மற்றொரு சூழ்ச்சி
எச்சரிக்கை எச்சரிக்கை
தமிழ் மக்களிடத்தில் பார்ப்பனர்களுக்குச் செல்வாக்கற்றுப் போய்விட்டது என்பதும், பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சியை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பதையும், நமது பார்ப்பனர்கள் உணர்ந்து விட்டார்களே யானால் உடனே வேறு மாகாணத்தில் இருந்து யாரையாவது பிடித்து வந்து அவரை இந்திரன், சந்திரன், மகாத்மா என்றெல்லாம் ஆக்கி விளம்பரப் படுத்தி, அதன் மூலமாகத் தங்கள் சூழ்ச்சிக்கு ஆக்கம் தேடிக் கொள்ளுவது வழக்கம் என்பதை நாம் பல தடவை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம்.
அதுபோலவே இப்போது சென்ற வருஷத்திய இந்திய சட்டசபைத் தேர்தல் நடந்ததில், அவர்கள் பெற்ற வெற்றியானது பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும், நாணயத்தையும் பளிங்கு போல் விளக்கிவிட்டதாலும், இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும் என்று கருதி, தோழர் ராஜகோபாலாச் சாரியார் போன்ற ஆசாமிகள் தாங்கள் காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வேஷம் போட்டுத் தங்கள் ஜவாப்தாரித்தனத்தில் இருந்து நழுவிக் கொண்டாலும், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் மாகாணத் தலைவர்களாகிக் கண்டபடி உளறிக் கொட்டி, காங்கிரசின் யோக்கியதையையும், தலைமைத் தன்மையின் யோக்கியதையையும் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்துவிட்டதோடு, பார்ப்பன சூழ்ச்சி இன்னது என்பதை வெளிப்படையாய் அறியும்படியாகச் செய்து விட்டதனாலேயும், இப்போது அடுத்த வாரத்தில் வரப்போகும் ஜில்லா போர்டு தேர்தல்களுக்குப் பார்ப்பனர் போட்டி போடவோ, கட்சி சேர்க்கவோ யோக்கியதை இல்லாமல் போய்விட்டதை நன்றாய் உணர்ந்து கொண்டார்கள்.
இச் சூட்சிகளை மறைத்து மக்களை ஏமாற்ற அரை டஜன், ஒரு டஜன் என்கின்ற கணக்கில் இளம் பெண்களை அழைத்துக் கொண்டு நாடகக்காரர்கள் மாதிரி, “வருகிறார்கள்! வருகிறார்கள்!! யார் தெரியுமா?’ என்று துண்டு விளம்பரங்கள் போட்டு, அப்படிப்பட்ட அம்மாள், இப்படிப்பட்ட அம்மாள் என்றெல்லாம் யோக்கியதா பட்சம் குறிப்பிட்டுக் கிராமம் கிராமமாய் இழுத்துக் கொண்டு போய்க் காட்டி, ஏமாற்ற முயற்சித்து அதுவும் பயன்படாமல் போகவே, இப்போது தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து வந்து விளம்பரங்கள் செய்து ஊர் ஊராய் இழுத்துக் கொண்டு போய்க் காட்டியும், அவரைக் கொண்டு பார்ப்பனக் கட்சியைப் புகழும் படியாகவும், பார்ப்பனரல்லாதார் கட்சியை இகழும்படியாகவும் பேசச் செய்து ஓட்டர்களை ஏமாற்றத் தீர்மானித்து விட்டார்கள்.
இவ்வளவு மாத்திரமல்லாமல், அவர் பேரால் சிறிது பணமும் பொது மக்களிடம் இருந்து வசூல் செய்து, அதை சுயராஜ்ஜிய பண்டு, கதர் பண்டு, தீண்டப்படாதார் பண்டு என்ற பேர்களினால் தேர்தல் பிரசாரங்களுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பயன்படுத்திக் கொண்டது போலவும், சில காலிகளுக்குக் கொடுத்து, பார்ப்பனரல்லாத கட்சியையும், பல தலைவர்களையும் வைவதற்குப் பயன்படுத்திக் கொண்டது போலவும், இப்போதும் தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பேராலும் கொஞ்சம் பணம் வசூலித்து பார்ப்பனப் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இப்படிப்பட்ட நடவடிக்கையானது இன்று நேற்று மாத்திரம் இல்லாமல் புராண காலம் தொட்டே இந்தப்படி நடந்து வந்திருப்பதாக அனேக ஆதாரங்கள் இருந்து வருகின்றன. அவைகள் அதாவது அப்புராணக்கதைகள் எல்லாம் உண்மையாக இல்லாவிட்டாலும், பார்ப்பனர்களுக்கும் அவர்களது ஆதிக்கத்துக்கும் குறைவு வரும்படியான சம்பவங்கள் ஏதாவது ஏற்படுமானால் அதிலிருந்து சமாளித்துக்கொள்ள இன்ன இன்ன மாதிரி நடக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூல் களாகவாவது அச்சரித்திரங்கள் இருந்து வருகின்றன.
அதாவது எவனாவது ஒருவன் இந்திரபட்டம் அடைய ஆசைப்பட்டு தபசோ, ஜபமோ செய்தால் அத் தபத்தையும், ஜபத்தையும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்ற பெண்களை விட்டு மயக்கி, அத் தபசியின் தபத்தையும் பிரார்த்தனையையும் அழித்துவிட்டு வரும்படிச் செய்வது ஒரு மார்க்கமாகவும் அனுபவ அனுகூலமாகவும் இருந்து வந்திருக்கிறது.
இப்போது அது செய்து பார்த்துவிட்டார்கள். இனி, பிறகு யாரை அவர்கள் எதிரிகளாய்க் கருதுகிறார்களோ, அந்தக் கூட்டத்தில் இருந்தே சில ஆட்களுக்குப் பலவித ஆசைகாட்டிப் பட்டத்தையோ, அரசையோ அவர்களுக்குத் தருவதாகச் சொல்லி சுவாதீனப்படுத்தியும் ஆழ்வார்கள் ஆக்கியும் அவர்களைக் கொண்டு எதிரிகளுக்குத் தொல்லை விளைவித்துத் தோற்கடிக்கச் செய்வது என்பது இரண்டாவது சூட்சியாகும். அந்த முறையையும் கையாண்டு பார்த்துப் பயன்படாமல் போய்விட்டது.
இனி, அடுத்த மூன்றாவது முறை என்னவென்றால், தங்கள் அடிமைகளில் சிலரைப் பிடித்து, அவதாரங்கள் என்பதாக ஆக்கி, அவர்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி எதிரிகளுக்குக் கேடு சூழச் செய்து வருவது.
இந்தக் குணங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குப் பரம்பரைச் சொத்தென்றும், அவைதான் அவர்களது வெற்றிக்கு மார்க்கம் என்பதும் ராமாயணம் முதலிய இதிகாசங்களையும், புராணங்களையும் பார்த்தால் தெரியும்.
ஆகவே அதுபோலவே இப்போது பார்ப்பனரல்லாதார்களை ஜெயிக்கத் தோழர் ராஜேந்திரப் பிரசாத்தைக் கூட்டி வந்து அவதாரமாக விளம்பரப் படுத்திப் பணம் தண்டவும் தேர்தலில் வெற்றி பெறவும் சூழ்ச்சி செய்கிறார்கள்.
பொது ஜனங்கள் இப்படிப்பட்ட சூழ்ச்சிக்குக் கண்டிப்பாக இடம் கொடுக்கக் கூடாது என்பதாக நாம் எச்சரிக்கை செய்கிறோம்.
தோழர் ராஜேந்திரப் பிரசாத்தைப் பற்றித் தனிப்பட்ட முறையில் நமக்கு உள்ள அபிப்பிராயத்தை முன்பு ஒருமுறை வெளியிட்டிருக்கிறோம். அவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும், அவர் வரவழைக்கப்பட்ட காரணமும், அதனால் விளையப்போகும் பயனும் எப்படிப்பட்டது என்று பார்த்தால், கண்டிப்பாக அவரைக் கொண்டு சூழ்ச்சி செய்விக்கப் பார்ப்பனருக்குச் சிறிதும் நாம் இடம் கொடுக்கக் கூடாது என்பதே நமது அபிப்பிராயமாகும்.
தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்திய மக்களுக்குத் தகுதி உடைய தலைவராய் இருந்திருப்பாரானால், தென் நாட்டிலிருந்து வரும் தகராருக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்து அதற்குத் தகுந்தபடி பார்ப்பனர்களுக்கு அறிவுறுத்தி ஏதாவது சமாதானம் செய்ய முயற்சித்திருப்பார்.
ஆனால் இவர் அப்படிக்கெல்லாம் இல்லாமல் ஒரு கட்சியின் சார்பாய் வந்து, பார்ப்பனரல்லாதார் கட்சியையும், மக்களையும் தேசபக்தி இல்லாதவர்கள்; தேசத் துரோகிகள் என்று வைதுவிட்டுப் போக வருகிறார்.
கிளிப்பிள்ளை போல் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே கொட்டி விட்டுப் போகப் போகிறார். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்தப் படியேதான் தோழர்கள் காந்தி, வல்லபாய்படேல், பாங்கர், பஜாஜ், மாளவியா முதலியவர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு வைதுவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இந்த உண்மைகளை நன்றாய் உணர்ந்துதான், சென்னை கார்ப்பரேஷன் காரர்கள் தைரியமாய் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு வரவேற்பு அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
இம்மாகாணத் தலைநகரச்சபை செய்த காரியம் இன்னது என்பதைச் சிறிதுகூட உணராமல் சில உள்நாட்டுப் பட்டணங்களில் வரவேற்பு அளிப்பதாகத் தீர்மானித்து இருக்கிறார்கள்.
இந்த நகரசபைக்காரர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குப் பயந்து இந்த மாதிரியான முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட்டார்களே ஒழிய, மனப்பூர்த்தியாகக் காங்கிரசை மரியாதை செய்யவோ ராஜேந்திர பிரசாத் அவர்களை வரவேற்கவோ வேண்டும் என்று கருதிச் செய்தவர்கள் அல்ல. ஆகவே, வெளிப் பட்டணங்களில் உள்ளவர்கள் தாங்கள் அதிருப்தியைக் காட்டவும், ராஜேந்திர பிரசாத் அவர்களைத் தாங்கள் தலைவர்கள் என்று ஒப்புக் கொள்ளவில்லையென்றும் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கும் மற்ற மாகாண ஜனங்களுக்கும் தெரியும்படியாகச் செய்ய வேண்டியது இவர்களது கடனாகும்.
தோழர் காந்தியார் வரவை பகிஷ்கரித்த மாதிரியானது, காந்தியாராலேயே புகழப்பட்டது மாத்திரமல்லாமல் இந்தியாவே தென்னிந்தியாவைப் புகழ்ந்தது.
“”ராஜேந்திரரே திரும்பிப் போம். நீர் எங்கள் பிரதிநிதி அல்ல” என்று நாம் கருதி இருப்பதை ராஜேந்திர பிரசாத் அவர்கள் அறியும்படி செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழ் மக்களுடையவும் கடமையாகும்.
தமிழ் மக்களில் சிலர் சுக்ரீவ ஆழ்வார்களும், ஆஞ்சனேய ஆழ்வார்களும், விபூஷண ஆழ்வார்களும் உண்டு என்பதை நாம் மறைக்கவில்லை. அவர்களால் ராஜேந்திர பிரசாத் வரவேற்கவும் படலாம்.
மற்றும் பல கூலிகளும் காலிகளும் இதற்கு உதவியாகவும் இருக்கலாம்.
ஏனெனில் சிலருக்கு அவரால் ஓட்டுக் கிடைக்கலாம் என்பதோடு, அவர் பேரால் வசூல் செய்யப்பட்டும், பணம் இன்னும் ஆறு மாதத்துக்கு காலிகளுக்குப் பயன்படலாம் என்கின்ற எண்ணமும், ஆசையும் ஒவ்வொருவருக்கும் இல்லாமலில்லை. ஆதலால் இந்தக் கூட்டம் அவரை வரவேற்க வேண்டியது அவர்களுக்கு இன்றியமையாத காரணமாகலாம்.
ஆனால் உண்மைத் தமிழ் மக்கள் தன்மானமும், பரிசுத்த குருதி ஓட்டமும் உள்ள தமிழ் மக்கள், ராஜேந்திரரை வரவேற்பது என்பது சுத்தமாகச் சுயமரியாதை அற்றதனமாகும் என்பதே நமதபிப்பிராயமாகும்.
ஆங்காங்குள்ள தென்னிந்திய நலஉரிமைச் சங்கங்களும், சுயமரியாதைச் சங்கங்களும் கூட்டங்கள் கூட்டி பகிஷ்காரக் கமிட்டியும் திட்டமும் ஏற்பாடு செய்து, அவரது வரவை பகிஷ்கரித்துக் காட்ட வேண்டியது அவசியமும், ஆண்மையுமான காரியம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
ஆனால், பகிஷ்காரமானது காந்தியார் வந்தபோது பகிஷ்கரித்துக் காட்டியது போலவே சமாதானமாகவும், ஒழுக்கமாகவும், கவுரமாகவும், நடந்து பகிஷ்கரிக்க வேண்டுமே ஒழிய, காங்கிரஸ்காரர்கள் போல் காலித்தனமான முறையில் பகிஷ்கரிப்பது யோக்கியப் பொறுப்பற்ற காரியமேயாகும்.
பகிஷ்காரம் வெற்றி பெறாவிட்டாலும் யோக்கியமாகவும், சமாதானமாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்பதும், இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்களைப் பின்பற்றக் கூடாது என்பதுமே நமது முக்கியமான வேண்டுகோளாகும்.
குடி அரசு தலையங்கம் 06.10.1935