சம்பளக் குறைப்பு
சென்னைக் கார்ப்பரேஷனில் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்க திட்டம் கொண்டுவந்து காங்கிரஸ்காரர்கள் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிய வருகிறது.
அவர்கள் சம்பளம் குறைக்க கருதி இருக்கும் உத்தியோகங்கள் ஐந்திலும் இப்பொழுது பார்ப்பனரல்லாதாரே இருந்து வருகிறார்கள். சம்பளம் குறைந்தால் பார்ப்பனரல்லாதார் தானே பாதிக்கப்படுவார்கள் என்கின்ற தைரியத்தின் மீதே காங்கிரஸ்காரர்கள் சம்பளம் குறைத்திருக்கிறார்கள் என்றாலும் எந்தக் காரணத்தை முன்னிட்டானாலும் அரசாங்கத்தார் அந்தச் சம்பளக் குறைப்பை ஏற்று காங்கிரஸ்காரர் குறிப்பிட்டதுபோல் குறைத்து விடுவதே புத்திசாலித்தனமானது என்று கூறுவோம்.
இந்தியாவின் இன்றைய வறுமைப் பிணி, கல்வியில்லாக் குறைப்பிணி, மற்றும் பல பிணிகள் என்பவற்றிற்கு மூலகாரணம் பார்ப்பனீயமே என்றாலும் இந்த சம்பளக் கொள்ளையும் அதற்குச் சமமானதென்றே கூறுவோம்.
சம்பளம் குறைந்தால் ஒழுக்கமும் நீதியும் சம நிலையும் ஏற்பட வசதி உண்டு என்பது நமது அபிப்பிராயம்.
அன்றியும் இன்றைய சம்பள முறை கூட்டுக் கொள்ளை. அதுவும் சட்டபூர்வமான கூட்டுக் கொள்ளை என்று கூறுவோம்.
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர், தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறியாக இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சம்பளங்களைக் குறைக்க சம்மதங் கொடுக்கும்படி வேண்டுகிறோம். கவர்னர் பிரபு அதை அனுமதிக்க மறுத்தால் அதையும் வெளியிட்டு விட விரும்புகிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 29.11.1936