விதவை கர்ப்பம் சூதகக்கட்டி ஆய்விட்டது”

 

 

காங்கிரஸ்காரர்கள் நாம் கூறி வந்தபடியே நிபந்தனையில்லாமல் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளுவது என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டதோடு 5 வருஷ காலத்துக்கும் மந்திரி பதவி தங்களை விட்டுப் போகாமல் இருப்பதற்கு சர்க்காருக்கு தாங்களாகவே நிபந்தனையும் கொடுத்து விட்டார்கள். அதாவது மந்திரிகள் அரசியல் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் – நடப்போமாகவும் என்பதை காங்கிரஸ் மூலமே தீர்மானித்து சர்க்காருக்கும் தெரிவித்து விட்டார்கள்.

சட்டசபை மெம்பர் ஆகி சர்க்கார் கட்டிடத்துக்குள் பிரவேசிக்கும்போதே பிரிட்டிஷ் அரசருக்கும் அரச சந்ததிக்கும் அரச சட்டங்களுக்கும் ஆக்கினைக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடக்கிறேன் என்று (ராஜவிசுவாச) பிரமாணம் செய்து ஆகவேண்டும் என்பது ஒருபுறமிருந்தாலும் அதற்கு காங்கிரஸ்காரர்கள் ஒரு மாதத்திற்கு முன் ஒரு வியாக்கியானம் செய்தது. அதாவது “மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாயில் ஒரு விதமாய் பிரமாணம் செய்தால் அந்த பிரமாணம் உண்மையான பிரமாணமாகாது” என்று வியாக்கியானம் செய்ததால் சர்க்கார் எங்கு தப்பிதமாய் நினைத்துக்கொண்டு மந்திரி சபை அமைக்க தங்களை கூப்பிடாமல் விட்டுவிடுவார்களோ என்று கருதி அதாவது கூப்பிட்டு மந்திரிபதவி ஏற்கச் சொன்னாலும் கூட ஏற்றபின் சர்க்கார் ஏறுமாறாய் நடந்து சீக்கிரம் மந்திரி பதவி ஒழியும்படி ஏதாவது சர்க்கார் செய்துவிடுவார்களோ என்று பயந்து இப்போது பச்சையாய் அரசியல் சட்டத்துக்கு (சீர்திருத்த சட்டத்துக்கு) கட்டுப்பட்டு நடக்கிறோம் என்றும் அந்தப்படி நடக்கும் காலங்களில் சர்க்கார் தங்கள் எதேச்சாதிகாரத்தை நடத்தக்கூடாது என்றும் விண்ணப்பம் போடும் படியான நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

இதுவரை எந்த “சர்க்கார் தாசர்” கட்சியும் “தேசத்துரோக” கட்சியும் இம்மாதிரி சிறிதும் மானமும் வெட்கமும் சுயமரியாதையும் இல்லாத ஒரு நிபந்தனையை தாங்களாகக் கொடுத்து மந்திரி பதவிப்பிச்சை கேட்டதில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

இத்தீர்மானம் அதாவது:-

“சட்டசபையில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் மந்திரிகளும் சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ளும் வரையில் சட்ட பூர்வமான நடவடிக்கைகளைப் பொறுத்த மந்திரிகளின் யோசனைகளை கவர்னர் நிராகரிக்கவோ, விசேஷ அதிகாரங்களை கவர்னர் உபயோகிக்கவோ மாட்டாரென்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருப்தி அடையும்படி பகிரங்கமாகக் கூறினாலன்றி (யார் கூறுவது ப-ர்) மந்திரி பதவியை ஏற்கலாகாது” என்பதாகும்.

இந்த தீர்மானம் அ.இ. காங்கிரஸ் கமிட்டியில் வந்தபோது அதை எதிர்த்துப் பேசிய தோழர்கள் எல்லோரும் அதாவது தோழர்கள் ஜெயப்பிரகாஸ் போன்ற சமதர்மவாதிகள், பட்டாபி போன்ற காங்கிரஸ்காரர்கள், மாளவியா போன்ற மிதவாதிகள் அத்தீர்மானத்தில் உள்ள மானங்கெட்ட தன்மையையும் புரட்டையும் ஏமாற்றுதலையும் புட்டுப் புட்டு விளக்கமாகக் காட்டி இருக்கிறார்கள். அவைகளை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதற்கு மேல் நாம் எடுத்துக்காட்டுவது என்பது சிறிதும் முடியாத காரியமே. காங்கிரசுக்காரர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம் என்று சொன்ன பிறகும் சட்டத்துக்கு கட்டுப்பட்ட முறையில் யோசனை கூறுகிறோம் என்று சொன்ன பிறகும் எதற்கு ஆக ஒரு கவர்னர் தனது எதேச்சாதிகாரத்தை நடத்த முன் வருவார் என்பது நமக்கு விளங்கவில்லை. அதற்கு ஆக அவரை சம்மதம் கேட்பது எதற்கு என்றும் நமக்குப் புரியவில்லை.

இத்தீர்மானமானது ஒரு மனிதன் ஒரு மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து “நான் குற்றம் செய்யாதபோது என்னைத் தண்டிப்பதில்லை என்று ஜாடை காட்டுங்கள்” என்று விண்ணப்பம் போடுவதுபோல் இருக்கிறது.

இவைகள் ஒருபுறமிருந்தாலும் “அரசியல் சீர்திருத்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகள் மக்களுக்கோ நாட்டுக்கோ எவ்வித நன்மையும் செய்ய முடியாதபடி இருக்கிறதால் சீர்திருத்தத்தை உடைக்கவேண்டும்” என்று கூறிய காங்கிரஸ்காரர்களுக்கு அரசியல் சீர்திருத்தப்படி நடந்து காட்டுவதன் மூலம் அதுவும் கவர்னர் பிரபு மனங்குளிர சட்டப்படி நடந்து காட்டுவதன் மூலம் தேசத்துக்கோ மக்களுக்கோ சீர்திருத்தத்தை உடைப்பதற்கோ என்ன நன்மை செய்யக்கூடும் என்று காங்கிரஸ்காரர்கள் நினைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

“பூமிகளுக்கும் வீடுகளுக்கும் வரி இருக்காது, ரயிலுக்கு சார்ஜ் இருக்காது, மலைகளில் காடுகளில் மாடு கன்றுகள் மேய பாஸ் (சுங்கம்) இருக்காது, மழை பெய்யெனும் போது பெய்யும், வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது, பட்டினிக் கொடுமை இருக்காது” என்றெல்லாம் சொல்லி பாமர மக்களை நம்பச் செய்து ஓட்டுப் பெற்றவுடன் சீர்திருத்த சட்டத்திற்கு அடங்கி மந்திரிகள் புதிய அரசியல் வேலை நடத்தும்போது கவர்னர் எதேச்சாதிகாரம் செய்யக்கூடாது என்று கவர்னர் கேட்டுக்கொள்வது என்பது தோழர் கேல்கர் சொல்லுவதுபோல் இதுவரை யாராலும் எந்தக் கட்சியாலும் செய்திருக்காத அரசியல் அயோக்கியத்தனமேயாகும்.

ஆனபோதிலும் நாம் சிரிதும் இதை ஆக்ஷேபிக்கவில்லை. விதவைகள் கர்ப்பம் 100க்கு 90க்கு மேல் “சூதகக்கட்டியாக” “மாறி” விடுவது உலக இயற்கையேயாகும். உங்களின் முட்டாள்தனம் காரணமாக யாராவது விதவையாக இருக்க வேண்டியதானால் இயற்கையை வெல்ல முடியாதவர்கள் கர்ப்பமாகித்தான் தீருவார்கள். அதைச் சகித்துக்கொள்ள முடியாத முட்டாள் பொது ஜனங்களின் முன்னால் விதவைகள் அந்த கர்ப்பத்தை தன் தந்திரத்தால் சூதகக் கட்டியாக்கி ஒழித்து விட்டு மனிதர்களாய் வாழவேண்டியவர்களாகிறார்கள்.

அதுபோல் ஜனங்களின் முட்டாள் தனத்தால் இப்படிப்பட்ட காங்கிரசு என்று ஒன்று இருக்க வேண்டியதாகிறது. அந்த காங்கிரஸ்காரர்கள் இயற்கையை வெல்ல முடியாதவர்களாக வேஷத்தில் ஒருவிதமும் காரியத்தில் ஒருவிதமுமாய் வாழவேண்டியவர்களாகிவிடுகிறார்கள். அதாவது வேஷத்தில் தியாகமும் காரியத்தில் சுயநலமுமாக இருக்க வேண்டியவர்களாகிறார்கள். பொதுஜனங்கள் சுய காரியத்துக்கு மதிப்புக்கொடுக்காமல் வேஷத்துக்கு மதிப்புக் கொடுப்பதால் காங்கிரஸ்காரர் (பார்ப்பனர்கள்) தங்கள் காரியத்தால் ஏற்பட்ட பலனை எப்படியாவது பித்தலாட்டத்தால் திரித்து வியாக்கியானம் கூறி காரியத்தில் ஏற்பட்ட குற்றத்திலிருந்து தப்பித்துக்கொண்டு சுயநன்மை அடைந்து விடுகிறார்கள். இதற்கு ஆக காங்கிரஸ்காரர்களை குற்றம் சொல்லுவதில் இருப்பதாக நாம் கருதவில்லை. பொது ஜனங்களில் பெரும்பாலோர் எவ்வளவு காலம் மடையர்களாகவும் மூடர்களாகவும் இருக்கிறார்களோ அதுவரை அயோக்கியர்கள், பித்தலாட்டக்காரர்கள் ஆகியவர்கள் காரியம் வெற்றி பெற்றுக்கொண்டுதான் வரும். அதைப்பற்றி கவலைப்படுவது முட்டாள்தனம் என்றுதான் கூறுவோம்.

எது எப்படி இருந்தாலும் இன்று நம் நாட்டில் தேர்தலில் தோல்வியுற்ற கட்சிகள் எல்லாம் அவர்களது அரசியல் கொள்கைகளில் திட்டங்களில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதும் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் என்பவைகள் அரசியல் கொள்கைகளில் திட்டங்களில் படுதோல்வி அடைந்து விட்டார்கள் என்பதும் உறுதியாய் விட்டது. இதை பொது ஜனங்களில் எவ்வளவு மூடர்களும் உணரத்தக்க காலமும் கிட்ட நெருங்கி விட்டது. மந்திரி பதவிகளையும் தேர்தல்களையும் வெகு கேவலமாகப் பேசி இழித்துரைத்த காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் குளித்து முழுகி சுத்த ஆடையுடன் – பக்தியுடன் மக்களை ஓட்டுக்கு வரச் செய்து காங்கிரஸ்காரர்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளை இறுக்கமான உடையுடன் அலங்கரித்து வந்து மக்கள் கையைப்பிடித்து ஓட்டுப்போடும் விதத்தை மக்களுக்கு விளக்கிக்காட்டி மத உணர்ச்சியான பக்தி விஸ்வாசத்துடன் ஓட்டுப்போடச் செய்ய வேண்டிய நிலைமையை அடைந்து விட்டார்கள். ஓட்டுப் போடுவதில் உள்ள மோட்சத்தையும் எடுத்துக்காட்டி விட்டார்கள். கடசியாக டில்லியில் கூடிய அ.இ.கா. கமிட்டியில் கவர்னர்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிடடு கவர்னரிடம் கேட்காமல் ஜாடை காட்டினால் போதும் என்று அதுவும் பொது ஜனங்களுக்கு திருப்தி ஏற்படும்படியாய் இல்லாமல் கட்சித் தலைவர்களுக்கு திருப்தி ஏற்படும்படி ஜாடை காட்டினால் போதுமென்ற நிலைமைக்கு சர்க்கார் அடிபணிய ஒப்புக்கொண்டு விட்டார்கள்.

பொது ஜனங்களிடம் காங்கிரஸ்காரர்கள் பேசும்போதெல்லாம் மற்ற கட்சிகளைக் குறை கூறியும் சர்க்காரை குறை கூறியும் எவ்வளவோ வீராவேசமாய்ப் பேசி மக்களை ஏய்த்தவர்கள் இப்போது தாங்கள் மற்றக் கட்சிக்காரர்கள் நிலைமைக்கு வந்த உடன் சர்க்காருக்கும் சட்டத்துக்கும் இவ்வளவு தூரம் கட்டுப்பட்டு நடப்பதாக இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லுவதென்றால் இது அவர்களது படுதோல்வியும் மகா துணிவுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

“மயிருள்ள சீமாட்டி வாரி வீசி முடிவாள்” என்கின்ற பழமொழிக்கேற்ப பாமர மக்களைத் தங்கள் சுவாதீனப்படுத்திக்கொண்டிருக்கும் மக்கள் இதுவும் செய்வார்கள் இன்னமும் அநேகம் செய்வார்கள். அவர்கள் மீது குறை கூறுவது கையாலாகாத்தனமேயாகும்.

இன்று அவர்களுக்கு (காங்கிரஸ்காரர்களுக்கு) எதிரிகள் யார்? எங்கே இருக்கிறார்கள்? எத்தனை பேர் என்றால் எல்லாம் இல்லை என்றுதான் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதை மாற்ற முயற்சிக்க வேண்டியதே இப்போது நம் கடமையாகும். அதற்கேற்ற சந்தர்ப்பம் நன்றாய் வழி திறக்கப்பட்டு இருக்கிறது.

ஆதலால் காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்று அவர்கள் செய்வதைப் பார்ப்போம்.

குடி அரசு – தலையங்கம் – 21.03.1937

You may also like...