காங்கிரஸ்காரனுக்கும் ஜஸ்டிஸ்காரனுக்கும் சம்பாஷணை

 

சித்திரபுத்திரன்

ஜஸ்டிஸ்காரன்@ காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரபிரசாத் அவர்கள் சென்னைக்கு வரும்போது அவருக்கு உபசாரப் பத்திரம் படிக்கக் கூடாது என்று சென்னைக் கார்ப்பரேஷன்காரர்கள் தீர்மானித்தார்கள் அல்லவா?

காங்கிரஸ்காரர்கள்@ ஆம்;

ஜ@ அப்படியானால் அத் தீர்மானத்திற்குச் சென்னைவாசிகள் காங்கிரசையும், காங்கிரஸ் தலைவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், மரியாதை செய்ய இஷ்டம் இல்லை என்றும் தானே அருத்தம்?

கா@ அப்படி அருத்தமாகுமா? கார்ப்பரேஷன் மெஜாரிட்டி கவுன்சிலர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்காரராய் இருப்பதால் ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்கு காங்கிரஸ் தலைவருக்கு மரியாதை செய்ய இஷ்டமில்லை என்று தான் அருத்தம்.

ஜ@ கார்ப்பரேஷனில் எந்தக் கட்சி மெஜாரிட்டியாய் இருந்தாலும் சரி, அவர்கள் செய்யும்  தீர்மானம் கார்ப்பரேஷன் தீர்மானம் என்று தானே அருத்தம்?

கா@ ஆம் அது சரிதான். இருந்தாலும் அது சென்னை வாசிகள் தீர்மானம் என்று சொல்ல முடியுமா? ஒரு நாளும் முடியாது.

ஜ@ ஏன் அப்படிச் சொல்ல முடியாது. கார்ப்பரேஷனில் மெஜாரிட்டியாய் இருக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சென்னை ஓட்டர்களால் தெரிந்தெடுக்கப் பட்டவர்கள் அல்லவா?

கா@ ஆம்.

ஜ@ அப்படியானால் அவர்களது அபிப்பிராயமும் அவர்களது முடிவும் பொதுஜன அபிப்பிராயம் என்றுதானே கொள்ள வேண்டும்?

கா@  அப்படி ஒரு நாளும் சொல்ல முடியாது. எலக்ஷனில் ஒரு கட்சி ஜெயித்துவிட்டதாலேயே அது பொது ஜன அபிப்பிராயமாகிவிடுமா? அவர்கள் பொதுஜனப் பிரதிநிதிகள் ஆகிவிடுவார்களா?

ஜ@ பின்னை எலக்ஷன் என்றால் என்ன அருத்தம். மற்றப்படி யாரைத்தான் பொது ஜன பிரதிநிதி என்பது? பொதுஜன அபிப்பிராயம் தெரிவதற்கு என்னதான் வழி?

கா@ எலக்ஷனில் ஜாதித் துவேஷம், வகுப்புத் துவேஷம் ஆகியவை களைக் கிளப்பி விட்டுப் பொய்யும் புளுகும் சொல்லி பணங்காசைக் கண்டபடி வாரி இரைத்து, ஓட்டு வாங்கி விட்டால் அது பொதுஜன அபிப்பிராயமாகிவிடுமா? கார்ப்பரேஷனில் காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு அளிக்காதது ஒரு நாளும் சென்னைவாசிகள் அபிப்பிராயமு மாகாது. கார்ப்பரேஷன் அபிப்பிராயமுமாகாது. அதை தேசத்துரோகிகள் அபிப்பிராயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜ@ அப்படியானால் பொதுஜனங்களின் ஓட்டையும், தேர்தலையும் பொது ஜனங்களின் சரியான அபிப்பிராயம் என்று ஒப்புக் கொள்ளுவதில்லை என்பதுதானே நீங்கள் பேசுவதின் அருத்தம்.

கா@ மறுபடியும் உங்களுக்கு  என்ன சந்தேகம்? காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு இல்லை என்று ஒரு கார்ப்பரேஷன் தீர்மானம் செய்து விட்டால் அதைப் பொதுஜன அபிப்பிராயம் என்று எப்படி ஐயா சொல்ல முடியும். இதுகூடவா உங்களுக்குத் தெரியாது?

ஜ@ காங்கிரஸ் பிரசிடெண்டானாலும் சரி, வெஞ்சாமரம் பிரசிடெண்டா னாலும் சரி அதைப் பற்றி நான் உங்களைக் கேட்கவில்லை. சென்னைக் கார்ப்பரேஷன் என்று சொல்லும் சென்னை நகரப் பிரதிநிதிகளைக் கொண்ட சென்னை நகர பரிபாலன சபையார் அபிப்பிராயத்தை நீர் சென்னை மகாஜனங்களின் அபிப்பிராயம் என்று ஒப்புக் கொள்ளுகிறீரா இல்லையா?

கா@ இதென்னையா கஷ்டமாய் இருக்கிறது. எலக்ஷன்களையே முதலாவது யோக்கியமானது என்று சொல்ல முடியவில்லை. அதிலும் ஜஸ்டிஸ் கட்சி மெஜாரிட்டி கொண்ட கார்ப்பரேஷனை எப்படி ஜனப் பிரதிநிதித்துவமானது என்று நான் ஒப்புக் கொள்ள முடியும்?

ஜ@ மறுபடியும் வழ வழ என்று பேசாதேயும். ஜனங்களின் ஓட்டுப் பெற்ற நகர பரிபாலன சபை அங்கத்தினர்கள் தீர்மானத்தைப் பொதுஜன அபிப்பிராயம் என்று ஒப்புக் கொள்ளுகிறீரா இல்லையா? இரண்டிலொன்று சொல்லும். காந்தியார் போல் வழ வழ என்று திருகணி பீரங்கி மாதிரி பேசாதேயும்.

கா@ சரி ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறேன். அது பொது ஜன அபிப்பிராயமாகாது. ஒரு நாளும் ஆகாது. அவ்வளவுதான்.

ஜ@ எது?

கா@ கார்ப்பரேஷன் அபிப்பிராயம்.

ஜ@ சரி அந்த கார்ப்பரேஷன் அங்கத்தினர்கள் பொது ஜனங்கள் பிரதிநிதிகளா அல்லவா?

கா@ ஒரு நாளும் அவர்கள் பொதுஜனப் பிரதிநிதிகள் ஆக மாட்டார்கள்.

ஜ@ நிரம்பச் சந்தோஷம். நீர் மிகவும் நல்ல பிள்ளை. இதை நன்றாய் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இப்பொழுது நீர் என்ன சொல்லி இருக்கிறீர்? கார்ப்பரேஷன் தீர்மானம் பொது ஜனத் தீர்மானம் அல்ல வென்றும், சென்னைப் பொதுஜன ஓட்டுப் பெற்ற கார்ப்பரேஷன் கவுன்சிலர்களைப் பொதுஜன பிரதிநிதிகள் அல்ல வென்றும் சொல்லி இருக்கிறீர்.

கா@ ஆம், ஆம். காங்கிரஸ் தலைவருக்கு…….

ஜ@ அதெல்லாம் ஒன்றும் பேசாதீர். நான் உம்மை இப்பொழுது ஒரு குறிப்பிட்ட ஆள்களைப் பற்றியோ குறிப்பிட்ட செய்கையைப் பற்றியோ கேட்கவில்லை தெரியுமா?

கா@ சரி, சரி. கார்ப்பரேஷன் தீர்மானம் பொது ஜன அபிப்பிராயமாகாது தான். அந்த கவுன்சிலர்களும் பொதுஜன பிரதிநிதிகள் அல்லத்தான்.

ஜ@ நிரம்ப சந்தோஷம். மற்றொரு கேள்வி கேட்கிறேன். தயவு செய்து பதில் சொல்லுகிறீர்களா?

கா@ கேளுமே. பேஷாய்ச் சொல்லுகிறேன். எப்படிப்பட்ட சூஸ்திரக் கேள்வி என்று பார்ப்போம்.

ஜ@ ஒன்றும் சூஸ்திரக் கேள்வி இல்லை. சாதாரணக் கேள்வி தான்.

கா@ எப்படி இருந்தாலும் கேளும்.

ஜ@ நேற்று தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை நகர மகா ஜனங்களால் இந்திய சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டாரல்லவா? அவர், கார்ப்பரேஷனுக்கு ஜஸ்டிஸ் கக்ஷி அங்கத்தினர்களை யார் தெரிந்தெடுத் தார்களோ அந்த ஓட்டர்களைக் கொண்டு தானே தெரிந்தெடுக்கப்பட்டார்?

கா@ இருக்கலாம்.

ஜ@ இருக்கலாம் என்ன? வருக்கலாம் என்ன? அப்படித்தானா அல்லவா? இரண்டில் ஒன்று வேண்டும்; இந்தக் காந்தி பாஷை உதவாது என்று முன்னமே சொன்னேன்.

கா@ சரி அப்படியேதான் வைத்துக் கொள்ளுமே?

ஜ@ அதெல்லாம் முடியாது. தோழர் சத்தியமூர்த்தியார் கார்ப்பரேஷன் ஜஸ்டிஸ் கக்ஷி அங்கத்தினர்களைத் தெரிந்தெடுத்த ஓட்டர்களால் தானே இந்திய சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார்? ஆமாம் இல்லை என்று இரண்டில் ஒரு பதில்.

கா@ ஆமாம். அப்புறம் என்ன சொல்லும் பார்ப்போம்.

ஜ@ அப்படியானால் தோழர் சத்தியமூர்த்தி பொதுஜனப் பிரதிநிதியா? அவரைத் தெரிந்தெடுத்த ஓட்டர்கள் பொதுஜனங்களா? என்பதுதான் எனது அடுத்த கேள்வி?

கா@ இதற்கு என்ன சந்தேகம்? ஓட்டர்கள் பொது ஜனங்கள் தான். அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் பொதுஜனப் பிரதிநிதிகள் தான். அதனால் தான் 5000, 10000 ரூபாய்கள் செலவு செய்தாவது தேர்தலில் வெற்றி பெற்றுப் பொது ஜனப் பிரதிநிதியாக ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பொதுநல சேவைக்காரரும் முயற்சித்து சட்டசபைக்குப் போவது. இது கூடவா உமக்குத் தெரியாது.

ஜ@ சரி தெரிந்து கொண்டேன். தோழர் சத்தியமூர்த்தியார் கார்ப்பரேஷனில் கவுன்சிலராய் இருக்கிறார் அல்லவா?

கா@ ஆம்.

ஜ@ அவர் பொதுஜனப் பிரதிநிதி தானே?

கா@ ஆம்.

ஜ@ அவரைத் தெரிந்தெடுத்தவர்கள் பொது ஜனங்கள் தானே?

கா@ ஆம்.

ஜ@ தோழர் சத்தியமூர்த்தி அய்யரும் தேர்தலுக்குப் பணம் செலவழித்தவர் தானே?

கா@ ஏதோ கொஞ்சம் செலவழித்திருக்கலாம்.

ஜ@ மறுபடியும் வழவழப் பேச்சு வேண்டாம். எலக்ஷனுக்குச் சத்தியமூர்த்தி அய்யரும் பணம் செலவழித்தவர் தானே?

கா@ ஆம்.

ஜ@  எலக்ஷனுக்காகச் சத்தியமூர்த்தி அய்யரும் பிரசாரம் செய்தவர் தானே?

கா@ ஆம்.

ஜ@ அப்பிரசாரத்தில் ஜஸ்டிஸ் கட்சி மீது குற்றம் குறைகள் சொல்லிப் பொது ஜனங்களுக்கு துவேஷம் வெறுப்புக் கிளம்பும்படியாகவும் பிரசாரம் செய்து தானே?

கா@ துவேஷம் வெறுப்பு ஏற்படும்படியாக அல்ல, உண்மையைச் சொல்லித்தான் பிரசாரம் செய்தது.

ஜ@ உண்மையோ பொய்யோ அதைப்பற்றி கவலையில்லை. அதை உண்மையென்றும் பொய்யென்றும் தீர்மானிக்க நீரும் சத்தியமூர்த்தியுமே ஜட்ஜிகள் அல்ல. சத்தியமூர்த்தி ஜஸ்டிஸ் கட்சியார் மீது குற்றம் சொல்லிப் பிரசாரம் செய்ததில் ஜஸ்டிஸ் கட்சி மீது ஜனங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுத்தானே சத்தியமூர்த்திக்கு ஓட்டுக் கிடைத்தது.

கா@ ஆம்.

ஜ@ ஆகவே ஜஸ்டிஸ் கட்சியார் கார்ப்பரேஷனுக்கு கவுன்சிலர்கள் ஆவதற்கு எப்படி எப்படி நடந்து யார் யார் ஓட்டுப் பெற்று கவுன்சிலர்கள் ஆனார்களோ அதுபோல் தானே சத்தியமூர்த்தியும் மற்ற காங்கிரஸ்காரரும் நடந்து ஓட்டுப் பெற்றிருக்கிறார்கள்?

கா@ சரி.

ஜ@ ஆம், அல்ல என்று இரண்டில் ஒன்று சொல்லும்.

கா@ ஆம்.

ஜ@ அதே சென்னைக் கார்ப்பரேஷனானது, “”காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ்காரர்கள் ஓட்டால் ஒரு தீர்மானம் நிறைவேறி இருந்தால் அதை பொதுஜனத் தீர்மானம் என்று சொல்லுவீரா அல்லது “”பொதுஜனங்களிடம் பொய்யும் புளுகும் ஜஸ்டிஸ் கட்சி மீது துவேஷம் உண்டாகும்படியும் விஷமப் பிரசாரம் செய்து ஏராளமான பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கின காங்கிரஸ்காரர் தீர்மானம்” என்று சொல்லுவீரா? அல்லது “”சென்னை நகர வாசிகளான பொது ஜனங்களுடைய அபிப்பிராயம்” என்று சொல்லுவீரா? இப்பொழுது இரண்டிலொரு பதில் சொல்லும் பார்ப்போம். உம்முடைய நடுநிலைமை  நேர்மை யோக்கியதையை.

கா@ என்ன சார் இப்படிச் சொல்லுகிறீர். காங்கிரஸ் அபிப்பிராயம் தானே பொது ஜன அபிப்பிராயம்?

ஜ@ நான் உம்மைக் கேட்கிறேன். என்ன சார் இப்படிச் சொல்லுகிறீர்கள். பொது ஜன அபிப்பிராயம் தானே ஜஸ்டிஸ் கட்சி அபிப்பிராயம்?

கா@ சரி நமக்குள் தகராரு எதற்கு ஆக? எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.

ஜ@ முடியவே முடியாது. காங்கிரஸ்காரருக்குச் சிறிதளவாவது மானம், வெட்கம், சுயமரியாதை இருக்குமானால் அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளிபோல் யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவரைச் சென்னை ஜனங்கள், சென்னைப் பொது ஜனங்கள் வர வேண்டாம், திரும்பிப் போ என்று சொல்லி விட்டார்கள். ஆகையால் அவரை நீங்கள் சென்னை நகருக்குள் அழைத்து வரக்கூடாது. காங்கிரசுக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும், சுயமரியாதை இருக்கிறதா இல்லையா என்பதை இதில் முடிவு கட்டிவிட வேண்டும்.

மானம் வெட்கம் இல்லாமல் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காங்கிரஸ் தலைவரை சென்னை நகருக்குள் அழைத்து வருவதால் நாங்கள் 1000 ஆயிரம் கருப்புக் கொடி பிடிப்போம்.

நீங்கள் வெளியில் வைத்துச் சாப்பாடு போட்டீர்களே தோழர் சன்னியாசிக்கு அந்த சன்னியாசியின் சகோதரர்களே 1000 பேர் கருப்புக் கொடி பிடிப்பார்கள். உங்கள் சூழ்ச்சி ஒன்றும் அன்று பலிக்கப் போவதில்லை.

வேண்டுமானால் இன்னம் 1000 தடவை ஜஸ்டிஸ் கக்ஷி தேசத் துரோகக் கக்ஷியென்றும் பொப்பிலி ராஜா ராக்ஷதன் என்றும் எழுதி எழுதிக் கத்தை கட்டிக் கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி அக்கரை இல்லை.

கா@ ஏன் இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறீர்கள். அபிப்பிராய பேதம் மனிதர்களுக்கு இயற்கை தானே?

அதற்காகப் பெரியார்களை, தலைவர்களை அவமதிக்கலாமா?

உங்கள் தலைவரானால் என்ன எங்கள் தலைவரானால் என்ன? எல்லோரும் பகுமானிக்க வேண்டியவர்கள்தானே?

சுயமரியாதை இயக்கக்காரர்கள் எங்களை எவ்வளவோ கேவலமாக பேசுகிறார்கள். அப்படி ஆனாலும் அவர்கள் தலைவர் ராமசாமி நாயக்கரிடம் காங்கிரஸ்காரருக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது? அவரைப் பற்றி நாங்கள் ஏதாவது பேசுகிறோமா?

ஜ@ இந்த மதிப்பெல்லாம் எங்களுக்குத் தெரியும். “”உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி டோபி” என்கின்றபடி சுயமரியாதைக்காரர்கள் வட்டி முதலுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். உங்கள் கொடி வழிப்பட்டி அவர்களிடம் இருக்கிறது. அதற்காக அவரைக் கண்டால் பயப்படுகிறீர்கள். மற்றும் அவர்கள் தங்களுக்கு என்று யாரிடமும் ஓட்டுக் கேட்க வருவதுமில்லை. வேறு ஒன்றும் கேட்பதுமில்லை. அதனால் அவரிடம் உங்கள் ஜபம் பலிப்பதுமில்லை.

கா@ மற்ற யாரிடம் தான் நாங்கள் வம்புக்குப் போகிறோம்.

ஜ@ ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களை நீங்கள் எவ்வளவு கேவலமாய் பேசுகிறீர்கள்? சுத்தக் காலிப் பசங்களுக்கெல்லாம் காசைக் கொடுத்து அவர்கள் மீது உசுப்படுத்தி விடுகிறீர்கள்.

உங்கள் கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி, புராணம், இதிகாசம் ஆகிய பத்திரிக்கைகள் எல்லாம் எங்கள் தலைவர்களை எவ்வளவு அயோக்கியத்தனமாய் அற்பத்தனமாய் எழுதுகின்றன?

நாய் கடித்தால் நாய்களைத் திருப்பிக் கடிக்கக் கூடாது என்று பார்ப்பதாலல்லவா அவை குளிர் விட்டு அற்பத்தனமாய் எழுதுகின்றன. இந்த தடவை உங்கள் காங்கிரஸ் தலைவர் வரவை காந்தி வரவை விட மிக மோசமாய் நடத்திக் காட்டிக் கருப்புக் கொடிகள் ஊர் ஊராகப் பிடித்துத் தென் இந்திய மக்கள் காங்கிரசை மதிப்பதில்லை என்றும், காங்கிரஸ் கொள்கைகள் நாணையமற்றதும், யோக்கியமற்றதும் என்றும் தென்னிந்திய பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தவும், குறைவு படுத்தவும், அவர்களது முற்போக்கைத் தடுக்கவும் செய்யப்படும் பார்ப்பன சூட்சி நிரம்பியதென்றும் நிரூபித்துக் காட்டப் போகிறோம்.

கா@ அப்படியெல்லாம் செய்வதில் நம் தேசத்துக்கு நாம் மரியாதை செய்தவர்களாகி விடுவோமா?

ஜ@ தேசமாவது வெஞ்சாமரமாவது?

காந்தியார் வந்தபோது வசூலித்த ரூபாய்கள் தானே இந்திய சட்டசபை எலக்ஷனுக்குப் பிரசாரம் செய்யப் பயன்பட்டது. அந்தப் பணத்தினால் வயிறு கழுவும் கூலிகள் தானே செல்லுமிடங்களிலெல்லாம் குடிகாரன் வெறிகாரன் போல் ஜஸ்டிஸ் கட்சியையும் அக்கட்சித் தலைவர் களையும் சூரியனைப் பார்த்து நாய்கள் குலைப்பதுபோல் குலைக்கிறார்கள்.

இப்போதும் காங்கிரஸ் தலைவர் என்று ஒரு நபரைக் கூட்டி வந்து நாடகம் நடத்தி ஊர் ஊராய் பணமுடிப்பு என்று முட்டாள்களிடம் பணம் வசூல் செய்து அதைப் பழயபடியே கூலிகளுக்குக் கொடுத்துக் காலித்தனம் செய்யச் சொல்லப் போகிறீர்கள். இதற்கு எந்த மூடம் தான் சம்மதிக்கும். நீரே சொல்லும் பார்ப்போம்.

கா@ என்ன இருந்தாலும் தலைவரல்லவா?

ஜ@ சரி வைத்துக் கொள்ளும். எங்கள் தலைவர்களான சர்.பி. தியாகராய செட்டியார் வீட்டுக்குக் காலிப் பசங்களை அனுப்பிக் கண்ணாடி ஜன்னலை உடைக்கச் செய்து வீட்டிற்குள் கல்லுகள் எறியவில்லையா?

டாக்டர் நாயர் சீமையில் செத்துப் போனபோது அங்கிருந்த உங்கள் ஆளுகள் ஒருவர் கூடப் போகாமல் பிரேத அடக்கத்துக்கே விஷமம் செய்யவில்லையா? பனக்கால் அரசரைப் பற்றி இழிவாகப் பொய்ப் பிரசாரம் செய்து அவர் எலக்ஷன் போது அவர் செத்து விட்டார் என்று புகையிலை வழங்கவில்லையா?

டாக்டர் சுப்பராயன் போகும் இடங்களில் கருப்புக் கொடி பிடிக்கவில்லையா?

சர்.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரைப் பற்றி கண்டபடி அயோக்கியத் தனமாக எழுதவும் பேசவும் இல்லையா?

இன்று பொப்பிலி ராஜாவைப் பற்றிக் கேவலமாகவும், இழிவாகவும் படங்கள் வியாசங்கள் எழுதி ராட்சதன் அசுரன் என்றெல்லாம் சொல்லுவதோடு அவர் கடன்காரர் என்றும் அவன் இவன் என்றும் மற்றும் பலவிதமாகக் குறை கூறியும் எழுதியும் பேசியும் வரவில்லையா?

மற்றும் சிலரைப் பற்றி இழிவாய்ப் பேசுவதும் கூட்டங்களில் காலித்தனம் செய்வதுமான காரியங்கள் காங்கிரஸ்காரர்களால் நடைபெறவில்லையா? பிறகு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவில்லையா?

இதெல்லாம் யோக்கியமான காரியமா? தலைவர்களை மரியாதை செய்யும் காரியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

கா@ இவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர்கள், ராஜேந்திரபாபு ஆகியவர்களுக்கும் வித்தியாசமில்லையா?

ஜ@ என்ன வித்தியாசம் சொல்லுமே பார்ப்போம். ஒவ்வொரு நபரின் யோக்கியமும் எடுத்து விரிக்கட்டுமா?

கா@ சாவகாசமாப் பேசிக் கொள்ளலாம்.

குடி அரசு  உரையாடல்  29.09.1935

You may also like...