ஆச்சாரியாருக்கு பைத்தியம்
ஏமாற்ற மடைந்தவர்கள், சொத்தை இழந்தவர்கள் முதலியவர்களுக்கும் புத்தி சுவாதீனமற்று பைத்தியம் பிடிப்பது வழக்கம். அதிக புத்திசாலி என்பவர்களுக்கும் கூறுகெட்டு மூளை கலங்கி பைத்தியம் பிடிப்பதும் வழக்கம் என்று உடல்கூறு வல்லவர்கள் சொல்லுவதுண்டு. நமது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அதை மெய்ப்பிக்கிறார். தான் எதிர்பார்த்து திட்டம் போட்டு வீடு முதலானவைகள் வாடகைக்கு அமர்த்தத் தெரிந்தெடுத்து “அடுத்த நடை கவர்னர் வீட்டுக்குப் போகவேண்டியதுதான் பாக்கி, வரும்போது மந்திரி தாக்கீது பெற்று வரப்போகிறோம்” என்று மனப்பால் குடித்து ஆசையோடு – பேராசையோடு எதிர்பார்த்திருந்த மந்திரி வேலை கிடைக்கவில்லை என்று திடீரென்று ஏற்பட்டவுடன் மூளை கலங்கி கண்டபடி உளற ஆரம்பித்துவிட்டார். இந்த நிலை மாறாதிருக்குமானால் கூடிய சீக்கிரம் அவரை பைத்தியகார ஆஸ்பத்திரியில் தான் பார்க்க நேரும் என்றே கருதுகிறோம்.
அவரது வாயும் நாக்கும் அறிஞர்கள் மிகவும் வெறுக்கத்தகுந்த தன்மைக்கு வந்து விட்டன. சத்தியமூர்த்தி, குப்புசாமி, உபயதுல்லா நிலைக்கு இறங்கிவிட்டார். இதன் காரணம் எல்லாம் ராமாயணக் கதையில் ராமனின் அயோக்கியத்தனத்தை வாலி கண்டித்ததாகக் குறிப்பிடும் சந்தர்ப்பத்தில் “உன் பெண்ஜாதியை எவனோ அடித்துக்கொண்டு போன காரணத்தால் உன் புத்தி இப்படிக் கெட்டுப் போய் விட்டதா என்ன ராமா?” என்று வாலி கேட்டதாக ஒரு கருத்து இருக்கிறது.
அதாவது “ஓவியத்தெழுதவொண்ணா உருவத்தை உடைய அய்யா… தேவியைப் பிரிந்த பின்பு திகைத்தனை போலும் செய்கை” என்று ஒரு இடம் இருக்கிறது. அதுபோல் எவ்வளவோ புத்தி உள்ளவர் என்று விளம்பரம் செய்யப்பட்ட அவர் – நம் போன்றவர்களாலும் கருதப்பட்ட அவர் மந்திரி வேலை கிடைப்பதற்கில்லாமல் போனவுடன் அவரது வாயில் கழுதை, குதிரை, விளக்குமாறு என்ற அற்ப ஜெந்துக்களும் இழிந்த சாமான்களும் ஆகியவைகளையே வெளியாக்கவும் ஜெபிக்கப்படவும் ஏற்பட்டு விட்டது. எவ்வளவு இடித்து உரைத்தும் நல்ல புத்திவர முடியாமல் போய்விட்டது. இவ்விஷயத்தில் சத்தியமூர்த்தியாரையும், குப்புசாமியாரையும் மேன்மக்களாக்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.
இந்த ஆத்திரம் ஏன் – வருவானேன்? காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி வகிக்கவில்லை என்று ஏற்பட்டு விட்டால் பிரிட்டிஷ் அரசாங்கம் மூட்டை கட்டிக்கொண்டு சீமைக்குக் கப்பலேறிவிடும் என்றோ, ஆச்சாரியார் காலில் சக்கரவர்த்தி விழுந்து அழுவார் என்றோ காங்கிரஸ்காரர்கள் நினைத்திருந்தால் அதுவும் ஆச்சாரியார் போன்றவர்கள் நினைத்திருந்தால் அதற்கு யார் முட்டாள்கள் என்பதைப் பொது ஜனங்களே சிந்தித்துப் பார்க்கட்டும்.
ஆட்களைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராய்ப் போய் இப்படி ஏன் உளறுகிறார்? தான் செய்த தப்பிதத்தை மறைக்கவும் மற்றுமொருமுறை பொது ஜனங்களை மூடர்களாக்கவும் அல்லாமல் வேறு கருத்து என்ன என்று கேட்கின்றோம்.
தன் கட்சியில் இன்று இருக்கும் மூடர்கள் யாருக்காவது நல்ல புத்தி வந்து கட்சியை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்கின்ற பயம் அல்லாமல் வேறு இல்லை. தோழர்கள் ராமலிங்கம் செட்டியார், சுப்பராயன் போன்றவர்கள் எல்லாம் ஆச்சாரியார் பேச்சைக் கேட்டு மூக்கையும் வாலையும் இழந்து விட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் சிலருக்குப் பொய் நம்பிக்கை கொடுத்துத் தங்கள் கட்சியில் சேர்த்து அவர்களது பிற்கால வாழ்வையே பாழாக்கி விட்டார். இவர்கள் எல்லோருக்கும் எங்கு நல்ல புத்தி வந்து காங்கிரசில் இருந்து விலகிவிடுவார்களோ என்கின்ற பயத்தின்மீது முட்டாள்தனம் என்னும் நாடியை சரி நிறுத்த மூன்று பார்ப்பனர்களும் அதாவது ஆச்சாரியார், பிரகாசம், காளேஸ்வர ராவ் ஆகியவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்கள். ஆங்காங்கு உள்ள பார்ப்பன வக்கீல்களைக் கையாளாக வைத்துக்கொண்டு கட்டுப்பாடு செய்து வருகிறார்கள். தங்கள் கூலிகளையும் வக்கீல் கூட்டத்தையும் ஒன்றுபடுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றி பொதுஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றப்பார்க்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, பார்ப்பனர்கள் முன்னிலும் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் வாதி பாஷியம் அய்யங்காரும் “சுதேசமித்திரனு”ம் “இந்து”வும் தலையங்கம் எழுதுகிறார்கள். இது இனி தமிழ் நாட்டில் பலிக்குமா என்பது சுலபத்தில் நினைக்க முடியாத காரியம் என்றுதான் சொல்லவேண்டும்.
இனி 6 மாதத்தில் தேர்தல் வந்தால் ஒரு சமயம் மறுபடியும் கொஞ்சமாவது மெஜாரட்டி பெறக்கூடும் என்று கருதியே மறுபடியும் உடனே மறு எலக்ஷன் நடைபெறவேண்டுமென்று கேட்கின்றார். அந்தப்படி வருவது சந்தேகம். ஒரு வருஷத்தில் தேர்தல் வரலாம். அதிலும் தேசம் இன்று போலவே மடத்தனமாயிருக்கும் என்று கருதிவிட முடியாது. அப்படியே கருதினாலும் காங்கிரஸ்காரர்கள் நிலை இன்றைய நிலைமையை விட வேறு என்ன மாறுதலை எதிர்பார்க்க முடியும்? வீணாக “வாய்க் கொழுப்பு சீலையில் வடிந்தது” என்பதுபோல் அனாவசியமான பொய் வீம்பு, ஏமாற்று வீம்பு பேசி ஒரு புறமும் கோழைத்தனம் ஒருபுறமும் சென்னை கவர்னரை நம்பி ஏமாந்தது ஒருபுறமுமாக ஏற்பட்டு மந்திரி பதவி வாய்க்கெட்டாமல் போனால் எதிர் மந்திரிகளை நாய், கழுதை, துடைப்பக்கட்டை விளக்குமாறு என்று பேசுவதால் நிலமை மாறிவிடுமா என்று கேட்கின்றோம்.
சென்ற வாரம் நாம் இம்மாதிரி பேச்சைக் கண்டித்து எழுதியதற்காக இவ்வாரம் கோவை பேச்சில் ஆச்சாரியார் அதற்கு சமாதானமாக தான் உதாரணம் கூற அப்படிச் சொன்னாராம். தான் எப்போதும் உதாரணம் கூறித்தான் விளக்குவாராம். அப்படியானால் காந்தியையும், அவருக்குப் பொய் நம்பிக்கை கொடுத்த கவர்னரையும் அவர்கள் செய்கையையும் அவ்வுதாரணங்கள் கொண்டு விளக்குவதுதானே என்று கேட்கின்றோம்.
ஏனெனில் இவ்வளவு கேவலமாகப் பேசுவது தன் சுபாவம் என்று பேசுகிற தோழர் ராஜகோபாலாச்சாரியார் கவர்னரைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை. சர்க்காரையும் கழுதை, குதிரை, துடைப்பக்கட்டை என்பவைகளுக்கு உதாரணம் காட்டி பேசுவதில்லை. ஒப்புக்கொண்ட மந்திரிகள் மீது பாய்கிறார். இந்தப் பாய்ச்சலே அந்த மந்திரிகளை மூன்று வருஷ மந்திரிகளாகவும் முடியாவிட்டால் வேறு பல பெரிய பதவிகள் பெறவும் உதவி செய்யப்போகின்றது. வீணாக ஆச்சாரியார் குழவிக் கல்லை எடுத்து இடித்துக்கொண்டு வயிற்றுவலி உண்டாக்கிக் கொள்ளப்போகிறார் என்பதல்லாமல் ஒரு சிறு தூசிப்பயன் விளையப் போவதில்லை என்பதோடு பொது ஜனங்களுக்கு பார்ப்பனர்மீது இனியும் ஆத்திரம் உண்டாகும்படியான பயன் விளைவிப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 25.04.1937