மகன் செத்தாலும் மருமகள் “முண்டை” ஆக வேண்டும்

ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர்களிடம் பொறாமைப்பட்ட பெரியார்கள் சிலரின் வீரப்பிரதாபம் இன்று காங்கிரசின் சாதாரண ஆட்களின் வாலைப் பிடித்துக் கெஞ்சிக்கொண்டு திரியும்படியான நிலைமை ஏற்பட்டது பற்றி நாம் சந்தோஷப்படுவதா வெட்கப்படுவதா என்பது தெரியவில்லை. ஒரு காலத்தில் கோவை ஜில்லா பிரமுகர்கள் என்று சொல்லி முன்னணியில் இருந்து அரசியல் பூஜையில் முதல் தீர்த்தப்பிரசாதம் பெற்று வந்த பெரியார்கள் இன்று காங்கிரசில் பக்தர்கள் ஆன காரணத்தால் தோழர் சத்தியமூர்த்தியாரையும் அவனாசிலிங்கனாரையும் சுப்பய்யா முதலியாரையும் “எனக்கு இன்ன தாலூகா கொடு” “எனக்கு இன்ன பிர்க்கா கொடு” என்று கெஞ்சவும் அவனாசிலிங்கம் போன்றவர்கள் எல்லாம் “அதுதான் கொடுப்பேன் வாங்கினால் வாங்கிக்கொள் இல்லாவிட்டால் போ” என்று சொல்லவும் “இதற்குத் தானா நான் காங்கிரசுக்கு வந்தேன்? என் யோக்கியதை என்ன? அந்தஸ்து என்ன” என்று இந்தபக்தர்கள் கேட்கவும் அதற்கு அவனாசிலிங்கம் அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து தனது மார்பைப்பார்த்துக் கொண்டு “உம்மை யாரய்யா வரச்சொன்னார்? போமே இப்பொழுது வேண்டுமானாலும்” என்று சொல்லவும் இதைக் கேட்ட பக்தர்கள் “உம்மைச் சொல்லி என்ன செய்வது நம்ம புத்தியைச் சொல்ல வேண்டும்” என்று தன்னைத்தானே நொந்துகொண்டு புதிய ஞானம் உண்டாக்கி கொள்வதுமாக உள்ள ஒரு சீன் இனி எப்போதுமே பார்க்கக் கிடைக்காத அவ்வளவு அற்புதமான சீன் என்று சொல்லலாம். இவ்வளவுக்கும் இந்த கனவான்களுக்கு திருப்தி எல்லாம் ஜஸ்டிஸ் கக்ஷி ஒழியப்போகுதே அதுவே போதும் என்பதல்லாமல் வேறு ஒன்றும் இருப்பதற்கில்லை.

இது எப்படியோ இருந்துபோகட்டும், இதைப்பார்த்து நாமும் வேண்டுமானாலும் சிறிது சிரிக்கலாம். ஆனால் இந்தமாதிரி தோழர்கள் அவினாசிலிங்கம் சுப்பையா கோயமுத்தூருக்கும், தோழர் குப்புச்சாமி முதலியார், அண்ணாமலை முதலியார், சீனிவாசராவ், உபயத்துல்லா வட ஆற்காடுக்கும் தோழர் கிருஷ்ணசாமி பாரதி மதுரைக்கும் என்பதுபோல் ஸ்தாபனங்கள் பிச்சை கொடுக்கின்ற பிரபுக்களாக அமைகிறது என்றால் இது சுயராஜ்ய தேசமா, சமதர்ம ராஜ்ய தேசமா, அல்லாவிட்டால் தன்னரசு சுதேச ராஜ்யமா என்பதுதான் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

“குடைநிழல் இருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந்தோர் நண்ணினும் நண்ணுவர்”

“ஆறிடு மேடும் மடுவும் போலாம் செல்வம் மாறிடும் ஏறிடும்”

என்பதெல்லாம் பச்சையாய் பூதக் கண்ணாடியில் தெரிவதுபோல் தெரிகின்றது. இந்த லக்ஷணத்தில் தேசத்தின் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்லும் பத்திராதிபர்கள் யோக்கியதையோ அப்பப்பா நினைக்கவே நடுங்குகிறது மனம். இதெல்லாம் நாம் சொல்வது சம்பந்தப்பட்ட எந்த ஆளையும் பார்த்தல்ல, அவர்களது பொறுப்பைப் பார்த்தேயாகும். ஆகவே இது ஒரு “புரக்ஷி” காலம் தான் என்பதில் சந்தேகமில்லை.

குடி அரசு கட்டுரை 15.11.1936

You may also like...