்கிரஸ்காரர்கள் அல்லாத மற்றவர்கள் கூட்டங்களில் காங்கிரஸ் காலிகளும், பல கஞ்சித் தொட்டிக் கூலிகளும் கல்லெறிதல், செருப்பு வீசுதல், அழுகல் முட்டைகள், அசிங்கப் பண்டங்கள் வீசுதல், அனாவசியமாய் மற்றவர்கள் கூட்டங்களில் “காந்திக்கு ஜே” “சத்தியமூர்த்திக்கு ஜே” என்பது போன்ற முட்டாள்தனமான மொழிகளைக் கூவி தொல்லைப்படுத்துதல், பள்ளிக்கூடத்து பிள்ளைகள் கையிலேயும், தெருவில் பிச்சையெடுக்கும் எச்சிலைப் பையன்கள் கையிலேயும் கொடிகளைக் கொடுத்து பிரசங்கங்கள் நடக்கும்போது கூட்டத்தைச் சுற்றியும், கூட்டத்து நடுவிலும் கூச்சல் போடும்படி செய்தல் ஆகிய பல காரியங்கள் தொடர்ச்சியாய், கட்டுப்பாடாய் நடந்து வந்ததை “குடி அரசு” மூலம் புள்ளி விபரங்களோடு பல தடவைகளில் எடுத்துக் கூறி வந்திருக்கிறோம். அதை ஆதரித்தே காங்கிரஸ் பத்திரிகைகளும் தங்களது இம்மாதிரியான காலித்தனங்களில் தங்கள் வெற்றியைக் காண்பிப்பதின் மூலம் தெரிந்தோ தெரியாமலோ “ராமசாமி கூட்டத்தில் குழப்பம்” “ஜஸ்டிஸ் கட்சி கூட்டம் கலவரத்தில் முடிந்தது” “விளக்குகள் உடைபட்டன” “கல்லுகளும் செருப்புகளும் எறியப்பட்டன” “அழுகல் முட்டைகள் வீசப்பட்டன” “ராமசாமிக்கு அடி” “சௌந்திரபாண்டியனுக்கு அடி” என்றெல்லாம் கொட்டை யெழுத்துக்களில் எழுதி மகிழ்ந்து காலித்தனங்கள் நடந்ததை மெய்பித்துக்கொண்டே வந்தன.

மற்றும் அதிகாரிகளும் சிற்சில இடங்களில் பார்ப்பனர்களாக உள்ளவர்கள் காங்கிரசுக்கு ஆதரவு காட்டி வந்ததையும், காங்கிரசுக்கு விரோதமானவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததையும் மேல் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் மூலமாகவும் நேரிலும் தெரிவிக்கப்பட்டு வந்தன. இவ்வளவு நடந்தும் இதுவரையிலும் அரசாங்கம் எவ்வித பயன் தரத்தக்க நடவடிக்கையும் கையாளாமல் இருந்ததுபற்றி நாம் அரசாங்கத்தை சலித்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

அதனாலேயே சென்றவாரத்துக்கு முந்தினவாரம் இது சம்மந்தமாய் அரசாங்கத்துக்குக் கண்டித்து எழுதி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரிலும் தகவல் கொடுத்தோம். அவை இப்பொழுதாவது ஒரு அளவுக்கு அரசாங்கத்தாரால் கவனிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஒரு அளவுக்கு ஆறுதல் அடைகிறோம்.

நிற்க, காலித்தனத்தின் மூலம் எலெக்ஷன் வெற்றி தோல்விகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று வெளிப்படையாய் ஏற்பட்டுவிடுமானால் இன்றுள்ள ஸ்தானங்களெல்லாம் எந்த தேர்தலிலானாலும் போட்டியில்லாமல் ஜெயித்துவிட முடியுமென்று எவ்வித உறுதியும் கூற நம்மால் முடியும். ஏனெனில் காங்கிரஸ்காரர்கள் கூலியும் பதவியும் கொடுத்து ஆள்களைச் சேர்த்து காலித்தனம் செய்யச் செய்ய வேண்டும். மற்ற கட்சிக்கு அவ்வித நிர்ப்பந்தம் எதுவுமில்லை. தடை செய்யாமலிருந்தாலே காங்கிரஸ் காலித்தனத்தை விட நூறு மடங்கு செய்யச் செய்வதற்கான சௌகரியங்களுண்டு. இதை உத்தேசித்தேதான் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் திருச்செங்கோடு ஜஸ்டிஸ் மகாநாட்டின் திறப்புவிழா ஆற்றிய சொற்பொழிவில் வியக்தமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதாவது “காங்கிரஸ்காரர்கள் காலித்தனத்தையே தங்கள் வெற்றி பெறும் ஆயுதமாகக் கருதி இருக்கிறார்கள். நாங்களும் அப்படியே கருத ஆரம்பித்தோமானால் காங்கிரஸ்காரர்களைவிட நூறு மடங்கு மேன்மையாகவும் பயன் தரத்தக்கதாகவும் செய்யச் செய்ய முடியும்” என்பதை விளங்கப் பேசி இருக்கிறார். அதன் பிறகு செட்டி நாட்டு ராஜா சர் அண்ணாமலை அவர்கள் கூட்டத்தில் சிலர் செய்த காலித்தனமும் தோழர் சௌந்திர பாண்டியன் அவர்கள் கூட்டத்தில் நடந்த காலித்தனமும் படம் பிடித்தாற்போல் அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டு விட்டது. இவ்வளவு ஆன பிறகே சர்க்காருக்குக் கொஞ்சமாவது தோன்றி அதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள முன் வந்தது ஒரு அளவுக்காவது புத்திசாலித்தனமானதாகும்.

குடி அரசு துணைத் தலையங்கம் 06.12.1936

You may also like...