உத்தியோகத் தடை

 

“ஜஸ்டிஸ் கட்சி “தலைவர்களுக்கு” சர்க்கார் இனி பெரிய உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது” என்பதாக சேலம் ஜஸ்டிஸ் – சுயமரியாதைத் தொண்டர்கள் வேலைக்கூட்டத்தில் ஒரு தோழரால் ஒரு தீர்மானம் பிரேரிக்கப்பட்டது. அதற்கு அத்தீர்மானம் கொண்டு வந்தவர் சொன்ன காரணம் மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களுக்கு நாட்டில் செல்வாக்கில்லையென்றும் அவர்கள் நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை யென்றும் அவர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள் என்றும், தான் அதில் ஒரு திருத்தம் செய்து அதே தீர்மானத்தையே பிரேரேபிக்கிறதாகவும் சொன்னார். அதாவது,

உத்தியோகம் கொடுக்கக் கூடாது என்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அதற்கு ஆக சொல்லப்படும் காரணத்தை மாத்திரம் மாற்ற வேண்டுமென்கிறேன் என்றும் சொன்னார். காரணம் என்னவென்றால் எந்தக் கட்சியின் பேரால் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் தலைவர்கள் என்பவர் பெரும் பெரும் பதவி பெற்றார்களோ அந்தகட்சிக்கு அவர்கள் நன்றி காட்டவில்லை. பல வழிகளில் துரோகம் செய்துவிட்டார்கள். பொது ஜனங்களையும் சர்க்காரையும் திருப்தி செய்து பணம் சம்பாதித்து மூட்டை கட்டவும் பெருமை அடைவதிலும் கவலை கொண்டார்களே ஒழிய கò நன்மைக்கு ஆவது – பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு ஆவது ஏதும் செய்தவர்கள் அல்ல. இனியும் அவர்களுக்கு உத்தியோகம் கொடுத்தால் அவர்கள் பச்சையாய் நமது சமூகத்துக்கு எதிரிகளே ஆகிவிடுவார்கள். அவர்களால் அதிக துரோகம் அடையவேண்டி வரும். பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு அவர்களால் ஏற்படும் நன்மை வீணாகிவிடும். ஆதலால் அரசாங்கத்தார் கவனித்து முன் வேலை கொடுத்தவர்களுக்கும் வேலை பார்த்தவர்களுக்கும் சர்க்கார் மறுபடியும் உத்தியோகங்கள் கொடுக்கக் கூடாது என்று சொன்னார்.

கூட்டத்தில் தலைமை வகித்த தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் இந்த காரணங்கள் முழுதும் தப்பு அல்லவென்றும் தீர்மானம் அவசியம்தானென்றும் இத் தீர்மானம் இல்லாமலே இனி அவர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக்க கவர்ன்மெண்டார் அவ்வளவு முட்டாள்கள் அல்லவென்றும் அநாவசியமாய் நாம் ஏன் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்றும் சொல்லி கேட்டுக்கொண்டு தீர்மானத்தை வித்திட்றா செய்து கொள்ளும்படி செய்துவிட்டார்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 28.03.1937

You may also like...