பெரியார் வேலைத்திட்டம்@ நீதிக்கட்சி ஏற்றது

 

தாழ்த்தப்பட்டோர் மற்றும் சுயமரியாதை மாநாடுகளில் பெரியார் நிகழ்த்திய உரைகளும்  நீதிக்கட்சிக்கு பெரியார் தந்த வேலைத்திட்டமும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் கூடிய நீதிக்கட்சியின் நிர்வாகக்குழு பெரியார் தந்த வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறது.

பெரியாரின் செயல்திட்டங்களோடு நீதிக்கட்சி செயல்படத் தொடங்குவதைக் கண்டு அஞ்சிய காங்கிரசார், இது காங்கிரஸ் கட்சி கராச்சியில் உருவாக்கிய திட்டத்தின் நகல் எனப் பேசத் தொடங்க, “குடி அரசு’  அதை  அழுத்தமாக  மறுக்கிறது.

மறைமலை அடிகளாரின் “அறிவுரைக்கொத்து’ நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கட்டுரையை சென்னைப்பல்கலைக்கழகம் பாடமாக ஏற்றதை எதிர்த்து பார்ப்பன ஏடுகள் கூக்குரலிட்டதற்கு பெரியார் கொதித்தெழுந்து கருத்து மாறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு அடிகளாரை ஆதரித்து அனல் பறக்கும் தலையங்கத்தை எழுதினார்.பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு பிரபல பாடகி கே.பி. சுந்தராம்பாளை காங்கிரஸ் பார்ப்பனர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனாலும் பார்ப்பனப் பாடகிகளை மிஞ்சம் வகையில் புகழ் ஏணியை அவர் எட்டும்போது பார்ப்பன ஏடுகள் சுந்தராம்பாளை குறைகூறத் தொடங்கியபோது “குடி அரசு’  கே.பி. சுந்தராம்பாளுக்கு  ஆதரவாக  களமிறங்கியது.

பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் இந்துமதத்தைவிட்டு வெளியேறி சமஉரிமை வழங்கும் வேறு எந்த மதத்திலும் சேர்ந்துவிடுமாறு அறிவித்தவுடன், “சபாஷ் அம்பத்கார்’  என்று  “குடி அரசு’ வரவேற்று எழுதியதோடு, அம்பேத்காரின் முடிவை  கடுமையாக விமர்சித்த பார்ப்பன ஏடுகளுக்கும் பதிலளித்தது. இந்து மதத்தைவிட்டு வெளியேறும் முடிவை எக்காரணத்தாலும் மாற்றவேண்டாம். முதலில் 10 லட்சம் பேரை மதமாற்றம் செய்துவிட்டு இறுதியில் அம்பேத்கர் மதம் மாறுவதே பயனுள்ளதாக இருக்கும் என்று பெரியார் அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தார். அம்பேத்கரைப் போன்றவர்கள் “”இந்துமதத்தைவிட்டுப் போய்விட்டால், இவர்களுடைய தொல்லை ஒழிந்தது என்று சந்தோச மடைந்துவிடுவார்கள். ஆகையால் மதம் மாறாமல் இருந்து கொண்டு எவ்வளவு பெயர்களை மதத்திலிருந்து வெளியாக்கலாமோ அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியது அம்பேத்கரின் முதல் கடமையாகும்” என்று பெரியார் அறிவுறுத்துகின்றார்.

மதங்களையே எதிர்க்கும் சுயமரியாதை இயக்கம் மதமாற்றத்தை எப்படி ஆதரிக்கலாம் என்று “”தீவிர” சுயமரியாதைக்காரர் எழுதிய கடிதத்துக்கு விரிவான விளக்கமளித்து பெரியார் எழுதிய “மதம் மாறுதல்’ எனும்  தலையங்கத்தில்,  சுயமரியாதை  இயக்கத்தின்  மத  எதிர்ப்புக்கொள்கைகள்  பரிணாமம் பெற்றே வளர்ந்ததைக் குறிப்பிடும் பெரியார் அக்கொள்கைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் பின்பற்ற வேண்டிய நெகிழ்ச்சியான அணுகுமுறைகளையும் விளக்கிக்காட்டுகிறார். தீண்டாமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பும் ஒரு பக்தி உணர்வாளரிடம் “”நீ சாமியை விட தைரிய மில்லாதவன். உனக்கு நான் யோசனை சொல்ல மாட்டேன். ஆதலால் நீ தீண்டாதவனாகவே இருந்து செத்துப்போ” என்று  ஒரு  சுயமரியாதைக்காரன்  எப்படி   சொல்லமுடியும்? என்று கேட்கிறார். “”எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே தவிர, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதை புஸ்தகப்பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பொருமானவர்களே ஒழிய காரியத்துக்கு பொருமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்” என்று பெரியார் சுட்டிக் காட்டியிருப்பது வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக பார்ப்பனர்கள் காங்கிரசைக் கைப்பற்றிக் கொண்டு அதன்வழியாகத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் அரசியலுக்கு ஆதரவு திரட்ட, வடநாட்டு காங்கிரஸ் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் தமிழ்நாடு வந்தபோது அவருக்கு எதிராக “பகிஷ்கார இயக்கம்’  நடத்த  “குடி அரசு’  அறைகூவல் விடுத்தது. சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு நகராட்சிகளில் இராஜேந்திரப் பிரசாத்துக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சிகள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டன.

காங்கிரஸ் மாநாடுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இடத்திலே சாப்பாடு போடப்பட்டு வந்தது. எசனை என்னும் ஊரில் நடந்த பெரம்பலூர் வட்ட காங்கிரஸ் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட காங்கிரஸின் தீண்டாமை விலக்குக் கமிட்டியின் ஒரு மேல்பார்வை அதிகாரியான சன்னாசி என்னும் தாழ்த்தப்பட்ட தோழருக்கு “சமபந்தி’ மறுக்கப்பட்டு  தனி  இடத்தில்  சாப்பாடு  போடப்பட்டது.  “சாயம் வெளுத்தது’  என்று  “குடி அரசு’  தலையங்கம்  இந்த  “தேசிய தீண்டாமையை’ அம்பலப்படுத்துகிறது. இதன் காரணமாக தீண்டாமைவிலக்குக் கமிட்டியிலிருந்து தோழர் சன்னாசியை காங்கிரஸ் நீக்கியது.

இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள  “தேசாபிமானம்’ எனும்  தலையங்கம்;  கருத்தாழமிக்க  சிந்தனை விருந்து. சர்வதேச நாடுகள் உருவாக்கிய “சர்வதேச பாதுகாப்புச் சங்கம்’ இளைத்தவனை  வலுத்தவன்  கொடுமைப்படுத்தவே  உதவுகிறது என்று விமர்சிக்கும் அத்தலையங்கம் உலகம் முழுவதும் இராணுவங்கள் கலைக்கப்பட்டு உலகம் ஒரே தேசமாகவும், மக்கள் ஒரே ஜாதியாகவும் கருதப்படவேண்டும் என்ற விரிந்த பார்வையை முன் வைக்கிறது. மக்களிடமிருந்து தங்களை விலக்கிக்கொண்டு மேன்மக்களாகச் செயல்படும் பார்ப்பானும் பணக்காரனும் தங்களின் நலனுக்காக கூலிகளை வைத்து நடத்தும் பிரச்சாரமே  “தேசாபிமான பக்தி’  என்று  விளங்கிடும்  அந்தத்  தலையங்கம்,  இந்த  “தேசபக்திக்கு’  எதிரான  “தேசத்  துரோகமே’  பாமர  மக்களுக்கு  பயன்களை  விளைவிக்கும்  என்று  உரத்து  முழக்கமிடுகிறது.

“தர்மராஜ்ய விளம்பரம்’ “தர்மராஜ்ய ஸ்தாபனம்’ “தர்மராஜ்ய தர்பார்’ என்று  மூன்று தலைப்புகளில் தீட்டப்பட்ட “கற்பனை சித்திரங்களும்’ “சித்திரபுத்திரன்’ உரையாடல் சித்திரங்களும் இத் தொகுப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன. காங்கிரசுக்குள் நடந்த அய்யர்  அய்யங்கார் குழு மோதல்களை “காங்கிரசின் யோக்கியதை’ எனும் தலையங்கம் அம்பலப்படுத்துகிறது. வைக்கம் போராட்டத்துக்காக பெற்ற காங்கிரஸ் கட்சி பணத்துக்கு பெரியார் கணக்குத் தரவில்லை என்ற பார்ப்பன ஏட்டின் குற்றச்சாட்டுக்கு அனல்பறக்க “குடி அரசு’ தந்த மறுப்பு “குச்சிக்காரிப் புத்தி’ எனும் தலைப்பில் இரு தலையங்கங்களாக வெளிவந்துள்ளது.

ஈரோட்டில் பள்ளி ஒன்றில் பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா? என்று இரு அணிகள் பங்கேற்ற “வாக்குவாதத்துக்கு’ (பட்டிமன்றம்) பெரியார் தலைவராக இருந்து வழங்கிய தீர்ப்புரை இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மற்றொரு சிறப்புக் கட்டுரையாகும்.

பார்ப்பனர் ரத்தம் வேறு, தீண்டப்படாதோர் ரத்தம் வேறு என்று சங்கராச்சாரி பேசியதற்கு “குடி அரசு’ எழுதிய கண்டனம், அருப்புக்கோட்டை, இராசிபுரம், விருதுநகர் மநாகாடுகளில் பெரியார் சொற்பொழிவு என்று சுமார் 115 தலைப்புகளில் பெரியாரின் எழுத்து  பேச்சுகளைத் தாங்கி மலர்ந்துள்ளது இத்தொகுப்பு.

பதிப்பாளர்

You may also like...