வெற்றி – தோல்வி
சட்டசபைத்தேர்தல் நடந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. காங்கிரசுக்கு 5, 6 மாகாணங்களில் தோல்வியும் 5, 6 மாகாணங்களில் எண்ணிக்கையில் வெற்றியும் ஏற்பட்டிருக்கிறது.
தோல்வி அடைந்த மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரிசபை ஏற்றுக்கொள்ளுவதில்லை என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் காரணம் இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) ஆசைப்பட்டாலும் முடியாது. ஆகவே இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் பெரியதொரு “தியாகம்” செய்து விட்டார்கள்.
அதுமாத்திரமல்லாமல் தோல்வி அடைந்த மாகாணங்களில் ஏற்படப்போகும் மந்திரிகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து மந்திரி சபை நடக்காமல் தடைமுறைகளை கையாளப் போகிறார்களாம். இதுவும் வெகுகஷ்டப்பட்டு கண்டு பிடித்த சங்கதியாகும். இல்லாவிட்டால் இவர்கள் தோல்வியுற்ற சபைகளில் வேறு என்னதான் செய்ய முடியுமோ தெரியவில்லை.
~subhead
காங்கிரஸ் தடுமாற்றம்
~shend
நிற்க, வெற்றி பெற்ற மாகாணங்கள் என்பவைகளில் என்ன செய்வது என்பதுபற்றி தலைவர்கள் முதல் வாலர்கள் வரை தைரியமாய் ஒன்றும் வெளியில் சொல்லமுடியாமல் ஆளுக்காள் உளறிக்கொட்டிய வண்ணமாக இருக்கிறார்கள்.
ஆனால் அந்தரங்கத்தில் அவரவர்கள் உள் எண்ணத்தில் தோழர் ஜவஹர்லால் முதல் எல்லோரும் ஆதிமுதற்கொண்டே எப்படியாவது பதவிபெற்று 5 நிமிஷமாவது அனுபவித்து விட்டுச் சாகவேண்டும் என்கின்ற தீர்மானத்தின் மீதே துணிந்து தேர்தலில் இறங்கி இருக்கிறார்கள்.
ஆனால் பகுதி மாகாணங்களில் தோல்வியும் பகுதி மாகாணங்களில் மாத்திரம் வெற்றியும் ஏற்பட்டு விட்டதால் அவர்களுக்கு இன்னது செய்வது என்பது தோன்றாமல் உளறிக்கொட்ட வேண்டியதாய் நேர்ந்து விட்டது. எப்படி இருந்தாலும் மந்திரிகளாகாமல் சாவதில் பல தலைவர்களுக்கு இஷ்டமிருக்காது. ஆதலால் கண்டிப்பாய் மந்திரிகளாவதற்கு வேண்டிய சகல தந்திரமும் செய்துதான் தீருவார்கள். இப்போது முதலே செய்துகொண்டுதான் வருகிறார்கள். அதில் அவர்களுடைய (காங்கிரஸ்காரர்களுடைய) முக்கிய கஷ்டம் என்னவென்றால் “தேர்தலுக்கு முன் என்னென்னமோ பொறுப்பும் முன்யோசனையும் இல்லாமல் வீம்புபேசிவிட்டோமே இன்னம் 10 நாள் கூட ஆகாமல் அவ்வீம்புகளுக்கு விரோதமாய் எப்படி நடப்பது?” என்கின்ற கவலையே இப்போது இருந்து வருகிறது. இந்தக் கஷ்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள காந்தியாரையும் இழுத்துப் போட்டுக்கொண்டார்கள்.
~subhead
காந்தியார் நாணயம்
~shend
கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி தோழர் காந்தியார் சென்னைக்கு வந்திருந்தபோது அவரை “சுதேசமித்திரன்” நிருபர் பேட்டி கண்டு பேசியதில் அவர் (காந்தியார்) “ராஜீய விஷயத்தில் எனக்குச் சிரத்தை கிடையாது. அவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு இஷ்டமில்லை. உண்மை சத்தியாக்கிரகி என்கின்ற முறையில் இதைச் சொல்லுகிறேன்” என்றும், மற்றும் “வரப்போகும் தேர்தல் முடிவுகள் உத்தியோகப் பிரச்சினைகள் முதலிய விஷயங்களில் எனக்கு எவ்வித அபிப்பிராயமும் கிடையாது” என்றும் சொல்லிவிட்டுப் போனவர் (இது 22-1-37 “சுதேசமித்திர”னில் வெளியாகி இருக்கிறது) இப்போது 35 நாள்களுக்குள் தேர்தல் முடிவில் கலந்து கொண்டு சிரத்தையும் எடுத்துக்கொண்டு அபிப்பிராயமும் கொடுத்துவிட்டார்.
அதாவது “கவர்னர் விசேஷ அதிகாரங்களை உபயோகப் படுத்துவதில்லை என்று வாக்குக் கொடுத்தால் மந்திரி பதவிகளை ஏற்றுக்கொள்ளலாம்.”
என்று வார்தாவில் அபிப்பிராயம் கொடுத்துவிட்டார்.
அவ்வளவோடு நிற்காமல் “இதைப்பற்றி கலந்து பேசி வைசிராயை பேட்டிகாணப் போகிறார்” என்றும் காங்கிரஸ் பத்திரிக்கைகளில் காணப்படுகிறது.
ஆகவே காந்தியாருடைய நாணயமும் சத்தியாக்கிரகத்தன்மையுமே இப்படி இருக்கும்போது இனி மற்றவர்களுடைய நாணயத்தையும் வாக்குறுதிகளையும் பற்றி கவனிப்பது ஒரு மெனக்கெட்ட வேலையேயாகும்.
~subhead
பதவியேற்றால்தான் உண்மை வெளியாகும்
~shend
இதுவரையில் கிடைத்துள்ள சேதிகளில் இருந்து காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க வேண்டுமென்றே “உலகம்” பூராவும் விரும்புவதாகவே காங்கிரஸ் பத்திரிக்கைகளின் அபிப்பிராயமும் காங்கிரஸ் தலைவர்கள் வாலர்கள் அபிமானிகள் என்பவர்களுடைய அபிப்பிராயமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப்படி அவர்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக்கொண்டால்தான் ஜஸ்டிஸ் கட்சியும் மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சியும் எலக்ஷனில் தோல்வி அடைந்ததானது நாட்டிற்கு பயன்படக்கூடியதாக ஏற்படும் என்பதே நமது அபிப்பிராயமாகும். ஏனெனில் 16, 17 வருஷகாலம் அரசியல் அதிகாரத்தில் இருந்த ஒரு கட்சியானது தனது ஆட்சியில் செய்து வந்த காரியம் மக்களுக்கு நன்மையானதா தீமையானதா என்று அறிய பொது ஜனங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவில்லையானால் கட்சியின் உழைப்பு எப்படி மதிக்கக்கூடியதாகும் என்று கேட்கின்றோம்.
இந்திய சட்டசபையை காங்கிரஸ்காரர்கள் கைப்பற்றி 2 வருஷங்களுக்கு மேல் ஆயிற்று. இதுவரை இவர்கள் அங்கு செய்த வேலை என்ன என்பதையும் ஓட்டர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் எதை எதை நிறைவேற்றினார்கள் என்பதையும், இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்கள் இருந்து செய்த காரியங்களுக்கு மேல் காங்கிரஸ்காரர்கள் என்ன அதிகமாய் செய்ய முடிந்தது – செய்து விட்டார்கள் என்பதையும் ஒரு அளவுக்காவது அறிவாளிகள் அறிய முடிந்தது.
அதுபோலவே ஸ்தல ஸ்தாபனங்களில் ஜில்லா போர்டு முனிசிபாலிட்டி ஆகியவைகளில் இந்த ஒரு வருஷம் ஒன்றரை வருஷம் காலமாக காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று சபைகளில் மற்றவர்களில் அதாவது காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்கள் இந்த 10, 15 வருஷகாலமாய் செய்து வந்த காரியங்களை விட என்ன அதிகமாய் செய்தார்கள், செய்யக்கூடியவை இருக்கின்றன என்பவைகளையும் ஒரு அளவுக்காவது அறிய முடிந்தது. அதுபோலவே சட்ட சபைகளிலும் காங்கிரசுக்காரர்கள் சாதிக்கப் போவதை பொதுஜனங்கள் ஒரு தடவையாவது பார்த்தால் தான் அவர்களது மயக்கமும் ஒழியும். ஆதலால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க நாமாக இஷ்டப்படாவிட்டாலும் தானாக ஏற்பட்டதற்கு திருப்தி அடைய வேண்டியதுதான் கிரமமாகும்.
~subhead
என்ன செய்யப் போகிறார்கள்?
~shend
“மந்திரி பதவியை காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொண்டால் பொது ஜனங்களுக்கு அன்றாட வாழ்க்கையில் சில சவுகரியங்கள் ஏற்படுவதற்கு சட்ட சபையில் காங்கிரஸ்காரர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் அது சாத்தியமாகுமென்று உறுதி சொல்ல முடியாது ஏனெனில் மந்திரிசபைக்கு பூரண அதிகாரம் சர்க்கார் கொடுக்கவில்லை” என்று ஒரு காங்கிரஸ் பத்திரிக்கை (அதுவும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு அங்கத்தினரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகை) எழுதி இருக்கிறது. (இந்த சமாதானம் காங்கிரஸ்காரருக்கு தான் உரிமை போலும்! ஜஸ்டிஸ் கட்சி சொல்வதானால் அது தேசத்துரோகம் போலும்) அப்படியாவது காங்கிரஸ்காரர்கள் மக்களுடைய நித்திய வாழ்க்கை காரியங்களுக்கு என்னதான் செய்ய முன் வருகிறார்கள் என்று பார்ப்போம். வார்தா கூட்டத்தில் காங்கிரஸ்கார்கள் சட்டசபையில் செய்யப் போகும் காரியங்கள் என்று 11 அய்ட்டங்கள் ஏற்படுத்திக் கொண்டவைகளில் ஏமாற்றுத் திட்டம் 3 போக பாக்கி உண்மைத் திட்டம் 8-ம் தோழர் ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சிக்கு கொடுத்து ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களாகும். அவற்றையும் செய்கிறார்களோ இல்லையோ என்பது ஒருபுறமிருந்தாலும் எதோ ஒரு காரணம் சொல்லி எப்படியாவது மந்திரி பதவியை ஏற்றுக் கொள்வதில் முழுச் சம்மதம் இருப்பதாகவே இச்சையாய் விளங்கிவிட்டது. ஆனால் அப்புறம் என்ன செய்வது என்பதில் எப்படி மக்களை திருப்தி செய்வது என்பதுதான் புரியாமல் உளறுகின்றார்கள். எப்படியானாலும் அதைப்பற்றி இனி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நிற்க காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்றுக் கொண்டால் மற்றவர்கள் என்ன செய்வது என்பதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அதையும் காங்கிரஸ்காரர்களே நமக்கு காட்டிக்கொடுக்கப் போகிறார்கள். எப்படி என்றால் காங்கிரஸ்காரர்கள் தோல்வியடைந்து விட்ட 5, 6 மாகாணங்களில் மந்திரிகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து, மந்திரிகளுக்கு தொல்லை கொடுக்கவும் அவர்களை சர்க்கார் தாசர்கள் என்று ஜனங்கள் கருதும்படி செய்யவும் வேண்டிய முயற்சிகள் செய்யப்போகிறார்களாம். ஆதலால் அதையே காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்று மக்களுக்கு செய்யப்போகும் காரியத்துக்கும் காங்கிரஸ்காரர்கள் செய்து காட்டும் முட்டுக்கட்டைக்கும் நாமும் அதாவது காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்களும் செய்து காட்டினால் போதுமானதாகும். காங்கிரஸ் மந்திரிகள் இல்லாத சட்டசபைகளில் காங்கிரஸ்காரர்கள் 100க்கு 33 வீதம் வரி குறைக்கவேண்டும் என்று தீர்மானங்கள் கொண்டுவந்தால் காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளாய் உள்ள சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்கள் 100க்கு 66 வீதம் வரி குறைக்க தீர்மானம் கொண்டு போவார்கள்.
அப்போது காங்கிரஸ் மந்திரிகள் ஓட்டு கொடுப்பார்களா? ஓட்டுக் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றினால் சர்க்கார் ஏற்றுக்கொள்வார்களா? ஏற்றுக்கொள்ளாமல் தீர்மானத்தை அவர்கள் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டால் உடனே வெளியில் வந்து கழுத்துக்கு சுருக்குப் போட்டுக் கொள்ளுவார்களா? அல்லது போகட்டும் வார்ப்பதை வாரும் என்று கையேந்தி நிற்பார்களா என்பதை பார்க்கத்தான் இருக்கிறோம்.
~subhead
அஞ்சவேண்டியதில்லை
~shend
ஆதலால் காங்கிரஸ்காரர்கள் சட்ட சபைக்குப் போய் மந்திரி பதவி ஏற்று இது வரை ஜஸ்டிஸ் கòயார் அப்பதவியில் இருந்து செய்து வந்ததற்கு மேல் செய்து காட்டினால் ஜஸ்டிஸ் கòயார்களை கையாலாகாதவர்கள் என்றோ தேசத்துரோகிகள் என்றோ ருஜúவு செய்து விடுவார்களே என்கின்ற பயம் யாரும் கொள்ள வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். மற்றும் அவர்கள் வேறு ஏதாவது செய்து விடுவார்களா என்று சிலர் பயப்படக்கூடும். அதாவது உத்தியோகங்களிலும் பிரதிநிதித்துவங்களிலும் முன் உள்ள ஏற்பாடுகள் மாற்றப்பட்டு விடுமோ என்பதாக பயப்படக்கூடும். இதைப்பற்றி முன்பும் பல தடவை எழுதி இருக்கிறோம். அதாவது அந்தப்படி செய்வதை வரவேற்க வேண்டும் என்றே எழுதியிருக்கிறோம். ஏனெனில் நம் நாட்டு காங்கிரசின் உள் எண்ணம் என்ன என்றும் நாம் ஏன் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம் என்றும் எழுதிவந்தது மெய்யென்றும் சரி என்றும் பாமர மக்களுக்கும் முட்டாள் தேசபக்தர்களுக்கும் விளங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதை வரவேற்க வேண்டாமா என்று தான் கேட்கிறோம்.
இவை ஒருபுறமிருக்க, இனி நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்பதைப்பற்றி இதற்கு முன்னும் இரண்டொரு தடவை குறிப்பிட்டிருந்தாலும் தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, செளந்திரபாண்டியன் முதலியவர்கள் ஜஸ்டிஸ் கò தலைவர்களுடன் வந்து யோசித்த பிறகு அது சம்மந்தமாக ஒரு அறிக்கை வெளியிடுவார்கள். அதில் ஜஸ்டிஸ் கட்சி வேலையைப்பற்றியும் சுயமரியாதை இயக்க வேலையைப் பற்றியும் விளக்குவார்கள் என்று எதிர்பார்த்து நிறுத்தி வைக்கிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 07.03.1937