திலகர் நிதி மோசடியும் பொது மக்களும்
– “ஜஸ்டிஸ்” எழுதுவது
“திலகர் சுயராஜ்ய நிதி தவறாக நிர்வாகிக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் அதனால் ஏற்பட்ட நஷ்டம் காங்கிரசுக்கே தவிர அந்நிதிக்கு பொருளுதவி செய்யாதவர்களுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை” என தோழர் சி. ராஜகோபாலாச்சாரி சொன்ன கூற்றை சற்று இங்கு ஆராய்வோம். இக்கூற்றில் மூன்று வகையாக குறிப்புகள் தொக்கி நிற்கின்றன. அதாவது ஒன்று காங்கிரஸ் திலகர் நிதியை தப்பாக நிர்வாகம் செய்ததாகச் சொல்லப் படுவது உண்மையல்ல. இரண்டு இந்நிதிக்கு பணம் கொடுத்தவர்களுக்குத்தான் அதைப்பற்றி குற்றங்குறைகள் எடுத்துரைக்க உரிமையுண்டு. மூன்று அதைப்பற்றி லாபமோ நஷ்டமோ காங்கிரசுக்கேயொழிய வெளியிலுள்ளவர் களுக்கு ஒன்றுமில்லை என்பவைகளாகும். இவ்வாறு இவர் கூறியதைப்பார்த்தால் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் வெளியிட்ட அறிக்கைக்கும் ஆச்சாரியாருடைய கூற்றுக்கும் நெருங்கிய சம்பந்தமிருக்கிறது என்பது நன்கு தெரியவரும். அவ்வறிக்கையில் காங்கிரஸ் தலைவர் கூறுவதாவது,
பழமையானதும், வெகுநாட்களானதும் தணிக்கை செய்யப்பட்டதும், பழைய சாசனங்களோடு ஒதுக்கிவைக்கப்பட்டதுமான ஒரு விஷயத்தைக் குறித்து திடீரென்று புதிதாக அதைப்பற்றி கவலை எடுத்துக்கொள்ளப்படுவது என்றால், அதிலும் கண்ணியமுடையவர்களாயும், பைசாகூட அந்நிதிக்கு நன்கொடையாக அளிக்காதவர்களாலும் பெரிய ஆர்ப்பாட்டம் செய்வதென்றால் இதைக் குறித்து நகைப்பதைத்தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. உபகாரிகள் திருப்தியோடு இருக்கிறார்கள். ஆனால் சிறிதும் உபகாரஞ் செய்யாதவர்களின் ஆத்திரந்தான் பெரிதாக இருக்கிறது. இவர்களைத்தான் அடக்க முடியவில்லை.”
திலகர் சுயராஜ்ய நிதியைக் குறித்து குறை கூறுகிறவர்கள், பண்டிதர் ஜவஹர்லால் எண்ணப்படியும், தோழர் ராஜகோபாலாச்சாரியாருடைய எண்ணப்படியும் காங்கிரசின் விரோதிகளேயாவர். இங்கு எழக் கூடிய கேள்வி காங்கிரசுக்கு உதவி செய்தவர்கள் இன்னவர்கள், அல்லாதவர்கள் இன்னவர்கள் என்று காங்கிரஸ்காரர்களில் சுட்டிக்காட்ட முடியுமா? அல்லது காங்கிரசிடம் திலகர் நிதிக்குபகாரஞ் செய்தவர்களின் பெயர் ஜாபிதாவாவது இருக்கிறதா? அத்தகைய ஜாபிதா அவர்களிடம் இல்லாமல் இருக்கவும் முடியாது. ஏனெனில் ஒரு கோடி ரூபாயும் பணம் படைத்த பெரிய முதலாளிகளிடத்திலா வசூல் செய்யப்பட்டது? இல்லை. ஏழை எளியவர்களிடத்திலும், ஆண்களிடத்திலும், பெண்களிடத்திலும், பள்ளிச் சிறுவர்களிடத்திலும், சிறுமிகளிடத்திலும், கலாசாலை மாணவர்களிடத்திலும் மாணவிகளிடத்திலும் வசூல் செய்யப்பட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் தொண்டர்கள் வீடுவீடாய் வாயில் தோறும் சென்று உண்டிப்பெட்டி ஏந்தி நின்று வசூல் செய்த நிதி என்பதை ஒருவரும் மறந்துவிடக் கூடாது. இது தவிர பொது கூட்டங்களில் பொது ஜனங்களிடத்திலும் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் கூட்டங்களில் பேசப்படும் வேகத்தின் உணர்ச்சியாலும், உற்சாகத்தாலும் பெண்கள் தங்கள் தங்க நகைகளையும் கழற்றிக்கொடுத்திருக்கிறார்கள். இத்தனை வகையிலும் சேர்ந்த நிதியல்லவா திலகர் சுயராஜ்ய நிதி? தெளிவாகச் சொல்லவேண்டுமானால் காங்கிரஸ் ரசீது புத்தகத்தில் அந்நிதிக்கு உதவிசெய்தவர்களில் அநேகருடைய பெயர்கள் பதிவு செய்யாமல் சேர்க்கப்பட்ட பொதுநிதிதான் திலகர்நிதி. காங்கிரஸ்காரர்களுக்கே அந்நிதிக்கு உதவி செய்தவர்களின் பெயர்களை இன்னார் இன்னார் என்று விளக்கிக் காட்ட முடியாத நிலைமையிலிருக்கையில் அந்நிதியைப்பற்றி குறை கூறுபவர்கள் உபகாரஞ் செய்யாதவர்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும்?
திலகர் நிதி மோசடியை வெளிப்படுத்தியது, காங்கிரசின் எதிரிகள் “காங்கிரசுக்கு எதிர் பிரச்சினையாகச் செய்யப்படும் காரியம் என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் நினைத்திருக்கக்கூடும். ஆதலால் இச்சமையத்தில், இம்மோசடியைக் குறித்து வெளிப்படுத்திய மாஜி காங்கிரஸ்வாதிகளும், காங்கிரஸ் அபிமானிகளுமான தோழர்கள் எம்.ஆர். ஜெயகர், ஜி.வி. கெத்கார், பி.வி. மஹாஜன் ஆகியவர்களின் விமர்சனம் ஒரு நாளும் காங்கிரசின் எதிரிகளால் செய்யப்பட்ட காரியமென்றோ அல்லது காங்கிரசின் மானத்தை குறைக்கச் செய்யப்பட்ட காரியமென்றோ சுலபமாகக் கருதிவிட முடியாது. இவ்வாறு திலகர் நிதியைக் குறித்து குற்றங் சொல்லுகிறவர்கள் காங்கிரசுக்கு எதிர்ப்பிரசாரஞ் செய்வதற்கு உபயோகப்படுத்தும் காரியங்களில் இதுவும் ஒன்று என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொன்ன குற்றச் சாட்டிற்கு, மகாராஷ்டிரா மாகாண காங்கிரஸ் கமிட்டியின் மாஜி செகரெட்டரி தோழர் பி.வி. மஹாஜன் “மராட்டா” என்ற பத்திரிகையில் பின் வருமாறு எழுதியிருக்கிறார்:-
“தோழர் எம்.ஆர். ஜயகர் சத்தாராவில் பேசினதைக் கண்டித்து எழுதும் பொழுது ஒரு தேசீய பாஷைப் பத்திரிகை தோழர்கள் ஜயகர் கத்காரும் இன்னுமுள்ளவர்களும் ஏன்? தோழர் சி.ஆர். தாசும் தான் இம்மோசடிக்குப் பொறுப்பாளிகளாயிருந்ததோடு மற்ற தொண்டர்களையும் கையாடச்செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டியிருந்தது. எங்களுடைய தலைவர்களை -அவர்களும் தோழர் ஆச்சாரியாரைப் போன்ற பெரிய தேசபக்தர்கள் என்று நான் நினைக்கின்றேன் – ஆதரிப்பதற்காக பொதுஜனங் களுக்கு முன் இவ்வருவருப்பான காரியமாகிய பழைய கணக்குகளை தெளிவாக உள்ளதை உள்ளவாறு ஒன்றும் ஒளி மறைவில்லாமல் வெளியிடுகிறேன். நான் இவ்வாறு இக்காரியங்களை வெளியிடுவது காங்கிரசுக்கு எதிர்ப்பிரசாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்ல, என்னுடைய சொந்தபாதுகாப்புக்காகவே செய்கிறேன்”. ஆகவே திலகர் நிதியின் மோசடியைப் பற்றி விளக்கியவர் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் மாஜி செகரட்டரி லோகமானிய திலகருடைய பேரப்பிள்ளை, காங்கிரஸ் ஆணையின்படி நடந்து பல தடவை சிறைசென்றவர் என்பதை மனதில் வைத்துக்கொண்டால் இக்காரியங்கள் காங்கிரசுக்கு எதிர்ப்பிரசாரமாக செய்யப்படும் காரியங்கள் என்பதற்கு யாதொரு ஆதாரமுமில்லை என்பது நன்கு தெரியவரும். இக்காரியங்கள் காங்கிரசின் நாற்றத்தை ஒழித்துவிட்டு காங்கிரசின் பழைய நிலையை அடையச் செய்வதற்காக காங்கிரசுக்காகச் செய்யப்படும் காரியங்கள் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.
திலகர் நிதியைக் குறை கூறுவதற்கு காங்கிரஸ்காரர்களுக்குத்தான் உரிமை யுண்டு என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்து வருகிறார்கள் போலும்! ஆனால் அவர்கள் காங்கிரஸ் ஒரு கட்சியல்ல, தேசமே காங்கிரஸ் என்று பறை சாற்றவில்லையா? அவர்கள் கூறியபடி தேசமே காங்கிரஸ் என்றால் ஏன் அவர்களே இப்பொழுது காங்கிரஸ்காரர் என்றும் காங்கிரஸ் அல்லாதார் என்றும் பிரிக்கவேண்டும்? மேலும் தேச விஷயத்தைப்பற்றி கேட்கும் உரிமையை காங்கிரஸ் அல்லாதாருக்கு ஏன் மறுக்க வேண்டும்? அவர்களுக்கு சாதகமான காரியங்களானால் தேசமே காங்கிரஸ் என்றும் ஒவ்வொருவரும் காங்கிரசின் அங்கத்தினர்தான் என்றும் காங்கிரஸ் இத்தேசத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரதிநிதியாக விளங்குகிறது என்றும் நாக் கூசாமல் கூறிவிடுவார்கள். தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமென்றோ அல்லது தங்களுக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டுவிடுமென்றோ அல்லது தங்கள் மானம் கப்பல் ஏறிவிடும் என்றோ கருதினால் உடனே தங்கள் ஸ்தாபனம், தங்களைத் தவிர மற்றவர்களுக்கு இதில் வேலை இல்லை, மற்றவர் குறைகூற அருகதையற்றவர்கள் என்றும், அவர்கள் பணத்தை எவ்விதமானாலும் உபயோகப்படுத்துவார்கள். அதனால் வரும் லாபம் நஷ்டம் அவர்களைச் சார்ந்ததைத் தவிர மற்றவர்களுக்கு அதில் ஒன்றும் பங்கு இல்லை என்றும் அதே நாவால் கூறிவிடுவார்கள்.
ஆனால், திலகர் நிதி பொது மக்களிடம் வசூல் செய்யப்பட்ட நிதி யென்பதையும் இதைப்பற்றி ஒரு அணா பைசாவரையும் கணக்குக் கேட்க பொதுமக்களுக்கு உரிமைஉண்டு என்பதை மறுமுறையும் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு நினைவூட்டுகிறோம். வேண்டுமானால் தோழர்கள் ஜி.வி. கத்கார், பி.வி. மஹாஜன் முதலியவர்கள் காங்கிரஸ்காரர்களும் அல்ல, அனுதாபிகளும் அல்ல என்று ஒரு வேளை தோழர் ஆச்சாரியார் கூறக்கூடும். ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்ல முடியாது. இந்தியர்கள் என்ற ஹோதாவில் தேசீய ஸ்தாபனம் என்று சொல்லிக் கொண்டிருக்கிற – பெருமையடித்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் ஸ்தாபனத்தின் குற்றங் குறைகளை எடுத்துக்காட்டி அதன் பொது வாழ்க்கையின் ஒழுக்கத்தையும் அரசியல் ஒழுக்கத்தையும் சீர்திருத்தம் செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு. திலகர் நிதியை தாறுமாறாக நிர்வாகஞ் செய்ததால் வந்த நஷ்டம் காங்கிரசுக்கு மட்டுமல்ல தேசத்துக்கே பெரும் நஷ்டமாகும். ஏனெனில் தேசம் தான் அதற்கு பணம் கொடுத்தது. தலைவர்களுடைய கண்ணியமான பெயர்களும் உபயோகப்படுத்தப்பட்டன. காங்கிரஸ்காரர்கள் இத்திலகர் நிதியை நிர்வகித்த திறமையிலிருந்து இந்தியர்கள் பெரு நிதியை நிர்வகிக்கும் லட்சணம் எவ்வளவாக மதிக்கப்படும்? திலகர் நிதி மோசடி இந்தியாவுக்கு அவமானமும் இந்தியர்களுக்கு நிந்தையுமல்லவா? காங்கிரசின் மோசடியாகிய செளத் சீ பப்பிள்ஸ் (குணிதtட ண்ஞுச் ஆதஞஞடூஞுண்) யைப்பற்றி ஏன் மற்றவர்கள் பேசக்கூடாது? அது தங்களது சொந்த விஷயம் என்று ஏன் சொல்ல வேண்டும்? இந்நிதிக்கு உதவி செய்யாதவர்கள் குற்றங்குறை சொல்லக்கூடாது என்று தோழர் ஆச்சாரியார் சொல்வது எதைப்போல் இருக்கிறதென்றால் ஒரு பொது கொள்ளையடித்த கள்வனை – மோசக்காரனை பிடித்துக் கேட்கும்போது “நீ அந்நிதிக்கு உதவி செய்தவனல்ல, ஆதலால் உனக்கு என்னைக் கேள்வி கேட்கவோ விவரஞ் சொல்லும்படி கேட்கவோ உனக்கு உரிமை இல்லை. இந்நிதிக்கு யார் யார் உதவி செய்தார்களோ அவர்களுக்கு பதில் சொல்லிக் கொள்ளுவேன். ஆனால் அந்த லிஸ்டு கைவசமில்லை” – என்று சொல்லுவது போலிருக்கிறது.
திலகர் நிதி மோசடி
திலகர் சுயராஜ்ய நிதி தப்பாக நிர்வகிக்கப்பட்டதா? என்று சந்தேகங் கொள்ளுகிற தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரைப் போன்ற தோழர்களை திலகர் நிதியை பரிசோதிக்கும்படி – ஆடிட் செய்யும்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியமனஞ் செய்யப்பட்ட ஆடிட்டர்களுடைய ரிப்போர்ட்டை ஒரு தரம் படித்துப் பார்க்க விரும்புகிறோம்.
“காங்கிரஸ் þ நிதியை மோசடி செய்து விட்டது என்றும் பொதுமக்களை தப்பான வழியில் நடத்திச் செல்லுவதற்காகக் கையாளப்படும் யோக்கியப் பொறுப்பற்ற செய்கையாகும்” என்றும் காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். இவ்வாறு மோசடி நடந்ததாக நினைக்கும்படி செய்தது அந்நிதியை வைத்து நிர்வகித்த சில காங்கிரஸ்காரர்கள் நடந்து கொண்ட பொறுத்தமற்ற – தவறான முறையேயாகும். அவர்கள்தான் சந்தேகத்துக்கு இடங்கொடுத்தவர்கள் கையாடினதும் சிறிய தொகையை பிரமாண்டமான தொகை!! ஆடிட்டருடைய ரிப்போர்ட்டை கூர்மையாக ஊன்றிக் கவனித்தபின் தோழர் பி.வி. மஹாஜன் அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட விஷயமாகும். அகில இ. கா. கமிட்டியால் நியமனஞ் செய்யப்பட்ட ஆடிட்டர்கள் சந்தேகங்கொண்ட முரண்பாடுகளுக்கும், செய்கைகளுக்கும் நாளதுவரை எந்த காங்கிரஸ் தலைவராவது ஆதாரத்தோடு விளக்கி சந்தேகத்தை தெளிவுபடுத்தியிருக்கிறாரா? திலகர் நிதியைப்பற்றி “ஜஸ்டிஸ்” சில குற்றங் குறைகள் காணப்பட்ட போது அவைகளுக்கு தான் பதில் கூறிவிட்டதாகவும், சாதாரண கணக்கு வழக்கு தெரிந்த யாரும் சமாதானப்பட்டிருப்பார் என்றும் தோழர் ஆச்சாரியார் கூறுகிறார். திலகர் சுயராஜ்ய நிதியை வைத்துப் பரிபாலித்தவர்களின் கணக்கு நிபுணத்தனத்தை பின்னால் சமயம் வாய்க்கும்போது ஆராய்வோம். ஆனால் இப்பொழுது, தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியின் வருஷாந்திர கடைசியில் இருப்புக்கும், மறுவருட ஆரம்பத்திலிருக்க வேண்டிய இருப்புக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டினால் கணக்கு வழக்குத் தெரிந்த எவனாவது விழி கண் குருடனைப்போல வாளாக இருப்பானா? என்பதை தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரையே கேட்கின்றோம்.
1924ம் ஆண்டின் ரிப்போர்ட்டின் 47வது பக்கத்தில் அவ்வருட கடைசி இருப்பு ரூ.169,247-14-3 எனவும் 1925ம் வருஷத்திய ரிப்போர்ட்டின் 19ம் பக்கத்தில் அவ்வருட ஆரம்பத்தில் கையிருப்பு ரூ. 165,247-14-3 எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரை, இக் கணக்கில் வித்தியாசங் காண்கிற 4000 ரூபாய்க்கும் பொருத்தமான சமாதானம் கொடுக்கப் படவில்லை. கணக்கின் முடிவிலும் துவக்கத்திலும் வித்தியாசம் ரூ 4000 இருப்பதாகக் கண்டால் கணக்குத் தெரிந்த எவனாவது சமாதானமடைய முடியுமா? காங்கிரஸ்காரர்கள் திலகர் நிதியாகிய ஒரு கோடியே 25 லக்ஷ ரூபாய்க்கு மேற்பட்ட நிதியை ஸ்வாஹா செய்த வித்தையை மறைக்க அவர்கள் கையாளும். தந்திரோபாயங்கள்தான் வேடிக்கையாக யிருக்கிறது. அதிலும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொல்லும் உபாயம் – ஏமாற்றச் செய்யும் தந்திரம் மிக வேடிக்கையாக இருக்கிறது.
குடி அரசு – கட்டுரை – 13.06.1937