சேர்மாதேவி குருகுலம்

காலஞ்சென்ற வ.வெ.சு. அய்யரால் ஸ்தாபிக்கப்பட்ட சேரமாதேவி ஆச்சிரமம் இம்மாதம் 7-ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள பல பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஆச்சிரமத்தை நடத்தும் “பெரிய” பொறுப்பை, சென்னை கோகுல ஹரிஜன காலனி ஸ்தாபகரான பத்தமடை பி.என். சங்கரநாராயணய்யர் பலர் வேண்டுகோளின்படி ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் ஆச்சிரமப் புனருத்தாரண வேலை, சபை திக்குக் குட்டும்போதே கண்ணில் குட்டிக்கொண்ட மாதிரியே ஆரம்பமாகியிருக்கிறது. 1934 முதல் நாளிதுவரை ஆசிரமத்தில் நடந்த வேலைகளைப்பற்றி யாரோ ஒரு எல்.என். கோபால்சாமி ஒரு அறிக்கையைப் படித்தாராம். அப்பால் ஆச்சிரமம் நடத்துவதைப்பற்றி ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாம்.

தோழர்கள் சாவடி கூத்த நயினார் பிள்ளையும் தூத்துக்குடி ராமசாமியும் பேசுகையில், “வெளியில் பல பேர்களின் அபிப்பிராயத்தில் இந்த ஆச்சிரமத்தில் முன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் வராவண்ணம் தடுக்க, தனி நிலைமையில் ஒருவரிடம் ஒப்புவிப்பதைவிட சிலரைச் சேர்த்தே நிர்வாகம் நடத்தச் சொல்வது சிலாக்கிய”மென்றும் மேலும் “ஆச்சிரமத்துக்குத் தலைமை வகிக்க ஒரு பிராமணரல்லாதார் இருந்தால் நல”மென்றும் கூறினார்களாம்.

ஆசிரமத்தின் பூராச் சொத்தையும் நிர்வகிக்க காந்தியாரிடம் அதிகாரம் பெற்ற திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் பேசுகையில் “இம்மாதிரி தேசீய ஸ்தாபனத்தைப் புனருத்தாரணம் செய்யும் விஷயத்தில் சமூக வித்தியாசங்களைப் புகுத்தியதைப்பற்றி வருந்துவதாகவும் ஆச்சிரமம் நடைபெற வழியில்லாமல் திகைக்கும் போது சென்னை சங்கரநாராயணய்யரைக் கேட்டு அவர் ஏற்றுக் கொண்டிருப்பதினால் ஒரு வருஷத்துக்கு அவர் நடத்த எல்லோரும் இசைந்து ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் அப்படி ஒத்துழைக்க சம்மதமில்லாவிட்டால் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் ஒரு வருஷம் கழித்து மறுபடியும் இங்கேயே ஆச்சிரமத்தில் கூட்டம் கூடி, நிலைமை திருப்திகரமாயில்லாவிட்டால் வேறு ஏற்பாடு அப்பால் செய்யலாமென்றும் தெரிவித்தாராம்.

தோழர் கூத்தநயினார் பிள்ளை “வகுப்பு வாதத்தை”க் கிளப்பியது “தினமணி” காற்றாடிக்கும் பிடிக்கவில்லை. தோழர் கூத்தநயினார் பிள்ளையைப் பற்றி காற்றாடி குத்தலாக எழுதியிருக்கிறது. “பிராமண சமூகத்திலும் பிற்போக்காளரானதால் சாகிப்களும், ராஜா பகதூர்களும் இல்லாமலில்லை. அதனால் அந்த சமூகத்தின் பொதுக் குணத்தை சந்தேகித்துப் பேசுவது நேர்மையாகாது. ஜஸ்டிஸ் கட்சிக்காரர் வகுப்புவாதம் பேசுவதால் பிராமணரல்லாதார் சமூகமே வகுப்புவாதிகளென்று சொல்ல முடியுமா?” என்று காற்றாடி கேட்கிறது.

தேசீய ஸ்தாபன விஷயத்தில் வகுப்பு வாதத்தைப் புகுத்தக் கூடாது என்பது உண்மையானால்-ஜஸ்டிஸ் கட்சிக்காரர் வகுப்பு வாதம் பேசுவதால் பிராமணரல்லாதாரெல்லாம் வகுப்பு வாதிகள் அல்லவென்பது மெய்யானால் காங்கரஸ்காரர் அபிப்பிராயத்தில் வகுப்புவாதியல்லாத ஒரு பிராமணரல்லா தாரிடம் சேரமாதேவி குருகுலத்தை ஒப்புவிக்கக் கூடாதா? காங்கரஸ் ஸ்தாபனங்களும், கதர், தீண்டாமை ஒழிப்பு, ஹிந்திப் பிரசார ஸ்தாபனங்களும் பிராமணர்கள் ஆதிக்கத்திலும் தலைமையிலும் இருந்து வருகையில் சேரமாதேவி ஆச்சிரமத்தையாவது ஒரு பிராமணரல்லாதார் நிர்வாகத்தில் விட்டு ஒரு பரீட்சை பார்க்கக் கூடாதா! “மகத்தான தியாகங்கள் செய்த – இன்னும் செய்யத்தயாராயிருக்கிற பிராமணர்கள் இன்று காங்கரசில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைப் புண்படுத்தக்கூடிய முறையில் பொறுப்பு வாய்ந்த ஒருவர் பேசலாமா?” என்று காற்றாடி மீண்டும் கேட்கிறது.

ஆனால் மகத்தான தியாகங்கள் செய்த – இன்றும் செய்யத் தயாராயிருக்கிற பிராமணரல்லாதார் ஒருவராவது காங்கரசில் இல்லையா? தியாகமும், காங்கரசும், தேசீயமும் பிராமணர்களுக்கு மட்டும் காபிரைட்டா? “வகுப்புவாதம் பேசாதே பேசாதே” என்று கூச்சல் போட்டுக்கொண்டே காங்கரஸ் பிராமணர்கள் எல்லா ஸ்தாபனங்களையும் பார்ப்பன ஆதிக்கத்தில் ஆக்குவது தான் தேசீயமோ?

இப்பொழுதாவது தோழர் கூத்தநயினார் பிள்ளைக்கு சுயமரியாதை யுணர்ச்சி வந்தது போற்றத்தக்கதே. இந்த சம்பவம் மூலம் பார்ப்பனர்களின் வகுப்புவாதத்தை காங்கரஸ் பார்ப்பனரல்லாதார் உணருவார்கள் என்று நம்புகிறோம்.

ஆச்சிரமம் நடைபெற வழியில்லாமல் இருக்கையில் சென்னை சங்கர நாராயணய்யரைக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் பெரிய மனது வைத்து ஒப்புக்கொண்டதாகவும் டாக்டர் ராஜன் கூறுகிறார்.

சேரமாதேவி குருகுல நிர்வாகத்துக்கு ஆள் தேட சென்னைக்கு ஏன் செல்லவேண்டும்? திருநெல்வேலி ஜில்லாவில் வேறு ஆள் கிடையாதா? சென்னையிலிருக்கும் பத்தமடை பிராமணர் ஒருவர் தானா அகப்பட்டார்? சேரமாதேவி குருகுலம் அரசியல் சம்மந்தமற்றதென்றும் எல்லாக் கட்சியாருடைய ஒத்துழைப்பும் அதற்கு தேவையென்றும் ஒருவர் கூறினார். அப்படியானால் பத்திரிகையில் ஏன் விளம்பரம் செய்திருக்கக்கூடாது? வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருக்கும் இக்காலத்திலே ஆச்சிரம நிருவாகத்தை ஏற்று நடத்த திறமையுடைய பட்டதாரிகள் கூட முன்வரக்கூடுமே.

வ.வெ.சு. அய்யர் ஊரார் பணத்தை வசூல் செய்து ஆச்சிரமம் ஸ்தாபித்தார். அதன் நிருவாகப் பொறுப்பை மகாதேவய்யர் கத்தியவார் பனியா காந்தியிடம் ஒப்படைத்தார். அவர் ஆச்சிரமச் சொத்தை நிருவாகம் செய்யும் பூரா அதிகாரத்தையும் ÿரங்கம் அய்யங்கார் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனிடம் விட்டுக்கொடுத்தார். ÿரங்கம் அய்யங்கார் இப்பொழுது பத்தமடை அய்யரை சேர்மாதேவி ஆச்சிரமத்துக்கு சர்வாதிகாரியாகி விட்டாராம்.

பாருங்கள் ஊரார் பணம்படும் பாட்டை.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.06.1937

You may also like...