முனிசிபல் நிர்வாகம்
நம் வீட்டுக் காரியங்களை நாமே நமது இஷ்டப்படி நடத்த உரிமை இருக்கவேண்டும். வீட்டுக் காரியங்களில் பிறர் தலையிடுவதை ஒருவரும் ஆதரிக்கமாட்டார்கள். இது பொதுவிதி. ஆனால் வீட்டுக் காரியங்களை நடத்த நமக்கு சக்தியில்லாமல் குடும்பம் பாழானால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டியது அறிவாளிகள் கடமையல்லவா? வீட்டையோ, குடும்பத்தையோ பாழாக்க, வீட்டு முதலாளிக்கோ குடும்பத் தலைவருக்கோ உரிமையு மில்லை; அதிகாரமுமில்லை. குடும்ப நிர்வாகம் நடத்த ஆற்றலில்லாத தலைவர்களைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி ஏனைய குடும்பத்தினர் குடும்ப நிர்வாகம் நடத்துவதையும் நாம் கண் கூடாகக் காண்கிறோம்.
இந்தியர்களை சுய ஆட்சியில் பழக்கும் நல்ல நோக்கத்துடன் 1856ல் இந்தியாவில் முனிசிபல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1930ல் அது திருத்தப்பட்டது. ஜனங்களுக்கு வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களை ஜனப் பிரதிநிதிகளே கவனித்து நடத்தினால் பொதுஜன க்ஷேமம் விருத்தியடையும் என்பது முனிசிபல் சட்டம் நிறைவேற்றி யவர்களின் கருத்து. ஆனால் தற்காலம் ஸ்தல ஸ்தாபனங்களின் நிலைமை என்ன? கட்சிப் பிணக்கும் சூழ்ச்சிகளும் இல்லாத ஸ்தல ஸ்தாபனங்கள் தென்னாட்டில் உண்டா?
சேர்மன் கட்சி, வைஸ் சேர்மன் கட்சி, மாஜி சேர்மன் கட்சி, மாஜி வைஸ் சேர்மன் கட்சி எனப் பல கட்சிகள் தோன்றி கட்சிச் சண்டை தாண்டவமாடாத ஸ்தல ஸ்தாபனங்கள் தென்னாட்டில் எத்தனை? தலைவர் தேர்தல் காலங்களில் கட்சி பலம் தேடும் பொருட்டு கையாளப்படும் அயோக்கியத்தனமான சூழ்ச்சிகளை யார்தான் அறியார்கள்.
மேலும் இதுகாறும் ஸ்தல ஸ்தாபனங்களில் எந்த அரசியல் கட்சியாரும் தலையிடவில்லை. இப்பொழுது புது நாணயமாக காங்கிரஸ்காரர் ஸ்தல ஸ்தாபனங்களில் பிரவேசித்திருக்கிறார்கள். ஜலம், ரஸ்தா, பள்ளிக் கூடம், ஆஸ்பத்திரி, வெளிச்சம், காற்று இவற்றை கவனித்து பொதுஜன க்ஷேமத்தை விருத்தி செய்யவேண்டிய ஸ்தல ஸ்தாபனங்களில் அரசியல் கட்சிகளுக்கு வேலையில்லையானாலும் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற காங்கிரஸ் “பெரியார்கள்” முடிவு செய்து விட்டார்கள். சில ஜில்லாபோர்டு சபைகளிலும் அவர்கள் ஆதிக்கம் பெற்றும் இருக்கிறார்கள். ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரஸ்காரர் பிரவேசிப்பது சரியல்ல வென்று காங்கிரஸ் பக்தர் வலங்கைமான் சாஸ்திரியாரும் கூறுகிறார். யார் என்ன கூறினால் என்ன? காங்கிரஸ் கும்பல் செவி சாய்க்குமா? அரசியல் காரணங்களை முன்னிட்டு ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றவில்லையென காங்கிரஸ் வாலாக்கள் கூறிக் கொண்டாலும் அவர்களது அந்தரங்க நோக்கம் அரசியல் காரணமே என்பதை அவர்களுடைய பேச்சுகளே உறுதிப்படுத்துகின்றன. ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் தேசீயக் கொடியைப் பறக்க விடுதல், தேசீயத் தலைவர்களுக்கு உபசாரப் பத்திரமளித்தல், கதருக்கு ஆதரவு தேடுதல், ஹிந்திப் பிரசாரம் செய்தல், பாரதியார் பாடலைப் பள்ளிப் பையன்கள் பயிலும்படி செய்தல் முதலியனவே காங்கிரஸ்காரர் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றுவதின் நோக்கம் என காங்கிரஸ்காரரே பகிரங்கமாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் கூடிய திருநெல்வேலி ஜில்லா போர்டு கூட்டத்தில் இந்நோக்கங்களை பூர்த்தி செய்யக்கூடிய தீர்மானங்கள் சில கொண்டுவரப்பெற்று நிறை வேற்றப்பட்டும் இருக்கின்றன.
ஆகவே ஸ்தல ஸ்தாபன நிருவாகம் குட்டிச்சுவராகும் காலம் உதயமாகிவிட்டது. அதற்குப் பரிகாரம் தேட முயலாவிட்டால் பொதுஜன க்ஷேமம் பெரிதும் பாதிக்கப்படும் என்பது நிச்சயம்.
எனவே ஆபத்தான இந்தச் சந்தர்ப்பத்தில், திருப்பதியில் கூடிய முனிசிபல் ஊழியர் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுள் ஒரு தீர்மானம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதாவது முனிசிபல் நிர்வாகம் மாகாண சர்க்கார் நிருவாகத்துக்கு மாற்றப்பட வேண்டு மென்று ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. மகாநாட்டுக்குத் தலைமை வகித்த வெங்கடகிரி குமாரராஜா இதை ஆதரித்துப் பேசியிருக்கிறார். மகா நாட்டைத் திறந்து வைத்த காங்கிரஸ் பக்தர் தோழர் ஸி. ஆர். ரெட்டியாரும் அதை எதிர்க்கவில்லை. எனவே அவருக்கும் அந்தத் தீர்மானம் உடன்பாடென்றே தோன்றுகிறது.
நாமும் ஏறக்குறைய 10ஆண்டுகளாகவே விடாமல் அடிக்கடி இதையே கூறிவந்திருக்கிறோம். என்றாலும் இத்தனை நாள் பொறுத்தாவது அது ஒரு மகாநாட்டில் காங்கிரஸ் கக்ஷி பிரதான புருஷர் தலைமையிலும் ஜஸ்டிஸ் கக்ஷி பிரதான புருஷர் தலைமையிலும் வரவேற்புத் தலைவரால் பிரஸ்தாபிக்கப்பட்டதும் இவர்கள் ஆதரித்ததும் பெரிதும் மகிழ்ச்சியேயாகும்.
தென்னாட்டு ஸ்தல ஸ்தாபனங்களின் தற்கால நிலைமையை உணர்ந்தவர்கள் எல்லாம் அதை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் ஸ்தல ஸ்தாபன நிருவாகம் அவ்வளவுக்கு ஊழலாகி விட்டது. வரிப்பணத்தில் பகுதிப்பணம் கொள்ளை போகவும் பாழாகவும் பயன்படுகின்றது.
மேலும் பலவித பொதுநிதிகள் திரட்டி, சரியாக நிர்வாகம் செய்யாமலும், துஷ்பிரயோகம் செய்தும் அவப்பேர் சம்பாதித்திருக்கும் ஒரு கூட்டம், மெம்பர்களாயிருந்தே கண்ட்ராக்ட் எடுத்து அனுபவிக்கும் ஒரு கூட்டம் ஸ்தல ஸ்தாபனங்களில் புகுந்திருக்கும்போது நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா? ஆகவே திருப்பதி மகாநாட்டுத் தீர்மானத்தை சர்க்கார் அநுதாபத்துடன் கவனித்து முனிசிபாலிட்டி களின் நிருவாகத்தை ஏற்று மக்களுக்கு வேண்டுவன செய்ய சீக்கிரம் முன் வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 12.01.1936