முஸ்லீம்கள் தேசத் துரோகிகளா?

 

தனித்தொகுதி வேண்டும், வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தேசத்துரோகப் பட்டம் சூட்டுவது ஒரு கூட்டத்தாரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்தக்கூட்டத்தார் யார்? பார்ப்பனர்களும் பார்ப்பன சோதியில் கலந்த ஒரு சில பார்ப்பனரல்லாதாருமே. ஜனநாயகக் கொள்கைக்கு தனித்தொகுதியும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவமும் முரண்பட்ட தென்று சொல்லப்பட்டாலும் இந்தியாவின் விசேஷ நிலைமைக்கு அவை இன்றியமையாதனவாகும். இந்திய நிலைமைக்கு சமதர்மக் கொள்கை பொருந்தாதென்று கூறும் காந்தியாரும் காங்கிரஸ் வாலாக்களும் அந்தந்த தேச நிலைமைக்குத் தக்கபடி கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஜாதிகளும் பாஷைகளும் உடைய இந்தியாவிலே தேசீய உணர்ச்சி என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது; அப்படித்தான் இருக்கவும் முடியும். ஊன்றிப்பார்த்தால் இந்திய நிலைமைக்கு ஜனநாயக ஆட்சி பொருத்தமானதே அல்ல. ஜனநாயக ஆட்சியை விட ஹிட்லர் ஆட்சியே இந்தியாவுக்குப் பொருத்தமானதென்றும்கூடச் சொல்லி விடலாம். இருந்தாலும் “ஜனநாயகமுறையில்” உருவாக்கப்பட்ட ஒரு அரசியல்திட்டம் இந்தியர்களுக்கு வரப்போவதால் அந்தத் திட்டத்தினால் எந்த வகுப்பாருக்கும் பாதகம் ஏற்படாத முறையில் தேவையான பாதுகாப்புகள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும். பிரிட்டிஷ் முதல் மந்திரியின் வகுப்புத் தீர்ப்பு எந்த சமூகத்துக்கும் பூரண திருப்தி யளிக்கவே இல்லையாம். ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒடுக்கப்பட்டவர் களும் அதைக் கண்டித்தே வருகிறார்களாம். அப்படியானால் வகுப்புத் தொல்லை உள்ள நாட்டில் எல்லா வகுப்பாருக்கும் திருப்தியளிக்கக் கூடிய ஒரு சமரசத்திட்டம் காண்பது எப்போதுமே யாராலுமே முடியாத காரியமே. எனவே வரப்போகும் சீர்திருத்தம் வெற்றிகரமாக நடந்து தீரவேண்டுமானால் தனித் தொகுதியையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அந்தப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால் எவ்வளவு சீர்திருத்தம் வந்தாலும் உள்க்கலகம் ஒருநாளும் ஒழியாது.

இதற்கு கல்கத்தாவில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையே போதிய அத்தாட்சியாகும். வங்காளத்தில் முஸ்லீம்கள் இந்துக்களைப்போலவே சரிசமமான ஜனத்தொகை கொண்டவர்கள். அப்படி இருந்தும் கல்கத்தா கார்ப்பரேஷனில் சகல உத்தியோகங்களிலும் முஸ்லீம்களுக்கு நூற்றுக்கு 20 ஸ்தானங்கள் வழங்கவேண்டும் என்று கல்கத்தா கார்ப்பரேஷன் முஸ்லீம் அங்கத்தினர்கள் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்கள். ஹிந்து கௌன்சிலர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் முட்டுக்கட்டை போட்டார்கள். அதன் பயனாய் கல்கத்தா கார்ப்பரேஷன் முஸ்லீம் அங்கத்தினர்களில் ஒருவர் நீங்கலாக மற்ற யாவரும் ராஜிநாமாச் செய்துவிட்டார்கள். தமது சகாக்களைப் பின்பற்றி முஸ்லீம் மேயரும் ராஜிநாமாச் செய்துவிட்டார். முஸ்லீம் மெம்பர்கள் தீர்மானத்தை கல்கத்தா கார்ப்பரேஷன் அங்கீகரிக்கும் வரையில் கல்கத்தா முஸ்லீம்கள் திருப்தியடையமாட்டார்கள் என்றும், கல்கத்தா கார்ப்பொரேஷனின் தற்போதைய தொகுதி முறையை எடுத்துவிட்டு முஸ்லீம்களுக்குத் தனித்தொகுதி ஏற்படுத்தி ஸ்தானங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கல்கத்தா கிலாபத் மகாநாட்டில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இதனால் முஸ்லீம்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்று சொல்லி விடமுடியுமா? வகுப்புவாதிகள் என்று சொல்லி அவர்கள் கக்ஷியை ஒழித்து விட முடியுமா? தத்தமக்கு இருக்கவேண்டிய நியாயமான உரிமைகளைக் காப்பாற்ற முயல்வது எங்ஙனம் தேசத்துரோகமாகும்? மேலும் தேசமே பிரதானம் என்று கூச்சல்போடும் காங்கிரஸ் தியாகிகள் சட்டசபை ஸ்தானங் களிலும் உத்தியோகங்களிலும் ஏன் கவலை செலுத்த வேண்டும்.

முஸ்லீம்களோ, ஒடுக்கப்பட்டவர்களோ சில சட்டசபை ஸ்தானங் களையோ, சில உத்தியோகங்களையோ அதிகப்படியாகப் பெற்றுவிட்டால் என்ன குடிகேடு வந்துவிடப்போகிறது? முஸ்லீம்களுக்கோ ஒடுக்கப்பட்ட வர்களுக்கோ தேச நிருவாகம் நடத்த ஆற்றலில்லை யென்று எந்த ஆண் மகனாவது கூற முன் வருவானா? தேச பக்தர்கள் என்று கூறிக்கொள்வோரின் உண்மையான லட்சியம் தேச க்ஷேமமானால், தேச நிர்வாகம் நடத்துவோரின் ஜாதியையோ, மதத்தையோ, வகுப்பையோ ஆராய வேண்டிய அவசியமே இல்லை. எனவே “வகுப்புவாதம் ஒழிய வேண்டும், பொதுத் தொகுதிதான் வேண்டும், தனித்தொகுதி கூடவே கூடாது” என்று கூறுவது பக்கா மோசடியா யல்லவா என்று கேட்கின்றோம்.

வங்காளத்திலே முஸ்லீம்கள் மெஜாரிட்டி சமூகத்தார். அப்படியிருந்தும் நகரசபை உத்தியோகங்களில் 100க்கு 20வீகிதமே வேண்டுமென்கிறார்கள். இந்தவிதமான கோரிக்கையையும் இந்துக்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை யானால் முஸ்லீம்கள் தனித் தொகுதி வேண்டுவது எங்ஙனம் தப்பாகும்.

மேலும் இந்தியா ஹிந்துக்களுக்கே என்று கர்ஜிக்கிறார் ஹிந்து மகா சபை வீரர் பாய்பரமாநந்தர். பண்டித மாளவியாவும் அதை ஆதரிக்கிறார்.

பண்டித மாளவியா காங்கிரசைத் தாங்கும் பெரிய கர்×ண்களில் ஒருவர். எந்த காங்கிரஸ்வாதியும் பாய்பரமாநந்தர் அபிப்பிராயத்தை மறுக்க இந் நிமிஷம் வரை முன்வரவில்லை.

மௌனம் உடன்பாட்டுக்கு அறிகுறி என்பது மெய்யானால், ஏனைய காங்கிரஸ் வீரர்களும் பாய் பரமாநந்தரை ஆதரிப்பதாகவே நம்ப வேண்டியதாக இருக்கிறது.

பரமாநந்தர் அபிப்பிராயப்படி இந்தியா ஹிந்துக்களுக்கே சொந்த மானால், முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், பார்ஸிகளுக்கும், சீக்கியர்களுக்கும், கூர்க்கர்களுக்கும், ஆங்கிலோ இந்தியர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடமெங்கே? அவர்கள் வங்காளகுடாக் கடலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அல்லது யூதர்களைப்போல் தேசாந்திரிகளாய் அலையவேண்டுமா? ஹிந்து மகாசபையார் ஆணவமும், காங்கிரஸ்காரர் பித்தலாட்டமும் அழியாதிருக்கும் வரை சிறுபான்மை சமூகங்களுக்கும் அரசியல் உணர்ச்சி பெறாத வேறு சில மெஜாரட்டி சமூகங்களுக்கும் தனித்தொகுதியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் இன்றியமையாததே.

எனவே பார்ப்பனப் பூச்சாண்டிக்கு அஞ்சாமல் அவ் விரண்டையும் பெற அவ்விரண்டினாலும் நலம் பெறவேண்டிய சமூகங்கள் கிளர்ச்சி செய்து கொண்டுதான் இருக்கவேண்டும்.

குடி அரசு கட்டுரை 12.01.1936

You may also like...