சுயமரியாதைத் தோழர்களும் காங்கிரசும்
சுயமரியாதைத் தோழர்கள் சிலர், ஜஸ்டிஸ் கட்சியானது இரண்டொரு சட்டசபைத் தேர்தலிலும், சில ஸ்தல ஸ்தாபன தேர்தலிலும் தோல்வி அடைந்து விட்டது என்றும் பாமர மக்களிடம் ஆதரவை இழந்துவிட்டது என்றும் பார்ப்பனப் பத்திரிகைகளில் காணும் சேதிகளை நம்பி காங்கிரசினிடத்தில் மோகம் ஏற்பட்டு காங்கிரசைத் தழுவ மேல் விழுந்து போகிறார்கள். ஆனால் அதற்காகத் தாங்களாகவே நேரே போய்ச் சேருவதற்குப் போதிய தைரியமில்லாமல் “சுயமரியாதை இயக்கம் இப்படிக் கெட்டுப் போய் விட்டது” “அப்படிக் கெட்டுப் போய்விட்டது”, “மந்திரிகள் பின்னால் வால் பிடித்துத் திரிகிறது” “பணக்காரர்களை ஆதரிக்கிறது” என்கின்றது போன்ற பாட்டிப் பேச்சுக்களைச் சொல்லிக் கொண்டு போவதன் மூலம், தங்களை வீரர்கள் என்று கருதுவார்கள் என்று நினைத்துக் கொண்டு செல்லுகிறார்கள்.
சுயமரியாதை இயக்கம் மந்திரிகளைக் கவிழ்த்துப் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கவோ, பணத்தை “வெறுத்து” கண்டவர்களிடம் பல்லைக் கெஞ்சி வாழவோ ஒரு நாளும் ஒப்புக் கொள்ளவில்லை, ஒரு நாளும் ஒப்புக் கொள்ளப் போவதுமில்லை.
ஆதலால் பணக்காரர்கள் “அல்லாதவர்களும்”, மந்திரிகள் “ஆகாதவர் களுமாய்” இருக்கிற காங்கிரசுக்கே இத் தோழர்கள் போய்ச் சேருவதில் நமக்கு ஆக்ஷேபணையில்லை.
இக்கூட்டத்தாரால் ஜஸ்டிஸ் கட்சி ஒரு நாளும் வெற்றி பெற்றுவிட வில்லை. அவைகள் வெற்றிபெற்று நல்ல உச்சஸ்தானத்தில் இருக்கும்போது அதன் நிழலில் வாழ்ந்தவர்கள்தான் இன்று சுயமரியாதை இயக்கம் கெட்டுப் போய்விட்டது என்றும், அதற்கு மந்திரி மயக்கமும், பணக்காரர் பழக்கமும் இருக்கிறது என்றும் சொல்லுகிறவர்களாய் இருக்கிறார்களே ஒழிய வேறில்லை.
ஆதலால் இதே தோழர்கள் காங்கிரசில் இவர்களுக்கு ஏற்படும் மரியாதையை உணர்ந்தும், ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்ற உடனும், அதற்கு செல்வாக்கும் சாய்காலும் ஏற்பட்ட உடனும் பலர் தாங்களாகவே மறுபடியும் வந்து சேர்ந்து மேலும் மேலும் உதவிபுரிவார்கள் என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு. ஆதலால் மனப்பூர்வமாகவே வழியனுப்பி உபசாரம் சொல்லுகிறோம்.
இந்த தோழர்கள் மாத்திரமல்லாமல் இவர்கள் போல் இனியும் பதினாயிரக்கணக்கான பேர்கள் காங்கிரசில் போய்ச் சேர்ந்த போதிலும் காங்கிரசில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொள்ளச் செய்யவோ, வருணாச்சிரம தர்மத்தை கைவிடச் செய்யவோ ஒரு நாளும் முடியாது என்பதை மாத்திரம் கல்லில் எழுதி வைப்போம்.
எப்போதாவது அந்தப்படி முடியும்படியான ஒருகாலம் ஏற்பட்டு, காங்கிரஸ் வர்ணாச்சிரமத்தை கைவிடவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளவும் ஏற்பட்டு விடுமானால் நாமும் காங்கிரஸ் நிழலில் நின்று சத்தியமூர்த்திக்கு ஜே என்று கூட சொல்லிக்கொண்டு கொடி பிடித்து திரிய சிறிதும் வெட்கப்படமாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வேறு சில தோழர்கள் அதாவது சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி குற்றம் சொல்லாமலும், ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி விஷமப் பிரசாரம் செய்யாமலும் இருக்கிறவர்கள் சிலர் “தாங்கள் பெரும் எண்ணிக்கையாக காங்கிரசுக்குப் போய் காங்கிரசை பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்து விடலாம்” என்பதாக சொல்லிக் கொண்டுபோக உத்தேசித்து இருக்கிறார்கள். இவர்கள் உண்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் ஏற்கனவே இதை பலதடவை பரீக்ஷித்துப் பார்த்து ஆய்விட்டது. இந்த எண்ணங்கள் எல்லாம் “நாம் தோல்வி அடைந்துவிட்டோம்” என்று உண்மையில் கருதுவதாலும் நமக்கு செல்வாக்கு போய்விடுமே என்று பயப்படுவதினாலும் ஏற்படும் அறிகுறிகளே என்பதுதான் நமதபிப்பிராயம்.
எலக்ஷன்களில் தோற்றுவிடுவோம் என்றே வைத்துக் கொள்ளலாம், மந்திரிகள் பதவிகளும் ஜஸ்டிஸ் கட்சியாரிடம் இருந்தே போய்விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம், இதனாலேயே இந்நாட்டில் பார்ப்பனரல்லாதார் செல்வாக்குடன் வாழமுடியாமல் போய்விடும் என்று யாராவது பயப்படக் கூடுமானால் அப்படிப்பட்ட அவர்களுக்கு காங்கிரசே நல்ல பாதுகாப்பான ஸ்தாபனம் என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் நாம் மாத்திரம் காங்கிரசுக்கு சினேகிதர்களாகவோ கொடி தூக்கிக்கொண்டு சத்தியமூர்த்தியார் பின் திரியும் விபீஷணர்களாகவோ இல்லாமல் காங்கிரசின் ஜன்மத் துவேஷியாயும், சத்தியமூர்த்திகளின் வீரமுள்ள பிறவி எதிரிகளாகவும் இருக்கிறவர்களாய் இருந்தால் நாம் “காங்கிரஸ் மந்திரிகளைக்கூட குரங்குபோல் ஆட்டி வைக்கலாம்” என்கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தப்படி ஆட்டிவைக்காவிட்டாலும் அம்மந்திரிகளால் எவ்வித தொல்லையும் ஏற்படாமலாவது காத்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால் நாமும் காங்கிரசுக்காரர்களாகவோ, காங்கிரஸ் நண்பர்களாகவோ ஆகிவிட்டால் அடியோடு நமது சுயமரியாதையை இழக்க நேரிடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
ஒரு காலத்தில் தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, டாக்டர் பி. வரதராஜுலு, திரு. வி. கல்யாணசுந்திர முதலியார் முதலியவர்கள் காங்கிரசில் ஆதிக்கம் வைத்து இருந்தவர்கள் என்பதையும், மற்றொரு காலத்தில் காங்கிரசைக் கைப்பற்ற பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் ஏராளமாய்ப் போய்ச் சேர வேண்டு மென்று இம்மூவரும் இருந்தே பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தோழர்கள் எ. ராமசாமி முதலியார், சர். ஷண்முகம் போன்றவர்கள் எல்லாம் காங்கிரஸ் மெம்பர்களானார்கள் என்பதையும், இவர்களாலும், இந்தத் தீர்மானங்களாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனதோடு எவ்வளவோ பேர் முயன்றும் தோழர் எ. ராமசாமி முதலியாரை ஒரு காங்கிரஸ் கமிட்டி மெம்பராகக்கூட ஆக்க முடியாமல் போய்விட்டதோடு தோழர் வரதராஜுலு நாயுடு 1000 ரூபாய் செலவு செய்து சேலம் காங்கிரஸ் கமிட்டியைக் கைப்பற்றியும்கூட அது செல்லுபடி அற்றதாக ஆக்கப்பட்டு விட்டதென்பதையும் ஞாபகப்படுத்துகிறோம்.
ஆகவே இன்று உண்மையான பார்ப்பனரல்லாதார்கள் என்பவர்களுக்கு நாம் சொல்லுவதெல்லாம் ஒருவன் “வெற்றி பெற்ற” காங்கிரஸ் என்பதில் இருக்கும் அவமானத்தைவிட “தோற்றுப்போன” ஜஸ்டிஸ் கட்சி என்பதில் இருப்பது அவமானமாகாது என்பதேயாகும்.
எப்படி இருந்த போதிலும் காங்கிரசை பார்ப்பனரல்லாத ஆதிக்கத்துக்குக் கொண்டு வருவதற்காக என்று கருதிக்கொண்டு காங்கிரசில் போய்ச் சேர ஆசைப்படுகிற தோழர்களையும் இனியும் ஒரு தடவை பரீட்சித்துப் பார்க்கட்டும் என்கிற ஆசை மீதே மனப்பூர்வமாக ஆசி கூறி வழியனுப்பு உபகாரத்தோடு அனுப்பிக் கொடுக்கிறோம்.
மற்றொரு கூட்டத்தார் காங்கிரஸ் தேசீய சபை என்றும் அதில் அங்கம் வகிக்காமல் இருப்பது தேசத் துரோகமென்றும் கருதுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா. போன்றவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்து தேசபக்த சிகாமணிகளாயும், தேசாபிமானச் சிங்கங்களாயும், தேசீய வீரர்களாகவும் இருந்து தேசத்துக்கோ சமூகத்துக்கோ ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் பார்த்துவிட்டு வெளி வந்தவர்கள்தான்.
இதெல்லாம் பாட்டி கதை ஆதலால் அதற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும் நாம் காலத்தை கழிக்க விரும்பவில்லை.
மற்றொரு கூட்டத்தார் அதாவது இன்று காங்கிரசில் தாங்கள் செல்வாக்கோடு இருப்பதாய் கருதிக்கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத கூட்டத்தார் உண்மையிலேயே நம்மீது அபிமானம் வைத்து கூப்பிடுகிறார்கள். என்ன சொல்லி என்றால் இன்று காங்கிரசில் பார்ப்பனரல்லாதார் தொண்டர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்றும் இந்தச் சமயம் எப்படிப்பட்ட தீர்மானமும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் இந்த தொண்டர்களின் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் பாத்திரமான ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவர் இன்று அதில் இல்லை என்றும் ஆதலால் யாராவது வந்தால் அவருக்கு பட்டாபிஷேகம் சூட்டக் கூடும் என்றும் மனப்பூர்த்தியான ஆசையுடனும் அபிமானத்துடனும் அழைக்கிறார்கள். இவர்களுக்கு நமது ஹிருதய பூர்வமான நன்றி உரியதாகுக.
அவ்வளவுதான் சொல்லக்கூடுமே ஒழிய மற்றப்படி அவர்களின் நினைவு கனவாகக்கூட இருக்க முடியாது என்பதோடு அவ்விஷயத்தை முடித்து விடுகிறோம். ஏனெனில் அந்தப்படி யாராவது சுதந்திர எண்ணமும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள ஒரு பார்ப்பனரல்லாதார் காங்கிரசுக்கு வருவார்களேயானால் சென்னை மாகாண காங்கிரசானது உடனே இந்திய காங்கிரஸ் வேலைக் கமிட்டியாரால் நிர்வகிக்கும்படியான நிலைமை அடைந்துவிடும், இந்தபடி பலதடவை ஆகியும் இருக்கிறது.
பார்ப்பனரல்லாதார்களில் பார்ப்பனரல்லாதார் தலைவர்களில் சுயநலக்காரர்கள், வஞ்சகர்கள், மோசக்காரர்கள், ஒழுக்கமில்லாதவர்கள் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் எல்லோரும் தோழர்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் முதல் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் வரையில் போன்ற உலகமறிந்த காங்கிரஸ் தலைவர்கள் பொதுநல சேவைக்காரர்கள் என்பவர்களைவிட மோசமானவர்களும் நமது சமூகத்துக்கு கேட்டை விளைவிக்கக் கூடியவர்களுமல்ல என்றும் மலை உச்சியில் இருந்து கூறுவோம்.
மனித சுபாவத்தையும், தனி உடைமை தத்துவத்தையும் உணர்ந்தால் இவை நமக்கு ஒரு பெருங் குற்றமாகத் தோன்றாது.
முடிவாக நாம் சொல்லுவதென்ன வென்றால் சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையிலாவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற இரண்டு பிரச்சினையை விட வேறு ஒன்றுமே இன்று இருக்க முடியாது. என்ன விலை கொடுத்தானாலும் பார்ப்பன ஆதிக்கத்தை எந்த துரையிலும் எந்த தலைப்பிலும் ஒழிப்பதே நமது பொது உடமை நமது சமதர்மம் நமது தேசீயம் நமது முக்தி என்பதுதான் நமது அபிப்பிராயம்.
இதை ஏற்றுக்கொள்ளுபவர்கள் நம்முடன் ஒத்துழைக்கவும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் தங்கள் இஷ்டப்படி நடக்கவும் பூரண உரிமை உடையவர்கள்.
இதுவே நமது புது வருஷ செய்தி.
குடி அரசு தலையங்கம் 05.01.1936