பொப்பிலி பெருந்தன்மை
பொதுப்பணத்தை பொன்விழாக் கொண்டாட்டத்துக்குச் செலவு செய்யக்கூடாதென்றும் ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்றக்கூடாதென்றும் சர்க்கார் உத்தரவு பிறப்பித்ததினால் ஜஸ்டிஸ் கட்சியாரெல்லாம் துரோகிகள் என்று காங்கிரஸ் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். இதற்காக, அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு தேச மக்கள் ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் ஒரு பார்ப்பன வக்கீல் “ஹிந்து” பத்திரிகையில் எழுதியிருக்கிறார். ஆனால் இதர மாகாண நிலைமையை கவனித்தால் சென்னை சர்க்கார் மிக்க கௌரவமாக நடந்திருப்பதாகவே தோற்றுகிறது; பொதுப் பணச்செலவில் பொன்விழாக் கொண்டாடக்கூடாதென்று சென்னை சர்க்கார் தடுத்தார்களேயன்றி கொண்டாடியவர்களை தண்டிக்க எண்ணவில்லை. பாஞ்சாலத்தைச் சேர்ந்த ஷெக்புராவிலோ, பொன்விழாக் கொண்டாடிய நகரசபை மெம்பர்களைத் தண்டிக்கப் போவதாக டெபுடி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
டிசம்பர் 23ந்தேதியன்று கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் பொன்விழாவையொட்டி முனிசிபல் கட்டிடத்தில் தேசீயக் கொடியை உயர்த்துவதென்றும் தீபாலங்காரம் செய்வதென்றும் அதற்காக 100 ரூபாய் செலவிடுவதென்றும் தீர்மானம் செய்து தலைவர் உட்பட எட்டுப் பேர் முடிவு செய்து பொன்விழாக் கொண்டாடினார்களாம். இது முனிசிபல் சட்டத்துக்கும், ராஜவிசுவாசப் பிரமாணத்துக்கும் விரோதமானதென்றும் அவர்களை முனிசிபல் சட்டத்தின்படி மெம்பர் பதவியிலிருந்து நீக்காதிருக்க ஏதாவது காரணங்களுண்டானால் காட்ட வேண்டுமென்றும் டெபுடி கமிஷனர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். காங்கிரஸ் சர்க்காருக்குப் போட்டி ஸ்தாபனம் என்பது உலகப்பிரசித்தம். ராஜவிசுவாசப் பிரமாணம் செய்து நகர சபைகளிலும் சட்டசபைகளிலும் அங்கத்தினர்களா யிருப்பவர்கள் சர்க்கார் விதிகளுக்கும், உத்தரவுகளுக்கும் கட்டுப்பட்டுத்தான் நடக்கவேண்டும். ராஜவிசுவாசப் பிரமாணம் செய்கிறவர்கள் சட்டசபைகளில் சர்க்காருக்கு விரோதமாக எதுவும் செய்யக்கூடாதென்று சட்ட மறுப்பு பிரம்மாவான காந்தியாரே கட்டளையிட்டிருக்கிறார். இந்நிலையில் ஷெக்புரா டெபுடி கமிஷனரையோ சென்னை சர்க்காரையோ குறைகூற முடியாது. வாஸ்தவத்தில், கண்ணியமாக நடந்து கொண்ட சென்னை சர்க்காருக்கு காங்கிரஸ்காரர் நன்றி காட்டவும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
சர்க்காரோடு போட்டி போடும் காங்கிரசின் பொன் விழாக் கொண்டாட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிய ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்களை தண்டிக்க சென்னை சர்க்கார் எண்ணாதது பெரிய காரியமென்றுதானே சொல்ல வேண்டும். ஆகவே ஐஸ்டிஸ் கட்சியையும், மந்திரிகளையும் காங்கிரஸ்காரர் தூற்றுவது அயோக்கியத்தனமாகும்.
குடி அரசு கட்டுரை 12.01.1936