மத ஆட்சி
ஓ! அறிவு கெட்ட மனிதனே! இன்றைய மனிதசமூகத்தை ஆட்சி புரியும் மதங்களை யார் உற்பத்தி செய்தார்கள்?
மக்கள் மதத்துக்காக ஒரு மகாநாடு கூட்டி, மத உண்மைகளையும், அதன் நன்மை தீமைகளையும், அவற்றின் முன்பின் யோக்கியதைகளையும், பலாபலன்களையும், அவசியத்தையும் பற்றி நன்றாகப்பேசி வாதப் பிரதி வாதங்கள் செய்து தீர்மான மூலமாக நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வந்தார்களா?
ஏதோ ஒருவன் தீர்மானித்து விட்டதை, செம்மறியாடுகள் ஒன்றின் பின் ஒன்று தலை குனிந்து செல்வதுபோல், தலைமுறை தலை முறையாய்ப் பின் வார்சுகளுக்குக் குழந்தைப்பருவத்தில் பாலுடனும் நீருடனும் ஊட்டி வருவதன் மூலம் உயிர் வாழுபவைகள் தானே இன்று மதங்களாய் விளங்குகின்றன?
இதற்கு இத்தனை அதிகாரமா? ஆர்ப்பாட்டமா? செலவா? நேரக்கேடா? இவ்வளவும் தவிர அதற்கு கொடுங்கோல் ஏகச்சக்ராதிபத்திய ஆட்சி கூடவா?
என்ன அனியாயம்! மதத்தை ஏற்றுக்கொள்ளும் யாராவது, ஏற்றுக் கொள்ளுமுன் இவைகளைப்பற்றி சிறிதாவது சிந்திக்கிறார்களா? குழந்தைப் பருவத்தில் பிடித்த மதச் சனியன் சுடுகாட்டில் கூட ஒழிவதில்லையே!
இவ்வளவு தானா? கடவுள்கள் சங்கதி இதைவிட மோசமாகவல்லவா இருக்கிறது? இதைப்பற்றிப் பின்னால் விசாரிப்போம்.
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஜுன் 1935