காங்கரஸ் கட்டுப்பாடு

சென்னை மாகாணத்தில் இரண்டு நகரசபைகளிலும் ஒரு கார்ப்பரேஷனிலும் ஏழு ஜில்லா போர்டுகளிலும் காங்கரஸ்காரர் மெஜாரிட்டி கட்சியாக இருக்கிறார்களாம். ஆனால் காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற அந்த ஸ்தல ஸ்தாபனங்கள் எல்லாம் கழுதை புரண்ட களமாகவே இருந்து வருகின்றன. தகராறு, பிளவு, சச்சரவில்லாத ஸ்தல ஸ்தாபனமே இல்லை. வேலூர், திருச்சி, திருநெல்வேலி, தென்னாற்காடு கதை பழங்கதையாகிவிட்டது. கர்னூல் ஜில்லா போர்டில் காங்கரஸ்காரர் ஆதிக்கம் பெற்றிருந்தும் இடைக்கால மந்திரிகளைக் கண்டித்து காங்கரஸ்வாதி கொண்டுவந்த தீர்மானம் முழுத் தோல்வியடைந்தது. காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற நெல்லூர் ஜில்லாபோர்டிலே “பட்ஜெட்” நிறைவேறும் காரியம் திண்டாட்டத்திலிருக்கிறது. திருவண்ணாமலை ஜில்லா போர்டு விஷயம் சொல்ல வேண்டியதில்லை, ஜில்லா போர்டு தலைவர் தோழர் எம். ஷண்முக முதலியார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே தீர்மானித்திருந்தும் இன்னும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேயில்லை ஏன்? ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் காங்கரஸ் சாயம் வெளுத்துவிடும். இந்நிலைமையில் சென்னை சட்டசபை மெம்பரும் திருவண்ணாமலை ஜில்லா போர்டு மெம்பருமான தோழர் சி. பெருமாள்சாமி செட்டியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று திருவண்ணாமலை ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சியார் ஒரு தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறார்களாம். ஒரு வருஷத்துக்கு முன்பு நடந்த சென்னை செனட் சபை தேர்தலில் தோழர் பெருமாள் சாமி செட்டியார் காங்கரஸ் அபேட்சகருக்கு வோட்டுக் கொடுக்கவில்லை யென்பதே அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு பொய் என்றும் தன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்ற திருவண்ணாமலை ஜில்லா போர்டு காங்கரஸ் கமிட்டிக்கு அதிகாரமில்லை யென்றும் தோழர் பெருமாள்சாமி செட்டியார் “தினமணி”யில் எழுதியிருக்கிறார். காங்கரஸ் நாற்றத்தை விளக்க இதைவிட வேறு திருஷ்டாந்தம் வேண்டுமா? திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவர் தோழர் குமாரசாமி முதலியார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி முடிவு செய்தது. அதன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதைப் பற்றி யோசிக்கக்கூடிய திருநெல்வேலி ஜில்லாபோர்டு காங்கரஸ் கட்சிக்கூட்டத்தில் “கோரம்” இல்லாததினால் தீர்மானத்தைப்பற்றி யோசிக்கவே இல்லையாம். மன்னர் மகுடாபிஷேகக் கொண்டாட்டத்தில் காங்கரஸ்காரர் கலந்துகொள்ளக்கூடாதென்று காங்கரஸ் தீர்மானித்திருந்தும் எத்தனையோ காங்கரஸ்காரர் கலந்துதானிருக்கிறார்கள். உண்மை இப்படியிருக்கையில் காங்கரஸே இந்தியாவின் ஏகப்பிரதிநிதி ஸ்தாபனம் என்றும் காங்கரஸே ஒழுங்கான, கட்டுப்பாடான ஸ்தாபனம் என்றும் காங்கரஸ்காரர் பெருமையடித்துக் கொள்கிறார்களே!

குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.06.1937

You may also like...